Old/New Testament
ஜனங்கள் நினைவுகூருவதற்கான கற்கள்
4 எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்ததும் கர்த்தர் யோசுவாவை நோக்கி,
2 “பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடு. 3 ஆசாரியர்கள் நின்ற இடத்தில் நதியினுள்ளே தேடி அங்கிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து வருமாறு கூறு. இன்றிரவு தங்குமிடத்தில் அந்தப் பன்னிரண்டு கற்களையும் வை” என்றார்.
4 எனவே யோசுவா ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். பின் அவன் பன்னிரண்டு பேரையும் ஒன்றுகூட்டி, 5 அம்மனிதரை நோக்கி, “நதியில் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த பெட்டியிருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். அக்கல்லை உங்கள் தோள்களில் சுமந்து வாருங்கள். 6 இக்கற்கள் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகள், ‘இந்தக் கற்கள் எதற்காக?’ என்று உங்களிடம் கேட்கும்போது, 7 யோர்தான் நதியின் தண்ணீரை கர்த்தர் ஓடாமல் நிறுத்தியதை அவர்களுக்குக் கூறுவீர்கள். கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டி நதியைக் கடந்தபோது, தண்ணீர் அசையாமல் நின்றது. இந்நிகழ்ச்சியை என்றென்றைக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் நினைவுகூருவதற்கு இக்கற்கள் உதவும்” என்றார்.
8 இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்தனர். யோர்தான் நதியின் மத்தியிலிருந்து அவர்கள் பன்னிரண்டு கற்களை எடுத்து வந்தனர். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் ஒவ்வொரு கல் இருந்தது. கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் இதைச் செய்தனர். அம்மனிதர்கள் கற்களைச் சுமந்து வந்து, அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் அக்கற்களை நாட்டினர். 9 (யோசுவா நதியின் மத்தியில் பன்னிரண்டு கற்களை வைத்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர் சுமந்து வந்து நின்ற இடத்தில் அவன் அவற்றை வைத்தான். அக்கற்கள் இன்றைக்கும் அவ்விடத்திலேயே உள்ளன.)
10 ஜனங்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கூறும்படி கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். யோசுவா செய்ய வேண்டியவையாக மோசே யோசுவாவுக்குக் கூறிய காரியங்களே அவையாகும். பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் இக்காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும்வரைக்கும் நதியின் மத்தியிலேயே நின்றுகொண்டிருந்தனர். ஜனங்கள் நதியை வேகமாகத் தாண்டினார்கள்.
11 ஜனங்கள் நதியைக் கடந்த பின்னர், ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டியை அவர்களுக்கு முன்பாகச் சுமந்து சென்றனர்.
12 ரூபன், காத் கோத்திரத்திலுள்ள ஆண்களும், மனாசே கோத்திரத்தில் பாதி ஆண்களும் மோசே சொல்லியிருந்தபடியே கீழ்ப்படிந்தனர். பிறருக்கு முன்பாக அவர்கள் நதியைக் கடந்தனர். அவர்கள் போருக்கு ஆயத்தமாயினர். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்களித்த தேசத்தைப் பெறுவதற்கு மீதி ஜனங்களுக்கு உதவுவதற்காகச் சென்றனர்.
13 ஏறத்தாழ 40,000 பேர், போருக்குத் தயாராகி, எரிகோவின் சமவெளிக்கு நேராக கர்த்தருக்கு முன்பாக அணியணியாய் சென்றார்கள்.
14 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் உயர்ந்தவனாக யோசுவாவை கர்த்தர் அந்த நாளில் மேன்மைப்படுத்தினார். அப்போதிலிருந்து ஜனங்கள் யோசுவாவை மதித்தனர். மோசேயை அவர்கள் மதித்தபடியே, யோசுவாவையும் அவன் வாழ்க்கை முழுவதும் ஜனங்கள் மதித்தனர்.
15 பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் நதியில் நின்றுகொண்டிருக்கும்போதே, கர்த்தர் யோசுவாவை நோக்கி, 16 “ஆசாரியர்களை நதியினின்று வெளியே வரும்படிக் கட்டளையிடு” என்றார்.
17 எனவே யோசுவா ஆசாரியர்களிடம், “யோர்தான் நதியிலிருந்து வெளியேறுங்கள்” என்று கட்டளையிட்டான்.
18 ஆசாரியர்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்து பெட்டியைச் சுமந்தபடி நதியிலிருந்து கரைக்கு வந்தனர். ஆசாரியர்களின் கால்கள் தரையில் பட்டதும், நதியின் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. ஜனங்கள் கடக்கும் முன்னர் இருந்ததுபோலவே தண்ணீர் கரைபுரண்டோடத் தொடங்கிற்று.
