Old/New Testament
எரேமியா தேவனிடம் முறையிடுகிறான்
12 கர்த்தாவே, நான் உம்மோடு வாதம் செய்தால் நீர் எப்பொழுதும் சரியாகவே இருப்பீர்!
ஆனால், நான் உம்மிடம் சரியாக தோன்றாத சிலவற்றைப்பற்றி கேட்க விரும்புகிறேன்.
கெட்டவர்கள் ஏன் சித்தி பெறுகிறார்கள்?
உம்மால் நம்பமுடியாதவர்கள், ஏன் இத்தகைய இலகுவான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்?
2 நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர்,
அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர்.
அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர்.
அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும்
நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்;
ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர்.
3 ஆனால், கர்த்தாவே!
நீர் என் இதயத்தை அறிவீர், நீர் என்னைப் பார்க்கிறீர்.
என் மனதை சோதிக்கிறீர்.
வெட்டுவதற்கு இழுத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போன்று அந்தத் தீய ஜனங்களை வெளியே இழுத்துப்போடும்.
அவர்களை வெட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடும்.
4 இந்தப் பூமி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வறண்டிருக்கும்?
இந்தப் புல் நிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காய்ந்து மடிந்திருக்கும்?
இந்தப் பூமியிலுள்ள மிருகங்களும், பறவைகளும், செத்திருக்கின்றன.
இது தீய ஜனங்களின் குற்றமாகும்,
எனினும் அத்தீய ஜனங்கள்,
“எரேமியா நமக்கு நிகழப்போவதைப் பார்க்க நீண்டகாலம் உயிர்வாழமாட்டான்”
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எரேமியாவிற்கு தேவனுடைய பதில்
5 “எரேமியா! நீ மனிதர்களோடும் ஓடும் பந்தயத்திலேயே சோர்வடைந்துவிட்டால்,
குதிரைகளோடு பந்தயத்தில் எப்படி ஓடுவாய்?
பாதுகாப்பான இடங்களிலேயே நீ சோர்வடைந்துவிட்டால்,
ஆபத்தான இடங்களில் நீ என்ன செய்யப்போகிறாய்?
யோர்தான் ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள
முட்புதர்களின் மத்தியில் நீ என்ன செய்யப் போகிறாய்?
6 இந்த மனிதர்கள் உனது சொந்தச் சகோதரர்கள்.
உனது சொந்தக் குடும்பத்து உறுப்பினர்களே உனக்கு எதிராகத் திட்டங்களைப் போடுகிறார்கள்.
உனது சொந்தக் குடும்பத்து ஜனங்களே உனக்கெதிராய் கூச்சல் போடுகிறார்கள்.
அவர்கள் நண்பர்களைபோன்று
பேசினாலும் கூட நம்பாதே.”
கர்த்தர் தமது ஜனங்களான யூதாவை ஏற்க மறுக்கிறார்
7 “நான் (கர்த்தர்) எனது வீட்டைத் தள்ளிவிட்டிருக்கிறேன்.
நான் எனது சொந்த சொத்தை விட்டுவிட்டேன்.
நான் நேசம் வைத்த ஒன்றை (யூதா) அவளின் பகைவர்களிடமே விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
8 ஒரு காட்டுச் சிங்கத்தைப்போன்று, எனது சொந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் என்மீது கெர்ச்சிக்கிறார்கள்.
எனவே நான் அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டேன்.
9 எனது சொந்த ஜனங்கள், கருடகழுகுகளின் நடுவிலே சூழப்பட்ட,
மரிக்கிற மிருகத்தைப் போல ஆனார்கள்.
அப்பறவைகள் அவனைச் சுற்றி பறக்கின்றன.
காட்டு மிருகங்களே வாருங்கள்.
நீங்கள் உண்பதற்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.
10 பல மேய்ப்பர்கள் (தலைவர்கள்) எனது திராட்சைத் தோட்டங்களை அழித்திருக்கின்றனர்.
