Old/New Testament
யூதாவில் அசரியா அரசாண்டது
15 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 27வது ஆட்சியாண்டின் போது அமத்சியாவின் குமாரனான அசரியா யூதாவின் ராஜாவானான். 2 அசரியா அரசாள வந்தபோது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயார் எருசலேமின் எக்கோலியாள் ஆகும். 3 அசரியா தன் தந்தையைப் போலவே, கர்த்தர் சொன்ன சரியான வழியில் வாழ்ந்து வந்தான். அமத்சியா செயலாற்றிய விதத்திலேயே அசரியாவும் பின்பற்றிச் செயலாற்றினான். 4 இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. அந்த இடங்களில் ஜனங்கள் தொடர்ந்து பலி கொடுத்தும், நறுமணப் பொருட்களை எரித்தும், தொழுதுகொண்டும் வந்தனர்.
5 அசரியாவிற்குத் தொழுநோய் வரும்படி கர்த்தர் செய்தார். மரிக்கும்வரை இவன் தொழுநோயாளியாகவே இருந்தான். இவன் தனி வீட்டில் வாழ்ந்தான். இவனது குமாரனான யோதாம், அரண்மனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஜனங்களை நியாயம்தீர்த்து வந்தான்.
6 அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 7 அசரியா மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். அசரியாவின் குமாரனான யோதாம் அவனுக்குப் பிறகு புதிய ராஜாவானான்.
இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி
8 யெரொபெயாமின் குமாரனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அரசாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது. 9 கர்த்தரால் தவறானவை என்று சொல்லப்பட்ட அனைத்துக் காரியங்களையும் சகரியா செய்தான். அவன் தன் முற்பிதாக்கள் செய்த பாவங்களையே செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.
10 யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன் சகரியாவிற்கு எதிராக திட்டம் தீட்டினான். ஜனங்களுக்கு முன்பு இப்லேயிமில் கொன்று விட்டு புதிய ராஜாவானான். 11 சகரியா செய்த மற்ற செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 12 இவ்வாறு கர்த்தருடைய வார்த்தைகள் உண்மையானது. கர்த்தர் யெகூவிடம் அவனது சந்ததியார் 4 தலைமுறையினர் இஸ்ரவேல் தேசத்தை ஆள்வார்கள் என்று கூறியிருந்தார்.
இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி
13 யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன், யூதா வின் ராஜாவாகிய உசியாவின் 39ஆம் ஆட்சியாண்டில் இஸ்ரவேலின் ராஜாவானான். சல்லூம் ஒரு மாதம் சமாரியாவிலிருந்து ஆண்டான்.
14 காதியின் குமாரனான மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து யாபேசின் குமாரனான சல்லூமை வெட்டிக்கொன்றான். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.
15 சகரியாவுக்கு எதிராக, சல்லூம் செய்த சதிகள் உட்பட, அவனுடைய எல்லா மீதியான செயல்களைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது
16 சல்லூம் மரித்தபிறகு, மெனாகேம் திப்சாவையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தோற்கடித்தான். ஜனங்கள் அவனுக்கு நகர வாசலைத் திறக்க மறுத்தனர். எனவே அவன் அவர்களைத் தோற்கடித்ததும் நகரத்திலுள்ள கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
17 மெனாகேம் எனும் காதியின் குமாரன் இஸ்ரவேலின் புதிய ராஜா ஆனபோது, யூதாவில் அசரியாவின் 39வது ஆட்சியாண்டு நடைபெற்றது. மெனாகேம் பத்து ஆண்டுகள் சமாரியாவிலிருந்து அரசாண்டான். 18 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட செயல்களையெல்லாம் மெனாகேம் செய்து வந்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.
19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிடவந்தான். மெனாகேம் அவனுக்கு 75,000 பவுண்டு வெள்ளியைக் கொடுத்தான். இவ்வாறு கொடுத்ததன் மூலம் பூலின் உதவியைப் பெற்று தனது அரசை வலுப்படுத்திக்கொண்டான். 20 அனைத்து செல்வர்களிடமும் வல்லமை உள்ளவர்களிடமும் வரி வசூல் செய்து மெனாகேம் செல்வத்தைப் பெருக்கினான். அவன் ஒவ்வொருவருக்கும் 50 வெள்ளி சேக்கல் வரி விதித்தான். பிறகு அதனை இவன் அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்து வந்தான். எனவே, அசீரியாவின் ராஜா இஸ்ரவேலில் தங்காமல் விலகிப்போனான்.
