M’Cheyne Bible Reading Plan
இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவார்கள்
30 “நான் சொல்லியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு நிகழும். நீங்கள் ஆசீர்வாதங்களிலிருந்து நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் சாபங்களிலிருந்து தீமைகளைப் பெறுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவார். பிறகு நீங்கள் இவற்றைப் பற்றி நினைப்பீர்கள். 2 அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வருவீர்கள். நீங்கள் முழுமனதோடு அவரைப் பின்பற்றுவீர்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுத்திருக்கிற அவரது அனைத்து கட்டளைகளுக்கும் முழுமையாக அடிபணிவீர்கள். 3 பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் இரக்கம்கொள்வார். கர்த்தர் உங்களை மீண்டும் விடுதலை செய்து உங்களை அனுப்பிய தேசங்களிலிருந்து திரும்பக் கூட்டிச் சேர்ப்பார். 4 அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார். 5 உங்கள் முற்பிதாக்களுக்குரிய நாட்டிற்கு கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அந்நாடு உங்களுக்கு உரியதாகும். கர்த்தர் உங்களுக்கு நன்மையைச் செய்வார். உங்கள் முற்பிதாக்களுக்குரியதைவிட நீங்கள் அதிகம் பெறுவீர்கள். அவர்களிடம் இருந்த ஜனங்களைவிட உங்கள் நாட்டில் மிகுதியான ஜனங்கள் இருப்பார்கள். 6 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கீழ்ப்படிய விரும்பும்படிச் செய்வார். பிறகு நீ உன் முழு இருதயத்தோடு கர்த்தரை நேசிப்பாய். நீ வாழ்வாய்!
7 “பிறகு உனது தேவனாகிய கர்த்தர் உங்கள் பகைவர்களுக்கு அத்தீமைகளை எல்லாம் ஏற்படும்படிச் செய்வார். ஏனென்றால், அந்த ஜனங்கள் உன்னை வெறுத்து உனக்குத் தீமையைச் செய்தார்கள். 8 நீ மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவாய். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற அவரது அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிவாய். 9 உனது தேவனாகிய கர்த்தர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றி அடையும்படிச் செய்வார். அவர் உன்னை அதிகக் குழுந்தைகள் பெறும்படி ஆசீர்வதிப்பார். அவர் உனது பசுக்களை ஆசீர்வதிப்பார். அவை மிகுதியான கன்றுகளைப் பெறும். அவர் உனது வயல்களை ஆசீர்வதிப்பார். அவை நல்ல விளைச்சல் அடையும். கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பார். கர்த்தர் உனக்கு நன்மை செய்வதில் உங்கள் முற்பிதாக்களுக்கு நன்மை செய்யும் போது மகிழ்ந்ததைப்போன்று மீண்டும் மகிழ்வார். 10 ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்ய வேண்டும். நீ அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். உனது தேவனாகிய கர்த்தருக்கு நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது உனக்கு இந்த நன்மைகள் ஏற்படும்.
ஜீவன் அல்லது மரணம்
11 “இன்று நான் உனக்கு கொடுக்கிற இந்த கட்டளைகள் கடினமானவை அல்ல, உங்களுக்குத் தூரமானதும் அல்ல. 12 ‘பரலோகத்துக்குச் சென்று, எங்களுக்காக அதனைக் கொண்டுவருவது யார்? அப்பொழுதுதான் எங்களால் அதைக் கேட்கவும் அதன்படி நடக்கவும் முடியும்’ என்று நீ சொல்லாதபடிக்கு அது பரலோகத்தில் உள்ளதும் அல்ல. 13 ‘கடல் கடந்துபோய் நாங்கள் கேட்கவும், செய்யவும் யார் கொண்டு வருவார்கள்?’ என்று நீ சொல்லாதபடிக்கு அது கடலுக்கு அக்கரையிலும் இல்லை. 14 இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும்.
15 “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத் தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். 16 உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். 17 ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால். 18 நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்து விலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில் நீண்டகாலம் வாழமாட்டாய்.
19 “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். 20 நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”
யோட்
73 கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர்.
உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர்.
உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.
74 கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள்,
என்னை மதிக்கிறார்கள்.
நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
75 கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன்.
நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும்.
76 இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும்.
நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.
77 கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும்.
நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.
78 என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள்.
அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.
79 உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர்
என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.
80 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச்
செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.
கப்
81 நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.
82 நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என் கண்களோ தளர்ந்து போகின்றன.
கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்?
83 குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும்,
நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.
84 எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்?
கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்?
85 சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள்.
அது உமது போதனைகளுக்கு எதிரானது.
86 கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும்.
அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்!
87 அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.
88 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும்.
நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.
லாமேட்
89 கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.
உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
90 நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.
கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
91 உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி
கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
92 உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்
எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
93 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
94 கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
95 தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.
ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
96 உமது சட்டங்களைத் தவிர,
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
இஸ்ரவேலர்கள் தேவனைப் பின்பற்றவில்லை
57 நீதிமான்கள் அழிந்துவிட்டனர்.
எவரும் கவனிக்கவில்லை.
நல்லவர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர்.
ஆனால் ஏனென்று புரிந்துகொள்வதில்லை.
கஷ்டங்கள் வருகிறதென்றும்,
அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்களென்பதையும் அறிந்துகொள்ளவில்லை.
2 ஆனால் சமாதானம் வரும்.
ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள்.
தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள்.
3 “சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்!
உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான்.
உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்!
4 நீங்கள் கெட்டவர்கள்.
பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.
நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள்.
நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள்.
5 ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.
ஒவ்வொரு ஓடை அருகிலும் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள்.