அந்த மேய்ப்பர்கள் எனது வயல்களில் அந்தச் செடிகளின் மேல் நடந்திருந்தார்கள்:
அந்த மேய்ப்பர்கள் எனது அழகிய வயலை வெறுமையான வனாந்தரமாக ஆக்கிவிட்டனர்.
11 அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள்.
இது காய்ந்து செத்துப்போனது.
எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை.
நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று.
அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை.
12 வனாந்தரத்தின் பசுஞ்சோலையைக் கொள்ளையடிக்க சிப்பாய்கள் வந்தனர்.
தேசத்தைத் தண்டிக்கும்படி கர்த்தர் அந்தப் படைகளை பயன்படுத்தினார்.
தேசத்தின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்.
ஒருவனும் பத்திரமாக இருக்கவில்லை.
13 ஜனங்கள் கோதுமையை விதைப்பார்கள்.
ஆனால் அவர்கள் முட்களையே அறுவடை செய்வார்கள்.
அவர்கள் களைத்து போகிறவரை கடுமையாக உழைப்பார்கள்.
ஆனால் அவர்கள் தமது வேலைக்காக எதையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் விளைச்சலுக்காக வெட்கப்படுவார்கள்.
கர்த்தருடைய கோபம் அவற்றுக்குக் காரணமாயிற்று.”
இஸ்ரவேலர்களின் அயலார்களுக்கு கர்த்தருடைய வாக்குறுதி
14 இதுதான் கர்த்தர் சொன்னது: “இஸ்ரவேல் நாட்டைச்சுற்றி வாழும் அனைத்து ஜனங்களுக்கும் நான் என்ன செய்வேன் என்பதை நான் சொல்வேன். அந்த ஜனங்கள் மிகவும் கெட்டவர்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த பூமியை அவர்கள் அழித்திருக்கின்றனர். நான் அந்தத் தீய ஜனங்களை இழுத்து, அவர்களின் நாட்டுக்கு வெளியே போடுவேன்; நான் யூதா ஜனங்களையும் அவர்களோடு இழுப்பேன். 15 ஆனால் அந்த ஜனங்களை நான் அவர்களின் நாடுகளிலிருந்து வெளியே இழுத்தப்பிறகு நான் அவர்களுக்காக வருத்தப்படுவேன். நான் ஒவ்வொரு குடும்பத்தையும் அவர்களின் சொந்த சொத்துக்கும் பூமிக்கும் திரும்பக் கொண்டுவருவேன். 16 அந்த ஜனங்கள், என் ஜனங்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன், கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் எனது ஜனங்களுக்கு, வாக்குறுதிச் செய்வதற்குப் பாகாலின் பெயரைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது, அந்த ஜனங்கள் தங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அந்த ஜனங்கள் என் பெயரைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த ஜனங்கள் ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு’ ஆணையிட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த ஜனங்கள் இதனைச் செய்தால், நான் அவர்களை வெற்றிபெற அனுமதிப்பேன். அவர்கள் என் ஜனங்களோடு வாழவிடுவேன். 17 ஆனால், எனது செய்தியை எந்த நாடாவது கேளாமல் போனால், அதனை நான் முழுமையாக அழிப்பேன். செத்துப்போன செடியைப்போன்று நான் அதனை பிடுங்குவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அடையாளமான இடுப்புத்துணி
13 இதுதான் கர்த்தர் என்னிடம் கூறுகிறது: “எரேமியா போய் ஒரு சணல் இடுப்புத் துணியை வாங்கு. பிறகு அதனை உன் இடுப்பிலே கட்டிக்கொள். அந்த இடுப்புத்துணி நனையும்படிவிடாதே.”
2 எனவே நான், கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி ஒரு சணல் இடுப்புத்துணியை வாங்கினேன், அதனை என் இடுப்பிலே கட்டினேன். 3 பிறகு கர்த்தருடைய செய்தி என்னிடம் இரண்டாவது முறையாக வந்தது. 4 இதுதான் செய்தி: “எரேமியா நீ வாங்கினதும் இடுப்பிலே கட்டியிருக்கிறதுமான துணியை எடுத்துக்கொண்டு பேராத்துக்குப் போ. அதை அங்கே பாறையின் வெடிப்பிலே மறைத்துவை.”
