New Testament in a Year
யூதர்களைப் போல இராதீர்
10 சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள். 2 அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள். 3 ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள். 4 ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து. 5 ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
6 நடந்தேறிய இக்காரியங்கள் நமக்கு உதாரணங்களாக அமையும். அந்த மக்கள் செய்த தீய காரியத்தைச் செய்ய விரும்புவதினின்று இவை நம்மைத் தடுத்து நிறுத்தும். 7 அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள். “மக்கள் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் அமர்ந்தனர். மக்கள் நடனமாடுவதற்காக எழுந்து நின்றனர்” [a] என்று எழுதப்பட்டிருக்கிறது. 8 அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர். 9 அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள். 10 அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள்.
11 அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். 12 அதனால், உறுதியாக நிற்பதாக எண்ணும் ஒருவன் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். 13 எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.
14 என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள். 15 நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 16 நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும். 17 ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம்.
18 இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா.
2008 by World Bible Translation Center