M’Cheyne Bible Reading Plan
முதல் அறுவடை
26 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடிகொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள். 2 கர்த்தர் உங்களுக்கு வழங்கிய நிலத்தில் விளைந்தவற்றை நீங்கள் அறுவடை செய்யும்போது, உங்களின் விளைச்சலின் முதல் பலனை கூடைகளில் எடுத்து வைத்துவிட வேண்டும். பின் நீங்கள் அறுவடை செய்ததின் முதல் பங்கை எடுத்துக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த அவரது ஆலயத்திற்கு கொண்டுசென்று, 3 அங்கே ஆலய சேவையில் இருக்கின்ற ஆசாரியரிடம்: ‘கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். இன்று தேவனாகிய கர்த்தரிடத்தில், நான் அந்தத் தேசத்திற்கு வந்து விட்டேன் என்று அறிக்கையிடுகிறேன்’ என்று கூறு.
4 “பின் அந்த ஆசாரியன் உன்னிடமிருந்து அந்தக் கூடையை எடுத்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பு வைப்பான். 5 பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர். 6 எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். 7 பின் நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தோம். அவர்களைப்பற்றி முறையீடு செய்தோம். கர்த்தர் நாங்கள் கூறியவற்றைக் கேட்டார். எங்களது இன்னல்களையும், கடின உழைப்பையும், நாங்கள் அடைந்த வருத்தங்களையும் கர்த்தர் பார்த்தார். 8 பின் கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைத் தனது மிகுந்த ஆற்றலாலும், பலத்தினாலும் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் மிகுந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பயன்படுத்தினார். வியக்கத்தக்க நிகழ்ச்சிகளைச் செய்தார். 9 அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார். 10 இப்போதும் இதோ கர்த்தாவே நீர் எங்களுக்குத் தந்த தேசத்திலிருந்து நாங்கள் பெற்ற முதல் அறுவடையின் பலனைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று சொல்ல வேண்டும்.
“பின் நீங்கள் அந்த அறுவடையின் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு வைத்து தாழ்ந்து பணிந்து அவரை ஆராதிக்க வேண்டும். 11 பின் நீங்கள் சேர்ந்து உண்டு மகிழ்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அந்த நன்மைகளில் எல்லாம் லேவியர்களுக்கும் மற்றும் உங்களைச் சார்ந்து வாழ்கின்ற அந்நியர்களுக்கும் பங்களிக்க வேண்டும்.
12 “ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும் பத்தில் ஒரு பங்கைச் செலுத்தும் ஆண்டாக இருக்கவேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் அறுவடைப் பலனில் பத்திலொரு பங்கை லேவியருக்கும், உங்கள் நாட்டில் வாழும் அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் கொடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு நகரத்திலும் அந்த ஜனங்கள் தாராளமாக, திருப்தியாக உண்டு மகிழ்வார்கள். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம், ‘கர்த்தாவே, நான் எனது வீட்டிலிருந்து எனது அறுவடைப் பலனின் பரிசுத்த பங்கு ஒன்றை வெளியே எடுத்துவந்து லேவியருக்கும், அயல் நாட்டு குடிகளுக்கும், அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுத்துள்ளேன். நீர் எனக்குத் தந்த எல்லா கட்டளைகளையும் நான் பின்பற்றியுள்ளேன். நான் உமது எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்ததில்லை. அவற்றை மறந்ததுமில்லை. 14 நான் துக்கமாயிருந்தபோது அதில் எதையும் உண்ணவில்லை. நான் சுத்தமில்லாதவனாக இருந்தபோது அவற்றை சேகரிக்கவில்லை. நான் மரித்தவர்களுக்காக அதிலிருந்து எந்த உணவையும் செலுத்தவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்து இருந்தேன். என் தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் எல்லா செயல்களையும் செய்துள்ளேன். 15 தேவனே பரலோகத்தில் உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து என்னைப் பாரும். உமது இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதியும். நீர் எங்களுக்குக் கொடுத்த தேசத்தை ஆசீர்வதிப்பீராக. எங்கள் முற்பிதாக்களிடம் ஆணையிட்டபடி எல்லா வளங்களும் கொண்ட பாலும், தேனும் ஓடக் கூடிய நீர் தந்த இந்த தேசத்தை ஆசீர்வதியும்’ என்று கூறுவீர்களாக.
தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்
16 “இந்த எல்லாச் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய, உங்கள் தேவனாகிய கர்த்தர் இன்று உங்களுக்குக் கட்டளையிடுகின்றார். நீங்கள் உங்கள் ஆத்ம திருப்தியுடனும், முழு மனதோடும், அவற்றைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாய் இருங்கள்! 17 இன்று நீங்கள் கர்த்தரே உங்கள் தேவன் என்று சொல்லியிருக்கிறீர்கள்! தேவன் விரும்பிய நெறிப்படியே நீங்கள் வாழ்வதாக வாக்களித்துள்ளீர்கள்! அவரது போதனைகளுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும், நீங்கள் கீழ்ப்படிவதாக உறுதி செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும்படி கர்த்தர் உங்களுக்குச் சொல்லிய ஒவ்வொன்றையும் செய்வதாகச் சொன்னீர்கள். 18 இன்று உங்களெல்லோரையும் கர்த்தருடைய சிறப்புக்குரிய சொந்த ஜனங்களாக கர்த்தர் ஏற்றுக்கொண்டார்! அவர் இப்படிச் செய்ய உங்களிடம் வாக்களித்துள்ளார். அவரது கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கர்த்தர் சொன்னார். 19 கர்த்தர் தாம் படைத்த மற்றெல்லா ஜனங்களையும்விட, புகழும், பெருமையும், மதிப்பும் கொண்ட சிறந்தவர்களாக உங்களை ஆக்கியுள்ளார். கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடியே, நீங்களும் அவருக்குச் சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்க வேண்டும்.”
117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
2 தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.
கர்த்தரைத் துதிப்போம்!
118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
5 நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
53 நாங்கள் சொல்வதை யார் உண்மையில் நம்பினார்கள்? கர்த்தருடைய தண்டனையை உண்மையில் யார் ஏற்றுக்கொண்டார்கள்?
2 கர்த்தருக்கு முன்னால் அவர் சிறு செடியைப்போன்று வளர்ந்தார். வறண்ட பூமியில் அவர் வேர் விட்டு வளருவது போன்றிருந்தார். அவர் சிறப்பாகக் காணப்படவில்லை. அவருக்குத் தனியான விசேஷ மகிமை காணப்படவில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க சிறப்பான உருவம் அவருக்கு இல்லை. 3 ஜனங்கள் அவரைக் கேலி செய்தனர். அவரது நண்பர்கள் விலகினார்கள். அவர் மிகுதியான வலிகொண்ட மனிதராக இருந்தார். அவர் நோயை நன்றாக அறிந்திருந்தார். ஜனங்கள் அவரைப் பார்க்காமல் அசட்டை செய்தனர். நாம் அவரைக் கவனிக்கவில்லை.
4 ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம். 5 ஆனால், நாம் செய்த தவறுகளுக்குத் துன்பப்படவே அவர் வேதனையைப் பெற்றார். நமது குற்றங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார். நாம் கொண்ட கடனுக்காக நமது தண்டனை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது காயங்களால் நாம் சுகமடைந்திருக்கிறோம். (மன்னிக்கப்பட்டோம்). 6 ஆனால், இதனைச் செய்தபிறகு நாம் ஆடுகளைப்போல அலைந்துகொண்டிருந்தோம். நம்மில் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் சென்றோம். கர்த்தர் நம் குற்றத்திலிருந்து நம்மை விடுதலை செய்து நமது குற்றங்களை அவர்மீது போட்ட பிறகும் நாம் இதனைச் செய்தோம்.
7 அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை. 8 மனிதர்கள் அவரைப் பலவந்தமாகப் பிடித்தனர், அவரை அவர்கள் நேர்மையாக நியாயந்தீர்க்கவில்லை. எவரும் அவரது எதிர்காலக் குடும்பத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர் உயிரோடு வாழ்கிறவர்களின் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டார். எனது ஜனங்களின் பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.
9 அவர் மரித்தார், செல்வந்தர்களோடு புதைக்கப்பட்டார். அவர் தீயவர்களோடு புதைக்கப்பட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் எப்பொழுதும் பொய் சொன்னதில்லை, இருந்தாலும் இவை அவருக்கு ஏற்பட்டன.
10 அவரை நசுக்கிவிட கர்த்தர் முடிவுசெய்தார். அவர் துன்பப்படவேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்தார். எனவே அந்தத் தாசன் தன்னைத்தானே மரிக்க அனுமதித்தார். ஆனால், மிக நீண்ட காலத்திற்குப் புதிய வாழ்க்கை வாழ்வார். அவரது ஜனங்களை அவர் பார்ப்பார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்பினாரோ அதனை அவர் முழுமையாகச் செய்துமுடிப்பார்.
