Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 22-24

மூன்று கோத்திரங்கள் சொந்த இடத்திற்குச் செல்லுதல்

22 ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான். யோசுவா அவர்களை நோக்கி, “மோசே கர்த்தருடைய ஊழியன். மோசே செய்யும்படி கூறியவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள். எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தீர்கள். இஸ்ரவேலரின் எல்லா ஜனங்களுக்கும் நீங்கள் உதவியாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தீர்கள். இஸ்ரவேலருக்கு அமைதி வழங்குவதாக உங்கள் தேவனாகிய கர்த்தர் வாக்களித்தார். இப்போது, கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். இப்போது உங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகலாம். யோர்தான் நதியின் கிழக்குப் புறத்திலுள்ள நிலத்தை கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்தார். அந்நிலத்தை உங்கள் இருப்பிடமாகக் கொண்டு நீங்கள் போகலாம். ஆனால் மோசே கொடுத்த சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவரைப் பின்பற்றி முழு இதயத்துடனும் முழு ஆத்துமாவுடனும் சிறப்பாக அவருக்கு சேவை செய்வதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்” என்றான்.

பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்தான். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். பாசான் தேசத்தை, மோசே மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்திருந்தான். யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலுள்ள தேசத்தை யோசுவா மனாசே கோத்திரத்தின் மற்ற பாதிக் குடும்பங்களுக்கு கொடுத்தான். யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினான். அவன், “நீங்கள் செல்வந்தர்கள் ஆனீர்கள். உங்களுக்கு மிருக ஜீவன்கள் பல உள்ளன. உங்களிடம் பொன்னும், வெள்ளியும், விலையுயர்ந்த நகைகளும் உள்ளன. உங்களிடம் அழகிய ஆடைகள் இருக்கின்றன. உங்கள் எதிரிகளிடமிருந்து பல பொருட்களைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று அவற்றை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.

எனவே ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் பிற இஸ்ரவேலரைப் பிரிந்து சென்றனர். அவர்கள் கானானிலுள்ள சீலோவில் இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டு கீலேயாத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். மோசே அவர்களுக்குக் கொடுத்த அவர்கள் சொந்த இடத்திற்குப் போனார்கள். இந்நிலத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார்.

10 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் கீலேயாத் என்னும் இடத்திற்குச் சென்றார்கள். இந்த இடம் கானான் தேசத்தில் யோர்தான் நதிக்கு அருகே இருந்தது. அவ்விடத்தில் ஜனங்கள் ஓர் அழகிய பலிபீடத்தைக் கட்டினார்கள். 11 இந்த மூன்று கோத்திரங்களும் கட்டிய பலிபீடத்தைக் குறித்து சீலோவிலுள்ள பிற இஸ்ரவேலர் கேள்விப்பட்டனர். கானானின் எல்லையில் கீலேயாத் என்னுமிடத்தில் அப்பலிபீடம் இருந்தது என்பதை அறிந்தனர். அப்பலிபீடம் இஸ்ரவேலரின் நாட்டில் யோர்தான் நதிக்கருகே இருந்தது. 12 இம்மூன்று கோத்திரத்தினரிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் மிகுந்த கோபம் கொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களுக்குகெதிராகப் போர் செய்ய முடிவெடுத்தனர்.

13 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினரிடமும் பேசுவதற்கு இஸ்ரவேலர் சில ஆட்களை அனுப்பினார்கள். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அவர்களுக்குத் தலைவனாகச் சென்றான். 14 அவர்கள் கோத்திரத்தின் தலைவர்கள் பத்து பேரை அவனோடே கூட அனுப்பினார்கள். சீலோவிலிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு மனிதன் வீதம் சென்றான்.