5 எனவே, நான் பேராத்துக்குப் போய் அங்கே கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி இடுப்புத் துணியை மறைத்து வைத்தேன். 6 பல நாட்கள் கழிந்தது; கர்த்தர் என்னிடம், “இப்பொழுது எரேமியா! பேராத்துக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புத்துணியை எடுத்துக்கொள்” என்று சொன்னார்.
7 எனவே, நான் பேராத்துக்குச் சென்று இடுப்புத் துணியை தோண்டி எடுத்தேன், ஆனால், இப்பொழுது என்னால் அதனை இடுப்பிலே கட்டமுடியவில்லை. ஏனென்றால், அது மிக பழமையாகிப் போயிருந்தது. அது எதற்கும் பயன்படும் அளவில் நன்றாயில்லை.
8 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. 9 இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “இடுப்புத்துணி கெட்டுப்போயிற்று, அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, எருசலேமிலும் யூதாவிலும் உள்ள வீண்பெருமைகொண்ட ஜனங்களை அழிப்பேன். 10 யூதாவிலுள்ள வீண் பெருமையும், தீமையும்கொண்ட ஜனங்களை, நான் அழிப்பேன். அவர்கள் எனது வார்த்தையைக் கேட்க மறுத்தனர். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாக விரும்புகின்றவற்றை மட்டுமே செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களைப் பின் பற்றி தொழுதுகொண்டனர். யூதாவிலுள்ள அந்த ஜனங்கள் இந்தச் சணல் இடுப்புத் துணியைப்போன்று ஆவார்கள். அவர்கள் அழிக்கப்பட்டு எதற்கும் பயனற்றுப் போவார்கள். 11 ஒரு இடுப்புத் துணியை ஒரு மனிதன் இடுப்பைச்சுற்றி இறுக்கமாக கட்டுகிறான். இதைப்போலவே நான் என்னைச் சுற்றிலும் இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதாவின் குடும்பத்தையும் கட்டினேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அதைச் செய்தேன். எனவே, அந்த ஜனங்கள் என் ஜனங்களாவார்கள். பிறகு, எனது ஜனங்கள் கனமும் துதியும் மகிமையும் எனக்குக் கொண்டு வருவார்கள். ஆனால் எனது ஜனங்கள் என்னை கவனிக்கவில்லை.”
யூதாவிற்கு எச்சரிக்கை
12 “எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள். 13 பிறகு நீ அவர்களிடம், இதுதான் கர்த்தர் சொல்வது. இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனையும் குடிகாரனைப் போன்று உதவியற்றவனாகச் செய்வேன். நான் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ராஜாக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் எருசலேமில் வாழும் அனைத்து ஜனங்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். 14 நான் யூதாவின் ஜனங்களை ஒருவர் மீது ஒருவர் மோதி விழும்படி பண்ணுவேன். தந்தைகளும் குமாரர்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்” என்று கூறுவாய், என்று கர்த்தர் சொல்லுகிறார். “‘நான் அவர்களுக்காக வருத்தமோ இரக்கமோ அடைவது இல்லை. நான் யூதாவின் ஜனங்களை அழிப்பதிலிருந்து நிறுத்த, இரக்கத்தை அனுமதிக்கமாட்டேன்.’”
15 கேள் உன் கவனத்தைச் செலுத்து.
கர்த்தர் உன்னோடு பேசியிருக்கிறார்.
வீண் பெருமைகொள்ளாதே.
16 உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி.
இல்லையெனில் அவர் இருளைக் கொண்டுவருவார்.
இருளான குன்றுகளின்மேல் விழுமுன், அவரைத் துதி.
இல்லாவிட்டால் யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் ஒளிக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால், கர்த்தர் அடர்த்தியான இருளைக் கொண்டு வருவார்.
கர்த்தர் ஒளியை மிக அடர்த்தியான இருளாக மாற்றிவிடுவார்.
