New Testament in a Year
ஓய்வு நாளும் இயேசுவும்(A)
6 ஓய்வு நாளாகிய ஒரு தினத்தில் இயேசு தானியங்கள் விளைந்திருந்த நிலத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் தானியத்தைக் கொய்து, தங்கள் கைகளினால் நசுக்கி அதைச் சாப்பிட்டனர். 2 சில பரிசேயர்கள், “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? ஓய்வு நாளன்று இவ்வாறு செய்வது மோசேயின் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினர்.
3 இயேசு, “தாவீதும் அவனது மக்களும் பசியுடன் இருந்தபோது செய்ததைக்குறித்து நீங்கள் படித்திருக்கிறீர்கள். 4 தாவீது தேவாலயத்திற்குச் சென்றான். தாவீது, தேவனுக்குப் படைக்கப்பட்ட தேவனின் அப்பத்தை எடுத்து, அதைச் சாப்பிட்டான். தன்னோடு இருந்தவர்களுக்கும் சில அப்பத்தைக் கொடுத்தான். இது மோசேயின் சட்டத்திற்கு மாறானது. ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்க முடியும் என்று அச்சட்டம் கூறுகின்றது” என்று பதில் சொன்னார். 5 பின்பு இயேசு பரிசேயரை நோக்கி, “ஓய்வு நாளுக்கும் மனித குமாரன் ஆண்டவராக இருக்கிறார்” என்றார்.
ஓய்வு நாளில் குணப்படுத்துதல்(B)
6 மற்றொரு ஓய்வு நாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் அங்கிருந்தான். 7 ஓய்வு நாளில் இயேசு அம்மனிதனைக் குணமாக்குவாரா என்பதைப் பார்ப்பதற்கு வேதபாரகர்களும், பரிசேயர்களும் காத்துக்கொண்டிருந்தனர். குற்றம் சுமத்தும்படியாக இயேசு ஏதேனும் தவறைச் செய்வாரா என அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். 8 அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் முடமான கை கொண்ட அம்மனிதனை நோக்கி, “எழுந்து இம்மக்களுக்கு முன்பாக நில்” என்றார். அம்மனிதன் எழுந்து அங்கே நின்றான். 9 பின் இயேசு அவர்களை நோக்கி, “ஓய்வு நாளில் நல்லதைச் செய்வதா, கெட்டதைச் செய்வதா, எது நல்லதென்று உங்களைக் கேட்கிறேன். ஓர் உயிரைப் பாதுகாப்பதா அல்லது அழிப்பதா எது சரியானது?” என்று கேட்டார்.
10 இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, “உன் கையை நான் பார்க்கட்டும்” என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது. 11 பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் கோபமடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “நாம் இயேசுவுக்கு என்ன செய்யக்கூடும்?” என்று கூறிக்கொண்டனர்.
அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்(C)
12 அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். 13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:
14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்)
அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன்,
யாக்கோபு,
யோவான்,
பிலிப்பு,
பர்தொலொமேயு,
15 மத்தேயு,
தோமா,
யாக்கோபு (அல்பேயுவின் மகன்),
சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)
16 யூதா, (யாக்கோபின் மகன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள்.
இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.
போதனையும்-குணமாக்குதலும்(D)
17 இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். 18 அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். 19 எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார்.
20 இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து,
“ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது.
21 இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக நகைப்பீர்கள்.
22 “மக்கள் உங்களை வெறுக்கும்போதும் நிராகரிக்கும்போதும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் மனித குமாரனுக்கு உரியோர். ஆதலால் உங்களைத் தீயோர் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 23 உங்களுக்குப் பரலோகத்தில் பெரிய வெகுமதி காத்திருப்பதால் இத்தருணங்களில் நீங்கள் மகிழுங்கள். உங்களை அவர்கள் மிக இழிவான முறையில் நடத்துவதைப்போலவே அவர்கள் முன்னோர் தீர்க்கதரிசிகளையும் இழிவுபடுத்தினர்.
24 “ஆனால் செல்வந்தர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் சுகமாக வாழ்ந்ததால் இனிமேல் அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
25 இப்போது திருப்தி பெற்ற மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
ஏனெனில் நீங்கள் பசியடைவீர்கள்.
தற்போது சிரிக்கும் மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
ஏனெனில் நீங்கள் வேதனையும் அழுகையும் அடைவீர்கள்.
26 “எல்லாரும் உங்களைக் குறித்து நல்லதாகச் சொல்லுகையில் மோசமானதே நேரும்.
பொய் தீர்க்கதரிசிகளைக் குறித்து அவர்கள் முன்னோர் நல்லதாகவே சொன்னார்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center