Old/New Testament
எசேக்கியா தேவனுடைய உதவிக்காக வேண்டுதல்
37 எசேக்கியா, தளபதியிடமிருந்து வந்த செய்தியைக் கவனித்தான். அவன் அந்தச் செய்தியைக் கேட்டதும் தான் சோகமாயிருப்பதைக் காண்பிக்க தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு எசேக்கியா துக்கத்தைக் குறிக்கும் சிறப்பான ஆடைகளை அணிந்துகொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்குப்போனான். 2 எசேக்கியா அரண்மனை மேலாளரையும் (எலீக்கியாம்) செயலாளனையும் (செப்னா) ஆசாரியர்களின் மூப்பர்களையும் (தலைவர்களையும்) ஆமோத்சின் குமாரனான ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பினான். அந்த மூன்று பேரும் துக்கத்தைக் குறிக்கும் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தனர்.
3 அவர்கள் ஏசாயாவிடம், “ராஜா எசேக்கியா, இன்று துக்கத்திற்கும் துயரத்திற்குமான விசேஷ நாள் என்று கட்டளையிட்டிருக்கிறார். இன்று மிக துக்கமான நாளாக இருக்கும். இது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நாளைப்போன்ற ஒரு நாளாக இருக்கும். ஆனால் குழந்தை பெறவோ போதிய பெலன் தாய்க்கில்லை. 4 (உமது தேவனான கர்த்தர் தளபதி சொன்னவற்றைக் கேட்டிருக்கலாம்). அசீரியா ராஜா தளபதியை அனுப்பி, ஜீவனுள்ள தேவனைப்பற்றி மோசமாகப் பேசும்படி அனுப்பியிருக்கிறான். உமது தேவனாகிய கர்த்தர் அந்தக் கெட்ட வார்த்தைகளைக் கேட்பார். ஒருவேளை சத்துரு தப்பானவன் என்று கர்த்தர் நிரூபிக்கச் செய்வார்! தயவுசெய்து இஸ்ரவேலில் மீதியாக இருக்கிற சில ஜனங்களுக்காக ஜெபம் செய்யும்” என்றனர்.
5-6 ஏசாயா அவர்களிடம், “இந்தத் தகவலை உங்கள் எஜமானனான எசேக்கியாவிடம் சொல்லுங்கள். கர்த்தர் சொல்கிறார், ‘தளபதியிடமிருந்து நீங்கள் கேட்டவற்றைப்பற்றிப் பயப்பட வேண்டாம்! அசீரியா ராஜாவின் சிறுவர்கள் என்னைப்பற்றி சொன்ன தீயவற்றை நம்பவேண்டாம். 7 பாருங்கள், நான் அசீரியாவிற்கு எதிராக ஒரு ஆவியை அனுப்புவேன். அசீரியா ராஜா அவனது நாட்டிற்கு வரவிருக்கும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையைப் பெறுவான். எனவே அவன் தனது நாட்டிற்குத் திரும்பிப்போவான். அந்த நேரத்தில் அவனது சொந்த நாட்டில் ஒரு வாளால் அவனைக் கொல்லுவேன்’” என்றார்.
அசீரியா படை எருசலேமை விட்டு விலகியது
8-9 அசீரியா ராஜா ஒரு அறிக்கையைப் பெற்றான். அந்த அறிக்கை, “எத்தியோப்பியா ராஜாவாகிய திராக்கா உம்மோடு போரிட வருகிறான்” என்று சொன்னது. எனவே, அசீரியா ராஜா லாகீசை விட்டு லிப்னாவுக்குத் திரும்பிப்போனான். தளபதி இதனைக் கேள்விப்பட்டான். அவன் லிப்னா நகரத்திற்குப்போனான். அங்கே அசீரியா ராஜா போரிட்டுக்கொண்டிருந்தான். பிறகு தளபதி எசேக்கியாவிற்குத் தூதுவர்களை அனுப்பினான். 10 “நீங்கள் இவற்றை யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் சொல்லவேண்டுவன:
‘நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். “அசீரியா ராஜாவால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார்” என்று சொல்லாதீர்கள். 11 கவனியுங்கள், அசீரியாவின் ராஜாக்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை. 12 அந்த ஜனங்களின் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றினார்களா? இல்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். எனது ஜனங்கள் கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்களையும் தோற்கடித்தனர். 13 ஆமாத் அர்பாத் ராஜா எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் ராஜா எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் ராஜாக்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான்.
