Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 கொரி 11:16-33

பவுலும்-அவரது துன்பங்களும்

16 நான் மீண்டும் கூறுகிறேன். நான் அறிவற்றவன் என்று எவரும் எண்ண வேண்டாம். ஆனால் நீ என்னை அறிவற்றவன் என்று எண்ணினால் ஒரு அறிவற்றவனை ஏற்றுக்கொள்வது போல் என்னையும் ஏற்றுக்கொள். பின்பு இதைப் பற்றி நானும் பெருமைப்பட்டுக்கொள்ளுவேன். 17 ஏனென்றால் என்னைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நான் கர்த்தரைப் போன்று பேசுபவன் அல்லன். நான் அறிவற்றவன் போன்றே பெருமை பாராட்டுகிறேன். 18 உலகத்தில் ஏராளமானவர்கள் தம்மைப் பற்றிப் பெருமைபட்டுக்கொள்ளுகிறார்கள். நானும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். 19 நீங்கள் புத்திசாலிகள். எனவே புத்தியற்றவர்களோடு நீங்கள் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். 20 நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவன் உங்களைக் கட்டாயப்படுத்தி காரியங்களைச் செய்யச் சொன்னாலும், ஒருவன் உங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், ஒருவன் உங்களை ஏமாற்றினாலும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் நீங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள். 21 இதனைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு நாம் பலவீனம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.

எவனாவது தன்னைப் பாராட்டிப் பேச தைரியம் உள்ளவனாய் இருந்தால் நானும் தைரியம் உள்ளவனாய் இருப்பேன். (நான் அறிவற்றவனைப் போன்று பேசிக்கொண்டிருக்கிறேன்.) 22 அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். 23 அவர்கள் கிறிஸ்துவுக்குச் சேவை செய்பவர்களானால் நான் அவர்களை விட மிகுதியாகச் செய்துகொண்டே இருக்கிறேன். (நான் பைத்தியக்காரனைப் போன்று பேசுகிறேன்) நான் அவர்களைவிடக் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் பல முறைகள் சிறைபட்டிருக்கிறேன். நான் மிக அதிகமாக அடி வாங்கி இருக்கிறேன். நான் பலமுறை மரணத்தின் அருகில் சென்று வந்திருக்கிறேன்.

24 நான் யூதர்களால் சவுக்கால் முப்பத்தொன்பது அடிகளை ஐந்து தடவை பெற்றிருக்கிறேன். 25 மூன்று முறை மிலாறுகளால் அடிபட்டேன். ஒருமுறை நான் கல்லால் எறியப்பட்டு ஏறக்குறைய சாகும் தருவாயில் இருந்தேன். மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கிக்கொண்டேன். ஒரு முறை கடலிலேயே ஒரு இராப்பகல் முழுவதையும் கழித்தேன். 26 நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன்.

27 நான் பலமுறை கடினமாக உழைக்க, கடினமான சோர்வூட்டத்தக்கவற்றைச் செய்ய நேர்ந்தது. பல தடவை நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். பல முறை நான் உணவில்லாமல் பட்டினியாகவும், தாகத்தோடும் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் உண்ணுவதற்கு எதுவுமேயற்ற நிலையில் இருந்திருக்கிறேன். குளிரில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவும் இருந்திருக்கிறேன். 28 இவற்றைத் தவிர மேலும் பல பிரச்சனைகளும் எனக்குண்டு. குறிப்பாக எல்லா சபைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 29 ஒருவன் பலவீனமடைவதைக் கண்டால் நானும் பலவீனனாகி விடுகிறேன். ஒருவன் பாவம் செய்வதைப் பார்த்தால் கோபத்தால் நான் எரிச்சலாகிவிடுகிறேன்.

30 நான் என்னையே பாராட்டிக்கொள்ள வேண்டுமானால் என் பலவீனத்தை வெளிப்படுத்தும் காரியங்களைக் குறித்தே பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும். 31 நான் பொய் சொல்வதில்லையென்று தேவனுக்குத் தெரியும். அவரே தேவன். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா. அவர் எக்காலத்திலும் பாராட்டுக்கு உரியவர். 32 நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா அரசனுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான். 33 ஆனால் சில நண்பர்கள் என்னைக் கூடைக்குள் வைத்து சுவரில் ஒரு சிறிய துளை செய்து அதன் வழியே என்னை இறக்கிவிட்டனர். எனவே நான் அந்த படைத் தளபதியிடமிருந்து தப்பினேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center