Old/New Testament
யாக்கோபின் குமாரனாகிய ஆகூரின் ஞானமொழிகள்
30 இவை அனைத்தும் யாக்கோபின் குமாரனான ஆகூரின் ஞானமொழிகள். இது ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் அளித்த செய்தி:
2 பூமியில் நான்தான் மிகவும் மோசமானவன். நான் புரிந்துகொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொள்ளவில்லை. 3 ஞானியாக இருக்க நான் கற்றுக்கொள்ளவில்லை. தேவனைப்பற்றியும் எதுவும் அறிந்துகொள்ளவில்லை. 4 பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி எவரும் எப்போதும் கற்றுக்கொண்டதில்லை. எவரும் காற்றைக் கையால் பிடித்ததில்லை. எவரும் தண்ணீரை துணியில் கட்டியதில்லை. எவருமே உண்மையில் பூமியின் எல்லையை அறிந்ததேயில்லை. இவற்றை எவராவது செய்யமுடியுமா? யார் அவர்? எங்கே அவரது குடும்பம் இருக்கிறது?
5 தேவன் சொல்லுகிற அனைத்தும் பூரணமானவை. தேவன் அவரிடம் செல்லுகிறவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறார். 6 எனவே தேவன் சொன்னவற்றை மாற்றுவதற்கு முயற்சி செய்யாதே. நீ அவ்வாறு செய்தால், அவர் உன்னைத் தண்டிப்பார். நீ பொய் சொல்கிறாய் என்பதையும் நிரூபிப்பார்.
7 கர்த்தாவே, நான் மரித்துப்போவதற்கு முன்பு எனக்காக நீர் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். 8 நான் பொய் சொல்லாமல் இருக்க உதவிசெய்யும். மிக ஏழையாகவோ அல்லது மிகச் செல்வந்தனாகவோ என்னை ஆக்கவேண்டாம். அன்றாடம் எது தேவையோ அதை மட்டும் எனக்குத் தாரும். 9 ஒருவேளை, என்னிடம் தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால், நீர் எனக்குத் தேவையில்லை என்று எண்ணத் தொடங்குவேன். ஒருவேளை நான் ஏழையாக இருந்தாலோ திருடலாம். இதனால் நான் தேவனுடைய நாமத்திற்கு அவமானத்தைத் தேடித்தருவேன்.
10 எஜமானனிடம் அவனது வேலைக்காரனைப்பற்றிக் குற்றம் சொல்லாதே. நீ அவ்வாறு செய்தால், எஜமான் உன்னை நம்பமாட்டான். உன்னைக் குற்றம் உடையவனாக நினைப்பான்.
11 சிலர் தங்கள் தந்தைகளுக்கு எதிராகப் பேசுவார்கள். அவர்கள் தம் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.
12 சிலர் தம்மை நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மிக மோசமாக இருப்பார்கள்.
13 சிலர் தம்மை மிகவும் நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களை விடத் தம்மை மிக நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள்.
14 சிலரது பற்கள் வாள்களைப்போன்று உள்ளன. அவர்களது தாடைகள் கத்திகளைப்போன்றுள்ளன. அவர்கள் ஏழை ஜனங்களிடமிருந்து எவ்வளவு எடுத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவு எடுத்துக்கொள்வார்கள்.
15 சிலர் தம்மால் பெற முடிந்ததையெல்லாம் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அவர்கள் சொல்வதெல்லாம், “எனக்குத் தா, எனக்குத் தா, எனக்குத் தா” என்பதே. திருப்தி அடையாதவை மூன்று உண்டு. உண்மையில் போதும் என்று சொல்லாதவை நான்கு உண்டு. 16 மரணத்திற்குரிய இடம், மலட்டுப் பெண், மழை தேவைப்படுகிற வறண்ட நிலம், அணைக்க முடியாத நெருப்பு ஆகியவையே அவை.
17 தன் தந்தையைக் கேலிச்செய்கிறவனும் தாயின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனும் தண்டிக்கப்படுவான். அத்தண்டனை அவனது கண்களைக் காகங்களும், கழுகின் குஞ்சுகளும் தின்னும்படியான பயங்கரமுடையது.
18 என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு. 19 வானத்தில் பறக்கும் கழுகு, பாறைமேல் ஊர்ந்து செல்லும் பாம்பு, கடலில் அசையும் கப்பல், ஒரு பெண்ணின் மேல் அன்புகொண்டிருக்கும் ஆண் ஆகிய நான்கையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
20 தன் கணவனுக்கு உண்மையில்லாத பெண், தான் எதுவும் தவறு செய்யாதவளைப்போன்று நடிக்கிறாள். அவள் சாப்பிடுகிறாள், குளிக்கிறாள், தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறாள்.