19 முதலாம் மாதத்தின் பத்தாவது நாள், ஜனங்கள் யோர்தான் நதியைத் தாண்டினார்கள். எரிகோவின் கிழக்கிலுள்ள கில்காலில், ஜனங்கள் முகாமிட்டனர். 20 யோர்தான் நதியில் எடுத்த பன்னிரண்டு கற்களையும் ஜனங்கள் சுமந்து வந்தனர். கில்காலில் யோசுவா அக்கற்களை நாட்டினான். 21 யோசுவா ஜனங்களை நோக்கி, “வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இக்கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள். 22 நீங்கள் பிள்ளைகளுக்கு, ‘உலர்ந்த நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்ததை இக்கற்கள் நினைவூட்ட உதவுகின்றன. 23 உங்கள் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் போலவே யோர்தான் நதியின் தண்ணீரை ஓடாதவாறு நிறுத்தினார். ஜனங்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்லும் வரைக்கும் செங்கடலின் தண்ணீரைத் தடுத்து நிறுத்தியதை நினைவுகூருங்கள்.’ 24 கர்த்தர் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்பதை இந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் அறிந்துகொள்வதற்காக கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் எப்போதும் அஞ்சுவார்கள் என்று கூறுங்கள்” என்றான்.
5 இஸ்ரவேல் ஜனங்கள் கடந்துபோகும் மட்டும் கர்த்தர் யோர்தான் நதியை உலர்ந்து போகச் செய்தார். யோர்தான் நதிக்குக் கிழக்கிலிருந்து மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழி முழுவதும் வாழ்ந்த எமோரியரின் ராஜாக்களும், மத்தியதரைக் கடலின் கரையில் வாழ்ந்த கானானிய ராஜாக்களும் இதைக் கேள்விப்பட்டு மிகவும் பயந்தார்கள். அதற்குப்பின் அவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து நின்று போர் செய்வதற்குத் துணியவில்லை.
இஸ்ரவேலர் விருத்தசேதனம் செய்யப்படுதல்
2 அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நெருப்பை உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்து இஸ்ரவேலின் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்” என்றார்.
3 எனவே யோசுவா நெருப்பு உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்தான். பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை கிபியாத் ஆர்லோத் என்னுமிடத்தில் விருத்தசேதனம் செய்தான்.
4-7 அவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்த காரணம் இதுதான்: இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பிறகு, படையில் பங்குவகிக்கக்கூடிய ஆண்கள் எல்லோருக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது. பாலைவனத்திலிருந்தபோது, போர் செய்யும் ஆண்களில் பலர் கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே கர்த்தர் அந்த ஜனங்கள், “நன்றாக விளைகிற தேசத்தைக் காணமாட்டார்கள்” என்று உறுதியாகக் கூறினார். கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாக உறுதி கூறியும், அம்மனிதர்களினிமித்தம், தேவன் ஜனங்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அவர்கள் மரிக்கும்வரை அலையச் செய்தார். போர் செய்யும் அந்த ஆண்கள் மரித்தனர், அவர்கள் குமாரர்கள் போரிடும் ஸ்தானத்தை ஏற்றார்கள். ஆனால் பாலைவனத்தில் பிறந்த சிறுவர் எவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தான்.
8 யோசுவா எல்லா மனிதருக்கும் விருத்தசேதனம் செய்து முடித்தான். அவர்கள் குணமடையும்வரைக்கும் அங்கேயே முகாமிட்டிருந்தார்கள்.
கானானில் முதல் பஸ்கா
9 அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நீங்கள் அனைவரும் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அது உங்களை வெட்கமடையச் செய்தது. ஆனால் இன்று நான் அவ்வெட்கத்தைப் போக்கிவிட்டேன்” என்றார். எனவே யோசுவா அவ்விடத்திற்குக் “கில்கால்” எனப் பெயரிட்டான். இன்றளவும் அந்த இடம் “கில்கால்” என்றே அழைக்கப்படுகிறது.
10 எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாடினர். அப்போது மாதத்தின் பதினான்காவது நாள் மாலையாக இருந்தது. 11 பஸ்காவிற்கு மறு நாள், ஜனங்கள் அந்நிலத்தில் விளைந்த உணவை உண்டனர். புளிப்பின்றி செய்த அப்பத்தையும், சுட்ட தானியத்தையும் அவர்கள் சாப்பிட்டனர். 12 மறுநாள், காலையில் வானத்திலிருந்து கிடைத்த விசேஷ உணவு காணப்படவில்லை. கானானில் விளைந்த உணவைச் சாப்பிட்ட நாளில் அது நிகழ்ந்தது. அப்போதிலிருந்து இஸ்ரவேலின் ஜனங்கள் வானத்திலிருந்து விசேஷ உணவைப் பெறவில்லை.
13 யோசுவா எரிகோவை நெருங்கியபோது அண்ணாந்து பார்த்து, அவனுக்கு முன்பாக ஒருவர் நிற்பதைக் கண்டான். அவர் கையில் ஒரு வாள் இருந்தது. யோசுவா அவரிடம் சென்று, “நீர் எங்கள் ஜனங்களின் நண்பரா, அல்லது எங்கள் பகைவரில் ஒருவரா?” என்று கேட்டான்.
