Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 16-18

சீபா தாவீதைச் சந்திக்கிறான்

16 தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன. தாவீது அரசன் சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான்.

சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் அரசனின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.

அரசன், “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான்.

சீபா அரசனிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.

பின்னர் அரசன் சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.

சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.

சீமேயி தாவீதை சபிக்கிறான்

தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் மகனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும் மீண்டும் தீயனவற்றையே பேசினான்.

தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர். சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ. கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் அரசனாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது மகனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான்.

செருயாவின் மகனாகிய அபிசாய் அரசனை நோக்கி, “எனது அரசனாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான்.

10 அதற்கு அரசன், “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான். 11 தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த மகனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார். 12 ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான்.

13 இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.

14 தாவீது அரசனும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். அரசனும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர்.

15 அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். 16 தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “அரசரே! நீண்டகாலம் வாழ்க” என்றான்.

17 அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.

18 அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். 19 முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் மகனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.

அப்சலோம் அகித்தோப்பேலிடம் அறிவுரை கேட்கிறான்

20 அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.

21 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான்.

22 பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். 23 அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.

தாவீதைக் குறித்த அகித்தோப்பேலின் அறிவுரை

17 அகிதோப்பேல் மேலும் அப்சலோமிடம், “நான் இப்போது 12,000 ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். இன்றிரவு தாவீதை நான் துரத்துவேன். அவன் தளர்ந்து சோர்வுற்றிருக்கும்போது அவனைப் பிடிப்பேன். நான் அவனைக் கலக்கமடையச் செய்வேன். அவனது ஆட்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் தாவீது அரசனை மட்டும் கொல்வேன். பின்பு ஜனங்களையெல்லாம் உங்களிடம் அழைத்து வருவேன். தாவீது மரித்துவிட்டால், எல்லா ஜனங்களும் சமாதானத்தோடு திரும்புவார்கள்” என்றான்.

இத்திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் நல்லதெனப்பட்டது. ஆனால் அப்சலோம், “அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிடுங்கள். அவன் கூறுவதைக் கேட்கவேண்டும்” என்றான்.

அகித்தோப்பேலின் அறிவுரையை ஊசாய் பாழாக்குகிறான்

ஊசாய் அப்சலோமிடம் வந்தான். அப்சலோம் ஊசாயிடம், “இதுதான் அகித்தோப்பேல் வகுத்தளித்த திட்டம். நாம் இதைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையெனில் சொல்லும்” என்றான்.

ஊசாய் அப்சலோமிடம், “இம்முறை அகிப்தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை” என்றான். மேலும் ஊசாய், “உன் தந்தையும் அவரது ஆட்களும் வலியவர்கள் என்பது உனக்குத் தெரியும், தன் குட்டிகளைக் களவு கொடுத்த கரடிகள் போல் அவர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். உன் தந்தை பயிற்சிப் பெற்ற வீரர். அவர் ஜனங்களோடு இரவில் தங்கமாட்டார். அவர் ஒருவேளை குகையிலோ, வேறெங்கோ ஒளிந்திருக்க வேண்டும். அவர் முதலில் உன் ஆட்களைத் தாக்கினால், ஜனங்கள் அச்செய்தியை அறிவார்கள். அவர்கள், ‘அப்சலோமின் ஆட்கள் தோற்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். 10 பின்பு சிங்கம் போல் தைரியம்கொண்ட ஆட்களும் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை சிறந்த வீரர் என்றும், அவரது ஆட்கள் தைரியமானவர்கள் என்றும் அறிவார்கள்.

11 “இதுவே நான் சொல்ல விரும்புவதாகும்: நீ தாண் முதல் பெயெர்செபா மட்டும் உள்ள இஸ்ரவேலரை ஒன்று திரட்ட வேண்டும். அப்போது கடலின் மணலைப் போல் பலர் இருப்பார்கள். பின்பு நீ போருக்குச் செல்லவேண்டும். 12 நாம் தாவீதை அவர் ஒளிந்திருக்குமிடத்திலிருந்து பிடிக்கலாம். பனித்துளி நிலத்தில் விழுவதுபோல், நாம் தாவீதின் மீது விழுந்து பிடிக்கலாம். தாவீதையும் அவரது ஆட்களையும் கொல்லலாம். யாரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 13 ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது” என்றான்.

14 அப்சலோமும் இஸ்ரவேலர் எல்லோரும், “அற்கியனாகிய ஊசாயின் அறிவுரை அகித்தோப்பேலுடையதைக் காட்டிலும் சிறந்தது” என்றனர். இது கர்த்தருடைய திட்டமானதால் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அகித்தோப்பேலின் நல்ல அறிவுரை பயனற்றுப்போகும்படி கர்த்தர் திட்டமிட்டார். அப்சலோமை கர்த்தர் இவ்வாறு தண்டிப்பார்.

தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்

15 இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும், அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய், 16 “விரையுங்கள்! தாவீதுக்குச் செய்தி அனுப்புங்கள். இன்றிரவில் ஜனங்கள் பாலைவனத்திற்குக் கடந்து செல்லுமிடங்களில் தங்கவேண்டாமெனக் கூறுங்கள். ஆனால் உடனே யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடந்துவிட்டால் அரசனும் அவனுடைய ஜனங்களும் பிடிபடமாட்டார்கள்” என்று கூறினான்.

17 ஆசாரியர்களின் மகன்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் அரசன் தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.

18 ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள். 19 அம்மனிதனின் மனைவி ஒரு விரிப்பை எடுத்துக் கிணற்றின் மீது விரித்தாள். பின்பு அவள் அதன் மீது தானியங்களைப் பரப்பினாள். தானியத்தைக் குவித்து வைத்திருந்தாற்போல் அக்கிணறு காணப்பட்டது. யாரும் யோனத்தனும் அகிமாசும் அங்கு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 20 அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், “யோனத்தானும் அகிமாசும் எங்கே?” என்று கேட்டார்கள்.

அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கெனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள்.

அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

21 அப்சலோமின் வேலைக்காரர்கள் போன பிறகு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிற்கு வெளியே வந்தார்கள். அவர்கள் போய் தாவீது அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “விரைந்து நதியைக் கடந்து போய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இந்த காரியங்களைத் திட்டமிட்டுள்ளான்” என்றார்கள்.

22 அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.

அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான்

23 இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.

அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்

24 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார்.

அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர். 25 அப்சலோம் அமாசாவைப் படைக்குத் தலைவனாக்கினான். அமாசா யோவாபின் பதவியை வகித்தான். அமாசா இஸ்மவேலனாகிய எத்திராவின் மகன். செருயாவின் சகோதரியாகிய நாகாசின் மகளாகிய அபிகாயில் அமாசாவின் தாய். (செருயா யோவாபின் தாய்)

26 கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.

சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர்

27 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அந்த இடத்தில் சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் இருந்தனர். (அம்மோனியரின் ஊராகிய ரப்பாவைச் சார்ந்தவன் சோபி நாகாசின் மகன் லோதேபாரிலிருந்து அம்மியேலின் மகனாகிய மாகீர் வந்தான். கீலேயாத்திலுள்ள ரோகிலிமிலிருந்து வந்தவன் பர்சிலா) 28-29 அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.

தாவீது போருக்குத் தயாராகிறான்

18 தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான். ஜனங்களை மூன்று பிரிவினராகப் பிரித்தான். பின்பு ஜனங்களை வெளியே அனுப்பினான். மூன்றில் ஒரு பகுதி ஜனங்களை யோவாப் வழி நடத்தினான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினரை செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் வழி நடத்தினான். காத்திலிருந்து வந்த ஈத்தாயி மூன்றாவது பிரிவு ஜனங்களை வழி நடத்தினான்.

தாவீது அரசன் ஜனங்களிடம், “நானும் உங்களோடு வருவேன்” என்று கூறினான்.

ஆனால் ஜனங்கள், “இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.

அரசன் ஜனங்களை நோக்கி, “நீங்கள் சிறந்ததென முடிவெடுக்கும் காரியத்தையே நான் செய்வேன்” என்றான்.

பின்பு அரசன் வாயிலருகே வந்து நின்றான். படை வெளியே சென்றது. அவர்கள் 100 பேராக மற்றும் 1,000 பேராக அணிவகுத்துச் சென்றனர்.

“அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்!”

யோவாப், அபிசாயி, ஈத்தாய் ஆகியோருக்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “இதை எனக்காகச் செய்யுங்கள் அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்” என்றான்.

ஜனங்கள் எல்லாரும் அப்சலோமைக் குறித்து படைத் தலைவர்களுக்கு அரசன் இட்ட கட்டளையைக் கேட்டார்கள்.

தாவீதின் படை அப்சலோமின் படையைத் தோற்கடிக்கிறது

அப்சலோமின் இஸ்ரவேலருடைய படையைத் தாவீதின் படை களத்தில் சந்தித்தது. அவர்கள் எப்பிராயீமின் காட்டில் சண்டையிட்டனர். தாவீதின் படை இஸ்ரவேலரைத் தோற்கடித்தது. அன்றைக்கு 20,000 ஆட்கள் கொல்லப்பட்டனர். அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.

அப்சலோம் தாவீதின் அதிகாரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்சலோம் தனது கோவேறு கழுதையின் மேலேறிக்கொண்டு, தப்பித்துச்செல்ல முயன்றான். ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழே அந்தக் கோவேறு கழுதைச் சென்றது. அதன் கிளைகள் அடர்த்தியாக இருந்தன. அப்சலோமின் தலை மரத்தில் அகப்பட்டுக்கொண்டது, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை ஓடிவிட்டதால், அப்சலோம் நிலத்திற்கு மேலாகத் [a] தொங்கிக்கொண்டிருந்தான்.