21 பூமியில் தொல்லை விளைவிக்கக் கூடியவை மூன்று உண்டு. உண்மையில் பூமியால் தாங்க முடியாதவை நான்கு. 22 ராஜாவாகிவிட்ட அடிமை, தனக்குத் தேவைப்படுகிற அனைத்துமுடைய முட்டாள், 23 மனதில் முழுமை வெறுப்புடையவளாயிருந்தும் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்படும் பெண், தான் வேலை செய்த எஜமானிக்கே எஜமானியாகிற வேலைக்காரப் பெண் ஆகிய நால்வரையும் பூமி தாங்காது.
24 உலகில் உள்ள மிகச் சிறியவை நான்கு, ஆனால் இவை மிகவும் ஞானமுடையவை.
25 எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை.
எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக்காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும்.
26 குழி முயல்கள் மிகச்சிறிய மிருகம், ஆனாலும் இதுதன் வீட்டைப் பாறைகளுக்கு இடையில் கட்டிக்கொள்ளும்.
27 வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை.
எனினும் அவை சேர்ந்து வேலைச்செய்கின்றன.
28 பல்லி மிகச் சிறிது. அவற்றை நம் கையால் பிடித்துக்கொள்ளலாம்.
எனினும் அவை அரண்மனையிலும் வசிக்கின்றன.
29 நடக்கும்போது முக்கியமானவைகளாகத் தோன்றுபவை மூன்று. உண்மையில் அவைகள் நான்காகும்.
30 சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது.
அது எதைக் கண்டும் ஓடுவதில்லை.
31 பெருமையோடு நடக்கும் சேவல், வெள்ளாடு, தம் ஜனங்களிடையே இருக்கும் ஒரு ராஜா.
32 உன்னைப்பற்றி நீயே பெருமையாக நினைத்துக்கொண்டு தீங்கு செய்யத் திட்டமிடும் முட்டாளாக இருந்தால், அவற்றை நிறுத்திவிட்டு உன் செயல்களைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
33 பாலைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும். ஒருவன் இன்னொருவனின் மூக்கில் அடித்தால் இரத்தம் வரும். இது போலவே, நீ ஜனங்களைக் கோபங்கொள்ள வைத்தால், நீ தான் துன்பத்துக்கு காரணமாயிருப்பாய்.
லேமுவேல் என்னும் ராஜாவின் ஞானமொழிகள்
31 இவை, லேமுவேல் ராஜா சொன்ன ஞானமொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.
2 ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய குமாரன். 3 உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் ராஜாக்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. 4 லேவமுவேலே, ராஜாக்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல. 5 அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும். 6 ஏழை ஜனங்களுக்கு மதுவைக்கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக்கொடு. 7 பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
8 ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும். 9 சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.
பரிபூரணமுள்ள மனைவி
10 [a] “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
11 அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான்.
அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
12 தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள்.
அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
13 அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள்.
தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள்.
14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள்.
எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள்.
வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக்கொடுப்பாள்.
16 அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள்.
அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக்கொடிகளை நடுவாள்.
17 அவள் கடினமாக உழைப்பாள்.
அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
18 தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள்.
அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.
19 அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.
தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.
20 ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள்.
தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
21 பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டாள்.
ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
22 அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள்.
மிக அழகான புடவையை அணிகிறாள்.
23 ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர்.
அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
24 அவள் ஒரு நல்ல வியாபாரி.
அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள்.
இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
25 அவள் போற்றப்படுவாள்.[b] ஜனங்கள் அவளை மதிக்கின்றனர்.
அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.
26 அவள் ஞானத்தோடு பேசுகிறாள்.
ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
27 அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
28 அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
29 “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான்.
30 ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம்.
ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு.
எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.
பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்
11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 2 நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். 3 எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். 4 நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 6 நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
7 நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? 8 உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். 9 நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். 10 இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள[a] எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். 11 உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.
12 நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். 13 அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். 14 இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக[b] மாறுவேடம் அணிந்திருக்கிறான். 15 எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.
2008 by World Bible Translation Center