15 எனவே பதினொருவர் கீலேயாத்திற்கு ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரிடம் பேசுவதற்காகச் சென்றனர். பதினொருவரும் அவர்களை நோக்கி: 16 “இஸ்ரவேலரின் தேவனுக்கெதிராக இக்காரியத்தை ஏன் செய்தீர்கள்? கர்த்தருக்கு எதிராக ஏன் திரும்பினீர்கள்? உங்களுக்காக ஏன் ஒரு பலிபீடத்தைக் கட்டினீர்கள்? இது தேவனின் போதனைக்கு எதிரானது என்பதை நீங்கள் அறிவீர்கள்! 17 பேயோரில் என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். அப்பாவத்தால் நாம் இன்றும் துன்புறுகிறோம். அப்பெரும் பாவத்தால் இஸ்ரவேலரில் பலர் நோயுறுமாறு தேவன் செய்தார். அந்நோயால் இன்றும் நாம் துன்புறுகிறோம், 18 இப்போது நீங்களும் அதையே செய்கிறீர்கள்! கர்த்தருக்கு எதிராகத் திரும்புகிறீர்கள்! கர்த்தரை பின்பற்ற மறுப்பீர்களா? நீங்கள் செய்வதை நிறுத்தாவிட்டால், கர்த்தர் இஸ்ரவேல் ஜனம் முழுவதின் மேலும் கோபம்கொள்வார்.

19 “உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.

20 “சேராவின் மகனாகிய ஆகான் என்ற மனிதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப் படவேண்டிய பொருட்களைப் பற்றிய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவன் மறுத்தான். அந்த ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறினான், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். ஆகான் தன் பாவத்திற்காக மரித்தான். ஆனால் மற்றும் பலரும் மரிக்க நேரிட்டது” என்று எல்லா இஸ்ரவேலரும் உங்களிடம் கேட்கிறார்கள் என்றனர்.

21 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினர், அந்தப் பதினொரு ஆட்களுக்கும் பதிலளித்தனர். அவர்கள், 22 “கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம். 23 நாங்கள் தேவனின் சட்டங்களை மீறினால், கர்த்தரே எங்களைத் தண்டிக்கட்டும். 24 தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம். 25 யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும்.

26 “எனவே இப்பலிபீடத்தைக் கட்டமுடிவெடுத்தோம். தகன பலிகளுக்கோ, மற்ற பலிகளுக்கோ இதைப் பயன்படுத்த நினைக்கவில்லை. 27 நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றை கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். 28 வருங்காலத்தில், உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் இஸ்ரவேலரல்ல என்று கூறினால், அப்போது எங்கள் பிள்ளைகள், ‘பாருங்கள்! எங்கள் பிதாக்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறார்கள். பரிசுத்த கூடாரத்தின் அருகேயுள்ள கர்த்தருடைய பலிபீடத்தைப் போலவே இப்பலிபீடமும் அமைந்துள்ளது. நாங்கள் இப்பலிபீடத்தைப் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை. நாங்களும் இஸ்ரவேலரில் ஒரு பங்குடையவர்கள் என்பதற்கு இது சான்றாகும்!’ என்று சொல்லமுடியும்.

29 “உண்மையாகவே, கர்த்தருக்கு எதிராக இருப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றுவதை நிறுத்தும் விருப்பமும் இப்போது எங்களுக்குக் கிடையாது. பரிசுத்த கூடாரத்தின் முன்னே இருப்பது மட்டுமே உண்மையான பலிபீடம் என்பதை நாங்கள் அறிவோம். அப்பலிபீடம் நமது தேவனாகிய கர்த்தருக்கு உரியது” என்றார்கள்.

30 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள். 31 எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.

32 பிறகு பினெகாசும், தலைவர்களும் அங்கிருந்துԔ தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர். ரூபன், காத் ஜனங்களைக் கீலேயாத் தேசத்தில் விட்டு கானானுக்குப் போனார்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர்கள் திரும்பிப் போய் நடந்தவற்றைக் கூறினார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்களும் திருப்தி கொண்டனர். அவர்கள் சந்தோஷமடைந்து தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். ரூபன், காத், மனாசே ஆகிய ஜனங்களுக்கெதிராகப் போர் செய்ய வேண்டாமென முடிவெடுத்தனர். அந்த ஜனங்கள் வாழும் இடத்தை அழிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்தனர்.

34 ரூபன், காத், ஜனங்கள் பலிபீடத்திற்கு ஒரு பெயரிட்டனர். அவர்கள் அதை, “கர்த்தரே தேவன் என்ற எங்கள் நம்பிக்கைக்கு இது சான்று” என்று அழைத்தார்கள்.