அவர்களைப் பாறைகளில் பலி கொடுக்கிறீர்கள்.
6 ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.
அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள்.
அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள்.
ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும்.
இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா?
இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது.
7 ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய்.
அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய்.
8 பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய்.
அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய்.
அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய்.
என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய்.
கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய்.
பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய்.
9 நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய்.
தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய்.
உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும்.
10 இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும்.
ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை.
நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய்.
ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய்.
11 என்னை நீ நினைக்கவில்லை.
என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை.
எனவே யாரைப்பற்றி நீ கவலைப்பட்டாய்?
நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்?
நீ ஏன் பொய் சொன்னாய்?
கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன்.
நீ என்னை மகிமைப்படுத்தவில்லை.
12 உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது.
நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது.
ஆனால், அவை பயனற்றவை.
13 உனக்கு உதவி தேவைப்படும்போது,
அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன.
அவை உனக்கு உதவட்டும்.
ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப்போகும்.
உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும்.
ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன்
நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான்.
அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.”
கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்
14 சாலைகளைச் சுத்தம் செய்க!
சாலைகளைச் சுத்தம் செய்க!
எனது ஜனங்களுக்கு வழி தெளிவாக இருக்கும்படி தடைகளை நீக்குங்கள்!
15 தேவன் உயர்ந்தவர்!
உன்னதமானவர், தேவன் என்றென்றும் ஜீவிக்கிறார்.
தேவனுடைய நாமம் பரிசுத்தமானது.
தேவன் கூறுகிறார், “நான் உயர்ந்த பரிசுத்தமான இடத்தில் வாழ்கிறேன்.
ஆனால், அதோடு துக்கமும் பணிவும்கொண்ட ஜனங்களோடும் வாழ்கிறேன்.
நான் உள்ளத்தில் பணிவுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன்.
நான் தங்கள் இருதயங்களில் துக்கமுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன்.
16 நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன்.
நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன்.
நான் தொடர்ந்து கோபமாக இருந்தால்,
எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும்.
17 இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது.
எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன்.
நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன்.
இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது.
இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.
18 இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன்.
(மன்னிப்பேன்) நான் அவனை நடத்தி அவனுக்கு ஆறுதல் கூறுவேன்.
அவன் சமாதானம் அடையுமாறு வார்த்தைகளைச் சொல்வேன்.
பிறகு, அவனும் அவனது ஜனங்களும் துக்கத்தை உணரமாட்டார்கள்.
19 நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன்.
என்னருகிலே உள்ள ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தருவேன்.
தொலை தூரத்திலுள்ள ஜனங்களுக்கும் சமாதானத்தைத் தருவேன்.
நான் அந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்).”
கர்த்தர் தாமே இவற்றைச் சொன்னார்.
20 ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப்போன்றவர்கள்.
அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது.
அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர்.
21 “தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை”
என்று என் தேவன் கூறுகிறார்.
இயேசுவின் மலைப் பிரசங்கம்(A)
5 அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். 2 இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்:
3 ,“ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
4 இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் அவர்களைத் தேற்றுவார்.
5 பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் வாக்களித்த இடத்தை [a] அவர்கள் பெறுவார்கள்.
6 மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார்.
7 மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
8 தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
9 அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
10 நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
11 ,“உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 12 அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்.
உப்பு, ஒளி உவமைகள்(B)
13 ,“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.
14 ,“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. 15 மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. 16 அது போலவே, நீங்களும் மற்ற மனிதர்களுக்கு விளக்காக விளங்கவேண்டும். உங்களது நற்செயல்களை மற்றவர்கள் காணும்படி வாழுங்கள். பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை மக்கள் புகழ்ந்து பேசுமாறு நீங்கள் வாழுங்கள்.
இயேசுவும் பழைய ஏற்பாடும்
17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.
19 ,“ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.
கோபத்தைப் பற்றிய போதனை
21 ,“‘எவரையும் கொல்லாதே. [b] கொலை செய்கிறவன் தண்டிக்கப்படுவான்’ என்று வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். அனைவரும் உங்கள் சகோதரர்களே. நீங்கள் மற்றவர்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். மற்றவருக்கு எதிராகத் தீயவைகளைச் சொன்னால் யூத ஆலோசனைக் குழுவினால் தண்டிக்கப்படுவீர்கள். வேறொரு மனிதனை முட்டாள் என்று நீங்கள் அழைத்தால், நரகத் தீயின் ஆபத்துக்குள்ளாவீர்கள்.
23 ,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 ,“உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்தால், அவனுடன் விரைவாக நட்பாகுங்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அதைச் செய்ய வேண்டும். அவனுடன் நட்பாகாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான். மேலும், நீதிபதி உங்களைச் சிறையிலடைக்க காவலரிடம் ஒப்படைப்பார். 26 நான் சொல்லுகிறேன், நீங்கள் கொடுக்கவேண்டியது அனைத்தையும் கொடுத்துத் தீர்க்கிறவரையிலும் உங்களால் அந்தச் சிறையை விட்டு மீளமுடியாது.
கற்பைக் குறித்த போதனை
27 ,“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ [c] என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.
விவாகரத்துப்பற்றிய போதனை(C)
31 ,“‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’ [d] என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.
வாக்குறுதிகளைப்பற்றிய போதனை
33 ,“‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’ [e] என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். 35 பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா இராஜாவின் நகரம். 36 உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது. 37 ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.”
பழிவாங்குதல் பற்றிய போதனை(D)
38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ [f] என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.
அனைவரையும் நேசியுங்கள்(E)
43 ,“‘உன் சினேகிதனை நேசி. [g] உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center