M’Cheyne Bible Reading Plan
அடைக்கல நகரங்கள்
20 கர்த்தர் யோசுவாவிடம், “நீ இஸ்ரவேலருக்குக் கூறவேண்டியதாவது, உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்படி மோசேக்குச் சொன்னேன். 2 பாதுகாப்பிற்கென்று சில குறிப்பிட்ட நகரங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அவன் உன்னிடம் கூறினான். 3 யாரேனும் ஒருவன் மற்றொருவனைக் கொன்றால், அக்கொலையானது வேண்டுமென்றே செய்த காரியமாக இல்லாமல் தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அவன் அடைக்கல நகருக்குள் சென்று ஒளிந்துக்கொள்ளலாம்.
4 “அவன் செய்யவேண்டிய காரியங்கள் என்ன வெனில்: அவன் ஓடி அந்நகரங்கள் ஒன்றில் ஒளிந்துக்கொள்ளும்போது, அவன் நகரத்தின் நுழைவாயிலருகே நின்று தலைவர்களை நோக்கி நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டும். பின் தலைவர்கள் நகரத்தினுள்ளே நுழைய அவனுக்கு அனுமதியும், அவர்களோடு சேர்ந்து வாழ அவனுக்கோர் இடமும் தரலாம். 5 அவனைத் துரத்திய மனிதன் அந்நகரை வந்தடையும் பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவனை அவர்கள் ஒப்படைக்கக் கூடாது. அந்நகரத்தின் தலைவர்கள் அக்கொலை வேண்டுமென்றே நிகழ்ந்த ஒன்றல்ல என்பதால் அவனைக் காப்பாற்ற வேண்டும். அது ஒரு விபத்து. அவன் கோபம் கொண்டு திட்டமிட்டு அக்கொலையைச் செய்யவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்தது. 6 அந்நகரத்து நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்வரை அவன் அந்நகரில் தங்க வேண்டும். தலைமை ஆசாரியன் இறக்கும்மட்டும் அவன் அந்நகரில் இருக்க வேண்டும். பின்னர் அவன் தனது வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார்.
7 எனவே இஸ்ரவேலர், “அடைக்கல நகரங்கள்” என அழைக்கும்பொருட்டு சில நகரங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டனர். அந்நகரங்கள்: நப்தலியின் மலைநாட்டிலுள்ள கலிலேயாவின் கேதேஸ், எப்பிராயீம் மலைநாட்டில் சீகேம், யூதாவின் மலைநாட்டில் கீரியாத்அர்பா (எபிரோன்). 8 ரூபனின் தேசத்தில், வனாந்திரத்தில் எரிகோவிற்கு அருகே யோர்தான் நதியின் கிழக்கிலுள்ள பேசேர், காத்தின் தேசத்தில் கீலேயாத்திலுள்ள ராமோத், மனாசே தேசத்தில் பாசானிலுள்ள கோலான் ஆகியனவாகும்.
9 யூதனோ, அல்லது அவர்களோடு வாழ்ந்த அந்நியனோ யாரையாவது அசம்பாவிதமாக கொல்ல நேர்ந்தால் இந்நகரங்களில் ஒன்றிற்கு பாதுகாப்பிற்காக ஓடிவிட அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனைத் துரத்தும் எவரும் அவனைக் கொல்லக் கூடாது. அந்நகரின் நீதிமன்றம் அவனுக்கு நீதி வழங்கும்.
ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் உரிய பட்டணங்கள்
21 லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், இஸ்ரவேலின் பிற கோத்திரங்களின் தலைவர்களையும் கண்டு பேசுவதற்குச் சென்றார்கள். 2 கானான் தேசத்திலுள்ள சீலோ என்னும் நகரில் இது நிகழ்ந்தது. லேவியின் தலைவர்கள் அவர்களை நோக்கி, “கர்த்தர் மோசேக்கு ஓர் கட்டளையிட்டார். நாங்கள் வாழ்வதற்கு நகரங்களையும், எங்கள் மிருகங்கள் மேய்வதற்குத் தேவையான வயல்நிலங்களையும் தருமாறு கட்டளையிட்டார்” என்றார்கள். 3 எனவே இஸ்ரவேலர் கர்த்தருடைய இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். லேவிய ஜனங்களுக்கு இந்த நகரங்களையும், அவர்களின் மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் வழங்கினார்கள்.