யோசுவா ஜனங்களை உற்சாகப்படுத்துதல்

23 சுற்றிலுமிருந்த எதிரிகளிடமிருந்து கர்த்தர் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலரைப் பாதுகாத்தார். வருடங்கள் கழிந்தன, யோசுவா வயது முதிர்ந்தவனானான். அப்போது, எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், இஸ்ரவேலரின் அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தான். அவர்களிடம், “நான் மிகவும் வயது முதிர்ந்தவனானேன். நமது பகைவர்களுக்கு கர்த்தர் செய்தவற்றைப் பார்த்திருக்கிறீர்கள். நமக்கு உதவும் பொருட்டு கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக போர் செய்தார். ‘யோர்தான் நதிக்கும், மேற்கில் மத்தியத்தரைக் கடலுக்கும் இடையில் உள்ள இடத்தை உங்கள் ஜனங்கள் பெறமுடியும்’ என்று நான் உங்களுக்குச் சொன்னதை இப்போது நினைவுகூருங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன், ஆனால் இதுவரைக்கும் நீங்கள் அதைப் பெறவில்லை. ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது வாக்குப்படியே அங்கு வசிக்கும் ஜனங்களை அங்கிருந்து வெளியேற்றுவார்! நீங்கள் அவர்கள் தேசத்தை எடுத்துக்கொள்வீர்கள். அங்கு வசிக்கும் ஜனங்களை கர்த்தர் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவார். கர்த்தர் இதைச் செய்வதாக உங்களுக்குக் வாக்களித்துள்ளார்.

“கர்த்தர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள். மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள். இஸ்ரவேலரல்லாத ஜனங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்கள் தமக்குச் சொந்தமான தெய்வங்களையே வழிபடுகின்றனர். அந்த ஜனங்களோடு நட்பு கொள்ளாதீர்கள். அத்தெய்வங்களுக்கு சேவை செய்யவோ, அவற்றை வழிபடவோ வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். இதையே முன்பும் செய்தீர்கள், இனிமேலும் செய்ய வேண்டும்.

“பெரிய, வல்லமையான தேசங்களை வெல்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவினார். அவர்கள் அங்கிருந்து போகும்படியாக கர்த்தர் துரத்தினார். உங்களைத் தோற்கடிக்க எந்தத் தேசத்தாலும் முடியவில்லை. 10 கர்த்தருடைய உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் 1,000 பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கர்த்தர் உங்களுக்காகப் போர் செய்கிறார். கர்த்தர் இதைச் செய்வதாக வாக்களித்தார். 11 எனவே உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து நேசியுங்கள்.

12 “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்ககள். இஸ்ரவேலரல்லாத ஜனங்களோடு நண்பராகாதீர்கள். அவர்களில் யாரையும் மணந்து கொள்ளாதீர்கள். ஒருவேளை அவர்களோடு நீங்கள் நட்பு கொண்டால், 13 பிறகு பகைவர்களை வெல்லும் முயற்சியில் கர்த்தர் உங்களுக்கு உதவமாட்டார். அந்த ஜனங்கள் உங்களுக்கு கண்ணியாக மாறுவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் புகையைப் போலவும், தூசியைப் போலவும் அமைந்து வேதனை விளைவிப்பார்கள். நீங்கள் இத்தேசத்தை விட்டுச்செல்ல வற்புறுத்தப்படுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த நல்ல நிலத்தைக் கொடுத்தார். இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் நீங்கள் அதை இழக்கக்கூடும்.

14 “இது நான் மரிக்கும் நேரம். கர்த்தர் மிகப் பெரிய காரியங்களைச் செய்தார் என்பதை அறிந்து உண்மையாகவே நம்புகிறீர்கள். தன் வாக்குறுதிகளை அவர் சற்றும்மீறவில்லை. அவர் நமக்கு வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றினார். 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்களித்த நல்லவை அனைத்தும் நிறைவேறின, நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமென அவர் உறுதியளித்தார். அவர் உங்களுக்குத் தந்த இத்தேசத்தினின்று உங்களைத் துரத்துவார் எனவும் உறுதியாகக் கூறினார். 16 உங்கள் தேவனாகிய கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும். நீங்கள் போய், அந்நிய தெய்வங்களை ஆராதித்தால் உங்கள் நிலத்தை இழப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் உங்கள் மீது கோபமைடைவார். அப்போது அவர் உங்களுக்குத் தந்த இந்த நல்ல இடத்தைவிட்டு விரைவில் துரத்தப்படுவீர்கள்” என்றான்.