17 யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்காவிட்டால்,
உங்களது வீண்பெருமை எனது அழுகைக்குக் காரணம் ஆகும்.
நான் என் முகத்தை மறைத்து
மிகக் கடுமையாக அழுவேன்.
எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும்,
ஏனென்றால், கர்த்தருடைய மந்தை சிறைப்பிடிக்கப்படும்.
18 ராஜாவிடமும் அவனது மனைவியிடமும் இவற்றைக்கூறு:
“உங்களது சிங்காசனங்களில் இருந்து இறங்கி வாருங்கள், உங்களது அழகான கிரீடங்கள் உம் தலைகளிலிருந்து விழுந்திருக்கிறது.”
19 நெகேவ் வனாந்தரத்தின் நகரங்கள் பூட்டப்பட்டுவிட்டன.
எவராலும் அவற்றைத் திறக்க முடியாது.
யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் சிறைபிடிக்கப்பட்டு
அவர்களைக் கைதிகளாக வெளியே கொண்டு சென்றனர்.
20 எருசலேமே! பார்.
பகைவன் வடக்கிலிருந்து வந்துக்கொண்டிருக்கிறான்.
உனது மந்தை எங்கே? தேவன் உனக்கு அந்த அழகிய மந்தையைக் கொடுத்தார்.
நீங்கள் அந்த மந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியவர்கள்.
21 அந்த மந்தையை குறித்து கணக்கு சொல்ல வேண்டுமென்று கர்த்தர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
நீங்கள் ஜனங்களுக்கு தேவனைப் பற்றி கற்பிக்க வேண்டியவர்கள்.
உங்கள் தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச்செல்ல வேண்டியவர்கள்.
ஆனால், அவர்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை.
எனவே உங்களுக்கு மிகுதியான துன்பங்களும் கஷ்டங்களும் இருக்கும்.
நீங்கள் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணைப்போன்று இருப்பீர்கள்.
22 நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்கலாம்.
“ஏன் எனக்கு இத்தீமைகள் ஏற்பட்டன?”
அவை, உங்களது பல பாவங்களாலேயே ஏற்பட்டன.
உங்களது பாவங்களால் உங்கள் உள்ளாடைகள் கிழிக்கப்பட்டன.
உங்களது பாதரட்சைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காக இவற்றைச் செய்தனர்.
23 ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது.
இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது.
நீ எப்போதும் தீமையே செய்கிறாய்.
24 “உங்களது வீட்டை விட்டு விலகும்படி நான் உங்களைக் கட்டாயப்படுத்துவேன்.
நீங்கள் எல்லா திசைகளிலும் ஓடுவீர்கள்.
நீங்கள் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப் போன்றிருப்பீர்கள்.
25 இக்காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்.
எனது திட்டங்களில் இதுவே உங்கள் பங்கு”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“இது ஏன் நிகழும்?
ஏனென்றால், நீ என்னை மறந்தாய்.
பொய்த் தெய்வங்களிடம் நம்பிக்கை வைத்தாய்.
26 எருசலேமே! நான் உனது உள்ளாடையை உன் முகத்தின்மேல் போடுவேன்.
ஒவ்வொருவரும் உன்னைப் பார்ப்பார்கள்.
நீ அவமானம் அடைவாய்.
27 நீ செய்த பயங்கரமான செயல்களை எல்லாம் நான் பார்த்தேன்.
நீ சிரித்ததைப் பார்த்தேன்.
உனது நேசர்களுடன் நீ கொண்ட பாலின உறவுகளையும் பார்த்தேன்.
நீ ஒரு வேசியைப் போன்று, போட்டுக்கொண்ட திட்டங்களை நான் அறிவேன்.
மலைகளின் மேலும், வயல்களிலும் நான் உன்னைப் பார்த்திருக்கிறேன்.
எருசலேமே, இது உனக்கு கெட்டதாக இருக்கும்.
நீ இன்னும் எவ்வளவு காலத்திற்கு உனது தீட்டான பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பாய் என நான் யோசிக்கிறேன்.”