4 கோகாத்தியரின் குடும்பத்தினர் வேவியின் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியனான ஆரோனின் சந்ததியார். யூதா, சிமியோன் மற்றும் பென்யமீன் ஆகியோருக்குரிய பகுதிகளிலிருந்து 13 ஊர்கள் கோகாத் குடும்பத்தின் ஒரு பகுதியினருக்குக் கொடுக்கப்பட்டன.
5 எப்பிராயீம், தாண், ஆகிய கோத்திரத்தினருக்கும் மனாசே கோத்திரத்தின் பாதி பேர்க்கும் சொந்தமான ஊர்களிலிருந்து பத்து நகரங்கள் கோகாத்தியரின் பிற குடும்பங்களுக்குத் தரப்பட்டன.
6 கெர்சோனின் குடும்பத்தினருக்கு 13 நகரங்கள் அளிக்கப்பட்டன. இசக்கார், ஆசேர், நப்தலி, மற்றும் பாசானிலிருந்த மனாசேயின் பாதிக்குடும்பத்தினர் ஆகியோருக்குச் சொந்தமான பகுதிகளில் இந்த நகரங்கள் இருந்தன.
7 மெராரி குடும்பத்தாருக்குப் பன்னிரண்டு ஊர்கள் வழங்கப்பட்டன. ரூபன், காத், செபுலோன் ஆகியோருக்குச் சொந்தமான தேசத்தில் இவை இருந்தன.
8 இவ்வாறு இஸ்ரவேலர் லேவியருக்கு இந்த நகரங்களையும், அவற்றைச் சுற்றியிருந்த வயல் நிலங்களையும் கொடுத்தனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படும்படியாக அவர்கள் இதைச் செய்தனர்.
9 யூதாவிற்கும் சிமியோனுக்கும் சொந்தமான பகுதிகளிலிருந்த நகரங்களின் பெயர்கள் இவை: 10 லேவியரில் கோகாத் குடும்பத்தாருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் கொடுக்கப்பட்டன. 11 கீரியாத்அர்பாவை அவர்களுக்குக் கொடுத்தனர் (இது எபிரோன். அர்பா என்னும் மனிதனின் பெயரால் அழைக்கப்பட்டது. அர்பா ஆனாக்கின் தந்தை.) அவர்களின் மிருகங்களுக்காக நகரங்களின் அருகே சில நிலங்களையும் கொடுத்தார்கள். 12 ஆனால் கீரியாத்அர்பா நகரைச் சுற்றிலுமிருந்த நகரங்களும் நிலங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாயிருந்தது. 13 எனவே எபிரோன் நகரை ஆரோனின் சந்ததிக்குக் கொடுத்தார்கள். (எபிரோன் பாதுகாப்பான நகரமாயிருந்தது.) லிப்னா, 14 யத்தீர், எஸ்தெமொவா, 15 ஓலோன், தெபீர், 16 ஆயின், யுத்தா, பெத்ஷிமேஸ் ஆகிய நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அளித்தனர். இந்த நகரங்களின் அருகேயிருந்த நிலத்தையும் அவர்களின் கால்நடைகளுக்காக அளித்தனர். இந்த இரண்டு கூட்டத்தாருக்கும் ஒன்பது நகரங்களைக் கொடுத்தார்கள்.
17 பென்யமீன் கோத்திரத்திற்கு சொந்தமான நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அவர்கள் கொடுத்தார்கள். அந்நகரங்கள் கிபியோன், கேபா, 18 ஆனாதோத், அல்மோன் ஆகியனவாகும். அவர்களுக்கு இந்த நான்கு நகரங்களையும், மிருகங்களுக்கென அவற்றினருகேயுள்ள நிலங்களையும் கொடுத்தார்கள். 19 மொத்தத்தில், ஆசாரியர்களுக்கு 13 ஊர்களைக் கொடுத்தார்கள். (எல்லா ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார்.) ஒவ்வொரு நகருக்கருகேயும் நிலங்களை மிருகங்களுக்காக ஒதுக்கினர்.