11 அவர் தனது ஆத்துமாவில் பல்வேறு வகையில் துன்புறுவார். ஆனால் அவர் நடக்கும் நல்லவற்றைப் பார்ப்பார். அவர் தான் கற்றுக்கொண்டவற்றின் மூலம் திருப்தி அடைவார்.
எனவே, “எனது நல்ல தாசன் பல ஜனங்களைக் குற்றத்திலிருந்து விடுவிப்பார். அவர்களது பாவங்களை அவர் எடுத்துக்கொள்வார். 12 இந்தக் காரணத்திற்காக, என் ஜனங்களிடையே அவரை நான் பெரிய மனிதராக்குவேன். அவர் பலமுள்ள ஜனங்களோடு அனைத்து பொருள்களின் பங்கையும் பெறுவார். நான் இதனை அவருக்காகச் செய்வேன். ஏனென்றால், அவர் ஜனங்களுக்காக தன் உயிரைக் கொடுத்து மரித்தார். ஜனங்கள் அவரை ஒரு பயங்கரக் குற்றவாளி எனக் கூறினார்கள். ஆனால் உண்மையென்னவெனில் அவர் பல்வேறு ஜனங்களின் பாவங்களை தம்மேல் சுமந்துகொண்டார். இப்போது அவர் பாவம் செய்த ஜனங்களுக்காகப் பேசுகிறார்.”
இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு(A)
1 இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.
ஈசாக்கின் மகன் யாக்கோபு.
யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும்
அவன் சகோதரர்களும்.
3 யூதாவின் மக்கள் பாரேசும்
சாராவும்
(அவர்களின் தாய் தாமார்.)
பாரேசின் மகன் எஸ்ரோம்.
எஸ்ரோமின் மகன் ஆராம்.
4 ஆராமின் மகன் அம்மினதாப்.
அம்மினதாபின் மகன் நகசோன்.
நகசோனின் மகன் சல்மோன்.
5 சல்மோனின் மகன் போவாஸ்.
(போவாசின் தாய் ராகாப்.)
போவாசின் மகன் ஓபேத்.
(ஓபேத்தின் தாய் ரூத்.)
ஓபேத்தின் மகன் ஈசாய்.
6 ஈசாயின் மகன் அரசனான தாவீது.
தாவீதின் மகன் சாலமோன்.
(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)
7 சாலமோனின் மகன் ரெகொபெயாம்.
ரெகொபெயாமின் மகன் அபியா.
அபியாவின் மகன் ஆசா.
8 ஆசாவின் மகன் யோசபாத்.
யோசபாத்தின் மகன் யோராம்.
யோராமின் மகன் உசியா.
9 உசியாவின் மகன் யோதாம்.
யோதாமின் மகன் ஆகாஸ்.
ஆகாஸின் மகன் எசேக்கியா.
10 எசேக்கியாவின் மகன் மனாசே.
மனாசேயின் மகன் ஆமோன்.
ஆமோனின் மகன் யோசியா.
11 யோசியாவின் மக்கள் எகொனியாவும்
அவன் சகோதரர்களும்.
(இக்காலத்தில்தான் யூதர்கள்
பாபிலோனுக்கு அடிமைகளாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.)
12 அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்:
எகொனியாவின் மகன் சலாத்தியேல்.
சலாத்தியேலின் மகன் சொரொபாபேல்.
13 சொரொபாபேலின் மகன் அபியூத்.
அபியூத்தின் மகன் எலியாக்கீம்.
எலியாக்கீமின் மகன் ஆசோர்.
14 ஆசோரின் மகன் சாதோக்.
சாதோக்கின் மகன் ஆகீம்.
ஆகீமின் மகன் எலியூத்.
15 எலியூத்தின் மகன் எலியாசார்.
எலியாசாரின் மகன் மாத்தான்.
மாத்தானின் மகன் யாக்கோபு.
16 யாக்கோபின் மகன் யோசேப்பு.
யோசேப்பின் மனைவி மரியாள்.
மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என
அழைக்கப்பட்டவர் இயேசுவே.
17 எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு(B)
18 இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். 19 மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.
20 யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 21 அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு [a] எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.
22 இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே: 23 “கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” [b] (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)
24 விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். 25 ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு, “இயேசு” எனப் பெயரிட்டான்.
2008 by World Bible Translation Center