Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 22

பிற சட்டங்கள்

22 “உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஆடாவது மாடாவது வழிதப்பிச் செல்வதைக் கண்டால், நீங்கள் அதைக் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள். அதை உரியவர்களிடம் திருப்பிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும்.

“உங்களின் பக்கத்து வீட்டுக்காரரின் கழுதையாவது, மாடாவது சாலையில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், அதைப் பார்க்காதது போல் சென்றுவிடாமல், நீங்கள் அவருடன் சேர்ந்து தூக்கிவிட உதவிசெய்ய வேண்டும்.

“ஒரு பெண், ஆணின் உடைகளை அணியக் கூடாது. அதுபோல் ஒரு ஆண் பெண்ணின் ஆடைகளை அணியக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இதை மிகவும் வெறுக்கின்றார்.

“பாதைவழியே நீங்கள் நடந்து செல்லும்போது மரத்தில் அல்லது தரையில் ஏதேனும் ஒரு பறவைக் கூட்டைக் கண்டால், அதில் தாய்ப்பறவையானது தன் குஞ்சுகளையாவது, முட்டைகளையாவது அடைகாப்பதைக் கண்டால், நீங்கள் அந்தத் தாய்ப் பறவையை அதன் குஞ்சுகளைவிட்டு பிரிக்கக் கூடாது. நீங்கள் உங்களுக்காக குஞ்சுகளை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தாய்ப் பறவையைப் போக விட்டுவிட வேண்டும். இந்த நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நன்றாயிருப்பதுடன் நீண்ட காலமும் வாழலாம்.

“நீங்கள் புது வீடு கட்டும்போது உங்களின் மாடித்தளத்தைச் சுற்றிலும் சிறிய சுவர் எழுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் அந்த மாடியிலிருந்து விழுந்து மரித்தவனின் கொலைப்பழியை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை.

நீங்கள் ஒன்று சேர்க்கக் கூடாதவை

“நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டத்திலேயே பிற தானியங்களையும் விதைக்கக் கூடாது. ஏனென்றால், நீங்கள் விதைத்த பயிர்களையும், திராட்சைத் தோட்டத்தின் பலனையும் பரிசுத்தமற்றதாக ஆக்கிவிடுவீர்கள். அதனால் அவை பயனற்றவையாகிவிடும். அவற்றில் எதனையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.

10 “நீங்கள் மாட்டையும் கழுதையையும் பிணைந்து உழக்கூடாது.

11 “நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.

12 “நீங்கள் அணிந்து கொள்கின்ற உங்களது மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும், நூல்குஞ்சங்களாலான தொங்கல்களைச் செய்திடவேண்டும்.

திருமணச் சட்டங்கள்

13 “ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து, 14 அவன் அவள் மீது பொய்யாக, ‘நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளோடு பாலின உறவுகள் வைத்துக்கொள்ளும்போது அவள் கற்பில்லாதவள் என்பதைக் கண்டேன்’ என்று கூறி அதன் மூலம், ஜனங்கள் மத்தியில் அவள் மீது கெட்ட எண்ணங்களை உருவாக்கினால், 15 அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்து, அவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும். 16 பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து, 17 “நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார். 18 பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில், அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.

20 “ஆனால், அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால், 21 ஊர்த் தலைவர்கள் அந்தப் பெண்ணை அவளது தந்தை வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்து, ஊர் ஜனங்கள் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலில் அந்தப் பெண் அவமானமான செயல் ஒன்றைச் செய்துள்ளாள். தன் தந்தை வீட்டில் ஒரு வேசியைப் போன்ற செயலைச் செய்த பாவியாக இருந்துள்ளாள். உங்கள் மத்தியில் இந்தத் தீமையை இப்படியே விலக்கிட வேண்டும்.

பாலுறவுப் பாவங்கள்

22 “ஒருவன் மற்றவனது மனைவியுடன் தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.

23 “ஒருவனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள கற்புள்ள பெண் ஒருத்தியை வேறொருவன் சந்தித்து அவளுடன் பாலுறவு தொடர்பு வைத்துக்கொள்வது நகரில் நடந்ததென்றால், 24 பின் நீங்கள் அவ்விருவரையும் நகர எல்லையின் பொது இடத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கற்களால் எறிந்து கொல்ல வேண்டும். நீங்கள் அவனைக் கொல்வது எதற்கென்றால், அவன் அடுத்தவனது மனைவியைக் கற்பழித்தப் பாவத்திற்காக. அவளைக் கொல்வது எதற்கென்றால், அவள் இந்நகரத்தில் அவ்வாறு நடக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க யாரையும் கூக்குரலிட்டு அழைக்காமல் இருந்ததால். உங்கள் மத்தியிலிருந்து இப்படிப்பட்ட தீமையை இவ்வாறு விலக்கிட வேண்டும்.

