New Testament in a Year
19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் [a] என்று இயேசு கூறினார்.
இயேசுவும், யோவான் ஸ்நானகனும்
22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).
25 யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். 26 ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.
27 “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். 28 ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ 29 மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். 30 இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
பரலோகத்திலிருந்து வந்தவர்
31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.
2008 by World Bible Translation Center