M’Cheyne Bible Reading Plan
பரிசுத்தக் கூடாரத்தை அர்ப்பணித்தல்
7 மோசே பரிசுத்தக் கூடாரத்தை அமைத்து முடித்தான். அந்நாளிலேயே அதனை கர்த்தருக்கு அர்ப்பணித்தான். மோசே கூடாரத்தையும் அதிலுள்ள பொருட்களையும், பலிபீடத்தையும் அதற்குரிய அனைத்து பொருட்களையும் அபிஷேகம் செய்தான். இவையனைத்துப் பொருட்களும் கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இது காட்டியது.
2 பிறகு இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினார்கள். இவர்கள் அவர்களது குடும்பத்தின் தலைவர்களும் கோத்திரங்களின் தலைவர்களும் ஆவார்கள். இவர்களே இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிடும் பொறுப்புடையவர்கள். 3 இத்தலைவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் மூடப்பட்ட ஆறு வண்டிகளையும் அதை இழுக்க பன்னிரெண்டு மாடுகளையும் கொண்டு வந்தனர். (ஒவ்வொரு தலைவர்களும் ஆளுக்கொரு மாட்டையும் இரு தலைவர்கள் சேர்ந்து ஒரு வண்டியையும் கொடுத்தனர்.) பரிசுத்தக் கூடாரத்தில் தலைவர்கள் இவற்றை கர்த்தருக்குக் கொடுத்தனர்.
4 கர்த்தர் மோசேயிடம், 5 “தலைவர்களிடமிருந்து இந்த அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்திற்கான வேலைகளுக்கு இக்காணிக்கைகள் உதவியாயிருக்கும்படி இவற்றை லேவியர்களிடம் கொடு” என்று கூறினார்.
6 எனவே, மோசே வண்டிகளையும், அவற்றை இழுத்து வந்த மாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை லேவியர்களிடம் கொடுத்தான். 7 அவன் அவற்றில் இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு அந்த வண்டிகளும், மாடுகளும் தேவையாய் இருந்தன. 8 பிறகு நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரி குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு இந்த வண்டிகளும் மாடுகளும் தேவையாய் இருந்தன. ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இவர்களின் வேலைக்கான பொறுப்பினை ஏற்றிருந்தான். 9 மோசே கோகாத் குழுவினருக்கு எந்த வண்டியையும், மாடுகளையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, பரிசுத்தமான பொருட்களைத் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதாகும்.
10 மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்தான். அதே நாளில், தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை, அந்தப் பலிபீடத்தை அர்பணிப்பதற்காகக் கொண்டு வந்தனர், அவர்கள் தங்கள் காணிக்கைகளை கர்த்தருக்காகப் பலிபீடத்தின் மேல் வைத்தனர். 11 கர்த்தர் மோசேயிடம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
12-83 பன்னிரெண்டு தலைவர்களில் ஒவ்வொரு வரும் தங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவை பின்வருமாறு:
ஒவ்வொரு தலைவனும் மூன்றேகால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளித் தட்டுக்களையும், ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளிக் கோப்பைகளையும் கொண்டு வந்தனர். இவ்விரண்டு காணிக்கைகளும் அதிகாரப்பூர்வமான அளவால் நிறுக்கப்பட்டன. வட்டமான கிண்ணங்களும், தட்டுகளும் எண்ணெயில் கலக்கப்பட்ட மெல்லிய மாவால் நிரப்பப்பட்டு இருந்தன. இது தானியக் காணிக்கைக்குப் பயன்படுவதாக இருந்தது. ஒவ்வொரு தலைவனும் பெரிய தங்கக் கரண்டியையும் கொண்டு வந்தனர். அது 4 அவுன்ஸ் எடையுள்ளதாய் இருந்தது. இக்கரண்டி நறுமணப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தலைவனும் ஒரு இளம் காளையைக் கொண்டு வந்தனர். அதோடு ஒரு ஆட்டுக் கடா, ஒரு வயதான ஒரு ஆண் ஆட்டுக்குட்டி ஆகியவற்றையும் கொண்டு வந்தனர். இம்மிருகங்கள் தகன பலிக்கு உரியவை. ஒவ்வொரு தலைவனும் பாவ பரிகார பலிக்குரியதாக ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தனர். அதோடு அவர்கள் 2 பசுக்களையும் 5 ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான 5 வெள்ளாட்டுக் கடாக்களையும், 5 ஆண் ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சமாதான பலிக்காகக் கொல்லப்பட்டன.
