Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 24

24 “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்பு அவளிடத்தில் ஏதோ இரகசியமான காரியத்தைக் கண்டு, அதனால் அவள் மீது விருப்பமில்லாதவன் ஆகக்கூடும். அவன் அவளோடு மகிழ்ச்சியாய் இருக்கவில்லையென்றால், விவாகரத்து எழுதிக்கொடுத்து அவளைத் தன் வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும். அவள் அவனது வீட்டைவிட்டுப் போனபின்பு வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம். 3-4 ஆனால் அவளின் அந்த புதிய கணவனும் அவளை விரும்பாது, மீண்டும் அனுப்பிவிட்டால், அவனும் அவளுக்கு விவாகரத்து எழுதிக்கொடுக்கவேண்டும். அல்லது அவன் மரித்துப் போக நேரிட்டால், அதன் பின்பு அவளின் முதல் கணவன் அவளை மீண்டும் மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அவள் அவனுக்கு அசுத்தமானவளாகிவிட்டவள். அப்படி அவன் அவளை மீண்டும் மணந்துகொள்வான் என்றால், அவன் கர்த்தர் வெறுக்கின்ற காரியங்களைச் செய்கின்றான் என்பதாகும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த தேசத்தில் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது.

“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் திருமணம் செய்திருந்தால், அவன் தரைப் படையில் சேவை செய்யப் புறப்பட்டு செல்லவேண்டாம். அதுமட்டுமின்றி வேறு எந்த சிறப்புப் பணியிலும் அவன் ஈடுப்படக் கூடாது. அவன் ஓராண்டிற்குத் தன் வீட்டில் தான் விரும்பியபடி இருந்து, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும்.

“நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்.

“ஒருவன் தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேல் சகோதரன் ஒருவனை கடத்திச் சென்று அவனை அடிமையாக விற்று ஆதாயம் தேடினால், அந்த ஆட்களைக் கடத்தும் திருடனைக் கொன்றுவிட வேண்டும். அவ்வாறாக இந்தத் தீமையை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.

“நீங்கள் தொழுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளானால் லேவியராகிய ஆசாரியர்கள் உங்களுக்கு சொல்வதைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். இதற்காக நான் ஆசாரியரிடம் கொடுத்த கட்டளையின்படியே நீங்கள் செய்ய எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறி புறப்பட்டு வருகின்ற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

10 “நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம். 11 வெளியே நின்றுவிடுங்கள். பின் அவன் நீங்கள் கொடுத்த கடனுக்கான அடமானத்தை வெளியில் வந்து தருவான். 12 ஒருவேளை அவன் ஏழையாக இருந்தால், (அவன் போர்த்திக்கொள்ள வைத்திருந்த ஆடைகளை கொடுக்க முன் வந்தால்), நீங்கள் அவற்றை இரவு முழுவதும் வைத்துக்கொள்ளாதீர்கள். 13 நீங்கள் அவற்றை ஒவ்வொரு நாள் மாலையிலும் அவனிடம் கொடுத்துவிட வேண்டும். அது அவன் தூக்கத்திற்கு அவசியமானதாகும். அவன் உங்களை ஆசீர்வதிப்பான். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு இத்தகைய நல்ல செயல் உன் வாழ்வின் நியாயத்தை ஏற்கச் செய்திடும்.

14 “நீங்கள் உங்களிடம் காண்கின்ற ஏழை எளிய கூலிக்காரனை வஞ்சனை செய்யக் கூடாது. உங்கள் நகரங்களில் வசிக்கின்ற அந்நியர்களிடமும் அல்லது உங்களது இஸ்ரவேல் சகோதரர்களிடமும் இத்தகைய வஞ்சனை செயல்களைச் செய்யாதீர்கள். 15 அவர்களது ஊதியத்தை ஒவ்வொரு நாள் சாயங்காலத்திலும் கொடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவன் அந்த சம்பளத்தையே எதிர்ப்பார்த்து வாழ்கின்ற ஏழையாக இருக்கின்றான். நீங்கள் அப்படி அவனுக்கு கொடுக்கவில்லையென்றால் அவன் கர்த்தரிடம் உங்களுக்கு எதிராக முறையிடுவான். நீங்கள் பாவம் செய்தவராகிவிடுவீர்கள்.

16 “பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.

17 “உங்களைச் சார்ந்துள்ள அந்நியர்களையும், அநாதைகளையும், நியாயமாகவே நடத்துவதில் உறுதிகொண்டு இருக்க வேண்டும். விதவைகளின் ஆடைகள் துணிமணிகளை அடமானமாக ஒருபோதும் வாங்கிகொள்ளக்கூடாது. 18 எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.

