Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோவான் 2

கானாவூர் கல்யாணம்

கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

“அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.

“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.

அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.

இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.

பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.

வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.

12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.

தேவாலாயத்தில் இயேசு(A)

13 அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14 தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15 இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார்.

17 இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.

“உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.” (B)

18 யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.

19 “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். இதனை மூன்று நாட்களுக்குள் நான் மீண்டும் கட்டி முடிப்பேன்” என்றார் இயேசு.

20 அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். 21 (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை. 22 இதனை அவரது சீஷர்கள், இயேசு மரித்தபின் மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தபோது அவர் சொன்னதை நினைவுபடுத்திப் புரிந்துக்கொண்டனர். ஆகையால் அவரது சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட வேதவாக்கியங்களையும், இயேசுவின் வார்த்தைகளையும் நம்பினர்.)

23 இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். 24 ஆனால் இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால் அவர்களது எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். 25 இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center