21 மெனாகேம் செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 22 மெனாகேம் மரித்ததும் இவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான பெக்காகியா புதிய ராஜா ஆனான்.
இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது
23 மெனாகேமின் குமாரனான பெக்காகியா இஸ்ரவேலை சமாரியாவிலிருந்து ஆளத் தொடங்கினான். அப்போது யூதாவில் அசரியாவின் 50வது ஆட்சியாண்டு நடந்துக் கொண்டிருந்தது. பெக்காகியா இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். 24 கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களையெல்லாம் பெக்காகியா செய்து வந்தான். இவனும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
25 பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் குமாரனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா ராஜாவின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.
26 பெக்காகியா செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது
27 ரெமலியாவின் குமாரனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான். 28 கர்த்தரால் தவறென்று சொல்லப்பட்ட செயல்களையே பெக்கா செய்துவந்தான். இவன், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
29 அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர், வந்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டான். அப்போது இஸ்ரவேலில் பெக்காவின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. திகிலாத்பிலேசர், ஈயோன், பெத்மாக்கா எனும் ஆபேல், யனோவாக், கேதேஸ், ஆத்சோர், கீலேயாத், கலிலேயா, நப்தலியின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி இப்பகுதியிலுள்ள ஜனங்களைச் சிறைபிடித்து அசீரியாவிற்குக் கொண்டுபோனான்.
30 ஏலாவின் குமாரனான ஒசெயா என்பவன் ரெமலியாவின் குமாரனான பெக்காவிற்கு எதிராகச் சதிசெய்தான். அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் 20ஆம் ஆட்சியாண்டில் வெட்டிக்கொன்றான். புதிய ராஜாவானான்.
31 பெக்காவின் மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
யூதாவை யோதாம் அரசாண்டது
32 உசியாவின் குமாரனான யோதாம் யூதாவின் ராஜாவானான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்காவின் இரண்டாவது ஆட்சியாண்டு நடந்தது. 33 யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் குமாரத்தி ஆவாள். 34 யோதாம் தன் தந்தை உசியாவைப் போன்று, கர்த்தர் சரி என்று சொன்னதை செய்துவந்தான். 35 ஆனால் இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடர்ந்து அந்த இடங்களில் பலியிட்டும் நறு மணப் பொருட்களை எரித்தும் தொழுதுகொண்டும் வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மேல் கதவைக் கட்டினான். 36 யோதாமின் மற்ற அருஞ்செயல்களெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
37 அப்போது, கர்த்தர் ஆராமின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனான பெக்காவையும் யூதாவிற்கு எதிராகப் போரிட அனுப்பத் தொடங்கினார்.
38 யோதாம் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான ஆகாஸ் என்பவன் புதிய ராஜா ஆனான்.
ஆகாஸ் யூதாவின் ராஜா ஆனது
16 யோதாமின் குமாரனான ஆகாஸ் என்பவன் யூதாவின் ராஜா ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது. 2 ஆகாஸ் ராஜாவாகும்போது அவனது வயது 20, அவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். நல்லதென்று கர்த்தர் சொன்னவற்றை ஆகாஸ் செய்யவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்த தனது முற்பிதாவான தாவீதைப்போன்று இவன் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. 3 இவன் இஸ்ரவேலின் மற்ற ராஜாக்களைப்போன்று ஆண்டு வந்தான். அவன் தன் குமாரனையும் தகனபலியாகக் கொடுத்தான். இஸ்ரவேலர்கள் வந்தபொழுது, கர்த்தர் நாட்டை விட்டுத் துரத்திய ஜனங்கள் செய்துவந்ததுபோன்ற பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தான். 4 ஆகாஸ் மேடைகளில் பலியிட்டும் நறுமணப் பொருட்களை எரித்தும் வந்தான். மேடை, மலைஉச்சி, ஒவ்வொரு மரத்தடி என அனைத்து இடங்களிலும் தொழுதுகொண்டு வந்தான்.