20 கோகாத்திய குடும்பங்களில் மீதியானவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த பகுதியிலுள்ள நகரங்கள் தரப்பட்டன. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்: 21 எப்பிராயீம் மலை நாட்டின் சீகேம் நகரம். (சீகேம் அடைக்கல நகரம்.) கேசேர், 22 கிப்சாயீம், பெத்தொரோன் ஆகியவற்றையும் பெற்றார்கள். மொத்தத்தில், எப்பிராயீம் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவ்வூர்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் வழங்கினர்.
23 தாண் கோத்திரத்தினர்களுக்கு எல்தெக்கே, கிபெத்தோன், 24 ஆயலோன், காத் ரிம்மோன் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம், நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்த நகரங்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.
25 மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் தானாகையும், காத் ரிம்மோனையும் கொடுத்தனர். அவர்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களை சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தார்கள்.
26 கோகாத்திய குடும்பத்தின் மீதியான ஜனங்கள் பத்து நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பெற்றார்கள்.
27 கெர்சோன் குடும்பமும் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தது. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்:
மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் பாசானிலுள்ள கோலானைக் கொடுத்தனர். (கோலான் அடைக்கல நகரம்.) மனாசே ஜனங்கள் பெயேஸ்திராவையும் கொடுத்தார்கள். மொத்தத்தில், மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நிலங்களையும் கொடுத்தனர்.
28 இசக்கார் கோத்திரத்தினர் கீசோன், தாபராத், 29 யர்மூத், என்கன்னீம் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சார்ந்த நிலங்களையும் இசக்கார் ஜனங்கள் கொடுத்தார்கள்.
30 ஆசேர் கோத்திரத்தினர் மிஷயால், அப்தோன், 31 எல்காத், ரேகோப் ஆகியவற்றைக் கொடுத்தார்கள். ஆசேர் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நகரங்களையும் கொடுத்தனர்.
32 நப்தலி கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேசைக் கொடுத்தார்கள். (கேதேஸ் அடைக்கல நகரம்.) நப்தலி ஜனங்கள் அம்மோத்தோரையும் கர்தானையும் கொடுத்தனர். நப்தலி ஜனங்கள் மூன்று நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.
33 மொத்தத்தில், கெர்சோன் குடும்பத்தார் 13 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் பெற்றனர்.
34 மற்றொரு லேவியர் குழு மெராரி குடும்பம் ஆகும். மெராரி குடும்பம் இந்த நகரங்களைப் பெற்றது: செபுலோன் கோத்திரத்தினர் யோக்னியாம், கர்தா, 35 திம்னா, நகலால் ஆகியவற்றைக் கொடுத்தனர். செபுலோன் ஜனங்கள் மொத்தம் நான்கு நகரங்களையும், மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். 36 ரூபன் கோத்திரத்தினர் அவர்களுக்குப் பேசேர், யாகசா, 37 கேதெமோத், மெபகாத் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தத்தில், ரூபன் ஜனங்கள் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் கொடுத்தனர். 38 காத் கோத்திரத்தினர் அவர்களுக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத்தைக் கொடுத்தனர். (ராமோத் அடைக்கல நகரம்.) மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகியவற்றையும் கொடுத்தனர். 39 மொத்தம் நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களைச் சார்ந்த நிலங்களையும் காத் ஜனங்கள் கொடுத்தனர்.
40 மொத்தத்தில், லேவியரின் கடைசி குடும்பத்தினர் ஆகிய, மெராரி குடும்பத்தினர், பன்னிரண்டு நகரங்களைப் பெற்றனர்.
