Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 17

குறையற்ற மிருகங்களையே பலிகொடுக்க பயன்படுத்துதல்

17 “குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்!

விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள்

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும்.

சிக்கலான நீதிமன்ற முடிவுகள்

“உங்கள் நீதிமன்றங்களால் தீர்ப்புக்கூற முடியாமல் போகும் அளவிற்கு சில பிரச்சினைகள் உங்களிடம் இருக்கலாம், அவை கொலைக் குற்றமாகவோ, அல்லது இரண்டு நபர்களின் வாக்கு வாதங்களோ, அல்லது சண்டையில் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த சேதங்களையோ குறித்த வழக்குகளாக இருக்கலாம். உங்கள் ஊர்களிலுள்ள உங்களது நீதிபதிகளால் இத்தகைய வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பைக் கூற இயலாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம். 10 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கின்ற அவர்கள், உங்களுக்கு அளிக்கின்ற தீப்புகளுக்கு இணங்கி, அவர்கள் உங்களுக்கு விதிக்கின்றபடி செய்யக் கவனமாய் இருப்பீர்களாக. 11 நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்!

12 “அச்சமயத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனின் வார்த்தைகளையோ, அல்லது நீதிபதியின் தீர்ப்பையோ ஏற்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். அவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். இஸ்ரவேலில் இருந்து அந்தத் தீயவனை நீங்கள் அகற்றிவிடவேண்டும். 13 இந்தத் தண்டனையைக் கேட்கும் அனைத்து ஜனங்களும் அதைத் கண்டு பயந்து இதுபோன்ற தவறினைச் செய்யாதிருப்பார்கள்.

இராஜாவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது. 16 அந்த அரசன் தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் அந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார். 17 மேலும், அரசன் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது அவனை கர்த்தரிடமிருந்து வேறு திசைக்கு அழைத்துச் சென்றுவிடும். மேலும். அந்த அரசன் அவனுக்காகப் பொன்னையும், வெள்ளியையும், மிகுதியாக சேர்த்துக்கொள்ளக் கூடாது.

18 “அரசன் தன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும்முன் தனக்கான சட்டங்களைப் புத்தகமாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அந்த நீதி புத்தகத்தை, லேவியரும் ஆசாரியர்களும் வைத்துள்ள புத்தகத்திலிருந்து உருவாக்கி தன்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 19 அரசன் அந்த புத்தகத்தை தன்னிடம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்தறிய வேண்டும். ஏனென்றால், அவனது தேவனாகிய கர்த்தருக்கு மதிப்பளிக்க வேண்டும். அதிலுள்ள எல்லா சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் அரசன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 20 அரசன் தன் சகோதரர்களாகிய ஜனங்களைவிட தான் மேன்மையானவன் என்று எண்ணிவிடக் கூடாது. மேலும் அவன் ஒரு போதும் இந்த சட்டங்களிலிருந்து விலகிவிடக்கூடாது. ஆனால் அவன் இவற்றைச் சரியானபடி முழுமையாகப் பின்பற்றினால், பின் அந்த அரசனும் அவன் சந்ததியினரும் நீண்ட காலம் இஸ்ரவேல் நாட்டை ஆளலாம்.

சங்கீதம் 104

104 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்!
நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
    ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர்.
நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
    தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர்.
அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக்
    காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர். [a]
    உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.
தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர்.
    எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.
நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர்.
    தண்ணீர் மலைகளை மூடிற்று.
நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று.
    தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று,
    பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர்.
    தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.

10 தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர்.
    பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது.
11 நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன.
    காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
12 வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும்.
    அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
13 மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
    தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன.
14 மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார்.
    நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம்.
    அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன.
15 நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும்
    நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும்,
    நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார்.

16 லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை.
    கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
17 அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும்.
    பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.
18 காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும்.
    குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.

19 தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர்.
    எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும்.
20 எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து
    சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
21 தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல
    தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.
22 அப்போது சூரியன் எழும்பும்,
    மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.
23 அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள்,
    அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.

24 கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
    பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது.
    நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
25 சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!
    பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன!
    எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
26 நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது
    கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.

27 தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.
    தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
28 தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.
    நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
29 நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.
    அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும்.
அவை சோர்ந்து மரிக்கும்.
    அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
30 ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!
    நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.

31 கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!
    கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
32 கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.
    அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.

33 என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.
    நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
34 நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.
    நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
35 பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.
    தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
    கர்த்தரை துதியுங்கள்!

