Old/New Testament
சட்டம் எருசலேமிலிருந்து வரும்
4 இறுதி நாட்களில்,
    கர்த்தருடைய ஆலயம் அனைத்து மலைகளையும் விட மிக உயரத்தில் இருக்கும்.
அந்தக் குன்று மலைகளையும் விட உயரமாக உயர்த்தப்பட்டு இருக்கும்.
    அங்கு எப்போதும் ஜனங்கள் கூட்டம் சென்றுகொண்டிருக்கும்.
2 பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள்.
    அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம்.
    யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம்,
பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார்.
    நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.
தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி,
    சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.
3 பிறகு தேவன் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கு நீதிபதியாக இருப்பார்.
    தேவன் தூர தேசங்களைச் சேர்ந்த பல ஜனங்களின் விவாதங்களை முடிப்பார்.
அந்த ஜனங்கள் போருக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்.
    அவர்கள் தமது வாள்களிலிருந்து கொழுக்களைச் செய்வார்கள்.
    அவர்கள் தம் ஈட்டிகளைச் செடிகளை வெட்டும் கருவிகளாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
    ஜனங்கள் போரிடுவதற்கு மீண்டும் பயிற்சிபெறமாட்டார்கள்.
4 ஒவ்வொருவரும் தமது திராட்சைச் செடி
    மற்றும் அத்தி மரங்களின் கீழும் அமர்ந்திருப்பார்கள்.
எவரும் அவர்களைப் பயப்படும்படிச் செய்யமாட்டார்கள்.
    ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சென்னது போல நடக்கும்.
5 மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் தமது சொந்தத் தெய்வங்களைப் பின்பற்றுகின்றார்கள்.
    ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய வழியில் என்றென்றைக்கும் நடப்போம்.
இராஜ்யம் திரும்பிக் தரப்படும்
6 கர்த்தர் கூறுகிறார்:
“எருசலேம் புண்பட்டு நொண்டியானது.
    எருசலேம் தூர எறியப்பட்டது.
எருசலேம் காயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது.
    ஆனால் நான் அவனை என்னிடம் திரும்ப கொண்டு வருவேன்.
7 “‘அந்நொண்டி’ நகரின் ஜனங்கள், மீதியான ஜனங்களாவார்கள்.
    சென்றுவிடும்படி நகரஜனங்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
ஆனால் நான் அவர்களை ஒரு வலிமையான நாடாக்குவேன்.”
கர்த்தர் அவர்களுடைய ராஜாவாய் இருப்பார்.
    அவர் என்றென்றும் சீயோன் பர்வதத்திலிருந்து ஆளுவார்.
8 மந்தையின் துருகமே,[a] உங்கள் காலம் வரும். சீயோன், மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவாய்.
    ஆமாம், முற்காலத்தைப் போன்று எருசலேமின் ராஜாங்கம் இருக்கும்.
இஸ்ரவேலர்கள் எதற்காக பாபிலோனுக்கு போகவேண்டும்
9 இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய்.
    உங்கள் ராஜா போய்விட்டானா?
உங்கள் தலைவரை இழந்து விட்டீர்களா?
    நீங்கள் பிரசவ வேதனைப்படும் பெண்ணைப் போன்று துக்கப்படுகிறீர்கள்.
10 சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் “குழந்தையை” பெற்றெடுங்கள்.
    நீங்கள் நகரை விட்டு (எருசலேம்) வெளியே போகவேண்டும்.
நீங்கள் வயல் வெளியில் போவீர்கள்.
    நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக் கருதுகிறேன்.
    ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார்.
    அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார்.
கர்த்தர் மற்ற நாடுகளை அழிப்பார்
11 பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர்.
    அவர்கள், “பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!” என்கிறார்கள்.
12 அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர்.
    ஆனால் கர்த்தர் என்ன திட்டமிட்டுக்கொண்டிருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.
கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இங்கே கொண்டுவந்தார்.
    அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்ட தானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள்.
இஸ்ரவேல் அதன் எதிரிகளைத் தோற்கடித்து வெல்லுவார்கள்
13 “சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு.
    நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன்.
உனக்கு இரும்பினாலான கொம்புகளும், வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளது போன்றும் இருக்கும்.
    நீ பல மக்களை அடித்துச் சிறிய துண்டுகளாக்குவாய்.
அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய்.
    பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்கு அவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்.”
