Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 24-25

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவிற்கு வருகிறான்

24 அவனது காலத்தில், பாபிலோனை நேபுகாத் நேச்சார் என்பவன் அரசாண்டான். அவன் யூத நாட்டிற்கு வந்தான். மூன்றாண்டு காலத்திற்கு யோயாக்கீம் நேபுகாத்நேச்சார்க்கு பணிவிடைச் செய்தான். பிறகு நேபுகாத்நேச்சருக்கு எதிராகக் கலகம் செய்தான். யோயாக்கீமிற்கு எதிராகப் போரிடும் பொருட்டு பாபிலோனியர்களையும் ஆராமியர்களையும் மோவாபியர்களையும் அம்மோனியர்களையும் கர்த்தர் கூட்டம் கூட்டமாக அனுப்பிவைத்தார். யூதாவை அழிப்பதற்காக கர்த்தர் இவ்வாறு அனுப்பினார். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் இவற்றைத் தம் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லியிருக்கிறார்.

யூதாவில் இவையெல்லாம் நடக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார். இவ்வாறு, அவன் யூதர்களை அவனது பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினான். மனாசே செய்த அனைத்து பாவங்களுக்காகவும் அவர் இதனைச் செய்தார். மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றான். அவர்களின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பினான். இத்தகைய பாவங்களை கர்த்தர் மன்னிக்காமலிருந்தார்.

யோயாக்கீம் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீம் மரித்தான். பிறகு அவன் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பின் இவனது குமாரனான யோயாக்கீன் என்பவன் புதிய ராஜா ஆனான்.

அதற்குப்பின் எகிப்தின் ராஜா தன் நாட்டிலிருந்து வரவில்லை. ஏனென்றால் எகிப்து ஆறுமுதல் ஐபிராத்து ஆறுவரையுள்ள எகிப்து ராஜாவுக்குரிய பகுதியைப் பாபிலோனிய ராஜா பிடித்துக் கொண்டான்.

நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றுகிறான்

யோயாக்கீன் அரசானானபோது அவனுக்கு 18 வயது ஆகும். இவன் எருசலேமில் 3 மாதங்கள் ஆண்டான். இவனது தாயின் பெயர் நெகுஸ்தாள் ஆகும். இவள் எருசலேமிலுள்ள எல்நாத்தானின் குமாரத்தி ஆவாள். தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே அவன் செய்தான். அவனுடைய தந்தை செய்த அனைத்து காரியங்களையும் அவனும் செய்தான்.

10 அக்காலத்தில், பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் அதிகாரிகள் எருசலேமிற்கு வந்து அதனை முற்றுகையிட்டனர். 11 பிறகு பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே அவனது வேலைக்காரர்கள் முற்றுகையிட்ட நகரத்திற்கு வந்தான். 12 யூத ராஜாவாகிய யோயாக்கீன் பாபிலோனிய ராஜாவை சந்திக்கச் சென்றான். அவனோடு அவனது தாய், அதிகாரிகள், தலைவர்கள் அலுவலர்கள் அனைவரும் சென்றனர். பின் பாபிலோனிய ராஜா யோயாக்கீனைச் சிறைபிடித்தான். இது நேபுகாத்நேச்சாரின் 8வது ஆட்சியாண்டில் நடந்தது.

13 நேபுகாத்நேச்சார், கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனையிலும் உள்ள கருவூலங்களில் உள்ளப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டுப் போனான். சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் அமைத்திருந்த தங்கத் தட்டுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டான். இதுவும் கர்த்தர் சொன்னபடியே நடந்தது.

14 நேபுகாத்நேச்சார் எருசலேமிலுள்ள அனைவரையும் கைதுசெய்தான். தலைவர்களையும் செல்வர்களையும் கைது செய்தான். அவன் 10,000 ஜனங்களைக் கைதிகளாக்கி அழைத்துக்கொண்டு வந்தான். அவன் திறமைமிக்க வேலைக்காரர்களையும் கைவினைக்காரர்களையும் அழைத்துக்கொண்டுச் சென்றான். ஏழ்மையான சாதாரண பொது ஜனங்களைத் தவிர வேறுயாரையும் இவன் விட்டு வைக்கவில்லை. 15 நேபுகாத்நேச்சார் யோயாக்கீனைச் சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். அதோடு ராஜாவின் தாய், மனைவிமார்கள், அதிகாரிகள் மற்றும் தலைவர்களையும் கொண்டு சென்றான். இவர்களை அவன் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் கைதிகளாகவே அழைத்துக்கொண்டு போனான். 16 அதில் 7,000 வீரர்கள் இருந்தனர். இவ்வெல்லா வீரர்களையும் தகுதிமிக்க 1,000 திறமையுள்ள வேலைக்காரர்களையும் கைவினைக் கலைஞர்களையும் அழைத்துக் கொண்டு போனான். வீரர்கள் நன்கு பயிற்சி பெற்று போருக்குத் தயாராக இருந்தனர். பாபிலோன் ராஜா இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகவே கொண்டுசென்றான்.