19 “நீங்கள் உங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்து எடுத்து வரும்போது கொஞ்சம் தானியத்தை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்கள் என்றால் அவற்றை எடுக்க நீங்கள் திரும்பிச் செல்லக்கூடாது. அவை அந்நியர்களுக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் இருக்கட்டும். கொஞ்சம் தானியத்தை அவர்களுக்காக அங்கேயேவிட்டு வந்தால், உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பார். 20 நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 21 நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டங்களில் திராட்சைப் பழங்களைப் பறித்து சேர்த்த பின்பு தப்பிக்கிடக்கும் பழங்களைப் பறிப்பதற்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டாம். அந்தத் திராட்சைப் பழங்கள் உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 22 நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சங்கீதம் 114-115

114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
    யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
    இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
    யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
    பூமி நடுங்கி அதிர்ந்தது.
கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
    கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
    மகிமை உமக்கே உரியது.
    உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
எங்கள் தேவன் எங்கே என்று
    ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
    அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
    அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
    அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
    அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
    அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
    அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
அச்சிலைகளைச் செய்து,
    அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
    கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
    கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
    உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
    அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
    ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
    கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
    இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.

அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

ஏசாயா 51

ஆபிரகாமைப்போன்று இஸ்ரவேலர் இருக்க வேண்டும்

51 “உங்களில் சிலர் நல்வாழ்வு வாழக் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள். உதவிக்காக நீங்கள் கர்த்தரிடம் போகிறீர்கள். என்னைக் கவனியுங்கள்! உங்கள் தந்தையான ஆபிரகாமை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் கன்மலையாகிய அவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்கள். ஆபிரகாம் உங்களுடைய தந்தை. நீங்கள் அவனைப் பாருங்கள்! நீங்கள் சாராளைப் பாருங்கள்! உங்களைப் பெற்றவள் அவள். நான் அழைக்கும்போது ஆபிரகாம் தனியாக இருந்தான். பிறகு நான் அவனை ஆசீர்வதித்தேன். அவன் பெரிய குடும்பமாக ஆனான். அவனிடமிருந்து ஏராளமான ஜனங்கள் வந்தனர்”.

அதே வழியில், கர்த்தர் சீயோனையும் அவளது எல்லா பாழான இடங்களையும் தேற்றுவார். அவளுக்காகவும், அவளது ஜனங்களுக்காகவும் கர்த்தர் வருத்தப்படுவார். அவளுக்காக அவர் பெரிய செயல்களைச் செய்வார். கர்த்தர் வனாந்திரத்தை மாற்றுவார். வனாந்திரம் ஏதேன் தோட்டத்தைப்போன்ற தோட்டமாகும். அந்தத் தேசம் காலியாய் இருந்தது. ஆனால் இது கர்த்தருடைய தோட்டம் போலாகும். அங்குள்ள ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் வெற்றியைக் குறித்தும், நன்றிகூறியும் பாடுவார்கள்.

“எனது ஜனங்களே! என்னைக் கவனியுங்கள்!
    எனது முடிவுகள் ஜனங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் காட்டும் வெளிச்சங்களாக இருக்கும்.
நான் நியாயமாக இருப்பதை விரைவில் காட்டுவேன். நான் விரைவில் உன்னைக் காப்பாற்றுவேன்.
    நான் எனது வல்லமையைப் பயன்படுத்தி நாடுகளை எல்லாம் நியாயம்தீர்ப்பேன்.
துரமான இடங்கள் எல்லாம் எனக்காகக் காத்திருக்கின்றன.
    அவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள என் வல்லமைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வானத்தைப் பாருங்கள்!
    கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள்
வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப்போன்றும்,
    பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப்போன்றும் ஆகும்.
பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள்.
    ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும்.
    எனது நன்மைக்கு முடிவு இராது.
நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும்.
    என் போதனைகளைப் பின்பற்றுகிற ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.
தீயவர்களுக்காக அஞ்சவேண்டாம்!
    அவர்கள் உன்னைப்பற்றிச் சொல்லும் தீயவற்றுக்கு அஞ்ச வேண்டாம்!
ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப்போன்றவர்கள்.
    அவற்றைப் பொட்டுப்பூச்சிகள் உண்ணும் அவர்கள் மரக் கட்டையைப்போலாவார்கள்.
கரையான் அவற்றை உண்ணும்.
    ஆனால், எனது நன்மை என்றென்றும் தொடரும்.
    எனது இரட்சிப்பு என்றென்றும் தொடரும்!”

தேவனுடையச் சொந்த வல்லமை அவரது ஜனங்களைக் காப்பாற்றும்

கர்த்தருடைய கையே!
    (வல்லமை) எழும்பு, எழும்பு, பலமாகு!
உனது பலத்தைப் பயன்படுத்து, நீண்ட காலத்துக்கு முன்பு நீ செய்தது போன்றும் பழங்காலத்தில் நீ செய்ததுபோன்றும் நீரே ராகாப்பைத் தோற்கடிக்க வல்லமையாக இருந்தீர்.
    நீர் அந்த பயங்கர பிராணியைத் தோற்கடித்தீர்.
10 கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்!
    கடலின் ஆழமான இடங்களில் சாலைகளை அமைத்தீர்.
    சாலையைக் கடந்த உமது ஜனங்கள் காப்பாற்றப்பட்டனர்.
11 கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்.
    அவர்கள் சீயோனுக்கு மகிழ்ச்சியோடு திரும்புவார்கள்.
அவர்கள மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
    அவர்களது மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் என்றென்றும் இருக்கிற கிரீடம்போல் இருக்கும்.
அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவார்கள்.
    அனைத்து துக்கங்களும் வெளியே போகும்.
12 கர்த்தர் கூறுகிறார், “உனக்கு ஆறுதல் தருகிற ஒருவர் நான் மட்டுமே.
    எனவே, நீங்கள் ஜனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும்.
அவர்கள் வாழவும் மரிக்கவும் கூடிய ஜனங்கள் தான்.
    அவர்கள் மானிடர்கள் மட்டுமே. புழுக்களைப்போலவே மரிக்கிறார்கள்”.

