M’Cheyne Bible Reading Plan
ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல்
18 “லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியர்களாக சேவை செய்வார்கள். தகன பலியாக கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும். 2 இந்த லேவியர்கள், மற்ற கோத்திரங்கள் வைத்திருப்பதைப்போன்று எவ்வித பங்கும், சுதந்திரமும் பெற்றிருப்பவர்கள் அல்ல. கர்த்தர் அவர்களுக்குக் கூறியதுபோல் கர்த்தரே அவர்களது சொத்து.
3 “நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். 4 நீங்கள் அறுவடை செய்த முதல் பலன்களின் ஒரு பகுதியையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் தானியங்கள், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதல் பலன்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் ஆடுகளில் கத்தரிக்கும் முதல் பங்கான ஆட்டு ரோமங்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். 5 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாக் கோத்திரங்களையும் பார்த்து அவர்களிலிருந்து, லேவியரையும் அவர்களது சந்ததியினரையும் என்றென்றும் ஆசாரிய சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார்.
6 “உங்களில் வசிக்கின்ற ஒவ்வாரு லேவியனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் பணி செய்வான். ஆனால், அவன் மேலும் அதிக நேரம் அங்குப் பணியாற்ற விரும்பினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் பணி செய்யலாம். இஸ்ரவேலில் எந்த ஊர்களிலும், எந்தப் பகுதிகளிலும் வசித்து வருகின்ற யாதொரு லேவியனும் அவன் வசிக்கிக்கின்ற வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வரலாம். எந்த நேரத்திலும் அங்கு வந்து சேவை செய்யலாம். 7 அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம். 8 இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான்.
இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது
9 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள். 10 உங்கள் மகன்களையோ, மகள்களையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். 11 மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். 13 நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி
14 “நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார். 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 16 தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.
17 “கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே. 18 நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். 19 அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்.
பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி
20 “ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். 21 ‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், 22 கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.
105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
3 கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
4 வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
5 அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
6 நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.
7 கர்த்தரே நமது தேவன்.
கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.
8 தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
9 தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.
12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார்.
அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.
13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும்,
ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.
14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை.
அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.
15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள்.
எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.
16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.
ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.
யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.
அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.
யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
20 எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான்.
தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.
அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.
யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்.
யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று.
அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.
25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள்.
அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.
26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார்.
தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.
27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு
தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார்.
ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.
29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார்.
எல்லா மீன்களும் மடிந்தன.
30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று.
அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.
31 தேவன் கட்டளையிட்டார்.
ஈக்களும் பேன்களும் வந்தன.
அவை எங்கும் நிரம்பின.
32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.
33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்.
அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன.
அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!
35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும்,
வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார்.
தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.
37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
கர்த்தரைத் துதியுங்கள்!
இஸ்ரவேலை விடுதலை செய்ய தேவன் கோரேசை தேர்ந்தெடுக்கிறார்
45 கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப்பற்றி இவற்றைக் கூறுகிறார்:
“நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன்.
அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன்.
நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது.
நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.”
2 கோரேசே, உனது படைகள் புறப்படட்டும். நான் உனக்கு முன்னால் செல்வேன்.
நான் மலைகளைச் சமமாக்குவேன்.
நான் நகரத்தின் வெண்கலக் கதவுகளை உடைப்பேன்.
நான் கதவுகளில் உள் இரும்புச் சட்டங்களை வெட்டுவேன்.
3 நான் உனக்கு இருளில் பாதுகாக்கப்படுகிற செல்வத்தைத் தருவேன்.
மறைக்கப்பட்டச் செல்வங்களை நான் உனக்குத் தருவேன்.
நான் இதனைச் செய்வேன்.
அதனால் நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய்!
நான் இஸ்ரவேலரின் தேவன்!
நான் பெயர் சொல்லி உன்னை அழைப்பேன்.
4 எனது தாசன் யாக்கோபுக்காக நான் இவற்றைச் செய்கிறேன்.
இஸ்ரவேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காக நான் இவற்றைச் செய்வேன்.
கோரேசே, நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
நீ என்னை அறியமாட்டாய். ஆனால் நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
5 நான் கர்த்தர்! நான் ஒருவரே தேவன்.
வேறு தேவன் இல்லை!
நான் உனது ஆடைகளை உன் மேல் போட்டேன்.
ஆனால் இன்னும் என்னை நீ அறிந்துகொள்ளவில்லை.