5 இப்பொழுது வலிமையான நகரமே, உனது வீரர்களை கூட்டு.
    அவர்கள் நம்மைத் தாக்குவதற்கு நம்மை சுற்றி இருக்கிறார்கள்.
அவர்கள் இஸ்ரவேலின் நீதிபதியைத்
    தன் தடியால் கன்னத்தில் அடிப்பார்கள்.
பெத்லேகேமில் மேசியா பிறப்பார்
2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே,
    நீதான் யூதாவிலேயே சிறிய நகரம்.
உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது,
    ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார்.
அவரது துவக்கங்கள்
    நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன.
3 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜாவாகிய குழந்தையை,
    அந்தப் பெண் பெற்றெடுக்கும்வரை கர்த்தர் தமது ஜனங்களை கைவிட்டுவிடுவார்.
பிறகு மீதியுள்ள அவனது மற்ற சகோதரர்கள்
    இஸ்ரவேலுக்கு திரும்பி வருவார்கள்.
4 பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை மேய்ப்பார்.
    அவர் அவர்களை கர்த்தருடைய ஆற்றலால், தேவனாகிய கர்த்தருடைய அற்புதமான நாமத்தால் அவர்களை வழிநடத்துவார்.
ஆம், அவர்கள் சமாதானமாக வாழ்வார்கள்.
    ஏனென்றால் அந்த நேரத்தில், அவரது மகிமை பூமியின் எல்லைவரை செல்லும்.
5     ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும்.
அப்படை நமது பெரிய வீடுகளை அழிக்கும்.
    ஆனால், இஸ்ரவேலரின்
ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும்
    அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார்.
6 அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள்.
    அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின் தேசத்தை ஆள்வார்கள்.
அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப் பயன்படுத்துவார்கள்.
    பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர், நமது நாட்டிற்குள் வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளை மிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.
7 பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்து வருகிற பனியைப்போன்று ஜனங்களிடையே சிதறிப்போவர்கள்.
    அவர்கள், புல்லின் மேல் விழுகிற பனியைப் போன்று ஜனங்களிடையே இருப்பார்கள்.
அவர்கள் எவருக்காகவும் காத்திருக்கமாட்டார்கள்.
    அவர்கள் எவருக்காகவும் எந்த மனிதன் மேலும் சார்ந்திருக்கமாட்டார்கள்.
8 யாக்கோபிலே மீதமானவர்கள்,
    காட்டு மிருகங்களிடையே உள்ள சிங்கத்தைப் போன்று பல தேசங்களிடையே இருப்பார்கள்.
அவர்கள் ஆட்டு மந்தைகளிடையே உள்ள இளஞ்சிங்கத்தைப் போன்று இருப்பார்கள்.
    சிங்கம் கடந்து போனாலும் அது தான் விரும்பிய இடத்துக்குப் போகும்.
அது ஒரு மிருகத்தைத் தாக்கினால்,
    எவராலும் அந்த மிருகத்தைக் காப்பாற்ற முடியாது. மீதமானவர்களும் அவ்வாறே இருப்பார்கள்.
9 நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி
    அவர்களை அழிப்பீர்கள்.
ஜனங்கள் தேவனைச் சார்ந்திருப்பார்கள்
10 “நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன்.
    நான் உங்கள் இரதங்களை அழிப்பேன்.
11 நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன்.
    நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன்.
12 நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள்.
    நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள்.
13 நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன்.
    அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன்.
    உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள்.
14 நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன்.
    நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன்.
15 சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.
    நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அந்த தேசங்களைப் பழிவாங்குவேன்.”
