Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
பிலிப்பியர் 2

ஒற்றுமையுடனும் கரிசனையுடனும் இருங்கள்

நான் உங்களைச் செய்யச் சொல்ல கிறிஸ்துவுக்குள் வேறு செயல்கள், உள்ளனவா? அன்பினாலே யாதொரு தேறுதலும் உண்டாகுமா? ஆவியினாலே யாதொரு ஐக்கியமும் உண்டாகுமா? உங்களுக்கு இரக்கமும் கருணையும் உள்ளனவா? உங்களிடம் இவை இருந்தால் எனக்காகச் செய்ய வேண்டும் என்று சில காரியத்தைக் கேட்டுக்கொள்வேன். இது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும். ஒரே காரியத்தைப் பற்றிய நம்பிக்கையில் உங்கள் அனைவரது மனமும் ஒன்று சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவருடன் ஒருவர் அன்புடன் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, ஒரே நோக்கம் உடையவர்களாக இருங்கள். நீங்கள் இச்செயல்களைச் செய்யும்போது தன்னலமும், வீண் பெருமையும் கொள்ள வேண்டாம். பணிவுடன் இருங்கள். நீங்கள் உங்களுக்குத் தரும் மரியாதையைவிட மற்றவர்களுக்கு அதிக மரியாதையைத் தாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்.

தன்னலமற்ற குணம்

உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போன்று சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

கிறிஸ்து அவரளவில் எல்லாவற்றிலும் தேவனைப் போன்றிருந்தார்.
    அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை.
தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார்.
    மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார்.
மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார்.
    மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார்.
    முடிவில் சிலுவையிலே இறந்தார்.
தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார்.
    ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார்.
    தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார்.
10 அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார்.
    பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள்.
11 “இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்” என்று அனைவரும் அறிக்கை செய்வர்.
    அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும்.

தேவன் விரும்புகிற மக்களாய் இருங்கள்

12 என்னுடைய அன்பு நண்பர்களே! எப்பொழுதும் நீங்கள் கீழ்ப்படிந்து இருங்கள். உங்களோடு நான் இருந்தபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தீர்கள். உங்களோடு நான் இல்லாதபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நான் தூரமாயிருக்கிறபோது நீங்கள் தேவனிடம் மரியாதையும் அச்சமும் கொண்டு உங்கள் இரட்சிப்பு நிறைவேற முயற்சி செய்யுங்கள். 13 ஆமாம், தேவன் உங்களில் பணியாற்றுகிறார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார்.

14 முறுமுறுப்பு அல்லது வாக்குவாதம், இல்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள். 15 அப்போதுதான் எதுவுமறியாதவர்களாகவும், எந்தத் தவறும் இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய குற்றமற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள பாவம் செய்கிற கெட்டவர்களோடு நீங்கள் வாழ்கிறீர்கள். அவர்களுக்கு மத்தியில் இருட்டின் நடுவில் விளக்குபோன்று பிரகாசிக்கிறீர்கள். 16 வாழ்வைக் கொடுக்கும் போதனையை அந்த மக்களுக்கும் நீங்கள் வழங்குங்கள். கிறிஸ்து மீண்டும் வரும்போது இது பற்றி நான் மிகவும் பெருமை அடைவேன். எனது பணி வீணாகவில்லை என்றும் நான் பெருமைகொள்வேன். ஏனென்றால் பந்தயத்தில் ஓடி நான் வென்றவனாவேன்.

17 தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். 18 மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள்.

தீமோத்தேயு, எப்பாப்பிரோதீத்து பற்றி

19 தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். 20 தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். 21 மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. 22 தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு மகன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். 23 விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன். 24 உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

25 எப்பாப்பிரோதீத்து கிறிஸ்துவுக்குள் என் சகோதரன், கிறிஸ்துவின் சேவையில் அவன் என்னோடு பணியாற்றி வருகிறான். எனக்கு உதவி தேவைப்பட்டபோது அவனை என்னிடம் அனுப்பினீர்கள். இப்போது அவனை உங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். 26 உங்கள் அனைவரையும் பார்க்க அவன் விரும்புகிறான். அதனால் உங்களிடம் அவனை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவன் நோயுற்றதை நீங்கள் கேள்விப்பட்டதால் சங்கடப்படுகிறான். 27 அவன் நோயால் சாவுக்கு அருகில் இருந்தான். தேவன் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட உதவினார். ஆகவே எனக்கு துக்கத்தின் மேல் துக்கம் உண்டாகவில்லை. 28 எனவே, அவனை நான் உங்களிடம் அனுப்பி வைக்கப் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் அவனைப் பார்க்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நானும் உங்களைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்த முடியும். 29 கர்த்தருக்குள் நீங்கள் அவனைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொள்ளுங்கள். எப்பாப்பிரோதீத்து போன்றவர்களுக்கு மரியாதை செய்யுங்கள். 30 அவன் கிறிஸ்துவுக்கான பணியால் ஏறக்குறைய இறந்தான். அதனால் அவனுக்குக் கனம் தாருங்கள். அவன் தன் வாழ்வை ஆபத்துக்கு உட்படுத்தினான். அவன் இதனைச் செய்தான். எனவே அவன் எனக்கு உதவ முடிந்தது. இது போன்ற உதவியை உங்களால் எனக்கு செய்ய முடியாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center