எசேக்கியா தேவனிடம் ஜெபம் செய்கிறான்
14 எசேக்கியா தூதுவர்களிடமிருந்து செய்தியைப் பெற்று வாசித்தான். பிறகு, எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்றான். எசேக்கியா கடிதத்தைத் திறந்து கர்த்தருக்கு முன்பு வைத்தான். 15 எசேக்கியா கர்த்தரிடம் ஜெபம் செய்யத் தொடங்கினான். எசேக்கியா சொன்னான்: 16 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் ராஜாவாக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்! 17 கர்த்தாவே நான் சொல்வதைக் கேளும். சனகெரிப்பிடமிருந்து வந்த செய்தியை உமது கண்களைத் திறந்து பாரும். எனக்குச் சனகெரிப் இந்தச் செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனாகிய உம்மைப்பற்றி தீயச் செய்திகளை இது சொல்கிறது. 18 கர்த்தாவே, அசீரியாவின் ராஜா உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான். 19 கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் ராஜாக்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் ராஜாக்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 20 ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா ராஜாவின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான்.
எசேக்கியாவிற்கு தேவனுடைய பதில்
21 பிறகு ஆமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா ராஜாவாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப்பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’
22 “சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்:
“அசீரியா ராஜாவே, சீயோனின் (எருசலேம்) கன்னிமகள், ‘நீ முக்கியமானவன்’ என்று எண்ணுவதில்லை.
உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
எருசலேமின் குமாரத்தி உன்னை பரிகாசம் செய்கிறாள்.
உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
23 ஆனால், நீ யாரை பரிகாசம் செய்தாய்?
நீ யாருக்கு எதிராகப் பேசினாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு எதிராகப் பேசினாய்.
அவரைவிட நீ உத்தமன்போல நடித்தாய்.
24 எனது கர்த்தராகிய ஆண்டவரைப்பற்றி எதிராகப் பேச உனது வேலைக்காரர்களைப் பயன்படுத்தினாய்.
நீ, ‘நான் வல்லமையுள்ளவன்! என்னிடம் பற்பல இரதங்கள் உள்ளன.
எனது வல்லமையால் நான் லீபனோனைத் தோற்கடித்தேன்.
லீபனோனின் மலை உச்சிகளில் நான் ஏறினேன்.
நான் லீபனோனில் உள்ள உயரமான மரங்களை (படைகள்) வெட்டித் தள்ளினேன்.
நான் மலையின் உச்சிக்கும் காட்டின் மிக ஆழமான பகுதிக்கும் சென்றிருக்கிறேன் என்று கூறினாய்.
25 நான் கிணற்றைத் தோண்டி புதிய இடங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருக்கிறேன்.
எகிப்தின் ஆறுகளை வற்றச்செய்து அந்நாட்டில் நான் நடந்து சென்றிருக்கிறேன்.’
26 “‘இதைத்தான் நீ கூறினாய். ஆனால் நான் சொன்னவற்றை நீ கேட்டாயா?
நீண்ட காலத்துக்கு முன்னால் தேவனாகிய நானே இவற்றைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்து நானே அதைத் திட்டமிட்டேன்.
இப்போதும் நானே அதை நடப்பித்தேன்.
பலமான நகரங்களையெல்லாம் அழிக்கும்படி நான் உன்னை அனுமதித்தேன்.
நான் அந்த நகரங்களைப் பாழான மண்மேடாகும்படி மாற்றினேன்.
27 அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் வயல்வெளியில் உள்ள புல்லைப்போல வெட்டப்படுகிறவர்களாக இருந்தார்கள்.
வீடுகளுக்கு மேலே வளர்ந்துள்ள புல்லைப்போல அவர்கள் இருந்தனர். அது உயரமாக வளருவதற்கு முன் வனாந்தரத்து வெப்பக்காற்றால் எரிக்கப்படுகிறது.
28 உனது படையைப்பற்றியும், போர்களைப்பற்றியும் எனக்குத் தெரியும்.
நீ எப்பொழுது ஓய்வெடுத்தாய், எப்பொழுது போருக்குப்போனாய் என்று எனக்குத் தெரியும்.
போரிலிருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
என்னிடத்தில் எப்போது கலக்கமடைந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
29 என் மீது நீ கோபத்தோடு இருக்கிறாய்.
உனது பெருமையான சொற்களை நான் கேட்டேன்.
எனவே, நான் உனது மூக்கில் கொக்கியை மாட்டுவேன்.