14 அவர் அதற்கு பதிலாக, “நான் உன் பகைவன் அல்ல. கர்த்தருடைய படையின் சேனாதிபதி நான். நான் உன்னிடம் இப்போதுதான் வந்திருக்கிறேன்” என்றார்.
உடனே யோசுவா தன் மரியாதையை வெளிப்படுத்துவதற்கு தரையில் விழுந்து வணங்கினான். அவன், “நான் உமது ஊழியன். எனது எஜமானராகிய நீர் ஏதேனும் எனக்குக் கட்டளை வைத்திருக்கிறீரா?” என்று கேட்டான்.
15 கர்த்தருடைய படையின் சேனாதிபதி, “உனது பாதரட்சையைக் கழற்று. நீ நிற்குமிடம் பரிசுத்தமானது” என்று கூறினார். யோசுவா அவ்வாறே கீழ்ப்படிந்தான்.
எரிகோ பிடிக்கப்படுதல்
6 எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை.
2 அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் ராஜாவையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய். 3 உனது சேனையோடு ஒவ்வொரு நாளும் நகரை ஒரு முறை சுற்றிச் செல். ஆறு நாட்கள் இவ்வாறு செய். 4 வெள்ளாட்டுக் கடாவின் கொம்பால் செய்த எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் சுமக்கும்படி சொல். பரிசுத்தப் பெட்டியையும் சுமந்து செல்லுங்கள். ஆசாரியர்களை பரிசுத்தப் பெட்டிக்கு முன் அணிவகுத்துச் செல்லும்படி கூறு. ஏழாம் நாள், ஏழுமுறை அணிவகுத்துச் செல்லும் போது ஆசாரியர்களிடம் எக்காளம் ஊதும்படி கூறு. 5 ஆசாரியர்கள் எக்காளத்தை உரத்த குரலில் ஊதும் சத்தத்தை நீ கேட்டதும், எல்லா ஜனங்களையும் உரத்த சத்தம் எழுப்பச் சொல். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, நகரத்தின் சுவர்கள் இடிந்து விழும். உனது ஜனங்கள் நகரத்திற்குள் நுழைவார்கள்” என்றார்.
6 நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான்.
7 பின் யோசுவா ஜனங்களிடம், “இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள்! நகரைச் சுற்றிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக ஆயுதமேந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்” என்றான்.
8 யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். 9 ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள். 10 போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான்.
11 நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர்.
12 மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர். 13 ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள். 14 எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர்.
15 ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர். 16 ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்! 17 நகரமும் அதிலுள்ளவை அனைத்தும் கர்த்தருக்குரியவை. ராகாப் என்னும் வேசியும் அவள் வீட்டினரும் மட்டுமே உயிரோடிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனென்றால் ராகாப் இரண்டு ஒற்றர்களுக்கும் உதவினாள். 18 எல்லாவற்றையும் நாம் அழிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். எந்தப் பொருட்களையும் எடுக்காதீர்கள். அவற்றை எடுத்து நமது முகாமிற்குக்கொண்டு வந்தால் நீங்கள் அழிக்கப்படுவதுடன், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லலோருக்கும் தொல்லையை வரவழைப்பீர்கள். 19 எல்லா வெள்ளியும், பொன்னும், வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கர்த்தருக்குரியவை. அப்பொருட்கள் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
20 ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர். 21 அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.
22 யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்” என்றான்.
23 அவ்விதமே அவ்விருவரும் அவளுடைய வீட்டிற்குள் சென்று ராகாபை அழைத்து வந்தனர். அவளது தந்தை, தாய், சகோதரர், அவள் குடும்பத்தினர், அவளோடிருந்த ஜனங்கள் எல்லோரையும் வெளியே அழைத்து வந்து, இஸ்ரவேலரின் முகாமிற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை வைத்தனர்.
24 பின் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர். வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு ஆகியவற்றாலான பொருட்களைத் தவிர பிறவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். அப்பொருட்களை மட்டும் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்ந்தனர். 25 ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள்.
26 அப்போது:
“எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும்
கர்த்தரால் அழிவைக் காண்பான்.
இந்த நகரின் அஸ்திபாரத்தை இடுபவன்,
தன்னுடைய முதலாவதாகப் பிறந்த குமாரனை இழப்பான்.
நகரவாயிலை அமைப்பவன்
தனது கடைசி குமாரனை இழப்பான்”
என்ற சாப அறிவிப்பை யோசுவா வெளியிட்டான்.
27 கர்த்தர் யோசுவாவோடிருந்தார். நாடு முழுவதும் யோசுவாவின் புகழ் பரவியது.
லூக்காவின் நோக்கம்
1 அன்பான தெயோப்பிலுவே,
நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். 2 வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். 3 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். 4 உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன்.
சகரியாவும் எலிசபெத்தும்
5 ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச்[a] சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். 6 தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். 7 ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.
8 தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. 9 நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். 10 ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.
11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். 12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். 13 ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. 14 நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். 15 கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான்.
16 “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். 17 கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான்.
18 சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான்.
19 தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். 20 இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான்.
2008 by World Bible Translation Center