யோசுவா விடை பெறுதல்

24 இஸ்ரவேல் கோத்திரத்தினர் எல்லோரையும் சீகேமில் கூடுமாறு யோசுவா அழைத்தான். பின் யோசுவா மூத்த தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் இஸ்ரவேலின் ஆட்சியாளரையும் அழைத்தான். இவர்கள் தேவனுக்கு முன்னே நின்றார்கள்.

பின்பு யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்:

‘பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம்மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர். ஆனால் கர்த்தராகிய நான், நதிக்கு மறுபுறத்திலுள்ள தேசத்திலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தேன். கானான் தேசத்தின் வழியாக அவனை வழிநடத்திப் பல பல பிள்ளைகளை அவனுக்குக் கொடுத்தேன். ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் பெயருள்ள மகனைக் கொடுத்தேன். ஈசாக்கிற்கு யாக்போபு, ஏசா என்னும் இரண்டு மகன்களைக் கொடுத்தேன். சேயீர் மலையைச் சுற்றியிருந்த தேசத்தை ஏசாவிற்குக் கொடுத்தேன். யாக்கோபும் அவனது மகன்களும் அங்கு வாழவில்லை. அவர்கள் எகிப்து தேசத்தில் வாழ்வதற்குச் சென்றார்கள்.

‘பிறகு நான் மோசேயையும் ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பினேன். எனது ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வருமாறு அவர்களுக்குச் சொன்னேன். எகிப்து ஜனங்களுக்குப் பல கொடிய காரியங்கள் நிகழுமாறு செய்தேன், பின் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் செங்கடலுக்கு வந்தார்கள், எகிப்தியர்கள் தேர்களிலும் குதிரைகளிலும் அவர்களைத் துரத்தினார்கள். ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள்.

‘அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள். எமோரியரின் தேசத்திற்கு உங்களை அழைத்து வந்தேன். அது யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியாகும். அந்த ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் செய்தனர், ஆனால் நீங்கள் அவர்களைத் தோற்கடிக்குமாறு செய்தேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு கொடுத்தேன். பின்பு அத்தேசத்தை நீங்கள் கைப்பற்றினீர்கள்.

‘பிறகு மோவாபின் அரசனும், சிப்போரின் மகனுமாகிய பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துப் போரிடத் தயாரானான். பேயோரின் மகனாகிய பிலேயாமுக்கு அரசன் சொல்லினுப்பினான். அவன் பிலேயாமிடம் உங்களைச் சபிக்குமாறு கூறினான். 10 ஆனால் கர்த்தராகிய, நான், பிலேயாம் கூறுவதைக் கேட்க மறுத்தேன். எனவே பிலேயாம் உங்களுக்கு நல்லவை நிகழவேண்டுமெனக் கேட்டான்! அவன் உங்களைப் பலமுறை ஆசீர்வதித்தான். நான் உங்களைக் காப்பாற்றி, தீமைகளினின்று விலக்கினேன்.

11 ‘பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன். 12 உங்கள் படை முன்னோக்கிச் சென்றபோது, நான் காட்டுக் குளவிகளை அவர்களுக்கு முன்பாக அனுப்பினேன். காட்டுக் குளவிகள் அந்த ஜனங்களையும் இரண்டு எமோரிய அரசர்களையும் பயமுறுத்தி ஓடச் செய்தன. வாளையும், வில்லுகளையும் பயன்படுத்தாமலே தேசத்தைக் கைப்பற்றினீர்கள்.

13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

14 பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும். உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த பொய்த் தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.

15 “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான்.