நான் உனது வாயில் கடிவாளத்தைப்போடுவேன்.
நீ வந்த அதே சாலையில்
என் நாட்டை விட்டு நீ போகும்படி பலவந்தப்படுத்துவேன்.’”
எசேக்கியாவிற்கு கர்த்தருடையச் செய்தி
30 பிறகு கர்த்தர் எசேக்கியாவிடம், “நான் சொன்னவையெல்லாம் உண்மை என்பதைக் காட்ட உனக்கு ஒரு அடையாளம் தருவேன். இந்த ஆண்டு எந்த தானியத்தையும் விதைக்க மாட்டாய். எனவே இந்த ஆண்டு நீ சென்ற ஆண்டின் விளைச்சலில் காடு போல வளர்ந்த தானியம் மட்டுமே உண்பாய். ஆனால் மூன்று ஆண்டுகளில் நீ பயிர் செய்த தானியத்தையே உண்பாய். நீ அவற்றை அறுவடை செய்வாய். உண்பதற்கு உன்னிடம் ஏராளமாக இருக்கும். நீ திராட்சையைப் பயிர் செய்து அதன் பழங்களை உண்பாய்.
31 “யூதாவின் குடும்பத்தில் தப்பி மீதியாய் இருக்கிற ஜனங்கள் மறுபடியும் வளர ஆரம்பிப்பார்கள். அந்த ஜனங்கள், தரையில் தன் வேர்களை ஆழமாகச் செலுத்தி உறுதியாக வளர்ந்த செடிகளைப்போன்றவர்கள். அந்த ஜனங்களுக்கு மிகுதியான பழங்கள் (பிள்ளைகள்) பூமியின்மேல் இருக்கும். 32 ஏனெனில் எருசலேமை விட்டு வெளியே வந்த சில ஜனங்கள் மட்டும் உயிரோடு இருப்பார்கள். சீயோன் மலையில் இருந்து உயிரோடு வந்தவர்களும் இருப்பார்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய பலமான அன்பு இதனைச் செய்யும்.
33 எனவே, அசீரியா ராஜாவைப்பற்றி ஒரு செய்தி கர்த்தர் இதைக் கூறுகிறார்,
“அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
இந்த நகரத்தில் அவன் ஒரு அம்பைக்கூட எய்யமாட்டான்.
அவனது கேடயங்களோடு இந்த நகரத்திற்கு எதிராக சண்டையிட நகரமாட்டான்.
நகரச் சுவர்களில் அவன் கொத்தளம் அமைக்கமாட்டான்.
34 அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான்.
அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
35 இந்த நகரத்தை நான் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
இதனை நான் எனக்காகவும், எனது தாசனாகிய தாவீதுக்காகவும் செய்வேன்” என்று கர்த்தர் சொல்கிறார்.
36 எனவே, அசீரியாவின் பாளையத்தில் உள்ள 1,85,000 ஆட்களை கர்த்தருடைய தூதன் போய் கொன்றான். மறுநாள் காலையில் ஜனங்கள் எழுந்தனர். அவர்கள் தங்களைச் சுற்றிலும் மரித்துப்போன ஆட்களின் உடல்களைக் கண்டனர். 37 எனவே, அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.
38 ஒரு நாள், சனகெரிப் அவனது தேவனான நிஸ்ரோகின் ஆலயத்தில் தொழுகை செய்வதற்காக இருந்தான். அந்த நேரத்தில் அவனது இரண்டு குமாரர்களான அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றனர். பிறகு, அந்த குமாரர்கள் அரராத்துக்கு ஓடிப்போனார்கள். எனவே, அசீரியாவின் புதிய ராஜாவாகச் சனகெரிப்பின் குமாரனான எசரத்தோன் வந்தான்.
எசேக்கியாவின் சுகவீனம்
38 அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம் அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் குமாரனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான்.
ஏசாயா ராஜாவிடம், “இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!” என்று கூறினான்.
2 எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான். 3 “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உண்மையாக உமக்குச் சேவை செய்ததை நினைத்தருளும். நீர் நல்லது என்று கூறியவற்றையே நான் செய்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான். பிறகு எசேக்கியா மிக உரத்த குரலில் கதறத் தொடங்கினான்.