வறட்சியும், கள்ளத் தீர்க்கதரிசிகளும்
14 வறட்சிப் பற்றி எரேமியாவிற்கு வந்தகர்த்தருடைய வார்த்தை இது:
2 “யூதா நாடு மரித்துப்போன ஜனங்களுக்காக அழுகிறது.
யூதா நகரங்களில் உள்ள ஜனங்கள், மேலும், மேலும், பலவீனர்களாகிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் தரையிலே கிடக்கிறார்கள்.
எருசலேமிலுள்ள ஜனங்கள் உதவிக்காக தேவனிடம் அழுகிறார்கள்.
3 ஜனங்களின் தலைவர்கள், வேலைக்காரர்களை நீர் கொண்டு வருவதற்காக அனுப்பினார்கள்,
வேலையாட்கள் நீர் தேக்கிவைத்திருக்கும் இடங்களுக்குச் சென்றனர்.
அங்கே எந்த தண்ணீரையும் கண்டுக்கொள்ளவில்லை.
வேலைக்காரர்கள் காலி ஜாடிகளோடு திரும்பி வருவார்கள்.
எனவே அவர்கள், அவமானமும், சங்கடமும் அடைகின்றனர்.
அவர்கள் அவமானத்தால் தங்கள் தலையை மூடிக்கொள்ளுகின்றனர்.
4 எவரும் பயிர் செய்ய பூமியைத் தயார் செய்வதில்லை.
தரையில் மழை ஏதும் விழவில்லை.
விவசாயிகள் வெட்கப்படுகிறார்கள்.
எனவே, அவர்கள் வெட்கத்தால் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
5 நிலத்தில் இருக்கும் தாய் மான்கூட புதிதாகப் பிறந்த குட்டியை தனியாக விட்டுவிட்டுப் போய்விடும்.
அங்கே புல் இல்லாததால் அது அவ்வாறு செய்கிறது.
6 காட்டுக் கழுதைகள் மொட்டைப்பாறைகள் மீது நிற்கும்.
அவை ஓநாய்களைப்போன்று காற்றை உட்கொள்ளுகின்றன.
ஆனால், அவற்றின் கண்கள் எந்த உணவையும் கண்டு கொள்ள முடியவில்லை.
ஏனென்றால், அங்கே தின்ன எந்தச் செடிகளும் இல்லை.”
7 “அவற்றுக்கு எங்கள் குற்றங்களே காரணம் என்பது எங்களுக்குத் தெரியும்;
நமது பாவங்களால் நாம் இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
கர்த்தாவே, உமது நாமத்தின் நன்மைக்காக எங்களுக்கு உதவ ஏதாவதுச் செய்யும்.
நாங்கள் உம்மை விட்டுப் பலமுறை போனோம்.
நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
8 தேவனே, நீரே இஸ்ரவேலின் நம்பிக்கை ஆவீர்!
துன்பக் காலங்களில் இஸ்ரவேலர்களை நீர் காப்பாற்றுகிறீர்.
ஆனால், இப்போது நீர் இந்த நாட்டில் அந்நியனைப் போன்று இருக்கிறீர்.
ஒருநாள் இரவு மட்டும் தங்குகிற பயணியைப்போன்று நீர் இருக்கிறீர்.
9 ஆச்சரியத்தால் தாக்கப்பட்ட ஒரு மனிதனைப் போன்று நீர் தோன்றுகிறீர்.
எவரொருவரையும் காப்பாற்ற முடியாத, ஒரு போர் வீரனைப் போன்று நீர் காட்சி தருகிறீர். கர்த்தாவே!
நீர் எங்களோடு இருக்கிறீர்.
நாங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படுகிறோம்.
எனவே உதவி இல்லாமல் எங்களை விட்டுவிடாதிரும்!”
10 யூதாவின் ஜனங்களைப்பற்றி கர்த்தர் சொன்னது இதுதான்: “யூதாவின் ஜனங்கள் உண்மையில் என்னை விட்டுவிலக விரும்பினார்கள். அந்த ஜனங்கள் என்னை விட்டு விலகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். இப்போது அவர்கள் செய்த தீயச் செயல்களை கர்த்தர் நினைப்பார். அவர்களது பாவங்களுக்காக கர்த்தர் அவர்களைத் தண்டிப்பார்.”
