New Testament in a Year
எருசலேமுக்குள் இயேசு நுழைதல்(A)
11 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். 2 இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். 3 யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.
4 சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். 5 அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். 6 இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.
7 சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். 8 ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். 9 சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர்.
“அவரைப் புகழுங்கள்
‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ (B)
10 “தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது.
பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”
என்று அவர்கள் சத்தமிட்டனர்.
11 எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.
அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்(C)
12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14 ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தேவாலயத்தில் இயேசு(D)
15 அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். 16 ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். 17 பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. [a] ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” [b] என்றார்.
18 தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர்.
2008 by World Bible Translation Center