41 எனவே லேவியர்கள் மொத்தம் 48 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றனர். இந்த நகரங்கள் அனைத்தும் பிற கோத்திரத்தினருக்குச் சொந்தமான பகுதிகளில் இருந்தன. 42 ஒவ்வொரு பகுதியிலும் மிருகங்களுக்கான நிலமும் இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறே இருந்தது.
43 அவ்வாறு கர்த்தர் இஸ்ரவேலருக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றினார். அவர் வாக்களித்த எல்லா நிலத்தையும் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஜனங்கள் நிலத்தைப் பெற்று அங்கு வாழ்ந்தனர். 44 கர்த்தர் அந்த ஜனங்களின் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே அவர்களின் தேசத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் அமைதி நிலவும்படி செய்தார். அவர்கள் பகைவர்கள் யாரும் அவர்களை வெல்லவில்லை. இஸ்ரவேலர் தமது பகைவர்களை எல்லாம் முறியடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். 45 கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த எல்லா அருமையான வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அவர் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் இருக்கவில்லை. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.
லூக்காவின் இரண்டாவது புத்தகம்
1 அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2 நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். 3 இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். 4 ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். 5 யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.
இயேசுவின் பரமேறுதல்
6 அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.
7 இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. 8 ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.
9 இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. 10 இயேசு மேலே போய்க்கொண்டிருந்தார். அப்போஸ்தலர்கள் வானையே நோக்கிக்கொண்டிருந்தனர். திடீரென வெண்ணிற ஆடை அணிந்த இருவர் அவர்களுக்கு அருகே நின்றனர். 11 அவ்விருவரும் அப்போஸ்தலர்களை நோக்கி, “கலிலேயாவிலிருந்து வந்துள்ள மனிதர்களே, ஏன் நீங்கள் வானத்தைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் பார்த்தபோது சென்றதைப் போலவே அவர் திரும்பவும் வருவார்” என்று கூறினர்.
புதிய அப்போஸ்தலர்
12 பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது) 13 அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.
14 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.
15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.
18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)
20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
யாரும் அங்கு வாழலாகாது.’ (A)
மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’ (B)
21-22 “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.
23 அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன். 24-25 அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 26 பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.
கர்த்தரும், விக்கிரகங்களும்
10 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்!
வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்!
அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள்.
ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை.
ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை.
அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர்.
அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள்.
எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே,
குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன.
அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது.
அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது.
ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும்.
அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்.
அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது.
அவை உங்களுக்கு உதவியும் செய்யாது”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை!
நீர் பெரியவர்!
உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!
7 தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும்.
அனைத்து தேசத்தாருக்கும் நீரே அரசன்.
அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர்.
அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை.
8 வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள்.
அவர்களின் போதனைகள் பயனற்றவை.
அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே.
9 அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும்
ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர்.
அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை.
அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள்.
“ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர்.
10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன்.
உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்!
அவர் என்றென்றும் ஆளுகின்ற அரசன்!
தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது,
தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.
11 “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள்,
‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை.
அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள்.
வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார்.
தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
தேவன் தமது ஞானத்தினால்
பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார்.
13 சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார்.
வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார்.
அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார்.
அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார்.
அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார்.
14 ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்!
உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர்.
அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள்.
அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை.
15 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.
அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை.
நியாயத்தீர்ப்புக் காலத்தில்,
அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
16 ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல.
தேவன் எல்லாவற்றையும் படைத்தார், தேவன் தமது சொந்த ஜனங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களை தேர்ந்தெடுத்தார்.
“சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்பது தேவனுடைய நாமம்.
அழிவு வந்துகொண்டிருக்கிறது
17 உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள்.
புறப்படத் தயாராகு. யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் பட்டணத்தில் பிடிபடுவீர்கள்.
இதனை பகைவர்கள் சுற்றி வளைத்துக் கொள்வார்கள்.
18 “இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன்.
நான் அவர்களுக்கு வலியும், துன்பமும் கொண்டு வருவேன்.
