M’Cheyne Bible Reading Plan
ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள்
27 மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும்
(தலைவர்கள்) இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசினார்கள். மோசே, “இன்று நான் கொடுக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். 2 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக கொடுத்திருக்கிற நாட்டிற்குள் போகும்படி நீங்கள் விரைவில் யோர்தான் ஆற்றைக் கடப்பீர்கள். அந்த நாளில் நீங்கள் பெரிய கற்களை நாட்டவேண்டும். அக்கற்களைச் சாந்து பூசி மூடி 3 பிறகு அக்கற்களின் மேல் இந்த கட்டளைகளையும், போதனைகளையும் எழுத வேண்டும். நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்தவுடன் இதனைச் செய்யவேண்டும். பிறகு நீங்கள் அந்த நாட்டிற்குள் போகலாம். அதை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்நாடு பல நன்மைகளால் நிறைந்தது. உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் இந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.
4 “யோர்தான் ஆற்றைக் கடந்து நீங்கள் போனதும், நான் இன்று கட்டளையிடுகின்றவற்றை நீங்கள் செய்யவேண்டும். அக்கற்களை நீங்கள் ஏபால் மலையின் மேல் நாட்ட வேண்டும். நீங்கள் இக்கற்களைச் சாந்து பூசி மூடவேண்டும். 5 அதோடு சில கற்களைப் பயன்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். கற்களை வெட்டுவதற்கு இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். 6 உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலிபீடம் கட்டும்போது செதுக்கின கற்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு இப்பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துங்கள். 7 நீங்கள் சமாதான பலிகளையும் அங்கே செலுத்தி அதனை உண்ணவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைச் சேர்ந்து உண்டு உங்களுக்குள் மகிழுங்கள். 8 நீங்கள் நாட்டிய கற்களில் இந்தப் போதனைகளையெல்லாம் தெளிவாக எழுதவேண்டும். அதனால் அவற்றை வாசிக்க சுலபமாக இருக்கும்” என்றான்.
சட்டத்தின் சாபங்களை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்கள்
9 மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, “அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். 10 எனவே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இன்று அவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.
11 அதே நாளில் மோசே ஜனங்களிடம் இதையும் சொன்னான், 12 “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள். 13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.
14 “லேவியர் உரத்தக் குரலில்:
15 “‘பொய்த் தெய்வங்களைச் செய்து இரகசியமான இடத்தில் அதனை ஒளித்து வைப்பவன் சபிக்கப்பட்டவன். அந்த பொய்த் தெய்வங்கள் எல்லாம் சித்திரவேலைக்காரர்களால் மரத்தாலும் கல்லாலும் அல்லது உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலைகள். கர்த்தர் அவற்றை வெறுக்கின்றார்!’ என்று அவர்கள் சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
16 “லேவியர்கள், ‘தன் தகப்பனுக்கும் தாய்க்கும் மரியாதை செய்யாமலிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
17 “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
18 “லேவியர், ‘குருடனை வழிதப்பச் செய்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“பிறகு எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
19 “லேவியர், ‘அயல் நாட்டவர், அநாதைகள், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
20 “லேவியர், ‘தனது மாற்றாந்தாயோடு பாலின உறவு வைத்துக்கொள்பவன் சபிக்கப்பட்டவன். ஏனென்றால், அவன் தன் தந்தைக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறான்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
21 “லேவியர், ‘யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
22 “லேவியர், ‘தன் சகோதரியோடும், சகோதரி உறவுள்ளவர்களோடும் பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
23 “லேவியர், ‘தன் மாமியாரோடு பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
24 “லேவியர், ‘மற்றொருவனைக் கொல்லுகிறவன், பிடிபடாமல் இருந்தால் கூட, சபிக்கப்பட்டவனாக இருப்பான்’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
25 “லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
26 “லேவியர், ‘இந்த சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் ஆதரிக்காமலும் அதற்குக் கீழ்ப்படியும்படி அதற்கு ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள்
28 “இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். 2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:
3 “நகரத்திலும் வயலிலும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
4 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து
உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார்.
அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார்.
அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார்.
அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார்.
அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார்.
அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களது கூடைகளையும்,
பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
6 கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார்.
7 “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள்.
8 “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார். 9 கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார். 10 பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.
11 “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார். 12 கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது. 13 கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலாவீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். 14 நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது.
சட்டங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் எற்படும் சாபங்கள்
15 “ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொல்கின்றவற்றைக் கவனிக்காமல் இருந்தால், நான் இன்று உனக்கு சொல்கின்றபடி அவரது சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு இத்தீமைகள் எல்லாம் உனக்கு ஏற்படும்:
16 “நகரிலும், வயலிலும்
கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
17 கர்த்தர் உனது கூடைகளையும், பாத்திரங்களையும் சபிப்பார்.
அவற்றில் உணவு இல்லாமல் போகும்.
18 கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
உனக்கு அதிகக் குழந்தைகள் இல்லாமல் போகும்.
அவர் உனது நிலத்தைச் சபிப்பார்.
உனக்கு நல்ல விளைச்சல் கிடைக்காமல் போகும்.
