Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எபேசியர் 3

பவுலின் பணி

நான் இயேசு கிறிஸ்துவின் கைதியாக இருக்கிறேன். யூதர் அல்லாத உங்களுக்காகவே நான் அவ்வாறு இருக்கிறேன். தேவன் தம் இரக்கத்தாலேயே இந்த வேலையை எனக்குக் கொடுத்தார் என்பது உறுதியாக உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே தேவன் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார். தேவன் தனது இரகசிய திட்டத்தை எனக்குத் தெரியும்படி செய்தார். அதை எனக்கு காட்டினார். நான் ஏற்கெனவே அதைப்பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன். நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். முற்காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இரகசியம் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது ஆவியின் மூலம் தேவன் அந்த இரகசிய உண்மையை அவரது அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கு புலப்படுத்தினார். இது தான் அந்த உண்மை. தேவன் தனது மக்களுக்குக் குறிப்பாக யூத மக்களுக்குக் கொடுத்த அத்தனையும் யூதர் அல்லாதவர்களுக்கும் கொடுப்பார். ஒரே குழுவில் யூதர்களோடு யூதர் அல்லாதவர்களும் சேர்ந்து இருப்பார்கள். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்த வாக்குறுதியில் அவர்கள் யாவரும் பங்கு பெறுவர். யூதர் அல்லாதவர்களும் நற்செய்தியினாலேயே இவற்றை அடைகிறார்கள்.

தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார். தேவனின் பிள்ளைகளில் நானே முக்கியத்துவம் மிககுறைந்தவன். ஆனால் யூதர் அல்லாதவராகிய உங்களுக்கு நான் கிறிஸ்துவின் உயர்வு பற்றிய நற்செய்தியைச் சொல்லும் வாய்ப்பு பெற்றேன். அவரது உயர்வு சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரியது. தேவனைப் பற்றிய இரகசிய உண்மையை அனைத்து மக்களிடமும் சொல்கின்ற அரிய பணியை தேவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். தொடக்க காலத்திலிருந்தே இந்த இரகசிய உண்மை தேவனிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் படைத்தது தேவன் ஒருவரே, 10 பரலோகத்தில் உள்ள ஆளுகைகளும், அதிகாரங்களும் தேவனின் அளவற்ற பலவகை ஞானத்தையும் சபையின் மூலம் தெரியவரும்படிச் செய்வதே தேவனுடைய நோக்கமாகும். 11 தொடக்க காலத்திலிருந்தே இது தேவனின் திட்டம். தேவன் தன் திட்டப்படியே செய்து வருகிறார். 12 கிறிஸ்துவால் நாம் தைரியத்தோடும் முழு விசுவாசத்தோடும் தேவன் முன் வந்து சேரமுடியும். நாம் இவற்றை கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தால் செய்ய முடியும். 13 நான் உங்களுக்காக பட்ட துன்பங்களால் நீங்கள் நம்பிக்கையில் தளர வேண்டாம் என்றும் தைரியம் இழக்க வேண்டாம் என்றும், உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனது துயரங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரும்.

கிறிஸ்துவின் அன்பு

14 ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். 15 அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும் 16 உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். 17 கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். 18 நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். 19 அவரது அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயரமானது, எவ்வளவு ஆழமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

20 இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது. 21 சபையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எப்போதும் தலைமுறை தலை முறைக்கும் எல்லாக் காலங்களிலும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center