Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 கொரி 12

பவுலின் சிறப்பான ஆசீர்வாதம்

12 நான் தொடர்ந்து என்னைப் பாராட்டிக்கொள்வது எனக்கு தகுதியாயிராது. எனினும் நான் இப்போது கர்த்தரின் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறேன். கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். 3-4 அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான். நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன்.

நான் என்னையே பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நான் முட்டாளாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் உண்மையைச் சொல்லிவிடுவேன். அதோடு நான் சொல்வதையும் செய்வதையும் காணும் மக்கள் என்னைப் பற்றி மிகுதியாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் என்னைப் பற்றி நானே பெருமை பேசிக்கொள்ளமாட்டேன்.

எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. 10 எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.

கொரிந்து கிறிஸ்தவர்கள் மேல் பவுலின் அன்பு

11 நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன். 12 நான் உங்களோடு இருந்த போது, நான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிக்கும் வகையில் பலவற்றைச் செய்தேன். நான் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பொறுமையோடு செய்தேன். 13 எனவே ஏனைய சபைகளைப் போன்று நீங்களும் எல்லாவற்றையும் பெற்றீர்கள். உங்களுக்கு எதிலும் குறைவில்லை. ஆனால் ஒரு வேறுபாடு, நான் எவ்வகையிலும் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இது தான் குறை. இதற்காக என்னை மன்னியுங்கள்.

14 மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும். 15 எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா?

16 நான் உங்களுக்குப் பாரமாக இல்லை என்பது தெளிவாயிற்று. ஆனால் என்னைத் தந்திரமானவன் என்றும், பொய் சொல்லி உங்களை வசப்படுத்திவிட்டேன் என்றும் எண்ணுகிறீர்கள். 17 நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். 18 உங்களிடம் செல்லுமாறு நான் தீத்துவை அனுப்பினேன். எங்கள் சகோதரனையும் அவனோடு சேர்த்து அனுப்பினேன். தீத்து உங்களை ஏமாற்றவில்லை. அல்லவா? தீத்துவும் நானும் ஒரே ஆவியால் வழி நடத்தப்பட்டு ஒரேவிதமான வாழ்வை நடத்தினோம்.

19 காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான். 20 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். 21 மீண்டும் நான் உங்களிடம் வரும்போது தேவன் என்னை உங்கள் முன் தாழ்த்தி விடுவாரோ என்று அஞ்சுகிறேன். பலர் தாங்கள் செய்த அசுத்தம், வேசித்தனம், பாலியல் குற்றங்கள் போன்ற பாவங்களைத் தொடக்கத்தில் செய்து, பிறகு மாறாமலும் அதற்காக மனம் வருந்தாமலும் இருப்பதைப் பற்றியும் நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center