New Testament in a Year
தன் மக்களை மறவாத தேவன்
11 “தேவன் தன் மக்களைத் தூரமாகத் தள்ளி விட்டாரா?” என்று நான் கேட்கிறேன். இல்லை. நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். 2 இஸ்ரவேல் மக்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களைத் தம் மக்களாக தேவன் தேர்ந்தெடுத்து விட்டார். தேவன் அவர்களைத் தூரத் தள்ளிவிடவில்லை. எலியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள். இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக எலியா தேவனிடம் வேண்டினார். 3 “கர்த்தரே! இந்த மக்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். உமது பலிபீடங்களை அழித்தனர். நான் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்னையும் கொன்று போட முயற்சி செய்கின்றனர்” [a] என்றார் எலியா. 4 இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்” [b] என்றார்.
5 இப்பொழுதும் அதேபோலத்தான். தேவன் சிலரைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளார். 6 தேவன் தன் மக்களைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளதால் அது அவர்களது செய்கைகளால் அல்ல என்றாகிறது. தேவன் மக்களை அவர் தம் செய்கைகளால் தேர்ந்தெடுத்திருந்தால் அது கருணையால் அல்ல என்றும், செயல்களினிமித்தம் காட்டப்படும் கருணை உண்மையான பரிசாகாது என்றும் தெரிகிறது.
7 அப்படியானால் நடந்தது இதுதான். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கேற்ற நீதிமான்களாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதிமான்களாகச் செயல்புரிகிறார்கள். மற்றவர்களோ முரடர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளைக் கவனிக்க மறுப்பவர்களாகவும் உள்ளனர். 8 “மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால்,
“தேவன் அவர்களின் கண்களை மூடினார்.” (A)
“அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை.
தேவன் அவர்களின் காதுகளை மூடினார்.
அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை.
இது இன்றும் தொடர்கிறது”. (B)
என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
9 “அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும்.
அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும்.
10 உண்மையைக் காண இயலாதபடி அவர்களின் கண்கள் மூடிப் போகட்டும்.
அவர்கள் என்றென்றைக்கும் துன்பத்தில் இருக்கட்டும்” என்று தாவீது கூறியிருக்கிறார். (C)
11 “யூதர்கள் அழிந்துபோகிற அளவுக்கா தடுக்கிவிழுந்தார்கள்?” என்று கேட்கிறேன். இல்லை. அவர்களின் தவறுகள் மற்ற யூதர் அல்லாதவர்களுக்கு இரட்சிப்பாயிற்று. இதனால் யூதர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. 12 யூதர்களின் தவறு உலகத்துக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. அவர்களின் குறைவு யூதரல்லாதவர்களுக்கு அதிக ஆசீர்வாதமாய் ஆயிற்று. யூதர்கள் தேவனுக்கேற்றவர்களாக ஆகும்வரை இன்னும் எவ்வளவு ஆசீர்வாதங்கள் வரும் எனக் கற்பனை செய்யுங்கள்.
13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும். 14 நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும். 15 தேவன் யூதர்களிடமிருந்து விலகிக்கொண்டார். உலகிலுள்ள மற்றவர்களுக்கு அவர் நெருக்கமானார். அவர் யூதர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது மக்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது உறுதியாக இருக்கும். 16 ஒரு அப்பத்தின் முதல் துண்டு தேவனுக்குப் படைக்கப்படுமானால் மற்றக் முழுதும் புனிதமாகிவிடும். ஒரு மரத்தின் வேர்கள் புனிதமாய் இருந்தால் மற்ற கிளைகளும்கூட புனிதமாகிவிடும்.
17 ஒலிவ மரத்தின் சில கிளைகளை ஒடித்தெறிந்து விட்டு அந்த இடத்தில் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை ஒட்ட வைத்தால் எப்படி இருக்ககுமோ அப்படி இருக்கிறீர்கள். யூதரல்லாத நீங்கள் காட்டு ஒலிவ மரத்தைப் போன்றவர்கள். யூதரல்லாத நீங்கள் யூதர்களோடு இணைத்து வைக்கப்பட்டு, நீங்களும் அதே வேர்களைப் பங்கிட்டு, மரச் சாற்றிலிருந்து குடிக்கிறீர்கள். யூதர்களின் பலனையும் பெறுகின்றீர்கள். 18 நீங்கள் அந்தக் கிளைகளைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். அதற்கான எந்தக் காரணமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேர்களுக்கு உயிர்கொடுக்கவில்லை. வேர்களே உங்களுக்கு உயிரைக் கொடுக்கின்றன.
2008 by World Bible Translation Center