New Testament in a Year
24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர்.
25 “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. 26 ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. 27 எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். 28 நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. 29 என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. 30 நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.
31 மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். 32 ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
33 அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர்.
34 “‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ [a] என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. 35 தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. 36 ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். 37 என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. 38 ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.
39 யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.
40 பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். 41 அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். 42 அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.
2008 by World Bible Translation Center