சிதேக்கியா ராஜா

17 பாபிலோன் ராஜா மத்தனியா என்பவனை புதிய ராஜாவாக்கினான். அவன் யோயாக்கீனின் சிறிய தகப்பன் ஆவான். அவனது பெயரை சிதேக்கியா என மாற்றிவிட்டான். 18 சிதேக்கியா ராஜாவாகியபோது அவனுக்கு 21 வயது. அவன் 11 ஆண்டுகள் எருசலேமில் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவிலுள்ள எரேமியாவின் குமாரத்தி. 19 தவறானதென்று கர்த்தர் சொன்னவற்றையே அவனும் செய்துவந்தான். யோயாக்கீன் செய்த அனைத்து செயல்களையும் அவன் செய்தான். 20 எருசலேம் மற்றும் யூதா மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொண்டு அங்குள்ள ஜனங்களை அப்புறப்படுத்தினார்.

நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் ஆட்சியை முடித்தது

சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு அடிபணிய மறுத்து அவனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.

25 எனவே, பாபிலோன் ராஜாவும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத்நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச்சுவரைக் கட்டினான். யூத நாட்டின் ராஜாவாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது. நகரத்தின் நிலையைப் பஞ்சம் மேலும் மோசமாக்கிற்று. நாலாவது மாதத்தின் ஒன்பதாம் நாளில் பொது ஜனங்களுக்கு உண்ண உணவே இல்லை என்ற நிலை வந்தது.

நேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி ராஜாவின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள். பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர்.

பாபிலோனியர்கள் சிதேக்கியாவைப் பிடித்து ரிப்லாவிலிருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைத் தண்டிக்க விரும்பினார்கள். சிதேக்கியாவின் குமாரர்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

எருசலேம் அழிக்கப்படுகிறது

நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாம் மாதத்தின் ஏழாவது நாளில் நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நெபுசராதான் பாபிலோனிய ராஜாவின் பெரிய படையின் ஆணை அதிகாரியாக இருந்தான். இவன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மணையையும் பெரிய வீடுகளையும் கட்டிடங்களையும் எரித்தான். 10 எருசலேமை சுற்றியிருந்த சுவரையும் நெபுசராதானின் பாபிலோனிய படை உடைத்து தள்ளியது. 11 பாபிலோனிய படையின் ஆணை அதிகாரியான நெபுசராதான் நகரத்தில் மேலும் மீதியாக இருந்த ஜனங்களையும் பாபிலோனிய ராஜாவுக்கு வெளியே விழுந்து அழிந்தவர்களையும்கூட (ஆள முயன்றவர்களையும்) இவன் கைது செய்து நாடு கடத்திவிட்டான். 12 அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர்.

13 பாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். 14 பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். 15 நெபுசராதானும் படைத்தலைவனும் சுத்தப் பொன்னிலும் வெள்ளியிலுமான தூபகலசங்களை எடுத்துக்கொண்டனர். 16-17 எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது.

யூத ஜனங்கள் கைதிகளாதல்

18 நெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் ஆலயத்திலிருந்து கைப்பற்றினான்.

19 நகரத்திலிருந்து நெபுசராதான் படைக்குப் பொறுப்பான 1 அதிகாரியையும், நகரத்திலேயிருந்த 5 அரச ஆலோசகர்களையும், 1 படைத்தளபதியினுடைய செயலாளர். அவன்தான் பொது ஜனங்களின் ஜனத்தொகையை கணக்கெடுத்து அவர்களில் சிலரைப் படைவீரர்களாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 1 படைத்தளபதியினுடைய செயலாளரையும், நகரத்தில் அகப்பட்ட 60 பேர்களையும் எடுத்துக்கொண்டான்.

20-21 பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர்.

யூத நாட்டின் ஆளுநரான கெதலியா

22 யூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் குமாரனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான்.

23 நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேலும், கரேயாவின் குமாரனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது குமாரன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர். 24 கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான்.

25 எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் குமாரன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான். 26 பிறகு படை அதிகாரிகளும் ஜனங்களும் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அப்போது முக்கியமுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அனைவரும் ஓடிப்போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாபிலோனியர்களிடம் பயம் அதிகம்.

27 பிறகு பாபிலோனின் ராஜாவாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத ராஜாவாகிய யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான். 28 ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற ராஜாக்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான். 29 யோயாக்கீன் கைதியின் ஆடை அணிவதை ராஜா தடுத்துவிட்டான். அவன் ராஜாவோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். 30 ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான்.

யோவான் 5:1-24

38 வருட நோயாளி குணமடைதல்

பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா[a] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர்.[b] அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.

“ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.

பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.

11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.

12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.

13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.

14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.

15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.

16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.

தேவ அதிகாரம் பெற்ற இயேசு

19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.

22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.

24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center