11 பிறகு கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களுக்கு நற்காரியங்கள் ஏற்படவேண்டும் என்று என்னிடம் ஜெபம் செய்யாதே. 12 யூதாவின் ஜனங்கள் உபவாசமிருந்து என்னிடம் ஜெபிக்கத் தொடங்குவார்கள். ஆனால், நான் அவர்களது ஜெபத்தைக் கேட்கமாட்டேன். அவர்கள் எனக்கு தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் கொடுத்தாலும் நான் அந்த ஜனங்களை ஏற்பதில்லை. நான் யூதாவின் ஜனங்களைப் போரில் அழிக்கப்போகிறேன். நான் அவர்களின் உணவை எடுத்துக்கொள்வேன். யூதாவின் ஜனங்கள் மரணம்வரை முழு பட்டினியாக இருப்பார்கள். நான் அவர்களைப் பயங்கரமான நோய்களால் அழிப்பேன்” என்றார்.
13 ஆனால் நான் கர்த்தரிடம் கூறினேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, தீர்க்கதரிசிகள் ஜனங்களிடம் சில வித்தியாசமானவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் யூதாவின் ஜனங்களிடம், ‘பகைவனின் வாளால் நீங்கள் துன்பப்படமாட்டீர்கள். நீங்கள் பசியாலும் துன்பப்படமாட்டீர்கள். இந்த நாட்டில் கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தைக் கொடுப்பார்.’”
14 பிறகு, கர்த்தர் என்னிடம், “எரேமியா, அந்தத் தீர்க்கதரிசிகள் எனது நாமத்தால் பொய்களைப் பரப்புகிறார்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. நான் அவர்களுக்குக் கட்டளைக் கொடுக்கவோ அவர்களோடு பேசவோ இல்லை. அந்தத் தீர்க்கதரிசிகள், பொய்ச் சாட்சிகளையும், பயனற்ற மந்திரங்களையும், சொந்த ஆசைகளையும் பரப்பியிருக்கிறார்கள். 15 எனவே, நான் இதைத்தான் என் நாமத்தால் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்களைப்பற்றிக் கூறுவது, அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. அந்தத் தீர்க்கதரிசிகள் சொன்னார்கள், ‘இந்த நாட்டைப் பகைவர்கள் எவரும் வாளால் தாக்கமாட்டார்கள், இந்த நாட்டில் எப்பொழுதும் பசி இருக்காது.’ அத்தீர்க்கதரிசிகள் பசியால் மரிப்பார்கள். பகைவரின் வாள் அவர்களைக் கொல்லும். 16 அத்தீர்க்கதரிசிகள் பேசுகிறதைக் கேட்கிற ஜனங்களும் வீதிகளில் எறியப்படுவார்கள். அந்த ஜனங்கள் பசியாலும், பகைவரின் வாளாலும் மரிப்பார்கள். அந்த ஜனங்களையும் அவர்களது மனைவிகளையும், குமாரர்களையும், குமாரத்திகளையும் புதைக்க எவரும் இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்த தீமையைக்கொண்டே நான் அவர்களைத் தண்டிப்பேன்.
17 “எரேமியா, யூதாவின் ஜனங்களிடம்
இச்செய்தியைக் கூறு,
‘எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன.
நான் இரவும் பகவும் நிறுத்தாமல் அழுவேன்.
நான் எனது குமாரத்தியான கன்னிக்காக[a] அழுவேன்.
நான் எனது ஜனங்களுக்காக அழுவேன்.
ஏனென்றால், யாரோ ஒருவர் அவர்களைத் தாக்குவர், அவர்களை நசுக்குவர், அவர்கள் மிக மோசமாகக் காயப்படுவார்கள்.
18 நான் நாட்டிற்குள் போனால் வாள்களால்
கொல்லப்படுகிற ஜனங்களைக் காண்பேன்.