நான் இதனைச் செய்வதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன்,
நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை
எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன்.
“இதுதான் என்னுடைய நோய்.
இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.”
20 எனது கூடாரம் அழிக்கப்பட்டது.
கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன.
எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர்.
அவர்கள் போய்விட்டார்கள்.
எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை,
எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை.
21 மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள்,
அவர்கள் கர்த்தரைத் தேட முயற்சி செய்வதில்லை.
அவர்களுக்கு ஞானம் இல்லை.
எனவே அவரது மந்தைகள் (ஜனங்கள்) சிதறிக் காணாமல் போகின்றன.
22 உரத்த சத்தத்தைக் கேளுங்கள்!
இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது.
அது யூதாவின் நகரங்களை அழிக்கும்.
யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும்,
அது ஓநாய்களுக்கான வீடாகும்.
23 கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ,
அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன்.
வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை.
24 கர்த்தாவே! எங்களைத் திருத்தும்,
நீதியாய் இரும்.
கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல் இரும்.
இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும்.
25 நீர் கோபத்தோடு இருந்தால்,
பின் அந்நிய நாடுகளைத் தண்டியும்.
அவர்கள் உம்மை அறிவதில்லை, மதிப்பதுமில்லை.
அந்த ஜனங்கள் உம்மைத் தொழுதுகொள்வதுமில்லை.
அந்த நாடுகள் யாக்கோபின் குடும்பத்தை அழித்தது,
அவர்கள் இஸ்ரவேலை முழுமையாக அழித்தனர்,
அவர்கள் இஸ்ரவேலரின் தாய் நாட்டையும் அழித்தனர்.
ஆலயத்தின் எதிர்கால அழிவு(A)
24 இயேசு தேவாலயத்தை விட்டு சென்று கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவர் அருகில் வந்து, தேவாலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். 2 இயேசு சீஷர்களை நோக்கி,, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நாசமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார்.
3 பின்னர், இயேசு ஒலிவ மலையின்மீது ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். இயேசுவுடன் தனிமையில் இருக்க வந்த சீஷர்கள், அவரிடம்,, “இவை எப்பொழுது நடக்கும் என்று எங்களுக்குக் கூறுங்கள். நீர் மீண்டும் தோன்றப் போகிறதையும் உலகம் அழியும் என்பதையும் எங்களுக்கு உணர்த்த எம்மாதிரியான செயல் நடக்கும்?” என்று கேட்டார்கள்.
4 அவர்களுக்கு இயேசு,, “எச்சரிக்கையுடன் இருங்கள்! யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். 5 பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள். 6 போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். 7 நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும். 8 இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார்.
9 ,“பின்னர் மக்கள் உங்களை மோசமாக நடத்துவார்கள். துன்புறுத்தப்படவும் கொல்லப்படவும் ஆட்சியாளர்களிடம் உங்களை ஒப்படைப்பார்கள். அனைவரும் உங்களை வெறுப்பர். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இவை அனைத்தும் உங்களுக்கு நிகழும். 10 அக்காலக் கட்டத்தில், பலர் தாம் கொண்ட விசுவாசத்தை இழப்பார்கள். அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் திரும்பி ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். 11 பல போலித் தீர்க்கதரிசிகள் வருவார்கள். மக்களைக் தவறானவற்றின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வார்கள். 12 உலகில் மேலும் மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். 13 ஆனால் தொடர்ந்து இறுதிவரை உறுதியாய் இருப்பவர்களே இரட்சிக்கப்படுவார்கள். 14 தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.
15 ,“அழிவை ஏற்படுத்துகிற கொடிய காரியத்தைப்பற்றி தீர்க்கதரிசி தானியேல் கூறியுள்ளார். ‘இக்கொடியதை தேவாலயத்தில் நின்றிருக்க நீங்கள் காண்பீர்கள்.’ (இதைப் படிக்கிற நீங்கள் அது என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும்.) 16 அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும். 17 கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் ஓடிவிட வேண்டும். வீட்டின் கூரையின் மீதிருப்பவன், வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுப்பதற்காக கீழே இறங்கக் கூடாது. 18 வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறவன், தன் மேலாடையை எடுக்க திரும்பி வீட்டிற்குச் செல்லக் கூடாது.
