Old/New Testament
எலிப்பாஸ் பதில் கூறுகிறான்
22 அப்போது தேமானின் எலிப்பாஸ் பதிலாக,
2 “தேவனுக்கு நமது உதவி தேவையா?
இல்லை!
மிகுந்த ஞானவானும் உண்மையாகவே தேவனுக்குப் பயன்படுவதில்லை.
3 நீ தக்க நெறியில் வாழ்ந்தது தேவனுக்கு உதவுமா?
இல்லை! நீ தேவனைப் பின்பற்றுவதால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஏதேனும் கிடைக்குமா? இல்லை!
4 யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார்?
நீ அவரை தொழுது கொள்வதாலா?
5 இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்பதால்தான்.
யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை!
6 நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து,
அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம்.
நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம்.
இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம்.
7 சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம்.
8 யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு,
ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள்.
9 விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம்.
யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம்.
10 ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன,
திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது.
11 ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது,
வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது.
12 “தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார்.
விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள்.
மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார்.
13 ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்?
இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா?
14 அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன,
எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய்.
15 “யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில்
நீ நடந்துக்கொண்டிருக்கிறாய்.
16 அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள்.
அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
17 அவர்கள் தேவனைப் பார்த்து, ‘எங்களைத் தனித்து விட்டுவிடும்!
சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களை என்னச் செய்யமுடியும்!’ என்பார்கள்.
18 நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே!
இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது.
19 அழிவதை நல்லோர் காண்பார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,
20 ‘உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’
21 “இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள்.
இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.
22 அவரது போதனையை ஏற்றுக்கொள்.
அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
23 யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய்.
ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.
24 உனது பொன்னை நீ தூசியாகக் கருதவேண்டும்.
பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும்.
25 சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும்.
அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.
26 அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய்.
அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய்.
27 நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார்.
நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.
28 நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும்,
உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
29 பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார்.
ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார்.
30 அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும்.
நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார்.
ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.
யோபு பதில் கூறுகிறான்
23 அப்போது யோபு பதிலாக:
2 “நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன்.
ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
3 எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன்.
4 நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.
நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
5 என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன்.
தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.
6 தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா?
இல்லை அவர் எனக்குச் செவிகொடுப்பார்!
7 நான் ஒரு நேர்மையான மனிதன்.
என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார்.
அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்!
8 “ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை.
நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன்.
9 தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை.
தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
10 ஆனால் தேவன் என்னை அறிவார்.
அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
11 தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன்.
நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
12 நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன்.
என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.
13 “ஆனால் தேவன் மாறுகிறதில்லை.
ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது.
தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
14 தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார்.
எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
15 அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன்.
ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
16 தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார்.
17 என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன.
ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.
24 “சர்வ வல்லமையுள்ள தேவன், ஜனங்களின் வாழ்வில் கேடுகள் நிகழும் காலத்தை அறிந்த போதும்
அவர் அதற்குப் பரிகாரம் செய்யும் காலத்தை அவரைப் பின்பற்றுவோர் அறியமுடியாமலிருப்பது ஏன்?
2 “அயலானின் நிலத்தின் பகுதியை அடைவதற்காக ஜனங்கள் எல்லைக் குறிப்புகளை மாற்றுகிறார்கள்.
ஜனங்கள் மந்தைகளைத் திருடி, வேறு மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
3 பெற்றோரற்ற அனாதைப் பிள்ளைகளுக்குச் சொந்தமான கழுதையை அவர்கள் திருடுகிறார்கள்.
விதவை தான் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும்வரை அவளது பசுவைக் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.
9 தீயோர் பால் மணம் மாறாத குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரிக்கிறார்கள்.
கடனுக்கு உறுதிப்பொருளாக அவர்கள் ஒரு ஏழையின் குழந்தையை எடுத்துக்கொள்கிறார்கள்.
4 ஏழைகள் வீடின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அலையும்படி வற்புறுத்துகிறார்கள்.
தீயோரிடமிருந்து அந்த ஏழைகள் தங்களை ஒளித்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
5 “பாலைவனத்தில் உணவு தேடி அலையும் காட்டுக் கழுதைகளைப்போல் ஏழைகள் இருக்கிறார்கள்.
அவர்கள் உணவு தேடுவதற்காக அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள்.
அவர்களின் குழந்தைகளுக்காக உணவு பெறும் பொருட்டு அவர்கள் மாலையில் வெகு நேரம்வரை உழைக்கிறார்கள்.
6 வயல்களில் வைக்கோலும் புல்லும் வெட்டியபடி ஏழைகள் இரவில் வெகு நேரம் உழைக்க வேண்டும்.
வயல்களில் திராட்சைப் பழங்களைப் பறித்துச் சேர்ப்பவர்களாய், அவர்கள் செல்வந்தர்களுக்காக உழைக்க வேண்டும்.
7 இரவு முழுவதும் ஆடையின்றி ஏழைகள் தூங்க வேண்டும்.
குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்குப் போர்வைகள் இல்லை.
8 அவர்கள் பர்வதங்களில் மழையால் நனைந்திருக்கிறார்கள்.
குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை.
எனவே அவர்கள் பெரிய பாறைகளுக்கு அருகே அண்டிக்கொள்கிறார்கள்.
