M’Cheyne Bible Reading Plan
32 “வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன்.
பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
2 எனது போதனைகள் மழையைப் போன்று வரும்,
பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும்,
மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும்,
பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
3 நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!
4 “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை!
ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை!
தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர்.
அவர் நீதியும் செம்மையுமானவர்.
5 நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.
உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது.
நீங்கள் கோணலான பொய்யர்கள்.
6 உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை!
நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள்.
கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார்.
அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.
7 “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள்.
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள்.
உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான்.
உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
8 உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து
ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார்.
அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.
இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.
9 கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு,
யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.
10 “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார்.
அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம்.
கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார்.
அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார்.
11 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார்.
ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும்.
பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும்.
அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும்,
அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும்.
கர்த்தர் இதனைப் போன்றவர்.
12 கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார்.
அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.
13 கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார்.
யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான்.
கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார்.
கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.
14 கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார்.
அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும்,
சிறந்த கோதுமையையும் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.
15 “ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான்
(ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.)
அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான்.
தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான்.
16 கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர்.
கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
17 அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர்.
அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும்.
அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.
18 நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய்.
உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.
19 “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார்.
ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!
20 அதனால் கர்த்தர் கூறினார்,
‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன்.
அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்!
அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர்.
அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள்.
21 அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர்.
இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர்.
எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன்.
22 எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது.
அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது.
அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது.
அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!
23 “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன்.
நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன்.
24 அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள்.
பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும்.
நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன்.
விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.
25 வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள்.
அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள்.
படைவீரர்கள் இளைஞர்களையும்,
இளம் பெண்களையும் கொல்வார்கள்.
அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.
26 “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன்.
எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
27 அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன்.
பகைவருக்கு அது புரியாது,
அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்:
“கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’
28 “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள்.
அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை.
29 அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும்.
என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்!
30 ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா?
இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா?
கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்!
அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்!
31 எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல.
நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்!
32 பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும்.
அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும்.
33 அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.
34 “கர்த்தர் கூறுகிறார்,
‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்!
35 அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது
நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன்.
அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது.
அவர்களது தண்டனை விரைவில் வரும்.’
36 “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார்.
அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார்.
37 பின்னர் கர்த்தர் கூறுவார்,
‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்?
பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?
38 அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன.
அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன.
எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும்.
அவை உங்களைக் காக்கட்டும்!
39 “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்!
வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன்.
நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன்.
நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும்.
நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும்.
எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது.
40 நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்.
நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!
41 நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன்.
எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.
42 எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள்.
கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள்.
எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும்.
அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’
43 “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார்.
அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார்.
அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார்.
அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.”
மோசே அவனது பாடலை ஜனங்களுக்குக் கற்றுத்தருகிறான்
44 மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். 45 மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது 46 அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். 47 இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.
நேபோ மலையின்மேல் மோசே
48 கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர், 49 “அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும். 50 நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய். 51 ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை. 52 எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.
ஆயின்
121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
124 நான் உமது ஊழியன்.
உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்.
உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
பே
129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
த்சாதே
137 கர்த்தாவே, நீர் நல்லவர்,
உமது சட்டங்கள் நியாயமானவை.
138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
நான் அதை நேசிக்கிறேன்.
141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
உமது போதனைகள் நம்பக் கூடியவை.
143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.