16 அப்போது ஜனங்கள் பதிலாக, “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தமாட்டோம். அந்நிய தெய்வங்களுக்கு ஒருபோதும் சேவை செய்யமாட்டோம்! 17 தேவனாகிய கர்த்தர் தான் எகிப்திலிருந்து வெளியேற்றி நம் ஜனங்களை அழைத்து வந்தார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தேசத்தில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் அங்கு பெரிய காரியங்களை கர்த்தர் எங்களுக்காகச் செய்தார். அவர் எங்களை அத்தேசத்திலிருந்து அழைத்து வந்து, பிற தேசங்கள் வழியாக நாங்கள் பிரயாணம் செய்யும்போது எங்களைப் பாதுகாத்து வந்தார். 18 அத்தேசங்களில் வசித்த ஜனங்களைத் தோற்கடிக்க கர்த்தர் எங்களுக்கு உதவினார். நாங்கள் இப்போதிருக்கிற தேசத்தில் வாழ்ந்த எமோரிய ஜனங்களை வெல்லவும் கர்த்தர் எங்களுக்கு உதவினார். கர்த்தருக்குத் தொடர்ந்து நாங்கள் சேவை செய்வோம். ஏனெனில் அவரே எங்கள் தேவன்” என்றார்கள்.

19 அப்போது யோசுவா, “அது உண்மையல்ல. நீங்கள் கர்த்தருக்குத் தொடர்ந்து சேவை செய்வதென்பது இயலாதது. தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அந்நிய தெய்வங்களை ஆராதிக்கும் ஜனங்களை தேவன் வெறுக்கிறார். தனக்கெதிராக அவ்வாறு திரும்பினால் உங்களை தேவன் மன்னிக்கமாட்டார். 20 ஆனால் நீங்கள் கர்த்தரை விட்டு நீங்கிப் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்வீர்கள். உங்களுக்குக் கொடிய காரியங்கள் நிகழும்படி கர்த்தர் செய்வார். கர்த்தர் உங்களை அழிப்பார். தேவனாகிய கர்த்தர் உங்களிடம் நல்லவராக இருந்தார், ஆனால் நீங்கள் அவருக்கெதிராக திரும்பினால் அவர் உங்களை அழிப்பார்” என்றான்.

21 அதற்கு ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “இல்லை! நாங்கள் கர்த்தருக்கே சேவை செய்வோம்” என்றார்கள்.

22 அப்போது யோசுவா, “உங்களையும், உங்களோடிருக்கிற ஜனங்களையும் சுற்றி நோக்குங்கள். நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளா?” என்றான்.

ஜனங்கள் பதிலாக, “ஆம், அது உண்மை! நாங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்பதைக் காண்கிறோம்” என்றார்கள்.

23 அப்போது யோசுவா, “உங்களிடமிருக்கிற பொய்த் தெய்வங்களை எடுத்து வீசிவிடுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உங்கள் முழுமனதோடும் நேசியுங்கள்” என்றான்.

24 பின் ஜனங்கள் யோசுவாவை நோக்கி, “நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்வோம். நாங்கள் அவருக்குக் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.

25 அந்த நாளில் யோசுவா ஜனங்களுக்காக ஒரு ஒப்பந்தத்தைச் செய்தான். சீகேம் எனப்பட்ட ஊரில் இந்த ஒப்பந்தத்தைச் செய்தான். அது அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாயிற்று. 26 தேவனுடைய சட்ட புத்தகத்தில் யோசுவா இவற்றை எழுதினான். பின் யோசுவா ஒரு பெரிய கல்லை எடுத்தான். அக்கல்லே அந்த ஒப்பந்தத்திற்கு அடையாளமாயிற்று. கர்த்தருடைய பரிசுத்த கூடாரத்தின் அருகே இருந்த கர்வாலி மரத்திற்கு அடியில் அவன் அக்கல்லை வைத்தான்.

27 பிறகு யோசுவா அனைவரையும் நோக்கி, “நாம் இன்று கூறிய காரியங்களை நினைவு கூருவதற்கு இந்தக் கல் உதவும். கர்த்தர் நம்மோடு பேசிக் கொண்டிருந்த இந்த நாளில், இந்த கல் இங்கு இருந்தது. இன்று நடந்தவற்றை நினைவுகூருவதற்கு உதவும் ஒன்றாக இந்த கல் இருக்கும். உங்களுக்கு எதிரான சாட்சியாகவும் இந்த கல் அமையும். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் திரும்புவதை அது தடுக்கும்” என்றான்.

28 பின்பு யோசுவா அனைவரிடமும் தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினான். எனவே ஒவ்வொருவனும் அவனவன் இருப்பிடத்திற்குச் சென்றான்.