6 நான் இவற்றைச் செய்கிறேன்.
எனவே நான்தான் தேவன் என்பதை அனைத்து ஜனங்களும் அறிந்துகொள்வார்கள்.
கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.
வேறு தேவனில்லை!
7 நான் ஒளியையும் இருளையும் படைத்தேன்.
நான் சமாதானத்தையும் தொல்லையையும் படைத்தேன்.
நானே கர்த்தர்! நானே இவை அனைத்தையும் செய்கிறேன்.
8 “வானத்திலுள்ள மேகங்கள்,
மழையைப்போல நன்மையைப் பொழியட்டும்.
பூமி திறக்கட்டும், இரட்சிப்பு வளரட்டும்,
அதனோடு நன்மையும் வளரட்டும். கர்த்தராகிய நான் அவனைப் படைத்தேன்.”
தேவன் அவரது படைப்புகளைக் கட்டுப்படுத்துகிறார்
9 “இந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம்மைப் படைத்தவரோடு வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மண்பானையின் உடைந்துபோன துண்டுகளைப்போன்றுள்ளார்கள். ஒருவன் மென்மையும் ஈரமுமான களிமண்ணைப் பானை செய்யப் பயன்படுத்துகிறான். அந்தக் களிமண் அவனிடம், ‘மனிதனே! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்’ என்று கேட்பதில்லை. செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் செய்தவனிடம் கேள்வி கேட்கும் உரிமை இல்லை. ஜனங்களும் இந்த களிமண்ணைப்போன்றவர்களே. 10 ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு வாழ்வு தருகிறார். அந்தப் பிள்ளைகள் அவரிடம், ‘எனக்கு ஏன் வாழ்க்கைக் கொடுத்தாய்’ என்று கேட்க முடியாது. அந்தப் பிள்ளைகள் தம் தாயிடம், ‘எங்களை ஏன் பெற்றீர்கள்’” என்று கேட்க முடியாது.
11 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அவர் இஸ்ரவேலைப் படைத்தார். கர்த்தர் சொல்கிறார்,
“நான் படைத்த என் பிள்ளைகளைக் குறித்து என்னை கேள்வி கேட்க முடியுமா?
நான் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவாயோ?
12 எனவே, பாருங்கள். நான் பூமியைப் படைத்தேன்.
இதில் வாழும் அனைத்து ஜனங்களையும் படைத்தேன்.
நான் எனது சொந்த கைகளைப் பயன்படுத்தி வானங்களைச் செய்தேன்.
வானத்தின் சகல சேனைகளுக்கும் ஆணையிட்டேன்.
13 நான் கோரேசுக்கு வல்லமையைக் கொடுத்தேன்.
எனவே, அவன் நன்மைகளைச் செய்ய வேண்டும்.
நான் அவனது வேலையை எளிமையாக்குவேன்.
கோரேசு எனது நகரத்தை மீண்டும் கட்டுவான்.
அவன் எனது ஜனங்களை விடுதலை செய்வான்.
கோரேசு எனது ஜனங்களை எனக்கு விற்கமாட்டான்.
இவற்றைச் செய்வதற்கு அவனுக்கு எதுவும் கொடுக்கமாட்டேன்.
ஜனங்கள் விடுதலைச் செய்யப்படுவார்கள். அதற்கான விலை எதுவும் இருக்காது.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
14 கர்த்தர் கூறுகிறார், “எகிப்தும் எத்தியோப்பியாவும் வளமாக உள்ளன.
ஆனால் இஸ்ரவேலே, அந்தச் செல்வத்தை நீ பெறுவாய்.
சேபாவிலுள்ள வளர்ந்த ஜனங்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள்.
அவர்கள் உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றிச் சங்கிலிகள் கிடக்கும்.
அவர்கள் உனக்கு முன்பு பணிவார்கள்.
ஜெபம் செய்வார்கள், இஸ்ரவேலே, ‘தேவன் உன்னோடு இருக்கிறார்.
வேறு தேவனில்லை.’”
15 தேவனே! நீர்தான் ஜனங்களால் பார்க்க முடியாத தேவன்,
நீர்தான் இஸ்ரவேலை மீட்கிறவர்.
16 பல ஜனங்கள் பொய்த் தெய்வங்களைச் செய்கின்றனர்.
ஆனால், அவர்கள் ஏமாந்து போவார்கள்.
அந்த ஜனங்கள் அனைவரும் அவமானப்படுவார்கள்.
17 ஆனால், கர்த்தரால் இஸ்ரவேல் காப்பாற்றப்படும்.