ஒரு பெண்ணும், இராட்சச பாம்பும்
12 அத்துடன் பரலோகத்தில் ஓர் அதிசயம் காணப்பட்டது: ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள். அவளது பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அவளது தலையின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்கள் உள்ள கிரீடம் இருந்தது. 2 அவள் கருவுற்றிருந்தாள். அவள் வலியால் கதறினாள். ஏனெனில் அவள் குழந்தை பெறுகிற நிலையில் இருந்தாள். 3 பிறகு இன்னொரு அதிசயமும் பரலோகத்தில் காணப்பட்டது. மிகப் பெரிய சிவப்பு வண்ணமுடைய இராட்சசப் பாம்பு தோன்றியது. அதற்கு ஏழு தலைகளிருந்தன. ஏழு தலைகளிலும் ஏழு கிரீடங்கள் இருந்தன. அத்துடன் பத்துக் கொம்புகளும் அதற்கு இருந்தன. 4 அதன் வால் உயர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து அவற்றைத் தரையில் வீசி எறிந்தன. பிள்ளை பெறுகிற நிலையில் இருந்த அப்பெண்ணின் முன்பு அந்தப் பாம்பு எழுந்து நின்றது. அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அதைத் தின்ன அப்பாம்பு தயாராக இருந்தது. 5 அப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் ஆட்சி செய்வான். பிறகு அக்குழந்தை தேவனுடைய முன்னிலையிலும் சிம்மாசனத்தின் முன்னிலையிலும் எடுத்துச்செல்லப்பட்டது. 6 அப்பெண் தேவனால் தயார் செய்யப்பட்ட இடமான பாலைவனத்திற்குள் ஓடினாள். அங்கே 1,260 நாட்கள் கவனித்துக்கொள்ளப்படுவாள்.
7 பின்பு பரலோகத்தில் ஒரு போர் உருவாயிற்று. அந்த இராட்சசப் பாம்புடன் மிகாவேலும்[a] அவனைச் சார்ந்த தேவ தூதர்களும் போரிட்டார்கள். பாம்பும், அதன் தூதர்களும் திரும்பித் தாக்கினார்கள். 8 பாம்பு போதுமான வல்லமை உடையதாய் இல்லை. இராட்சசப் பாம்பும், அதன் தூதர்களும் பரலோகத்தில் தம் இடத்தை இழந்தார்கள். 9 அப்பாம்பு பரலோகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது. (பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகின்ற பழைய பாம்பு தான் இந்த இராட்சசப் பாம்பு ஆகும். அவன் உலகம் முழுவதையும் தவறான வழிக்குள் நடத்துகிறான்) பாம்பும் அதன் தூதர்களும் பூமியில் வீசி எறியப்பட்டார்கள்.
10 அப்போது நான் பரலோகத்தில் ஓர் உரத்த குரலைக் கேட்டேன். அது, “வெற்றியும் வல்லமையும் நம் தேவனுடைய இராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் இப்போது வந்திருக்கின்றன. ஏனெனில் நமது சகோதரர்கள்மேல் குற்றம் சுமத்தியவன் புறந்தள்ளப்பட்டான். நம் தேவனுக்கு முன்பாக இரவும் பகலும் நம் சகோதரர்கள் மேல் குற்றம் சுமத்தியவன் அவனே ஆவான். 11 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை. 12 எனவே, பரலோகங்களே! அவற்றில் வாழ்பவர்களே! மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால் பூமிக்கும் கடலுக்கும் ஆபத்தாகும். ஏனெனில் சாத்தான் உங்களிடம் வந்துவிட்டான். அவன் கோபத்தோடு இருக்கின்றான். அவனது காலம் அதிகம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்” என்றது.
13 இராட்சசப் பாம்பானது தான் பூமியில் வீசி எறியப்பட்டதை அறிந்துகொண்டது. ஆகையால் அது ஆண்பிள்ளையைப் பெற்ற அந்தப் பெண்ணைத் துரத்தியது. 14 ஆனால் அப்பெண்ணுக்குப் பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டன. அவற்றால் அவள் பாலைவனத்தில் தனக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்குப் பறந்து செல்ல முடிந்தது. பாம்பிடமிருந்து அவள் அங்கே மூன்றரை வருட காலத்திற்கு கவனித்துக்கொள்ளப்பட்டாள். 15 பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது. 16 ஆனால் பூமி அப்பெண்ணுக்கு உதவியது. பூமி தன் வாயைத் திறந்து இராட்சசப் பாம்பின் வாயில் இருந்து வெளிவரும் வெள்ளத்தை விழுங்கியது.
17 பின்னும் அப்பாம்புக்கு அப்பெண்ணின்மீது மிகுந்த கோபம் இருந்தது. அவளது மற்ற பிள்ளைகளோடு போரிட அப்பாம்பு புறப்பட்டுப் போயிற்று. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களும், இயேசு போதித்த உண்மையைக் கொண்டிருப்பவர்களுமே அவளுடைய மற்ற பிள்ளைகள் ஆவார்கள்.
18 அந்த இராட்சசப் பாம்பு கடற்கரையில் நின்றது.
2008 by World Bible Translation Center