யோசுவா மரணமடைதல்

29 அதன் பின்னர் நூனின் மகனாகிய யோசுவா மரித்தான். யோசுவாவுக்கு அப்போது 110 வயது. 30 திம்னாத் சேராவிலுள்ள அவனது சொந்த நிலத்தில் அவன் அடக்கம் பண்ணப்பட்டான். காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் அது இருந்தது.

31 யோசுவா உயிரோடிருந்தபோது இஸ்ரவேலர் கர்த்தருக்கு சேவை செய்தனர். யோசுவா மரித்த பின்னரும், கர்த்தருக்குத் தொடர்ந்து, ஜனங்கள் சேவை செய்து வந்தார்கள். அவர்கள் தலைவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்கள் தொடர்ந்து கர்த்தரை சேவித்தனர். கர்த்தர் இஸ்ரவேலருக்குச் செய்த காரியங்களைப் பார்த்தவர்கள் இத்தலைவர்கள் ஆவர்.

யோசேப்பு தன்னிடத்திற்கு வருகிறான்

32 இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது, அவர்கள் யோசேப்பின் எலும்புகளை எடுத்து வந்தனர். சீகேமில் யோசேப்பின் எலும்புகளைப் புதைத்தனர். சீகேம் என்ற மனிதனின் தந்தையாகிய எமோரியரின் மகன்களிடமிருந்து யாக்கோபு வாங்கிய நிலத்தில் அந்த எலும்புகளைப் புதைத்தனர். யாக்கோபு அந்த நிலத்தை 100 சுத்த வெள்ளி பணத்திற்கு வாங்கியிருந்தான். அந்நிலம் யோசேப்பின் பிள்ளைகளுக்குச் சொந்தமானதாக இருந்தது.

33 ஆரோனின் மகன், எலெயாசாரும் மரித்தான். எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள கிபியாவில் அவன் அடக்கம்பண்ணப்பட்டான். எலெயாசாரின் மகன் பினெகாசுக்குக் கிபியா கொடுக்கப்பட்டது.

லூக்கா 3

யோவானின் போதனை(A)

அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது;

பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்.

ஏரோது கலிலேயாவை ஆண்டான்.

ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும்

திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.

அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் மகனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது:

“வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்:
‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள்.
    அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்.
    ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும்.
திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும்.
    கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.
ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’” (B)

யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.

10 மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.

11 அவர்களுக்கு யோவான், “உங்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தால், ஒரு மேலாடைகூட இல்லாத மனிதனுக்கு ஒன்றைக் கொடுங்கள். உங்களிடம் உணவிருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று பதிலுரைத்தான்.

12 வரி வசூலிப்போரும்கூட யோவானிடம் வந்தனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினர். அவர்கள் யோவானிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

13 அவர்களிடம் யோவான், “எந்த அளவுக்கு வரி வசூலிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு வரி வாங்குவதன்றி அதிகமாக வசூலிக்காதீர்கள்” என்று கூறினான்.

14 வீரர்கள் யோவானை நோக்கி, “எங்களைப்பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு யோவான், “உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினான்.

15 எல்லா மக்களும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருந்தனர். எனவே யோவானைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள், “இவன் கிறிஸ்துவாக இருக்கக்கூடும்” என்று எண்ணினர்.

16 அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தானியங்களைச் சுத்தமாக்குவதற்குத் தயாராக அவர் வருவார். பதரிலிருந்து தானியத்தைப் பிரித்துக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவர் எரிப்பார். அணைக்க முடியாத நெருப்பில் அவற்றைச் சுட்டெரிப்பார்,” என்று பதில் கூறினான். 18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

யோவானுக்கு ஏற்பட்ட உபத்திரவம்

19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். 20 எனவே ஏரோது இன்னொரு தீய காரியத்தையும் செய்தான். அவன் யோவானை சிறையிலிட்டான். ஏரோது செய்த பல தீய காரியங்களோடு கூட இதுவும் ஒரு தீய செயலாக அமைந்தது.

இயேசு ஞானஸ்நானம் பெறுதல்(C)

21 யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு அவனால் எல்லா மக்களும் ஞானஸ்நானம் பெற்றனர். இயேசுவும் அப்போது அங்கு வந்து அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார். இயேசு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார். ஆவியானவர் ஒரு புறாவைப்போலத் தோற்றமளித்தார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அது “நீர் என் அன்புள்ள குமாரன். நான் உம்மில் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.