நான் நகரத்திற்குள் போனால்,
மிகுதியான நோயைப் பார்ப்பேன்.
ஏனென்றால், ஜனங்களுக்கு உணவு இல்லை, ஆசாரியர்களும்,
தீர்க்கதரிசிகளும் ஒரு அந்நியதேசத்திற்கு எடுத்துக்கொண்டு போகப்பட்டனர்’” என்றார்.
19 கர்த்தாவே, யூதா நாட்டை நீர் முழுமையாக ஒதுக்கிவிட்டீரா?
கர்த்தரே நீர் சீயோனை வெறுக்கிறீரா?
நாங்கள் மீண்டும் குணம் அடையமுடியாதபடி நீர் எங்களை பலமாகத் தாக்கியுள்ளீர்.
ஏன் அதனைச் செய்தீர்?
நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஆனால் நன்மை எதுவும் வரவில்லை.
குணமாவதற்குரிய காலத்தை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் பயங்கரமே வருகிறது.
20 கர்த்தாவே! நாங்கள் தீயவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,
எங்கள் முற்பிதாக்களும் தீமையைச் செய்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
ஆம், உமக்கு எதிராக நாங்கள் பாவம் செய்தோம்.
21 கர்த்தாவே உமது நாமத்திற்கு நன்மைக்காக, எங்களை வெளியே தள்ளாதிரும்.
உமது மகிமையின் சிங்காசனத்திலிருந்து மேன்மையை விலக்காதிரும்.
எங்களோடு உள்ள உடன்படிக்கையை நினையும்.
அந்த உடன்படிக்கையை உடைக்க வேண்டாம்.
22 அயல்நாட்டு விக்கிரகங்களுக்கு மழையை கொண்டுவரும் வல்லமை கிடையாது.
வானத்திற்கு மழையைப் பொழியச் செய்யும் அதிகாரம் இல்லை.
நீரே எங்களது ஒரே நம்பிக்கை,
நீர் ஒருவரே இவை அனைத்தையும் செய்தவர்.
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் எழுதுவது: தேவனின் விருப்பப்படியே நான் அப்போஸ்தலனானேன். கிறிஸ்து இயேசுவிலுள்ள வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றி மக்களிடம் கூறுமாறு தேவன் என்னை அனுப்பினார்.
2 தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள குமாரனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன்.
நன்றி செலுத்துதலும் உற்சாகமூட்டுதலும்
3 இரவிலும் பகலிலும் என் பிரார்த்தனைகளில் உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுகிறேன். என்னுடைய முன்னோர் சேவை செய்த தேவன் அவரே. நான் உனக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அறிந்த அளவில் சரியானதை மட்டுமே செய்கிறேன். 4 நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் உன்னைக் காண மிகவும் விரும்புகிறேன். அதனால் நான் முழு மகிழ்ச்சியை அடைய முடியும். 5 நான் உனது உண்மையான விசுவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய விசுவாசம் முதலில் உன் பாட்டியான லோவிசாளுக்கும் உன் தாயான ஐனிக்கேயாளுக்கும் இருந்தது. அவர்களைப் போன்றே உனக்கும் விசுவாசம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். 6 ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன். 7 அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.
8 எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.
9 தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார். 10 அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார்.
11 அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரது அப்போஸ்தலனாகவும், நற்செய்திக்கான போதகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 12 நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.
13 என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும். 14 உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.
15 ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர். 16 கர்த்தரானவர் ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கிருபை காட்டும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். பலமுறை அவன் எனக்கு உதவியிருக்கிறான். நான் சிறையில் இருந்தது பற்றி அவன் வெட்கப்படவில்லை. 17 அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான். 18 ஒநேசிப்போரு அந்த நாளில் கர்த்தரிடமிருந்து கிருபை பெறவேண்டும் என்று நான் கர்த்தரிடம் வேண்டுகிறேன். எபேசு நகரில் அவன் எவ்வகையில் உதவியிருக்கிறான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.
2008 by World Bible Translation Center