கெட்ட ஜனங்கள் தங்கள் வாழ்வை மாற்ற வேண்டும்
59 பார், உன்னைக் காப்பாற்ற கர்த்தருடைய வல்லமை போதுமானதாக உள்ளது. நீ அவரிடம் உதவி கேட்கும்போது அவர் உனக்குப் பதில் தருவார். 2 ஆனால் உனது பாவங்கள் உன்னை தேவனிடமிருந்து விலக்குகிறது. உனது பாவங்கள் கர்த்தருடைய முகத்தை உன்னிடமிருந்து மறையச் செய்கிறது. அப்போது அவர் உனக்குச் செவி கொடுக்கமாட்டார். 3 உனது கைகள் அழுக்காக உள்ளன. அவை இரத்தத்தால் மூடப்பட்டுள்ளன. உனது விரல்கள் குற்றங்களால் மூடப்பட்டுள்ளன. நீ உனது வாயால் பொய்களைச் சொல்லுகிறாய். உனது நாக்கு தீயவற்றைக் கூறுகிறது. 4 எவரும் மற்றவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறுவதில்லை, ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் வழக்காடு மன்றத்தில் மோதுகிறார்கள். அவர்கள் தம் வழக்குகளில் வெல்வதற்கு பொய்யான வாக்குவாதங்களை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் பொய் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு முழுவதுமாகத் துன்பம் உள்ளது. அவர்கள் தீமையைப் பெற்றெடுக்கிறார்கள். 5 விஷப் பாம்புகளிலிருந்து முட்டைகள் வருவதுபோல இவர்களிடமிருந்து தீமைகள் வருகின்றன. நீ அவற்றில் ஒரு முட்டையைத் உண்டால் மரித்துப்போவாய். அவற்றில் ஒரு முட்டையை உடைத்தால், ஒரு விஷப்பாம்பு வெளியே வரும். ஜனங்கள் பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய்கள் சிலந்தி வலைபோன்றுள்ளன. 6 அந்த வலைகளை ஆடைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அந்த வலைகளால் நீ உன்னை மூடிக்கொள்ள முடியாது. சிலர் கெட்டச் செயல்களைச் செய்வார்கள். மற்றவர்களுக்குக் கொடுமை செய்யத் தம் கைகளைப் பயன்படுத்துவார்கள். 7 அந்த ஜனங்கள் தம் கால்களைத் தீமைசெய்ய ஓடுவதற்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குற்றம் ஒன்றுமே செய்யாதவர்களைக் கொலை செய்ய விரைவார்கள். அவர்கள் தீய எண்ணங்களைச் சிந்திப்பார்கள். கலகமும் கொள்ளையும் அவர்களின் வாழ்க்கைமுறையாக உள்ளது. 8 அந்த ஜனங்கள் சமாதானத்தின் வழியை அறிவதில்லை. அவர்களின் வாழ்வில் நன்மை இல்லை. அவர்களின் வழிகள் நேர்மையானதாக இல்லை. அவர்கள் வாழ்வதுபோன்று வாழ்கிற எவரும் தம் வாழ்வில் சமாதானத்தை அடையமாட்டார்கள்.
இஸ்ரவேலரின் பாவம் துன்பத்தைக் கொண்டுவருகிறது
9 அனைத்து நேர்மையும், நன்மையும் போனது.
நமக்கு அருகில் இருள் மட்டுமே உள்ளது.
எனவே, நாம் வெளிச்சத்துக்காக காத்திருக்கவேண்டும்.
நாம் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம்.
ஆனால், நம்மிடம் இருப்பதெல்லாம் இருள்தான்.
10 கண்கள் இல்லாத ஜனங்களைப்போன்றிருக்கிறோம்.
நாம் குருடர்களைப்போன்று சுவர்களில் மோதுகிறோம்.
இருட்டில் இருப்பதுபோல இடறிக் கீழே விழுகிறோம்.
பகலிலும்கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
மத்தியான வேளையில் நாம் மரித்தவர்களைப்போன்று விழுகிறோம்.
11 நாம் எல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம்.
நாம் கரடிகள் மற்றும் புறாக்களைப்போன்று துக்க ஓசைகளைச் எழுப்புகிறோம்.
நாம் ஜனங்கள் நியாயமாயிருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம்.
ஆனால் இதுவரை நியாயமில்லை.
நாம் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறோம்.
ஆனால், இரட்சிப்பு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
12 ஏனென்றால், நாம் நமது தேவனுக்கு எதிராகப் பல தீமைகளைச் செய்திருக்கிறோம்.
நாம் தவறானவர்கள் என்பதை நமது பாவங்கள் காட்டுகின்றன.
இவற்றையெல்லாம் செய்த குற்றவாளிகள் என்பதை நாம் அறிவோம்.
