Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எபிரேயர் 3

இயேசு மோசேயை விட பெரியவர்

எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பி நமது பிரதான ஆசாரியர் ஆக்கினார். மோசே போன்று உண்மையுள்ளவராய் முழுக்குடும்பத்தின் பொறுப்பும் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு வீட்டைக் கட்டும்போது மக்கள் அந்த வீட்டை விட மனிதனையே பெரிதும் மதிப்பர். இதேபோல, மோசேயைவிட அதிக மரியாதைக்கு இயேசு தகுதியானவராக இருக்கிறார். தேவன் எல்லாவற்றையும் படைக்கிறார் எனினும் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனால் கட்டப்படுகிறது. மோசே தேவனுடைய வீட்டில் ஒரு பணியாளைப் போன்று உண்மையுள்ளவனாயிருந்தான். எதிர்காலத்தில் சொல்வதைப் பற்றி அவன் சொன்னான். ஆனால் ஒரு மகனைப் போல தேவனுடைய குடும்பத்தை ஆள்வதில் இயேசு உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்மிடமுள்ள மாபெரும் நம்பிக்கையினைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி மேன்மையாக எண்ணினால், விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தவர்களாயிருப்போம்.

நாம் தேவனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்

பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல்,

“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
    வனாந்திரத்தில் நீங்கள் தேவனைச் சோதித்தபோது, தேவனுக்கு எதிராக நீங்கள்
    கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.
நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் நான் செய்ததை உங்கள் மக்கள் பார்த்தார்கள்.
    ஆனால் அவர்கள் என்னையும் என் பொறுமையையும் சோதித்தனர்.
10 எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன்.
    ‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன.
    அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன்.
11 எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள்
    நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.” (A)

12 எனவே சகோதர சகோதரிகளே! பாவம் நிறைந்தவராகவும், ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலகுகிற நம்பிக்கையற்ற இருதயமுள்ளோராகவும் உங்களில் யாரும் இல்லாதபடி கவனமாயிருங்கள். 13 ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள். 14 இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும். 15 இதைத் தான்,

“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள்
    கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்” (B)

என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது.

16 யார் தேவனுடைய செய்தியைக் கேட்டு அவருக்கு எதிராக மாறினார்கள்? எகிப்திலிருந்து மோசேயால் வழிநடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்படியே இருந்தார்கள். 17 மேலும் நாற்பது வருடங்களாக தேவன் யார் மீது கோபம் கொண்டார்? பாவம் செய்தவர்கள் மீது அல்லவா? அவர்களனைவரும் வனாந்திரத்திலேயே மடிந்து போனார்கள். 18 எனது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்று யாரிடம் தேவன் கூறினார்? அவருக்குக் கீழ்ப்படியாத மக்களிடம் மட்டும் தானே கூறினார். 19 எனவே, அந்த மக்கள் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது என்றார். ஏன்? அவர்கள் விசுவாசம் உடையவர்களாக இருக்கவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center