5 பிறகு, ஆராமின் ராஜாவாகிய ரேத்சீன் என்பவனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரனான பெக்கா என்பவனும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். அவர்கள் ஆகாசை முற்றுகையிட்டனர். ஆனால், தோற்கடிக்க முடியவில்லை. 6 அப்போது ஆராம் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பப் பெற்றான். ஏலாத்திலிருந்து யூதர்கள் அனைவரையும் திரும்ப எடுத்துக் கொண்டான். ஆராமியர்கள் ஏலாத்தில் குடியேறினார்கள். இன்றுவரை அங்கே அவர்கள் இருக்கின்றனர்.
7 ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடம் தூதுவனை அனுப்பினான். “நான் உங்கள் சேவகன். நான் உங்களுக்கு குமாரனைப் போன்றவன். என்னை ஆராம் ராஜாவிடமிருந்தும் இஸ்ரவேல் ராஜாவிடமிருந்தும் வந்து காப்பாற்றுங்கள். அவர்கள் என்னோடு போர் செய்ய வருகிறார்கள்!” என்று தூதுவிட்டான். 8 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 9 அசீரியாவின் ராஜா, ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.
10 அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரை சந்திக்க ராஜா ஆகாஸ் தமஸ்குவுக்குப்போனான். ஆகாஸ் அங்கே பலி பீடத்தைப் பார்த்தான். அவன் அதனுடைய மாதிரியையும் வடிவத்தையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அதேபோல ஒரு பலிபீடம் செய்வதற்காக அனுப்பினான். 11 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பி வருவதற்குள் ஆசாரியன் உரியா ராஜாவால் அனுப்பப்பட்ட மாதிரியின்படியே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான்.
12 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பியதும், பலிபீடத்தைப் பார்த்தான். அதில் பலிகளைச் செலுத்தினான். 13 அதில் அவன் தகன பலியையும் தானிய காணிக்கைகளையும் செலுத்தினான். அதோடு, பானங்களின் காணிக்கையையும் சமாதானப் பலியின் இரத்தத்தையும் இந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
14 கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான். 15 ஆசாரியனாகிய உரியாவிற்கு ராஜா ஒரு கட்டளையிட்டான். அவன், “நீ இந்த பெரிய பலிபீடத்தின் மேல் காலைச் சர்வாங்க தகனபலியையும் மாலை தானியக் காணிக்கையையும் தேசத்தின் ஜனங்களின் சர்வாங்கத் தகன பலியையும் அவர்களது தானியக் காணிக்கைகளையும் பானங்களின் காணிக்கையையும் செலுத்தவேண்டும். அதன்மேல் சர்வாங்க தகனபலி மற்றும் உயிர் பலிகளின் இரத்தத்தையும் தெளிப்பாய். நான் என் சொந்தக் காரியத்துக்கு தேவனிடம் கேட்க, (விசாரிக்க), (வழிகாட்ட) மட்டும் வெண்கலப் பலிபீடத்தைப் பயன்படுத்துவேன்” என்று கூறினான். 16 அதன்படியே ஆசாரியன் உரியா அனைத்தையும் ஆகாஸ் ராஜா அவனுக்குக் கட்டளையிட்டபடி செய்தான்.
17 மேலும் ஆகாஸ் ராஜா வண்டிகளில் உள்ள சவுக்குகளை (பீடங்களை) அறுத்தான். அவற்றின் மேலுள்ள கொப்பறைகளை எடுத்தான். வெண்கலக் காளைகளின் மேலிருந்த பெரிய (கடல்) தொட்டியை இறக்கி கற்களின் தள வரிசையில் வைத்தான். 18 ஆலயத்தின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் (மண்டபத்தை) ஆகாஸ் நீக்கினான். மேலும் ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நீக்கினான். இவை அனைத்தையும் ஆலயத்திலிருந்து நீக்கி ராஜா அவற்றை அசீரியரின் ராஜாவுக்குக் கொடுத்தான்.
19 ஆகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 20 ஆகாஸ் மரித்ததும் தாவீது நகரத்திலே தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான எசேக்கியா புதிய ராஜா ஆனான்.
இயேசுவும் நிக்கொதேமுவும்
3 நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். 2 ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான்.
3 அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.
4 அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.
5 இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6 ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. 7 நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ 8 காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார்.
9 “இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான்.
10 “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! 11 நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 12 நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. 13 பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.
14 “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.[a] 15 பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.
16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை.
2008 by World Bible Translation Center