Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எபேசியர் 6

பிள்ளைகளும் பெற்றோர்களும்

பிள்ளைகளே கர்த்தர் விரும்புவது போல நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாகும். “நீங்கள் உங்களுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்” [a] என்று கட்டளை கூறுகிறது. இதுதான் முதல் கட்டளை. அதிலே ஒரு வாக்குறுதி உள்ளது. “பிறகு எல்லாம் உங்களுக்கு நல்லதாகும். நீங்கள் பூமியில் நீண்ட வாழ்வைப் பெறுவீர்கள்!” என்பது தான் அந்த வாக்குறுதி.

தந்தைமார்களே! உங்கள் குழந்தைகளைக் கோபப்படுத்தாதீர்கள். கர்த்தருக்கேற்ற கல்வியாலும், பயிற்சியாலும் அவர்களை மேலான நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

அடிமைகளும், எஜமானர்களும்

அடிமைகளே பூமியில் உள்ள உங்கள் எஜமானர்களுக்கு அச்சத்தோடும், மரியாதையோடும் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போன்று உண்மையான மனதோடு கீழ்ப்படியுங்கள். அவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கும்போது மட்டும் நல்லெண்ணத்தைப் பெற உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது; நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலக் கீழ்ப்படியுங்கள். தேவன் விரும்புவதை நீங்கள் முழு மனதுடன் செய்யுங்கள். உங்கள் வேலையைச் செய்யுங்கள். சந்தோஷமாய் செய்யுங்கள். கர்த்தருக்கு சேவை செய்வதுபோல எண்ணுங்கள். மனிதருக்கு சேவை செய்வதாக எண்ணாதீர்கள். அவரவர் செய்யும் நற்செயலுக்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பலன் தருவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அடிமைகள்போல இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொருவரும் தத்தம் நற்செயலுக்கு ஏற்றபடி பலன்களைப் பெறுவர்.

எஜமானர்களே, இதைப்போன்றே நீங்களும் உங்கள் அடிமைகளிடம் நல்லவர்களாகவும் இருங்கள். அவர்களை மிரட்டாதீர்கள். உங்களுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் எஜமானராய் இருக்கிற தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் எல்லாரையும் ஒன்று போலவே நியாயந்தீர்க்கிறார்.

முழு ஆயதங்களையும் அணியுங்கள்

10 இறுதியாக நான் எழுதுவது யாதெனில்: அவரது பெரும் பலத்தால் நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 11 அவரது முழு ஆயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்களால் சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப் போராட முடியும். 12 நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள அரசர்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம். 13 அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும்.

14 எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள். 15 சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். 16 நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். 17 தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். 18 எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

19 எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். 20 நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

இறுதி வாழ்த்துக்கள்

21 நான் நேசிக்கிற நம் சகோதரன் தீகிக்குவை உங்களிடம் அனுப்புவேன். கர்த்தரின் பணியில் அவன் நம்பிக்கைக்குரிய தொண்டன். எனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அப்பொழுது உங்களுக்கு என் நிலை என்னவென்றும், நான் செய்துகொண்டிருப்பது என்னவென்றும் தெரியும். 22 அதற்காகத்தான் நான் அவனை அனுப்புகின்றேன். எனவே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவும், உங்களை தைரியப்படுத்தவும் நான் அவனை அனுப்புகிறேன்.

23 பிதாவாகிய தேவனிடமிருந்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு நம்பிக்கையோடு கூடிய சமாதானமும் அன்பும் கிடைப்பதாக. 24 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center