யோசேப்பின் குடும்ப வரலாறு(D)

23 இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் மகன் என்றே எண்ணினர்.

யோசேப்பு ஏலியின் மகன்.

24 ஏலி மாத்தாத்தின் மகன்.

மாத்தாத் லேவியின் மகன்.

லேவி மெல்கியின் மகன்.

மெல்கி யன்னாவின் மகன்.

யன்னா யோசேப்பின் மகன்.

25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்.

மத்தத்தியா ஆமோஸின் மகன்.

ஆமோஸ் நாகூமின் மகன்.

நாகூம் எஸ்லியின் மகன்.

எஸ்லி நங்காயின் மகன்

26 நங்காய் மாகாத்தின் மகன்.

மாகாத் மத்தத்தியாவின் மகன்.

மத்தத்தியா சேமேயின் மகன்.

சேமேய் யோசேப்பின் மகன்.

யோசேப்பு யூதாவின் மகன்.

27 யூதா யோவன்னாவின் மகன்.

யோவன்னா ரேசாவின் மகன்.

ரேசா செரூபாபேலின் மகன்.

செரூபாபேல் சலாத்தியேலின் மகன்.

சலாத்தியேல் நேரியின் மகன்.

28 நேரி மெல்கியின் மகன்.

மெல்கி அத்தியின் மகன்.

அத்தி கோசாமின் மகன்.

கோசாம் எல்மோதாமின் மகன்.

எல்மோதாம் ஏரின் மகன்.

29 ஏர் யோசேயின் மகன்.

யோசே எலியேசரின் மகன்.

எலியேசர் யோரீமின் மகன்.

யோரீம் மாத்தாத்தின் மகன்.

மாத்தாத் லேவியின் மகன்.

30 லேவி சிமியோனின் மகன்.

சிமியோன் யூதாவின் மகன்.

யூதா யோசேப்பின் மகன்.

யோசேப்பு யோனானின் மகன்.

யோனான் எலியாக்கீமின் மகன்.

31 எலியாக்கீம் மெலெயாவின் மகன்.

மெலெயா மயினானின் மகன்.

மயினான் மத்தாத்தாவின் மகன்.

மத்தாத்தா நாத்தானின் மகன்.

நாத்தான் தாவீதின் மகன்.

32 தாவீது ஈசாயின் மகன்.

ஈசாய் ஓபேதின் மகன்.

ஓபேத் போவாசின் மகன்.

போவாஸ் சல்மோனின் மகன்.

சல்மோன் நகசோனின் மகன்.

33 நகசோன் அம்மினதாபின் மகன்.

அம்மினதாப் ஆராமின் மகன்.

ஆராம் எஸ்ரோமின் மகன்.

எஸ்ரோம் பாரேசின் மகன்.

பாரேஸ் யூதாவின் மகன்.

34 யூதா யாக்கோபின் மகன்.

யாக்கோபு ஈசாக்கின் மகன்.

ஈசாக்கு ஆபிரகாமின் மகன்.

ஆபிரகாம் தேராவின் மகன்.

தேரா நாகோரின் மகன்.

35 நாகோர் சேரூக்கின் மகன்.

சேரூக் ரெகூவின் மகன்.

ரெகூ பேலேக்கின் மகன்.

பேலேக் ஏபேரின் மகன்.

ஏபேர் சாலாவின் மகன்.

36 சாலா காயினானின் மகன்.

காயினான் அர்பக்சாத்தின் மகன்.

அர்பக்சாத் சேமின் மகன்.

சேம் நோவாவின் மகன்.

நோவா லாமேக்கின் மகன்.

37 லாமேக் மெத்தூசலாவின் மகன்.

மெத்தூசலா ஏனோக்கின் மகன்.

ஏனோக் யாரேதின் மகன்.

யாரேத் மகலாலெயேலின் மகன்.

மகலாலெயேல் கேனானின் மகன்.

கேனான் ஏனோஸின் மகன்.

38 ஏனோஸ் சேத்தின் மகன்.

சேத் ஆதாமின் மகன்.

ஆதாம் தேவனின் மகன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center