ஏசாயா 44

கர்த்தரே ஒரே தேவன்

44 “யாக்கோபே, நீ எனது தாசன், என்னைக் கவனி! இஸ்ரவேலே, நான் உன்னைத் தேர்ந் தெடுக்கிறேன். நான் சொல்வதைக் கேள். நானே கர்த்தர். நான் உன்னைப் படைத்தேன். நீ எப்படி இருக்க வேண்டுமென்று உன்னைப் படைத்தவர் நான் ஒருவரே. நீ உன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே, நான் உனக்கு உதவியிருக்கிறேன். எனது தாசனாகிய யாக்கோபே, அஞ்சாதே! யெஷூரனே, நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன்.

“தாகமுள்ள ஜனங்களுக்கு நான் தண்ணீர் ஊற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகளைப் பாயச்செய்வேன். உனது பிள்ளைகள்மீது எனது ஆவியையும் உனது சந்ததியார்மீது எனது ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். இது உங்கள் குடும்பத்தின்மீது பாய்கிற நீரோடை போன்றிருக்கும். உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் அவர்கள் வளருவார்கள். தண்ணீர் கரையில் வளருகின்ற மரங்களைப்போல அவர்கள் வளருவார்கள்.

“ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் ‘யாக்கோபின்’ பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் ‘நான் கர்த்தருடையவன்’ என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’” என்ற பெயரைப் பயன்படுத்துவான்.

கர்த்தர் இஸ்ரவேலின் அரசர். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்! என்னைப்போன்ற தேவன் வேறு யாருமில்லை. அவ்வாறு இருந்தால், அந்த தெய்வம் இப்போது பேசட்டும். அந்த தெய்வம் வந்து என்னைப்போன்றவன் என்று நிரூபிக்கட்டும். இந்த ஜனங்களை நான் என்றென்றும் நிலைத்திருக்கும்படி செய்தேனே. இதுவரை என்ன நடந்தது என்று அந்த தெய்வம் எனக்குச் சொல்லட்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவன் அறிந்திருந்தால் அந்த தெய்வம் எனக்கு அடையாளம் காட்டட்டும். அஞ்சாதே! கவலைப்படாதே! என்ன நடக்கபோகிறது என்பதை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். நீங்களே எனது சாட்சிகள். வேறு தேவன் இல்லை. நான் ஒருவரே அந்த ஒருவர். வேறு ஒரு கன்மலை இல்லை. நானே அந்த ஒருவர் என்பதை நான் அறிவேன்”.

பொய்த் தெய்வங்கள் பயனற்றவைகள்

சில ஜனங்கள் சிலைகளைச் (பொய்த் தெய்வங்களை) செய்கிறார்கள். அவை வீணானவை. ஜனங்கள் அந்தச் சிலைகளை நேசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சிலைகள் பயனற்றவை. அந்த ஜனங்களே சிலைகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவைகளால் பார்க்கமுடியாது. அவைகளுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் தம் செய்கைக்கு வெட்கப்படும் அளவிற்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.

10 இந்தப் பொய்த் தெய்வங்களை யார் செய்தது? பயனற்ற இந்தச் சிலைகளைச் செய்தது யார்? 11 வேலைக்காரர்கள் இந்தச் தெய்வங்களைச் செய்தனர். அந்த வேலைக்காரர்கள் எல்லாம் மனிதர்கள், தெய்வங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் கூடி இதைப்பற்றி விவாதித்தால் இதற்காக அவர்கள் வெட்கமும் அச்சமும் அடைவார்கள்.

12 ஒரு வேலைக்காரன் கருவிகளைப் பயன்படுத்தி சூடான உலையிலே இரும்பைக் காய வைத்தான். அவன் தன் சுத்தியைப் பயன்படுத்தி உலோகத்தை அடித்ததால் அது சிலையானது. இந்த மனிதன் தனது வல்லமை வாய்ந்த கைகளைப் பயன்படுத்தினான். ஆனால், அவனுக்குப் பசி வரும்போது தனது வல்லமையை இழக்கிறான். அவன் தண்ணீர் குடிக்காவிட்டால் பலவீனன் ஆகிறான்.

13 இன்னொரு வேலைக்காரன் தனது நூலைப் பிடித்து மட்டப்பலகையால் மரத்தில் குறியிடுகிறான். எங்கே வெட்டவேண்டும் என்பதை இது அவனுக்குக் காட்டுகிறது. அவன், தனது உளியைப் பயன்படுத்தி அந்த மரத்திலிருந்து சிலையைச் செதுக்குகிறான். அவன் தனது அளவு கருவியால் அச்சிலையை அளக்கிறான். இவ்வழியில், வேலைக்காரன் சரியாக மனிதனைப்போன்றே தோன்றும்படிச் சிலையைச் செய்கிறான். மனிதனின் இந்தச் சிலை வீட்டில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை.