19 ,“கர்ப்பிணிகளுக்கும் கைக் குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. 20 இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்கப் பிரார்த்தியுங்கள். 21 ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதலாக இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமானது பிற்காலத்தில் ஏற்படாது.
22 ,“அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார்.
23 ,“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள். 24 கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவன் தேர்ந்தெடுத்தவர்களிடம் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். 25 ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன்.
26 ,“‘கிறிஸ்து வனாந்தரத்தில் இருக்கிறார்’, என்று யாரேனும் ஒருவன் உங்களிடம் சொல்லக்கூடும். அதை நம்பி, நீங்கள் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவைத் தேடிச் செல்லாதீர்கள். வேறொருவன், ‘கிறிஸ்து அந்த அறையில் இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அதை நம்பாதீர்கள். 27 மனித குமாரன் தோன்றும் பொழுது யாவரும் அவரைக் காண இயலும். வானில் தோன்றும் மின்னலைப் போல எல்லோரும் அதைப் பார்க்க இயலும். 28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும்.
29 ,“அந்த நாட்களின் துன்பம் தீர்ந்தவுடன் கீழ்க்கண்டது நடக்கும்:
, “‘சூரியன் இருளாக மாறும்,
சந்திரன் ஒளியைக் கொடுக்காது.
வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிரும்,
வானில் அனைத்தும் மாறும்.’ (B)
30 ,“அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார். 31 அவர், ஒரு எக்காளத்தைச் சத்தமாய் ஊதி அதன் மூலம் தம் தூதர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்புவார். உலகின் எல்லா பகுதியிலிருந்தும் தேவதூதர்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்கள்.
32 ,“அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைப் போதிக்கிறது. அத்தி மரத்தின் கிளைகள் பசுமையடைந்து இலைகள் துளிர்விட்டு வளரும்பொழுது கோடை காலம் அருகில் உள்ளது என அறிகிறீர்கள்.
33 ,“அதே போலத்தான் நான் நடக்கப் போவதாகக் கூறிய செயல்களைப் பொறுத்தவரையிலும், அவை நடக்கும்பொழுது காலம் நெருங்கிவிட்டதை அறியலாம். 34 நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும். 35 உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.
இயேசு வரும் வேளை(C)
36 ,“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.
37 ,“நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும். 38 நோவாவின் காலத்தில் வெள்ளம் வருமுன்னர், மக்கள் குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார்கள். மக்கள் தம் பிள்ளைகளின் திருமணங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். நோவா கப்பலில் ஏறுகிறவரைக்கும் மக்கள் அவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். 39 நடந்துகொண்டிருந்ததை அம்மக்களில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், வெள்ளம் வந்து அவர்கள் அனைவரையும் அழித்துப்போட்டது.
, “அதைப் போலவே மனிதகுமாரன் வரும்பொழுதும் நடக்கும். 40 இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான். 41 எந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருவரில், ஒருத்தி விடப்பட்டு மற்றவள் கொண்டுசெல்லப்படுவாள்.
42 ,“ஆகவே, எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். உங்கள் கர்த்தர் வருகிற நேரம் உங்களுக்குத் தெரியாது. 43 இதை, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், திருடன் வரும் நேரத்தை வீட்டுக்காரன் அறிந்திருந்தால், திருடனுக்காக வீட்டுக்காரன் காத்திருப்பான். மேலும் திருடன் வீட்டில் நுழையாதபடி எச்சரிக்கையுடன் இருப்பான். இதை நினைவில் கொள்ளுங்கள். 44 எனவே, நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்க்காதபொழுது மனித குமாரன் வருவார்.
நல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்(D)
45 ,“புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.
48 ,“ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.
2008 by World Bible Translation Center