13 நாம் பாவங்கள் செய்து கர்த்தருக்கு எதிராகத் திரும்பினோம்.
நாம் அவரை விட்டுத் திரும்பி அவரை விட்டு விலகினோம்.
நாம் தீயவற்றுக்குத் திட்டமிட்டோம்.
தேவனுக்கு எதிராக இருக்கும் செயல்களுக்குத் திட்டமிட்டோம்.
நம்மிடம் இவற்றைப் பற்றிய எண்ணங்கள் உண்டு.
நமது இதயத்தில் இவற்றைப்பற்றி திட்டமிட்டோம்.
14 நம்மிடமிருந்து நீதி திரும்பிவிட்டது.
நேர்மையானது வெகு தொலைவில் உள்ளது.
உண்மையானது தெருக்களில் விழுந்து கிடக்கின்றது.
நன்மையானது நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
15 உண்மை போய்விட்டது.
நன்மை செய்யவேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.
கர்த்தர் பார்த்தார்.
அவரால் எந்த நன்மையும் கண்டுகொள்ள முடியவில்லை.
கர்த்தர் இதனை விரும்பவில்லை.
16 கர்த்தர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
ஜனங்களுக்கு உதவி செய்ய ஒருவனும் நிற்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே, கர்த்தர் தனது சொந்த வல்லமயையும் நீதியையும் பயன்படுத்தினார்.
கர்த்தர் ஜனங்களைக் காப்பாற்றினார்.
17 கர்த்தர் போருக்குத் தயார் செய்தார்.
கர்த்தர் நீதியை மார்புக் கவசமாக்கினார்.
இரட்சிப்பைத் தலைக்குச் சீராவாக்கினார்.
தண்டனைகள் என்னும் ஆடைகளை அணிந்துகொண்டார்.
உறுதியான அன்பைச் சால்வையாகப்போர்த்தினார்.
18 கர்த்தர் தனது பகைவர்கள்மீது கோபம் கொண்டிருக்கிறார்.
எனவே, கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
கர்த்தர் தனது பகைவர்கள் மீது கோபம்கொண்டிருக்கிறார்.
எனவே, தொலைதூர இடங்களிலுள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டிப்பார்.
கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
19 எனவே, மேற்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய நாமத்திற்கு மரியாதை தருவார்கள்.
கிழக்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய மகிமைக்கு மரியாதை தருவார்கள்.
கர்த்தர் விரைவில் வருவார்.
கர்த்தர் வேகமாகப் பாயும் ஆறு பலமான காற்றால் அடித்து வருவதுபோல் விரைந்து வருவார்.
20 பிறகு, ஒரு மீட்பர் சீயோனுக்கு வருவார். அவர் பாவம் செய்து
பிறகு தேவனிடம் திரும்பிய யாக்கோபின் ஜனங்களிடம் வருவார்.
21 கர்த்தர் கூறுகிறார், “அந்த ஜனங்களோடு நான் ஒரு உடன்படிக்கைச் செய்வேன். எனது ஆவியும் வார்த்தையும் உனது வாயில் போடப்பட்டுள்ளது. அவை உம்மை விட்டு விலகாது. நான் வாக்களிக்கிறேன். அவை உங்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் பிள்ளைகளிடமும் இருக்கும். இவை உங்களுடன் இப்பொழுதும் என்றென்றும் இருக்கும்.”
நியாயம் தீர்ப்பதைப்பற்றி போதனை(A)
7 ,“மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். 2 நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
3 ,“உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? 4 ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. 5 மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.
6 ,“புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.
தேவனிடம் கேட்டுப்பெறுதல்(B)
7 ,“தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். 8 ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
9 ,“உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. 10 அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. 11 நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?
மிகமுக்கியமான சட்டம்
12 ,“மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும்.
இரண்டு வழிகள்(C)
13 ,“பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். 14 ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.
மக்களின் செயல்களைக் கவனியுங்கள்(D)
15 ,“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். 16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. 17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். 18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. 19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். 20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.
21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.
இரண்டுவித மனிதர்கள்(E)
24 ,“என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். 25 கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.
26 ,“என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். 27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”
28 இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். 29 வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.
2008 by World Bible Translation Center