25 “ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் கொன்றுவிட வேண்டும். 26 அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. 27 வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம்.

28 “ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால், 29 அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.

30 “எவனும் தன் தந்தையின் மனைவியுடன் பாலின உறவு வைத்துக்கொள்வதால், அவரது மானத்தை வெளிப்படுத்தக்கூடாது.”

சங்கீதம் 110-111

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று

110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
    “என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
    உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
    பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
    உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
    அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
    தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.

கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
    அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
    மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”

என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
    அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார்.
தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
    பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
    தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.

வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார்.
    அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!

111 கர்த்தரைத் துதியங்கள்!
    நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில் நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
    தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
    அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
    தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
    அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
    தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
    அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
    அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
    தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
    தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
    என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.

ஏசாயா 49

தேவன் தனது சிறப்புக்குரிய தாசனை அழைக்கிறார்

49 தொலை தூர இடங்களில் வாழும் ஜனங்களே, என்னைக் கவனியுங்கள்!
    பூமியில் வாழும் ஜனங்களே, கவனியுங்கள்!
நான் பிறப்பதற்கு முன்னரே கர்த்தர் தமக்குப் பணிபுரிய அழைத்தார்.
    நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கர்த்தர் என் பெயரைச் சொல்லி அழைத்தார்.
நான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார்.
அவர் என்னைக் கூர்மையான வாளைப்போன்று பயன்படுத்துகிறார்.
    அவர் என்னைக் காப்பாற்றுகிறார். தமது கையில் மறைக்கிறார்.
கர்த்தர் என்னைக் கூர்மையான அம்பைப்போன்று பயன்படுத்துகிறார்.
    கர்த்தர் என்னை அம்பு பையில் மறைத்து வைக்கிறார்.

கர்த்தர் என்னிடம் சொன்னார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
    நான் உனக்கு அற்புதங்களைச் செய்வேன்.”

நான் சொன்னேன், “நான் வீணாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன்.
    நான் முழுவதுமாய் என்னை வெளிப்படுத்துகிறேன். ஆனால் பயனற்றவற்றையே செய்தேன்.
நான் எனது வல்லமை முழுவதையும் பயன்படுத்துகிறேன்.
    ஆனால் உண்மையில் நான் எதையும் செய்யவில்லை.
எனவே, என்னுடன் எதைச் செய்வது என கர்த்தர் முடிவு செய்ய வேண்டும்.
    தேவன் எனது விருதினை முடிவுசெய்ய வேண்டும்.
என்னை கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார்.
    எனவே, நான் அவரது தாசனாக இருக்க முடியும்.
    நான் யாக்கோபையும் இஸ்ரவேலையும் அவரிடம் திரும்ப அழைத்துச் செல்லமுடியும்.
கர்த்தர் என்னைக் கௌரவிப்பார்.
    நான் எனது தேவனிடமிருந்து எனது பலத்தைப் பெறுவேன்,” கர்த்தர் என்னிடம் சொன்னார்,

“நீ எனக்கு மிக முக்கியமான தாசன்.
    யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய்.
ஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது.
    அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன்.
    பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.”

கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்.
    இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன்.
அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள்.
    ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள்.
அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள்.
    பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்”

இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.

இரட்சிப்பின் நாள்

கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது.
    அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன்.
நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும்.
    அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
நான் உன்னைப் பாதுகாப்பேன்.
    எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள்.
இப்போது நாடு அழிக்கப்படுகிறது.
    ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்.
நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள்,
    ‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’
இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள்,
    ‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’
ஜனங்கள் பயணம்செய்யும்போது சாப்பிடுவார்கள்.
    காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள்.
10 ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள்.
    வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது.
ஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார்.
    அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார்.
11 நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன்.
    மலைகள் தரைமட்டமாக்கப்படும்.
    தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும்.

12 “பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.”

13 வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.
    மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும்.
ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார்.
    கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.

14 ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார்.
    எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.”

