New Testament in a Year
ஆவியின் வரங்களைப் பயன்படுத்துங்கள்
14 அன்பை நாடுங்கள். ஆவியானவரின் வரங்களைப் பெற விரும்புங்கள். தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்திற்காகப் பெரிதும் முயலுங்கள். 2 ஏனென்று உங்களுக்கு விளக்குகிறேன். வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்றவன் மக்களிடம் அதனைப் பேசவில்லை. அவன் தேவனிடம் பேசுகிறான். வேறு எவரும் அவனைப் புரிந்துகொள்வதில்லை. அவன் ஆவியானவர் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். 3 ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிற ஒருவன் மக்களிடம் பேசுகிறான். அவன் மக்களுக்கு வல்லமை, உற்சாகம், ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறான். 4 வேறு மொழியில் பேசுகிறவன் அவனுக்கு மட்டுமே பயன்படுகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிறவன் சபை முழுமைக்கும் பயன்படுகிறான்.
5 நீங்கள் எல்லாரும் வேறு மொழிகளில் பேசும் வரத்தைԔபெற வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை இன்னும் அதிகமாய் விரும்புகிறேன். வேறு மொழிகளில் பேசுகிற மனிதனைவிட தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய மனிதன் சிறந்தவன். வேறு மொழிகளைப் பேசும் மனிதன் அவற்றை விளக்கிக் கூற முடியுமானால் அவனும் தீர்க்கதரிசனம் சொல்கிறவனை ஒத்தவன். அப்போது சபையும் அவன் கூறுவதன் மூலமாகப் பயன் அடைய முடியும்.
6 சகோதர, சகோதரிகளே, நான் வெவ்வேறு மொழிகளில் பேசுபவனாக உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படுமா? இல்லை, நான் புதிய உண்மை அல்லது அறிவு, அல்லது தீர்க்கதரிசனம், அல்லது போதனை ஆகியவற்றை உரைக்கும்படியாய் உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படும். 7 குழல், வீணை ஆகிய உயிரற்ற பொருட்கள் ஒலியெழுப்புவதைப் போன்று அது அமைந்துவிடும். வெவ்வேறு விதமான இசையொலிகள் தெளிவாக எழுப்பப்படாவிட்டால், இசைக்கும் இசையை நீங்கள் புரிந்துகொள்ள இயலாது. இசையைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு ராகமும் தெளிவாக மீட்டப்படுதல் வேண்டும். 8 யுத்தத்தின்போது எக்காள முழக்கம் சரியாக முழக்கப்படாவிட்டால் வீரர்களுக்குப் போருக்குத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் அதுவென்பது தெரிய வராது.
9 அதுவே உங்களுக்கும் பொருந்தும். உங்கள் வாயின் வார்த்தைகள் தெளிவாக இருக்கட்டும். நீங்கள் தெளிவாகப் பேசாவிட்டால் உங்கள் கருத்தைப் பிறர் புரிந்துகொள்ள முடியாது. 10 இவ்வுலகில் பலவகையான பேச்சு மொழிகள் உண்டு என்பதும் அவை பொருள் பொருந்தியவை என்பதும் உண்மை. 11 ஒருவன் என்னிடம் கூறுவதன் பொருளை நான் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அவன் விசித்திரமாகப் பேசுவதாக நானும், நான் விசித்திரமாகப் பேசுவதாய் அவனும் எண்ணக்கூடும். 12 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் ஆன்மீக வரங்களைப் பெற விரும்புகிறீர்கள். சபை உறுதியாய் வளருவதற்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
13 ஆகவே வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்ற ஒருவன் அதை விளக்கிக் கூறும் திறமையை அடையும் பொருட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். 14 நான் வேறு மொழியில் பிரார்த்தித்தால் என் ஆவி பிரார்த்திக்கும். ஆனால் என் மனம் எச்செயலையும் செய்யாது. 15 எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் எனது ஆவியால் பிரார்த்திக்கும்போது, என் மனதாலும் பிரார்த்திப்பேன். எனது ஆவியால் நான் பாடுகையில், என் மனதாலும் பாடுவேன். 16 உங்கள் ஆவியால் நீங்கள் தேவனை வாழ்த்தக்கூடும். நீங்கள் நன்றியறிதலுக்கான பிரார்த்தனையைக் கூறும்போது அதைப் புரிந்துகொள்ளாத ஒருவன் “ஆமென்” என்று சொல்ல முடியாது. ஏன்? அவனுக்கு நீங்கள் சொல்வது என்னவென்று தெரியாது. 17 நீங்கள் தேவனுக்கு நல்லமுறையில் நன்றி தெரிவிக்கக்கூடும். ஆனால் மற்ற மனிதன் அதனால் பயன் அடையவில்லை.
18 உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். 19 ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்துகொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்துகொள்கிறேன்.
20 சகோதர சகோதரிகளே, குழந்தைகளைப் போல யோசிக்காதீர்கள். தீய காரியங்களில், குழந்தைகளைப்போல இருங்கள். ஆனால் சிந்திக்கும்போது மனிதரைப்போல சிந்தியுங்கள்.
2008 by World Bible Translation Center