New Testament in a Year
51 இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. 52 கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். 53 கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.
54 இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள்,, “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.
55 பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். 56 மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.
இயேசு அடக்கம் செய்யப்படுதல்(A)
57 அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் 58 யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். 59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். 60 இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான்.
இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். 61 மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.
இயேசுவின் கல்லறைக்கு காவல்
62 ஆயத்தநாளுக்கு [a] மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, 63 ,“ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். 64 ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.
65 அதற்கு பிலாத்து,, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான். 66 ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.
2008 by World Bible Translation Center