15 ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது!
    ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா?இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது!
ஆனால் அவள் மறந்தாலும்
    நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது.
16 பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன்.
    நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
17 உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள்.
    ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்!
18 மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்!
    உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.”
“என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர்.
    உங்கள் பிள்ளைகள் நகைகளைப்போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள்.
    உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள்.

19 “இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள்,
    உங்கள் தேசம் பயனற்றது.
ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள்.
    உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள்.
20 நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள்.
    ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது.
    நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள்.
21 பிறகு நீ உனக்குள்ளேயே,
    ‘இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது.
நான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன்.
    நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன்.
எனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது?
    பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன்.
    இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?’”

என்று சொல்லிக்கொள்வாய்.

22 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்.
“பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன்.
    எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன்.
பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள்.
    அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள்.
23 அரசர் உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள்.
    அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள்.
அந்த அரசர்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள்.
    அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள்.
பிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள்.
    என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

24 ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது.
    ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது.
25 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான்.
    இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன்.
26 அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள்.
    ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன்.
    அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும்.
பிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
    அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.”

வெளி 19

பரலோகத்தில் தேவனைப் புகழ்தல்

19 இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள்,

“அல்லேலூயா!
தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது.
அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை.
நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார்.
    இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே.
அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்”

என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பரலோகத்திலுள்ள மக்கள்,

“அல்லேலூயா!
அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.

பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர்.

“ஆமென் அல்லேலூயா”

என அவர்கள் சொன்னார்கள்.

பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது,

“நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள்.
    நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!”

என்று கூறியது.

அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்:

“அல்லேலூயா!
    நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார்.
    அவரே சர்வ வல்லமையுள்ளவர்.
நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம்.
தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது.
    ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.
மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன.
    அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”

(மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.)

பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.

10 பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான்.

வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்பவர்

11 பிறகு, நான் பரலோகம் திறப்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஒரு வெள்ளைக் குதிரை நின்றது. அதன்மீது இருந்தவர் நம்பிக்கை என்றும் உண்மையென்றும் அழைக்கப்படுகிறார். அவர் நியாயம் தீர்ப்பதிலும் போர் செய்வதிலும் மிகச் சரியாக இருக்கிறார். 12 அவரது கண்கள் எரிகிற நெருப்புபோல ஜொலித்தது. அவரது தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரது பெயர் அவருக்கு மேல் எழுதப்பட்டிருந்தது. அப்பெயர் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வேறு எவருக்கும் அப்பெயர் தெரியாது. 13 அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும். 14 பரலோகத்தின் படைகள் அவரைப் பின்தொடர்ந்தன. அவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வந்தனர். அவர்கள் வெள்ளையும் சுத்தமுமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். 15 அவரது வாயிலிருந்து கூர்மையான வாள் வெளியே வருகிறது. அவர் பிற நாடுகளை வெல்ல அதனைப் பயன்படுத்துவார். அவர் இரும்புக் கோலால் அத்தேசங்களை ஆள்வார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபமாகிய ஆலையிலுள்ள திராட்சையை மிதிப்பார். 16 அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும்

“இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்”

என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.

17 பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். வானத்தில் பறந்துகொண்டிருந்த அனைத்துப் பறவைகளிடமும் அவன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். “தேவனுடைய சிறந்த விருந்துக்கு அனைவரும் சேர்ந்து வாருங்கள். 18 அரசர்கள், சேனைத் தலைவர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோரின் சரீரங்களை உண்ணமுடியும் வண்ணம் ஒருங்கிணைந்து வாருங்கள். குதிரைகள் மற்றும், குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்களின் உடல்களைத் தின்னவும், சுதந்தரமானவர்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய மக்கள் அனைவரின் சரீரங்களைத் தின்னவும் வாருங்கள்” என்றான்.

19 பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் அரசர்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன். 20 ஆனால், அந்த மிருகம் பிடிபட்டது. போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இவனே அந்த மிருகத்திற்காக அற்புதங்களை செய்தவன். மிருகத்தின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்களையும் மிருக விக்கிரகத்தை வழிபட்டவர்களையும் இவ்வற்புதங்களால் அவன் வஞ்சித்தான். போலித் தீர்க்கதரிசியும் மிருகமும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு போடப்பட்டார்கள். 21 குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center