அந்த இரட்சிப்பு என்றென்றும் இருக்கும்!
மீண்டும் இஸ்ரவேல் அவமானப்படாது!
18 கர்த்தரே தேவன்! அவர் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
கர்த்தர் பூமியை அதனுடைய இடத்தில் வைத்தார்.
கர்த்தர் பூமியைப் படைத்ததும் அது காலியாக இருப்பதை விரும்பவில்லை.
அவர் அதனை வாழ்வதற்குரியதாகப் படைத்தார்.
“நானே கர்த்தர். வேறு தேவன் இல்லை.
19 நான் இரகசியமாக எதுவும் பேசவில்லை.
நான் சுதந்திரமாகப் பேசியிருக்கிறேன். உலகத்திலுள்ள இருளில் என் வார்த்தைகளை ஒளிக்கமாட்டேன்.
காலியான இடங்களில் என்னைத் தேடுமாறு, யாக்கோபின் ஜனங்களிடம் சொல்லவில்லை.
நானே கர்த்தர்.
நான் உண்மையைப் பேசுகிறேன்.
நான் உண்மையாக இருப்பதை மட்டும் பேசுகிறேன்.”
கர்த்தர் தாம் ஒருவரே தேவன் என்று நிரூபிக்கிறார்
20 “மற்ற நாடுகளில் இருந்து நீங்கள் தப்பித்திருக்கிறீர்கள். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து என் முன்பு வாருங்கள். (இந்த ஜனங்கள் பொய்த் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கி வந்தனர். இந்த ஜனங்கள் அந்தப் பயனற்ற தெய்வங்களிடம் ஜெபம் செய்கின்றனர். ஆனால் அந்த ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியவில்லை. 21 என்னிடம் வருமாறு அந்த ஜனங்களிடம் கூறுங்கள். அவர்கள் இதைப்பற்றி கூடிப்பேசட்டும்).
“நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த இவற்றைப்பற்றி உன்னிடம் யார் கூறியது? மிக நீண்ட காலத்திற்கு முன்னரே நான் இவற்றைத் தொடர்ந்து கூறிவருகிறேன். கர்த்தராகிய நானே, இவற்றையெல்லாம் சொன்னவர். நான் ஒருவரே தேவன். என்னைப்போன்று வேறே தேவன் உண்டா? என்னைப்போன்று வேறே மீட்பரும், நீதியுள்ள தேவனும் உண்டோ? இல்லை! வேறு தேவன் இல்லை. 22 வெகு தொலைவில் வாழுகின்ற ஜனங்களே, நீங்கள் பொய்த் தெய்வங்களைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். என்னைப் பின்பற்றுவீர்களானால் காப்பாற்றப்படுவீர்கள். நானே தேவன்! நான் ஒருவரே தேவன்.
23 “எனது சொந்த வல்லமையால் நான் ஒரு வாக்குறுதி செய்கிறேன். நான் எதையாவது செய்வதாக வாக்களித்தால், அது உண்மையாக இருக்கும். நான் ஏதாவது நடக்கக் கட்டளையிட்டால், அது நடக்கும். ஒவ்வொருவரும் எனக்கு (தேவன்) முன்பு அடிபணிவதாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரும் என்னைப் பின்பற்றுவதாக வாக்களிக்க வேண்டும். 24 ‘நன்மையும் வல்லமையும் கர்த்தரிடமிருந்து மட்டும்தான் வரும்’ என்று ஜனங்கள் கூறுவார்கள்.”
சில ஜனங்கள் கர்த்தர்மேல் கோபமாயிருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய சாட்சிகள் வந்து அவருடைய செயல்களைப்பற்றிக் கூறுவார்கள். அப்போது கோபமாயிருந்த ஜனங்கள் அவமானமடைவார்கள். 25 நன்மையானதைச் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் உதவிசெய்வார், அவர்கள் தங்கள் தேவனைப்பற்றி பெரும்மிதம்கொள்வார்கள்.
இறுதி வாதைகள்
15 பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.
2 நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. 3 அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்:
“சர்வ வல்லமையுள்ள தேவனே!
நீர் செய்தவை எல்லாம் பெரியவை,
அற்புதமானவை. நாடுகளின் அரசரே!
உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை.
4 கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள்.
எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள்.
நீர் ஒருவரே பரிசுத்தமானவர்
எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள்.
ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”
5 இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது. 6 ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். 7 நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன. 8 தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.
2008 by World Bible Translation Center