Old/New Testament
21 யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய ராஜா ஆனான். யோராம் யோசபாத்தின் குமாரன். 2 அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் குமாரர்கள். யோசபாத் யூதாவின் ராஜா ஆவான். 3 யோசபாத் தன் குமாரர்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த குமாரன்.
யூதா ராஜாவாகிய யோராம்
4 யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். 5 யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். 6 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் குமாரத்தியை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். 7 ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார்.
8 யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாவையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். 9 எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். 10 அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. 11 யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.
12 எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது:
“தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் ராஜாவாகிய ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. 13 நீயோ இஸ்ரவேலின் ராஜாக்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். 14 எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். 15 நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.”
16 கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். 17 அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். ராஜாவின் வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய குமாரன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ்.
18 இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. 19 பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. 20 யோராம் ராஜாவாகியபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.
யூதாவின் ராஜாவாகிய அகசியா
22 யோராமின் இடத்திற்கு எருசலேம் ஜனங்கள் அகசியாவைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். அகசியா யோராமின் இளைய குமாரன் ஆவான். யோராமின் முகாமை அரபியர்களுடன் சேர்ந்துகொண்டு வந்தவர்கள் தாக்கியபோது, யோராமின் மூத்த குமாரர்களைக் கொன்றுவிட்டனர். எனவே அகசியா மட்டுமே மீதியாகயிருந்ததால் யூதாவின் ராஜாவானான். 2 அகசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அகசியா எருசலேமில் ஓராண்டு ஆட்சி செய்தான். அவனது தாயின் பெயர் அத்தாலியாள். அவள் ஒம்ரியின் குமாரத்தி. 3 அகசியாவும் ஆகாபின் குடும்பத்தினரைப்போலவே வாழ்ந்தான். இவன் இவ்வாறு வாழ்வதற்கு இவனது தாயே காரணமாக இருந்தாள். இவன் தவறு செய்ய அவள் தூண்டினாள். 4 கர்த்தருடைய பார்வையில் அகசியா தீமைச் செய்துவந்தான். இதைத்தான் ஆகாப் குடும்பத்தினரும் செய்துவந்தனர். அகசியாவின் தந்தை மரித்த பிறகு ஆகாபின் குடும்பத்தினர் இவனுக்கு தீய அறிவுரைகளைக் கூறிவந்தனர். அவை அவனுக்கு மரணத்துக்கு ஏதுவாயிற்று, 5 ஆகாபின் குடும்பத்தினர் தந்த அறிவுரைகளை அகசியா பின்பற்றினான். இவன் யோராமோடு சேர்ந்துகொண்டு ஆராமின் ராஜாவாகிய ஆசகேலுக்கு எதிராகச் சண்டையிட ராமோத் கீலேயாத் நகரத்திற்குச் சென்றான். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். இவன் இஸ்ரவேலின் ராஜா. ஆனால் ஆராமியர்கள் போரில் யோராமைக் காயப்படுத்தினர். 6 யோராம் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரெயேல் நகரத்திற்குத் திரும்பிப் போனான். இவன் ஆராம் ராஜாவாகிய ஆசகேலுக்கு எதிராக ராமோத்தில் சண்டையிட்டபோது இக்காயங்களை அடைந்தான். பிறகு யோராமைப் பார்க்க அகசியா யெஸ்ரெயேல் நகரத்திற்கு சென்றான். அகசியாவின் தந்தையின் பெயர் யோராம். இவன் யூதாவின் ராஜா. யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். யோராம் காயப்பட்டதால் யெஸ்ரெயேல் நகரத்தில் இருந்தான்.