10 ஒரு மனிதன் நிகழ்ந்தது அனைத்தையும் பார்த்தான். அவன் யோவாபிடம், “ஓர் கர்வாலி மரத்தில் அப்சலோம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டேன்” என்றான்.

11 யோவாப் அம்மனிதனை நோக்கி, “ஏன் அவனைக் கொன்று நிலத்தில் விழும்படியாகச் செய்யவில்லை? நான் உனக்கு ஒரு கச்சையையும் 10 வெள்ளிக் காசையும் கொடுத்திருப்பேன்!” என்றான்.

12 அம்மனிதன் யோவாபை நோக்கி, “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக்காசைக் கொடுத்தாலும் நான் அரசனின் மகனைக் காயப்படுத்த முயலமாட்டேன். ஏனெனில் உங்களுக்கும், அபிசாயிக்கும், ஈத்தாயிக்கும் அரசன் இட்ட கட்டளையை நாங்கள் கேட்டோம். அரசன், ‘இளைய அப்சலோமைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றான். 13 நான் அப்சலோமைக் கொன்றால் அரசன் கண்டு பிடித்துவிடுவான். அப்போது நீங்களே என்னைத் தண்டிப்பீர்கள்” என்றான்.

14 யோவாப், “நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!” என்றான்.

அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன. 15 யோவாபுக்கு யுத்தத்தில் உதவிய பத்து இளம் வீரர்கள் இருந்தனர். அந்த பத்து பேரும் அப்சலோமைச் சூழ்ந்து நின்று அவனைக் கொன்றனர்.

16 யோவாப் எக்காளம் ஊதி அப்சலோமின் இஸ்ரவேலரைத் துரத்துவதை நிறுத்துமாறு அறிவித்தான். 17 பின்பு அப்சலோமின் உடலை யோவாபின் ஆட்கள் எடுத்துக் காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் இட்டனர். அக்குழியைப் பெரிய கற்களால் மூடினார்கள்.

அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் ஓடிப்போய், தங்கள் வீடுகளை அடைந்தனர்.

18 அப்சலோம் உயிரோடிருந்தபோது அரசனின் பள்ளதாக்கில் ஒரு தூணை நிறுவினான். அப்சலோம், “எனது பெயரை நிலைநிறுத்துவதற்கு எனக்கு மகன் இல்லை” என்றான். எனவே அத்தூணுக்கு தனது பெயரிட்டான். அத்தூண் இன்றைக்கும் “அப்சலோமின் ஞாபகச் சின்னம்” என்று அழைக்கப்படுகிறது.

யோவாப் தாவீதுக்கு செய்தியனுப்புகிறான்

19 சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, “நான் ஓடிப்போய் தாவீது அரசனுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்” என்றான்.

20 யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், அரசனின் மகன் மரித்துவிட்டான்” என்றான்.

21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்” என்றான்.

கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.

22 ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான்.

யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.

23 அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான்.

யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான்.

அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.

தாவீது செய்தியை அறிகிறான்

24 நகர வாயில்கள் இரண்டிற்கும் நடுவே தாவீது உட்கார்ந்திருந்தான். வாயில் மதிலின் கூரையில் காவலன் போய் நின்றான். ஒரு மனிதன் தனித்து ஓடிவருகிறதைக் காவலன் கண்டான். 25 காவலன் தாவீது அரசனிடம் உரக்கச் சொன்னான்.

தாவீது அரசன், “அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.

அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான். 26 காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான்.

அரசன், “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.

27 காவலன், “சாதோக்கின் மகன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான்.

அரசன், “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.

28 அகிமாஸ் அரசனிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் அரசனை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது அரசனாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களை கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.

29 அரசன், “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான்.

அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.

30 அப்போது அரசன், “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.

31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய அரசனுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.

32 அரசன் கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான்.

கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.

33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.

லூக்கா 17:20-37

உங்களுக்குள் தேவராஜ்யம்(A)

20 பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, “தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டார்கள்.

இயேசு பதிலாக, “தேவனுடைய இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல. 21 ‘பாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.

22 பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, “மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது. 23 மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார். 24 “மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப்போல அவர் ஒளிவீசுவார். 25 ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது.

26 “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். 27 நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது.

28 “தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 29 லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது. 30 மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும்.

31 “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. 32 லோத்தின் மனைவிக்கு [a] என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்!

33 “தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான். 34 இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான். 35 இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார். 36 [b]

37 சீஷர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இது எங்கே நடக்கும்?” என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, “வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center