முதல் நாளில், யூதா கோத்திரத்தின் தலைவனான அம்மினதாபின் மகனான நகசோன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
இரண்டாம் நாளில், இசக்கார் குழுவின் தலைவனான சூவாரின் மகன் நெதனெயேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் அன்பளிப்புகளைச் கொண்டு வந்தான்.
நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவனான சேதேயூரின் மகனான எலிசூர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலுமியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவனான தேகுவேலின் மகன் எலியாசாப் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவனான பெதாசூரின் மகன் கமாலியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவனான கீதெயோனின் மகன் அபீதான் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவனான அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பதினோறாம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவனான ஓகிரானின் மகன் பாகியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பன்னிரெண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவனான ஏனானின் மகன் அகீரா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
84 இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்களிடமிருந்து இவ்வாறு பல்வேறு அன்பளிப்புகள் வந்து சேர்ந்தன. அவர்கள் இவற்றை மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்து அர்ப்பணித்த நாட்களில் கொண்டு வந்தனர். அவர்கள் 12 வெள்ளிக் தட்டுகளையும், 12 வெள்ளிக் கோப்பைகளையும், 12 தங்கக் கரண்டிகளையும் கொண்டு வந்தனர். 85 ஒவ்வொரு வெள்ளித்தட்டும் முன்றே கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கோப்பையும் ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஆக மொத்தம் தட்டுகளும் கோப்பைகளும் சேர்ந்து 60 பவுண்டு அதிகாரப்பூர்வமான அளவு எடையுள்ள வெள்ளியாய் இருந்தது. 86 நறுமணப் பொருட்கள் நிறைந்த 12 தங்கக் கரண்டிகளும், ஒவ்வொன்றும் 4 அவுன்ஸ் உடையதாக இருந்தது. அந்த 12 தங்கக் கரண்டிகளும் சேர்ந்து 3 பவுண்டு அதிகாரப் பூர்வமான அளவு எடையுள்ளதாக இருந்தன.
87 ஆக மொத்தம் தகனபலிக்கான 12 காளைகளும் 12 ஆட்டுக்கடாக்களும், 12 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. அவற்றோடு தானிய காணிக்கையும் கொடுக்கப்பட்டன. கர்த்தருக்கு பாவப்பரிகாரப் பலியாக 12 ஆண் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன. 88 சமாதானப் பலிக்குப் பயன்படுத்துவதற்காகத் தலைவர்கள் மிருகங்களைக் கொண்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கையானது 24 காளைகள், 60 ஆட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், 60 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகள் என இருந்தன. இவ்வாறு மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்த பிறகு, அவர்கள் அதனை அர்ப்பணம் செய்தனர்.
89 கர்த்தரோடு பேசுவதற்காக மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்றான். அப்போது கர்த்தரின் குரல் அவனோடு பேசுவதைக் கேட்டான். அந்தக் குரலானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரு கேருபீன்களின் நடுவில் இருந்து உண்டாயிற்று. தேவன் மோசேயோடு பேசிய முறை இதுதான்.
புத்தகம் 2
(சங்கீதம் 42-72)
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்
42 நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது.
அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது.
2 என் ஆத்துமா ஜீவனுள்ள தேவனுக்காகத் தாகமடைகிறது.
அவரைச் சந்திக்க நான் எப்போது போவேன்?
3 என் பகைவன் எப்போதும் என்னைக் கேலி செய்து, “உன் தேவன் எங்கே?
உன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் இன்னமும் வரவில்லையா?” என்று கேட்கிறபடியால் இரவும் பகலும் என் கண்ணீரே என் உணவாயிற்று.
4 தேவனுடைய ஆலயத்திற்குக் கூட்டத்தினரை வழிநடத்தி நடந்ததையும்,
பலரோடு ஓய்வு நாளைக் கொண்டாடியதையும்,
துதித்துப் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததையும்,
நான் நினைவு கூரும்போது என் உள்ளம் உடைந்து போகிறது.
5 ஏன் நான் மிகவும் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் மிகவும் கலங்கிப்போக வேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
6 என் தேவனே, நான் மிகவும் துக்கமாயிருக்கிறேன்.
எனவே நான் உம்மைக் கூப்பிட்டேன்.
யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும்
பின் மிசார் மலை (சிறுமலை) வரைக்கும் போனேன்.
7 பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும் மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன.
கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன.
8 ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன்.
ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
9 என் பாறையான தேவனிடம் நான் பேசுவேன்.
நான், “கர்த்தாவே, ஏன் என்னை மறந்தீர்?
என் பகைவரிடமிருந்து தப்பும் வழியை எனக்கு நீர் ஏன் காட்டவில்லை” என்பேன்.