13 கர்த்தர் உன்னைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார்.
ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய்.
    எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய்.
அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.

14 சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
    அந்த ஜனங்கள் சிறைக்குள் மரித்து அழுகமாட்டார்கள்.
    அந்த ஜனங்கள் போதிய உணவைப் பெறுவார்கள்.

15 “நானே உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் கடலைக் கலக்கி அலைகளைச் செய்தேன்” (சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்).

16 “எனது தாசனே! நீ சொல்லுவதற்குரிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன். நான் எனது கைகளால் உன்னை மூடி பாதுகாப்பேன். நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உன்னைப் பயன்படுத்தி இஸ்ரவேலரிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்று சொல்லுவேன்”.

தேவன் இஸ்ரவேலைத் தண்டித்தார்

17 எழும்பு! எழும்பு!
    எருசலேமே எழும்பு!
கர்த்தர் உன் மீது மிகவும் கோபமாய் இருந்தார்.
    எனவே, நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள்.
உங்களுக்கான இந்தத் தண்டனையானது ஒரு கிண்ணம் விஷத்தை குடிக்க வேண்டியதுபோல இருந்தது.
    நீங்கள் அதைக் குடித்தீர்கள்.

18 எருசலேமில் பல ஜனங்கள் இருந்தனர். ஆனால், எவரும் அவளுக்காகத் தலைவர்கள் ஆகவில்லை. அவள் வளர்த்த அந்தப் பிள்ளைகளும் அவளை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டிகளாக வரமாட்டார்கள். 19 துன்பங்கள் எருசலேமிற்கு இரு குழுக்களாக, அதாவது, திருடுதலும் உடைத்தலும் மற்றும் பெரும் பசியும் சண்டையும் என்று வந்தது.

நீ துன்பப்படும்போது எவரும் உதவி செய்யவில்லை. எவரும் உன்மீது இரக்கம்கொள்ளவில்லை. 20 உனது ஜனங்கள் பலவீனர் ஆனார்கள். அவர்கள் தரையில் விழுந்து அங்கேயே கிடந்தார்கள். அந்த ஜனங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் மிருகங்களைப்போன்று வலைக்குட்பட்டிருந்தனர். அவர்கள் கர்த்தருடைய கோபத்திலிருந்து, மேலும் தண்டனையைப் பெற முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டனர். தேவன் மேலும் தண்டனை கொடுக்கப்போவதாய் சொன்னபோது, அவர்கள் மிகவும் பலவீனம் உடையவர்களாய் இருந்தனர்.

21 ஏழை எருசலேமே, எனக்குச் செவிகொடு! குடிகாரனைப்போன்று நீ பலவீனமாய் இருக்கிறாய். ஆனால், நீ திராட்சைரசத்தை குடிக்கவில்லை. நீ, “விஷக் கோப்பையால்” பலவீனமாக இருக்கிறாய்.

22 உனது தேவனும், கர்த்தருமாகிய ஆண்டவர் அவரது ஜனங்களுக்காகப்போரிடுவார். அவர் உன்னிடம், “பார், விஷக்கிண்ணத்தை (தண்டனை) உன்னிடமிருந்து எடுத்துவிடுகிறேன். உன்னிடமிருந்து எனது கோபத்தை நீக்கிக்கொள்கிறேன். இனிமேல் எனது கோபத்தால் நீ தண்டிக்கப்படமாட்டாய். 23 உன்னைப் பாதித்தவர்களைத் தண்டிக்க எனது கோபத்தைப் பயன்படுத்துவேன். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல முயன்றார்கள். அவர்கள், ‘எங்கள் முன்பு பணியுங்கள். நாங்கள் உன்னை மிதித்துச் செல்வோம்’ என்றனர். அவர்கள் முன்பு பணியுமாறு வற்புறுத்தினார்கள். பிறகு, உனது முதுகின்மேல் புழுதியைப்போன்று மிதித்துச் சென்றனர்! நீங்கள் நடந்து செல்வதற்கான சாலையைப்போன்று இருந்தீர்கள்.”

வெளி 21

புதிய எருசலேம்

21 பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை. தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம். [a] அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது.

சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: “இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார். அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன” என்றது.

சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.

சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான். ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார்.

ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான். 10 அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

11 அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. 12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

15 என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது. 16 அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி [b] நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது. 17 அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது. 18 அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.

19 நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம். 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.

22 அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர். 23 அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.

24 இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள அரசர்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள். 25 எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை. 26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும். 27 சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center