7 யோராமைப் பார்க்க அகசியா சென்றபொழுது, தேவன் அகசியாவிற்கு மரணத்தை விளைவித்தார். அகசியா வந்ததும் யோராமோடு யெகூவைச் சந்திக்கப்போனான். யெகூவின் தந்தை நிம்சி. ஆகாபின் குடும்பத்தை அழிக்க கர்த்தர் யெகூவைத் தேர்ந்தெடுத்தார். 8 யெகூ ஆகாபின் குடும்பத்தைத் தண்டித்துக் கொண்டிருந்தான். அதோடு அவன் அகசியாவிற்கு சேவை செய்த யூதாவின் தலைவர்களையும் அகசியாவின் உறவினர்களையும் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றான். 9 பிறகு யெகூ, அகசியாவைத் தேடினான். அவன் சமாரியா நகரத்திலே ஒளிந்துகொள்ள முயன்றபோது யெகூவின் ஆட்கள் பிடித்துக்கொண்டனர். அவனை அவர்கள் யெகூவிடம் கொண்டுவந்தனர். அவர்கள் அவனைக் கொன்று அடக்கம் செய்தனர். அவர்கள், “அகசியா யோசபாத்தின் சந்ததியான். யோசபாத் தன் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்றினான்” என்று கூறினர். அகசியாவின் குடும்பத்தினருக்கு யூதா முழுவதையும் ஆள்வதற்குரிய பெலன் இல்லாமல்போனது.
அத்தாலியாள் இராணி
10 அத்தாலியாள் அகசியாவின் தாய் ஆவாள். இவள் தன் குமாரன் மரித்துப்போனதை அறிந்ததும், யூதாவில் உள்ள ராஜாக்களின் எல்லா பிள்ளைகளையும் கொன்றுபோட்டாள். 11 ஆனால் யோசேபியாத் அகசியாவின் குமாரனான யோவாசை எடுத்து மறைத்து வைத்தாள். அவள் யோவாசையும் அவனது தாதிகளையும் படுக்கையறைக்குள்ளே ஒளித்தாள். யோசேபியாத் யோராம் ராஜாவின் குமாரத்தி. அவள் யோய்தாவின் மனைவி. யோய்தா ஒரு ஆசாரியன். யோசேபியாத் அகசியாவின் சகோதரி. அத்தாலியாள் யோவாசைக் கொல்லவில்லை. காரணம் அவன் மறைக்கப்பட்டான். 12 யோவாஸ் ஆசாரியர்களோடு தேவனுடைய ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டான். அக்காலக்கட்டத்தில், அத்தாலியாள் அந்நாட்டை இராணியைப்போல ஆண்டு வந்தாள்.
சீஷர்களுக்கு ஆறுதல்
14 இயேசு அவர்களிடம், “நீங்கள் மனம் கலங்காதீர்கள். தேவனை விசுவாசியுங்கள். என்னிலும் விசுவாசம் வையுங்கள். 2 எனது பிதாவின் வீட்டில் அறைகள் ஏராளமாக உள்ளன. அது உண்மை இல்லை என்றால் நான் இதனை உங்களிடம் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஓர் இடத்தைத் தயார் செய்வதற்காக நான் அங்கே செல்லுகிறேன். 3 நான் அங்கே போனதும் உங்களுக்கான இடத்தை தயார் செய்வேன். நான் திரும்பி வருவேன். என்னோடு உங்களை அழைத்துச் செல்வேன். எனவே, நான் எங்கே இருப்பேனோ அங்கே நீங்களும் இருப்பீர்கள். 4 நான் போகிற இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார்.
5 உடனே, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு இருக்கும்போது வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என தோமா கேட்டான்.
6 அதற்கு இயேசு, “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும். 7 நீங்கள் உண்மையிலேயே என்னைப் புரிந்துகொண்டால் என் பிதாவையும் புரிந்துகொள்ளலாம். ஆனால் இப்பொழுது என் பிதாவை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்கள்” என்றார்.
8 இயேசுவிடம் பிலிப்பு, “ஆண்டவரே, எங்களுக்கு பிதாவைக் காட்டுங்கள். அதுதான் எங்களுக்குத் தேவையானது” என்றான்.