10 என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே?
உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?”
என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள்.
11 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்குக் கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்!
43 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான்.
அவன் வஞ்சகன், பொய்யன்.
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும்.
அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2 தேவனே, நீர் என் பாதுகாப்பிடம்.
ஏன் என்னைக் கைவிட்டீர்?
பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை?
3 தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக.
உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும்.
உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும்.
4 நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன்.
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன்.
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன்.
5 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்?
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்?
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன்.
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும்.
அவர் என்னை மீட்பார்.
அவன் பேசுகிறான்
5 என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.
நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன்.
நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன்.
நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன்.
பெண்கள் அன்பர்களிடம் பேசுகிறார்கள்
அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின்
போதை நிறைந்தவர்களாய் இருங்கள்.
அவள் பேசுகிறாள்
2 நான் தூங்குகிறேன்
ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது.
என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன்.
“எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே,
என் மாசற்ற அழகியே!
என் தலை பனியால் நனைந்துவிட்டது.
என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.”
3 “நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன்.
நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை.
நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன்.
அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை”
4 ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார்.
நான் அவருக்காக வருத்தப்பட்டேன்.
5 என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.
என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து
வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது.
6 என் நேசருக்காகத் திறந்தேன்
ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை.
அவர் வந்துபோனபோது
நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன்.
நான் அவரைத் தேடினேன்
ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
நான் அவரை அழைத்தேன்
ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை.
7 நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள்.
அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர்.
அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள்
என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர்.
8 எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக்
கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.
எருசலேமின் பெண்கள் அவளுக்குப் பதில் கூறுகிறார்கள்
9 அழகான பெண்ணே,
உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?
உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா?
எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?
எருசலேம் பெண்களுக்கு அவள் பதில் கூறுகிறாள்
10 என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர்.
பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர்.
11 அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும்.
அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும்.
அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும்.
12 அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும்.
பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும்,
பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும்.
13 அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும்.
அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும்.
அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.
14 அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும்.
அவரது உடல் மென்மையான தந்தம்.
இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும்.
15 அவரது கால்கள் பளிங்குத் தூண்கள்
பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும்.
அவர் நின்றால்
லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும்.
16 ஆம், எருசலேமின் பெண்களே!
என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர்.
அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது.
இப்படிப்பட்டவரே என் நேசர்
இத்தகையவரே என் நேசர்.
5 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான். 2 அறியாமை உடையவர்களிடமும், தவறு செய்கிறவர்களிடமும் அந்தப் பிராதான ஆசாரியனால் மென்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில் அவனும் பலவீனத்துக்குட்பட்டவனே ஆவான். 3 இதனால் தான், மற்றவர்களுக்காகக் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு முன்னால், தன் சொந்தப் பாவங்களுக்காக அவன் காணிக்கை செலுத்த வேண்டும்.
4 பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத் [a] தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 5 கிறிஸ்துவின் செயலும் அப்படித்தான். பிரதான ஆசாரியன் ஆகும் பெருமைக்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுக்கவில்லை. தேவன் அவரைத் தேர்ந்தெடுத்தார். அவர் கிறிஸ்துவிடம்,
“நீர் எனது மகன்.
இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்” என்று கூறினார். (A)
6 இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்,
“நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப்
போன்று ஆசாரியராக இருப்பீர்” (B)
7 கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் தேவனிடம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் பிரார்த்தனை செய்தார். மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்ற வல்ல ஒருவரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். தேவன் மீது இயேசுவுக்கு இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக தேவன் அப்பிரார்த்தனையை பின்னர் கேட்டார். 8 அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9 இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார். 10 இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழாதிருக்க எச்சரிக்கை
11 இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். 12 இப்போதைக்கு, நீங்கள் போதகராக ஆகி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் தேவனுடைய போதனைகள் என்னும் அடிப்படைப் பாடங்களை உங்களுக்கே யாராவது போதிக்கத் தேவையாய் இருக்கிறது. இன்னும் உங்களுக்குப் பால் உணவே தேவைப்படுகிறது. திட உணவுக்கு நீங்கள் தயாராயில்லை. (அதாவது இன்னும் கடினமான போதனைகள் அல்ல, எளிய போதனைகளே உங்களுக்குத் தேவைப்படுகிறது). 13 இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே! 14 திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.
2008 by World Bible Translation Center