Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 9:22-43

22 ஆனால் சவுலோ மென்மேலும் வல்லமையில் பெருகினான். அவன் இயேசுவே கிறிஸ்து என நிரூபித்தான். தமஸ்குவில் அவன் சான்றுகள் வலுவாக இருந்தபடியால் யூதர்கள் அவனோடு வாக்குவாதம் செய்ய இயலவில்லை.

சவுல் தப்பிச் செல்லுதல்

23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். 24 சவுலுக்காக நகரத்தின் கதவுகளை இரவும் பகலும் யூதர்கள் காவல் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர். ஆனால் சவுல் அவர்களின் சதித்திட்டத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தான். 25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.

எருசலேமில் சவுல்

26 பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. 27 ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான்.

28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். 29 கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். 30 சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.

31 யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.

லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு

32 எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை [a] அவன் சந்தித்தான். 33 அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். 35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.

36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். 37 பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். 38 யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர்.

39 பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். 40 பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். 41 அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்!

42 யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர். 43 பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center