10 ஏழைகளுக்கு ஆடையில்லை. எனவே அவர்கள் வேலை செய்யும்போது நிர்வாணமாயிருக்கிறார்கள்.
தீயோருக்கு அவர்கள் தானியக்கட்டுகளைச் சுமந்துச் செல்கிறார்கள்.
ஆனால் அந்த ஏழைகள் பசியோடிருக்கிறார்கள்.
11 ஏழைகள் ஒலிவ எண்ணெயைப் பிழிந்தெடுக்கிறார்கள்.
திராட்சைரசம் பிழியும் இடத்தில் அவர்கள் திராட்சைக்கனிகளின் மேல் நடக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்குப் பருகுவதற்கு எதுவுமில்லை.
12 நகரத்தில் மரிப்போரின் துயரக்குரல்களை நீ கேட்க முடியும்.
துன்புறும் அந்த ஜனங்கள் உதவிக்காக குரலெழுப்புகிறார்கள்.
ஆனால் தேவன் செவிசாய்ப்பதில்லை.
13 “சிலர் ஒளிக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள்.
தேவன் விரும்புவது எதுவென அவர்கள் அறிய விரும்பமாட்டார்கள்.
தேவன் விரும்புகிறபடி அவர்கள் வாழமாட்டார்கள்.
14 ஒரு கொலைகாரன் அதிகாலையில் எழுந்து திக்கற்ற ஏழைகளைக் கொல்கிறான்.
இரவில் அவன் ஒரு திருடனாகிறான்.
15 விபச்சாரம் செய்பவன் (தகாத நெறியில் ஒழுகுபவன்) இரவுக்காகக் காத்திருக்கிறான்.
‘யாரும் என்னைப் பார்க்கமாட்டார்கள்’ என அவன் நினைக்கிறான்.
ஆயினும் அவன் தனது முகத்தை மூடிக்கொள்கிறான்.
16 இரவில் இருள் சூழ்ந்திருக்கும்போது, தீயோர் ஜனங்களின் வீடுகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள்.
ஆனால் பகலொளியில், அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்துகொண்டு பூட்டிக்கொள்கிறார்கள்.
அவர்கள் ஒளியைவிட்டு விலகியிருக்கிறார்கள்.
17 தீயோருக்கு மிக இருண்ட இரவுகள் காலை நேரத்தைப் போன்றது.
ஆம், அந்த மரண இருளின் பயங்கரத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள்!
18 “வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொருள்களைப்போன்று தீயோர் அகற்றப்படுவார்கள்.
அவர்களுக்குச் சொந்தமான நிலம் சபிக்கப்பட்டது, எனவே அவர்கள் தங்கள் வயல்களிலிருந்து திராட்சைக் கனிகளைத் திரட்டமாட்டார்கள்.
19 குளிர் காலத்துப் பனியிலிருந்து வரும் தண்ணீரை, வெப்பமும், உலர்ந்ததுமான காலம் கவர்ந்துவிடும்.
எனவே அந்தப் பாவிகள் கல்லறைக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.
20 தீயவன் மரிப்பான், அவனது சொந்த தாயார் கூட அவனை மறந்துவிடுவார்.
அவன் உடலைத் தின்னும் புழுக்களே, அவனை விரும்புகிறவளாயிருக்கும்.
ஜனங்கள் அவனை நினைவுகூரமாட்டார்கள்.
எனவே அத்தீயவன் மரத்துண்டைப்போன்று உடைந்துபோவான்.
21 குழந்தைகளற்ற பெண்களைத் (மலடிகளை) தீயோர் துன்புறுத்துவர்.
கணவர்களை இழந்த பெண்களுக்கு (விதவைகளுக்கு) உதவ அவர்கள் மறுக்கிறார்கள்.
22 ஆற்றலுள்ள மனிதர்களை அழிக்க, தீயோர் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்.
தீயோர் ஆற்றல் பெறக்கூடும், ஆனால், அவர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையின் மீது நிச்சயமில்லை.
23 தீயோர் குறுகியகாலம் பாதுகாப்பாகவும் ஆபத்தின்றியும் உணரலாம்.
தேவன் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்.
24 தீயோர் சிலகாலம் வெற்றியடையலாம்.
ஆனால் அவர்கள் அழிந்துப்போவார்கள்.
தானியத்தைப்போன்று அவர்கள் அறுக்கப்படுவார்கள்.
அத்தீய ஜனங்கள் பிறரைப் போலவே எல்லோராலும் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.
25 “இவை உண்மையென நான் வாக்குறுதியளிக்கிறேன்!
நான் பொய் கூறியதாக யார் நிரூபிக்கக் கூடும்?
நான் தவறிழைத்தேனெனயார் காட்டக் கூடும்?” என்றான்.
எருசலேமில் பேதுரு
11 யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர். 2 எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர். 3 அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.
4 எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான். 5 பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது. 6 நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன். 7 ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.
8 “ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன்.
9 “ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’
10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. 11 பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள். 12 சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். 13 கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். 14 அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான்.
15 “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் [a] பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். 16 அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார். 17 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான்.
18 யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர்.
அந்தியோகியாவிற்கு நற்செய்தி
19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள். 20 இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர். 21 கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர்.
22 எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர். 23-24 பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர்.
25 பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான். 26 அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
27 அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர். 28 அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது) 29 யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர். 30 அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர்.
2008 by World Bible Translation Center