Old/New Testament
ஆகார் எனும் வேலைக்காரப்பெண்
16 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். 2 சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான்.
3 இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்) 4 ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள். 5 ஆனால் சாராய் ஆபிராமிடம், “இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக்கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.
6 ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.
இஸ்மவேல் – ஆகாரின் குமாரன்
7 பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரை கர்த்தருடைய தூதன் கண்டான். 8 தூதன் அவளிடம், “சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
அவளோ, “நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.
9 அதற்கு கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு. 10 உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்” என்றான்.
11 மேலும் கர்த்தருடைய தூதன்,
“ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய்.
உனக்கு ஒரு குமாரன் பிறப்பான்.
அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு.
ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் குமாரன் உனக்கு உதவுவான்.
12 இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும்,
சுதந்திரமானவனாகவும் இருப்பான்.
அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான்.
ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள்.
அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான்.
அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான்.
13 கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள். 14 எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.
15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான். 16 ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது.
உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனம்
17 ஆபிராமுக்கு 99 வயதானபோது கர்த்தர் அவனுக்கு காட்சி தந்தார். அவர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். எனக்குக் கீழ்ப்படிந்து எனக்கு முன்பாகச் சரியான வழியில் நட. 2 நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.
3 தேவனுக்கு முன் ஆபிராம் பணிந்து வணங்கினான். 4 தேவன் அவனிடம், “நான் உன்னைப் பல நாடுகளின் தந்தையாக்குவேன். 5 நான் உனது பெயரை மாற்றுவேன். இப்போது உனது பெயர் ஆபிராம், இனி உன் பெயர் ஆபிரகாம். நான் உன்னைப் பல நாடுகளுக்குத் தந்தையாக்கப் போவதால் இந்தப் பெயரை உனக்கு சூட்டுகிறேன். 6 நான் உனக்கு அநேக சந்ததிகளை கொடுப்பேன். உன்னிடமிருந்து புதிய நாடுகள் உருவாகும். பல ராஜாக்கள் உன்னிடமிருந்து எழும்புவார்கள். 7 நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன். 8 நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.
9 மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும். 10 இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12 ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13 எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14 இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
ஈசாக்கு சத்தியத்திற்குரிய குமாரன்
15 தேவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள். 16 அவளை நான் ஆசீர்வதிக்கிறேன். அவள் உனக்கு ஒரு குமாரனைப் பெற்றுத்தரும்படி செய்வேன். நீயே அவன் தந்தை. சாராள் பல நாடுகளுக்குத் தாயாக இருப்பாள். அவளிடமிருந்து பல ராஜாக்கள் வருவார்கள்” என்றார்.
17 ஆபிரகாம் தன் முகம் தரையில்படும்படி விழுந்து வணங்கி தேவனுக்கு மரியாதை செலுத்தினான். எனினும் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டே, “எனக்கு 100 வயது ஆகிறது. என்னால் ஒரு குமாரன் பிறப்பது கூடியகாரியமா? சாராளுக்கோ 90 வயது. அவள் ஒரு குமாரனைப் பெறுவது எப்படி?” என்றான்.
18 ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான்.
19 தேவன், “இல்லை. உன் மனைவி சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்று சொன்னேன். நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாய். நான் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த உடன்படிக்கையே என்றென்றைக்கும் அவனுக்கும் அவனது சந்ததிக்கும் தொடரும்.
20 “நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும். 21 ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் குமாரனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார்.
22 ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார். 23 தேவன் ஆபிரகாமிடம் அவன் குடும்பத்திலுள்ள ஆண்களும், சிறுவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே, ஆபிரகாம் தனது குமாரன் இஸ்மவேல், மற்றும் அவனுடைய வீட்டில் பிறந்த அடிமைகளையும், பணம் கொடுத்து வாங்கிய அடிமைகளையும் கூட்டினான். ஆபிரகாமின் வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும், சிறுவனும் அந்த நாளிலே, தேவன் ஆபிரகாமிடம் கூறியபடியே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
24 ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவனுக்கு 99 வயது. 25 அப்போது ஆபிரகாமின் குமாரன் இஸ்மவேலுக்கு 13 வயது. 26 ஆபிரகாமும் அவனது குமாரனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 27 அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.
கற்பைக் குறித்த போதனை
27 “‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’(A) என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.
விவாகரத்துப்பற்றிய போதனை
(மத்தேயு 19:9; மாற்கு 10:11-12; லூக்கா 16:18)
31 “‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’(B) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.
வாக்குறுதிகளைப்பற்றிய போதனை
33 “‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’[a] என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். 35 பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா ராஜாவின் நகரம். 36 உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது. 37 ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.”
பழிவாங்குதல் பற்றிய போதனை
(லூக்கா 6:29-30)
38 “‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’(C) என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.
அனைவரையும் நேசியுங்கள்
(லூக்கா 6:27-28,32-36)
43 “‘உன் சினேகிதனை நேசி.(D) உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center