அவர் உனது மிருகங்களைச் சபிப்பார்.
அவை குட்டிகள் அதிகம் இல்லாமல் போகும்.
அவர் உனது எல்லா கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் சபிப்பார்.
19 கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார்.
ஆலெப
119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
2 கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
3 அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
4 கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
5 கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
6 நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
7 உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
8 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!
பேத்
9 ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்?
உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
10 நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.
தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
11 நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
12 ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
13 உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
14 வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்
கற்பதில் களிப்படைவேன்.
15 நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.
உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
16 நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.
உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.
கிமெல்
17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
தேவன் அவரது ஜனங்களை வீட்டிற்குக் கொண்டு வருகிறார்
54 “பெண்களே மகிழ்ச்சியோடு இருங்கள்!
உங்களுக்கு எந்தப் பிள்ளைகளும் இல்லை.
ஆனால், நீங்கள் மிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்!”
கர்த்தர் கூறுகிறார்,
“தனியாக இருக்கும் பெண் கணவனோடு இருக்கும் பெண்ணைவிட மிகுதியான பிள்ளைகளைப் பெறுவாள்.”
2 “உனது கூடாரத்தைப் பெரிதாக்கு.
உனது கதவுகளை அகலமாகத் திற.
உன் வீட்டில் சேர்த்துக்கொள்வதை நிறுத்தாதே.
உனது கூடாரத்தைப் பெரிதாகவும் பலமாகவும் செய்.
3 ஏனென்றால், நீ மிகவும் வளருவாய்.
உனது பிள்ளைகள் பல நாடுகளிலிருந்து ஜனங்களைப் பெறுவார்கள்.
உனது பிள்ளைகள், அழிந்துபோன இந்த நகரத்தில் மீண்டும் வாழ்வார்கள்.
4 அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய்.
உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள்.
நீ இலச்சையடைவதில்லை.
நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய்.
ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய்.
நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய்.
5 ஏனென்றால், உன் கணவனாகிய ஒருவரே (தேவன்) உன்னைச் செய்தவர்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவர் அவர் ஒருவரே.
அவர் இஸ்ரவேலின் பரிசுத்தமானவர்.
அவர் பூமி முழுவதற்குமான தேவன் என்று அழைக்கப்படுவார்.
6 “கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.
உன் ஆவியில் மிகவும் துக்கமுடையவளாக இருந்தாய்.
ஆனால், கர்த்தர் அவருடையவளாக உன்னை அழைத்தார்.
இளம் வயதில் திருமணம் செய்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணைப்போன்று நீ இருந்தாய்.
ஆனால், தேவன் உன்னை அவருடையவளாக அழைத்தார்.”
7 தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன்.
ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான்.
நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன்.
நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன்.
8 நான் மிகவும் கோபம்கொண்டேன்.
கொஞ்ச காலத்திற்கு உன்னிடமிருந்து மறைந்திருந்தேன்.
ஆனால் என்றென்றும் உன்னைத் தயவுடன் ஆறுதல்படுத்துவேன்” உனது மீட்பரான கர்த்தர் இதனைக் கூறினார்.
9 தேவன் கூறுகிறார், “நினைவுகொள்!
நோவாவின் காலத்தில் நான் உலகத்தை வெள்ளத்தால் தண்டித்தேன்.
ஆனால், நான் மீண்டும் இந்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்கமாட்டேன் என்று நோவாவிற்கு வாக்குறுதி அளித்தேன்!
இதே வழியில், நான் மீண்டும் கோபங்கொண்டு உன்னைக் கடிந்துகொள்வதில்லை என்று வாக்களிக்கிறேன்.”
10 கர்த்தர் கூறுகிறார், “மலைகள் மறைந்து போகலாம்!
குன்றுகள் புழுதி (தூள்) ஆகலாம்! ஆனால், எனது தயவு உன்னைவிட்டு விலகாது!
நான் உன்னோடு சமாதானம் செய்துகொள்வேன்.
அது எப்பொழுதும் முடிவுபெறாது” கர்த்தர் உன்மீது இரக்கம் காட்டுகிறார்.
இவற்றையெல்லாம் சொன்னவர் அவர் ஒருவரே.
11 “ஏழை நகரமே!
பகைவர்கள் புயலைப்போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.
நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன்.
நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன்.
12 சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன்.
நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன்.
உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.
13 உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார்.
உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள்.
14 நீ நன்மையால் கட்டப்படுவாய்.
எனவே நீ கொடுமை மற்றும் அச்சத்திலிருந்து காப்பாற்றப்படுவாய்.
உனக்குப் பயப்படுவதற்கு எதுவுமில்லை.
உன்னை எதுவும் பாதிக்காது.
15 உனக்கு எதிராக எந்தப் படையும் போரிடாது.
எந்தப் படையாவது உன்னைத் தாக்க முயன்றால், நீ அந்தப் படையைத் தோற்கடிப்பாய்.”