9 அதற்கு இயேசு “பிலிப்பு, நான் உன்னோடு நீண்ட நாட்களாக இருக்கிறேன். ஆகையால் நீ என்னை அறிந்திருக்கவேண்டும். என்னைப் பார்க்கிறவன் எவனும் என் பிதாவைப் பார்க்கிறான். அப்படியிருக்க நீ என்னிடம், ‘எங்களுக்குப் பிதாவைக் காட்டுங்கள்’ என்று கூறுகிறாயே. 10 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ உண்மையாகவே நம்புகிறாயா? நான் உங்களுக்குச் சொன்னவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை அல்ல. பிதா என்னில் வாழ்கிறார். அவர் அவருடைய பணியைச் செய்கிறார். 11 நான் பிதாவில் இருக்கிறேன். பிதா என்னில் இருக்கிறார் என்று நான் சொல்லும்போது என்னை நம்புங்கள். இல்லாவிட்டால் நான் செய்த அற்புதங்களுக்காவது என்னை நம்புங்கள்.
12 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் நான் செய்த அத்தகைய அற்புதங்களைச் செய்வான். என்னைவிட மேலான காரியங்களைக்கூட செய்வான். ஏனென்றால் நான் என் பிதாவிடம் செல்கிறேன். 13 எனது பெயரில் நீங்கள் எதை வேண்டினாலும் அதை உங்களுக்காக நான் செய்வேன். பிறகு பிதாவின் மகிமை குமாரனின் மூலமாக விளங்கும். 14 நீங்கள் எனது பெயரில் என்னை என்ன கேட்டாலும் அதை நான் செய்வேன்.
பரிசுத்த ஆவியானவர்பற்றிய வாக்குறுதி
15 “நீங்கள் என்னை நேசித்தால், நான் கட்டளையிட்டபடி நீங்கள் காரியங்களைச் செய்வீர்கள். நான் பிதாவை வேண்டுவேன். அவர் உங்களுக்கு இன்னொரு உதவியாளரைத் தருவார். 16 அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். 17 உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார்.
18 “பெற்றோர் இல்லாத பிள்ளைகளைப்போன்று நான் உங்களைவிட்டுப் போகமாட்டேன். நான் மீண்டும் உங்களிடம் வருவேன். 19 இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகில் உள்ள மக்கள் என்னை இனிமேல் காணமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள். நான் உயிர்வாழ்வதால் நீங்களும் வாழ்வீர்கள். 20 அந்த நாளிலே நான் பிதாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதையும் அறிவீர்கள். 21 ஒருவன் எனது கட்டளைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறான். என்னை நேசிக்கிறவனை என் பிதாவும் நேசிப்பார். அதோடு நானும் அவனை நேசிப்பேன். நான் என்னை அவனிடம் வெளிப்படுத்துவேன்” என்றார்.
22 பிறகு யூதா என்பவன் (யூதாஸ்காரியோத் அல்ல) இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகத்துக்கு இல்லாமல் எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று ஏன் திட்டமிடுகிறீர்?” என்றான்.
23 அதற்கு இயேசு, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம். 24 ஆனால் என்னை நேசிக்காதவன், என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற எனது உபதேசங்கள் எல்லாம் என்னுடையவையல்ல. அவை என்னை அனுப்பின எனது பிதாவினுடையவை.
25 “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். 26 ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார். அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார்.
27 “நான் சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன். எனது சொந்த சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல் இல்லாமல் நான் வித்தியாசமான சமாதானத்தைக் கொடுக்கிறேன். ஆகையால் உங்கள் மனம் கலங்காமல் இருக்கட்டும். அஞ்சவும் வேண்டாம். 28 ‘நான் போவேன், மீண்டும் உங்களிடம் வருவேன்’ என்று சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் என்னை நேசிப்பதானால், நான் என் பிதாவிடம் திரும்பிப்போவதைப்பற்றி மகிழ்ச்சியடைவீர்கள், ஏனென்றால் என்னைவிட என் பிதா பெரியவர். 29 நான் இவை நடப்பதற்கு முன்னரே இவற்றை உங்களிடம் சொல்கிறேன். இவை நடைபெறும்போது என்னை நீங்கள் நம்புவீர்கள்.
30 “நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை. 31 ஆனால் நான் என் பிதாவை நேசிக்கிறேன் என்று உலகத்துக்குத் தெரியவேண்டும். ஆகையால் என் பிதா எனக்குச் சொன்னவற்றை மட்டும் நான் செய்கிறேன். இப்பொழுது வாருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம்” என்றார்.
2008 by World Bible Translation Center