4 ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றான். 5 ஏசாயா, “எசேக்கியாவிடம் போய் உனது முற்பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொன்னவை இதுதான் என்று அவனிடம் கூறு. உனது ஜெபத்தை நான் கேட்டேன். உனது கண்ணீரை நான் பார்த்தேன். நான் உனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளைக் கூட்டுவேன். 6 நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவிடமிருந்து காப்பாற்றுவேன், நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்றான்.
7 அவர் இவற்றையெல்லாம் செய்வார் என்பதைக் காண்பிக்கும்படி கர்த்தரிடமிருந்து வந்த அடையாளம் இதுதான். 8 “பார், ஆகாசு சூரிய கடியாரத்தில் படிக்குப்படி இறங்கின சூரிய நிழலை பத்துப் படிகள் பின்னிட்டுத் திருப்புகிறேன். முன்பு இருந்த இடத்திலிருந்து சூரிய நிழல் பத்துப்பாகை பின்னால் போகும்” என்றான்.
9 எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.
10 நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
11 எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
12 எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பதுபோல் நான் முடிந்து போகிறேன்.
எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
13 ஒரு சிங்கத்தைப்போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பதுபோன்று நொறுக்கப்பட்டன.
இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
14 ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப்போகிறேன்.
எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
15 நான் என்ன சொல்லமுடியும்.
என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
16 எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
நான் மீண்டும் வாழ உதவும்!
17 பார்! எனது தொல்லைகள் போகின்றன!
இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
18 மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
19 இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
20 எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்.”
21 பிறகு எசேக்கியாவிடம் ஏசாயா, “நீ அத்திப்பழங்களை பசையைபோன்று குழைத்து உனது புண்ணின்மேல் தடவவேண்டும். பிறகு நீ குணம் பெறுவாய்” என்றான்.
22 ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், “நான் குணமடைவேன் என்பதையும், நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதையும் நீரூபிக்கும் அடையாளம் எது?” என்று கேட்டிருந்தான்.
கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை
3 கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார். 2 பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். 3 உங்கள் பழைய பாவ சுபாவமானது இறந்துபோயிற்று. தேவனுக்குள் கிறிஸ்துவோடு உங்கள் புதிய வாழ்க்கை மறைந்திருக்கிறது. 4 கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள்.
5 தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது என்பதே இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம். 6 இவை தேவனைக் கோபப்படுத்தும். 7 இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள்.
8 ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். 10 நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். 11 இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர்.
12 தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 13 ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். 14 இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது. 15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
16 கிறிஸ்துவின் போதனைகள் உங்களுக்குள் சிறந்த செல்வமாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் போதிக்கவும், பலப்படுத்தவும் உங்கள் முழு ஞானத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் இதயத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாட்டு போன்றவற்றை தேவனைக் குறித்து உங்கள் இதயங்களில் சுரக்கும் நன்றியுணர்வோடு பாடுங்கள். 17 நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள்.
மற்றவர்களோடு உங்கள் புதிய வாழ்க்கை
18 மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே.
19 கணவன்மார்களே! உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களோடு சாந்தமாய் இருங்கள்.
20 குழந்தைகளே! எல்லா வகையிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
21 பிதாக்களே! உங்கள் பிள்ளைகளை விரக்தியடையச் செய்யாதீர்கள். அவர்களோடு கடுமையாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யும் தம் ஆவலை இழந்துவிடுவார்கள்.
22 வேலைக்கரார்களே! எல்லா வகையிலும் உங்கள் மண்ணுலக எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். உங்கள் எஜமானர்கள் உங்களுக்கு அருகில் இல்லாதபோதும், எல்லாக் காலங்களிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களை நீங்கள் சந்தோஷப்படுத்தவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதைச் செய்துகொண்டிருப்பது நீங்கள் தேவனை மதிக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் கர்த்தரை மதிப்பவர்கள், ஆதலால் கபடமில்லாமல் பணிசெய்யுங்கள். 23 நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். மனிதருக்காக அல்ல, கர்த்தருக்காகச் செய்கிறோம் என்று எண்ணுங்கள். 24 நீங்கள் உங்களுக்குரிய விருதை கர்த்தரிடம் இருந்து பெறுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களித்தபடி அவர் உங்களுக்குத் தருவார். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறீர்கள். 25 எவனொருவன் தவறு செய்கிறானோ, அவன் அத்தவறுக்காகத் தண்டிக்கப்படுவான் என்பதை மறவாதீர்கள். கர்த்தர் அனைவரையும் சமமாகவே நடத்துகிறார்.
2008 by World Bible Translation Center