16 “பார், நான் கொல்லனைப் படைத்தேன். அவன் நெருப்பை ஊதி மேலும் சூடாக்குகிறான். பிறகு, அவன் சூடான இரும்பை எடுத்து அவனது விருப்பம்போல் கருவிகளைச் செய்கிறான். அதே வழியில் பொருள்களை அழிக்கின்ற அழிவுக்காரனையும் படைத்தேன்.
17 “ஜனங்கள் உனக்கு எதிராகப்போரிட ஆயுதங்களைச் செய்வார்கள். ஆனால், அந்த ஆயுதங்கள் உங்களைத் தோற்கடிக்காது. சிலர் உங்களுக்கு எதிராகச் சிலவற்றை சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் உனக்கு எதிராகப் பேசும்போது அது தவறு என்று காட்டப்படும்.”
கர்த்தர் கூறுகிறார், “கர்த்தருடைய ஊழியர்கள் எதைப் பெறுவார்கள்? என்னிடமிருந்து வரும் நியாயமான நன்மை மட்டும் பெறுவார்கள்.”
ஞானிகளின் வருகை
2 யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார். அவர் ஏரோது மன்னன் காலத்தில் பிறந்தார். அதன் பின்பு இயேசு பிறந்தவுடன், சில ஞானிகள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்தனர். 2 அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் அரசரான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள்.
3 ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். 4 ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். 5 அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,
6 “‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே,
உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு.
ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார்.
அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ (A)
என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள்.
7 பின், கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுடன் ஏரோது இரகசியமாகப் பேசி அவர்கள் முதன் முதலில் நட்சத்திரத்தைக் கண்ட காலத்தை அவர்களிடமிருந்து அறிந்தான். 8 ஏரோது அந்த ஞானிகளிடம், “நீங்கள் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்க இயலும்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9 மன்னன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஞானிகள் அங்கிருந்து செல்லும்போது அவர்கள் கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை மீண்டும் பார்த்தனர். ஞானிகள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாலேயே சென்று குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. 10 நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர்.
11 குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர். 12 அதன் பின்னர் தேவன் ஞானிகளின் கனவில் தோன்றி அவர்களை ஏரோது மன்னனிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என எச்சரித்தார். எனவே, ஞானிகள் வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல்
13 ஞானிகள் சென்றபின், யோசேப்பின் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பிச்செல். ஏரோது குழந்தையைத் தேடத் தொடங்குவான். ஏரோது குழந்தையைக் கொல்ல விரும்புகிறான். எனவே, நான் சொல்லுகிறவரைக்கும் எகிப்தில் தங்கியிரு” என்று சொன்னான்.
14 எனவே யோசேப்பு விழித்தெழுந்து குழந்தையுடனும் அதன் தாயுடனும் இரவிலே எகிப்துக்குப் புறப்பட்டான். 15 ஏரோது மரிக்கும்வரையில் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தனர். “எகிப்திலிருந்து என் மகனை வெளியே வரவழைத்தேன்” [a] என்று தீர்க்கதரிசியின் வழியாக தேவன் சொல்லியதின் நிறைவேறுதலாக இது நடந்தேறியது.
பெத்லகேமின் ஆண் குழந்தைகளைக் கொல்லுதல்
16 ஞானிகள் தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமுற்றான். குழந்தை பிறந்த காலத்தை ஏரோது ஞானிகளிடமிருந்து அறிந்திருந்தான். இதற்குள் இரண்டு வருடங்களாகி இருந்தன. எனவே, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான். ஆகவே, இரண்டும் அதற்குக் குறைவான வயதுடையதுமாகிய எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட ஆணையிட்டான். 17 தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது.
18 “ராமாவிலே ஒரு குரல் கேட்டது.
துக்கத்தின் மிகுதியில் வந்த கதறல் அது.
தன் குழந்தைகளுக்காக அழுகிறாள், ராகேல்.
அவளைத் தேற்ற முடியாது,
ஏனெனில் அவளது குழந்தைகள் இறந்துவிட்டன.” (B)
எகிப்தில் இருந்து திரும்புதல்
19 ஏரோது இறந்தபின், யோசேப்பின் கனவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் தோன்றினான். இது யோசேப்பு எகிப்தில் இருக்கும்போது நடந்தது. 20 தூதன் அவனிடம், “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு இஸ்ரவேலுக்குச் செல். ஏனெனில் குழந்தையைக் கொல்ல முயன்றவர்கள் இப்பொழுது இறந்துவிட்டனர்” என்றான்.
21 ஆகவே, யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றான். 22 அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் என்பதை யோசேப்பு கேள்வியுற்றான். தன் தந்தை ஏரோது இறந்தபின் அர்கெலாயு யூதேயாவின் மன்னனானான். இவ்வாறு, யூதேயாவுக்குச் செல்ல யோசேப்பு தயங்கினான். யோசேப்பு கனவில் எச்சரிப்படைந்து அங்கிருந்து கலிலேயா பகுதிக்குச் சென்றான். 23 யோசேப்பு நாசரேத் என்னும் நகருக்குச் சென்று அங்கு வசித்தான். எனவே தேவன் தீர்க்கதரிசிகள் வாயிலாக “கிறிஸ்து நசரேயன் [b] என்று அழைக்கப்படுவார்” என சொன்னது நடந்தேறியது.
2008 by World Bible Translation Center