14 ஒருவன் கேதுரு, மருதமரம் அல்லது கர்வாலி மரத்தை வெட்டுகிறான். (அந்த மனிதன் மரங்களை வளரச் செய்வதில்லை. அந்த மரங்கள் காட்டில் தன் சொந்த பலத்தாலேயே வளர்கிறது. ஒருவன் அசோக மரத்தை நட்டால் மழை அதை வளரச்செய்யும்).

15 பிறகு, அந்த மனிதன் எரிப்பதற்காக அந்த மரங்களை வெட்டுகிறான். அவன் அந்த மரத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறான். அவன் அதனைச் சமைக்கவும், வெப்பப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் சில மரத் துண்டுகளை எரித்து தனக்காக அப்பத்தைச் சுடுகிறான். ஆனால், அவன் சில துண்டுகளில் தெய்வத்தின் சிலை செய்து அதனைத் தொழுதுகொள்கிறான். அந்த தெய்வம் மனிதனால் செய்யப்பட்ட ஒரு சிலையாகும். ஆனால், அந்த சிலைகளுக்கு முன்னால் பணிந்து வணங்குகிறான். 16 மனிதன் பாதி மரத்துண்டுகளை நெருப்பில் எரித்தான். மனிதன் அந்த நெருப்பை இறைச்சியை சமைக்கப் பயன்படுத்தினான். அதனை வயிறு நிரம்பும்வரை சாப்பிடுகிறான். மனிதன் தன்னை வெப்பப்படுத்திக்கொள்ள மரத்துண்டுகளை எரிக்கிறான். மனிதன் கூறுகிறான், “நல்லது நான் இப்போது வெப்பமாக இருக்கிறேன். என்னால் பார்க்கமுடியும் ஏனென்றால், நெருப்பிலிருந்து ஒளி வருகிறது”. 17 ஆனால், சிறு மரத்துண்டு மீதியுள்ளது எனவே மனிதன் அந்த மரத்திலிருந்து சிலை செய்து அதனை தெய்வம் என்று அழைக்கிறான். அந்த தெய்வத்திற்கு முன்பு அவன் அடிபணிந்து வணங்குகிறான். அவன் அந்த தெய்வத்தினிடம் ஜெபம் செய்து சொல்கிறான், “நீயே எனது தெய்வம். என்னைக் காப்பாற்று”.

18 அந்த ஜனங்களுக்குத் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. காணமுடியாதபடி அவர்களது கண்கள் கட்டப்பட்டதுபோல அது இருக்கிறது. அவர்களின் இதயங்கள் புரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. 19 அந்த ஜனங்கள் இவற்றைப்பற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் தமக்குள், “நான் பாதி மரத்தை எரித்தேன். நான் நெருப்புத் துண்டுகளை எனது அப்பங்களைச் சுடவும், எனது இறைச்சியைச் சமைக்கவும் பயன்படுத்தினேன். பிறகு அந்த இறைச்சியை நான் தின்றேன். மீதியுள்ள மரத்தைப் பயன்படுத்தி இந்த அருவருப்பை செய்தேன். ஒரு மரத்துண்டை நான் தொழுதுகொண்டிருக்கிறேன்!” என்று எண்ணுவதில்லை.

20 அந்த மனிதன், தான் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை. அவன் குழம்பியிருக்கிறான். எனவே, அவனது இதயம் அவனை தவறான வழியில் செலுத்துகின்றது. அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது. அவனுக்குத் தான் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று அறிய முடியாது. அவன், “நான் பிடித்துக்கொண்டிருக்கின்ற இந்தச் சிலை பொய்த் தெய்வம்” என்று சொல்லமாட்டான்.

உண்மையான தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலுக்கு உதவுகிறார்

21 யாக்கோபே இவற்றை நினைத்துப் பார்!
    இஸ்ரவேலே, நீ எனது தாசன் என்பது நினைவிருக்கட்டும்.
நான் உன்னைச் செய்தேன்.
    நீ எனது தாசன். எனவே இஸ்ரவேலே என்னை மறக்காதே.
22 உனது பாவங்கள் பெரிய மேகத்தைப்போன்றிருந்தது.
    ஆனால், நான் அந்தப் பாவங்களை துடைத்துவிட்டேன்.
உங்களது பாவங்கள் காற்றில் கலந்துவிடும் மேகங்களைப்போன்று மறைந்துவிட்டன.
    நான் உன்னை மீட்டுக் காப்பாற்றினேன், எனவே என்னிடம் திரும்பி வா.

23 வானங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றன ஏனென்றால், கர்த்தர் பெரிய செயலைக் செய்திருக்கிறார்.
    பூமி மகிழ்ச்சியோடு உள்ளது. பூமியின் தாழ்விடங்களும் மகிழ்கிறது.
மலைகள் தேவனுக்கு நன்றிசொல்லிப் பாடுகின்றன.
    காட்டிலுள்ள மரங்களெல்லாம் மகிழ்ச்சியோடு உள்ளன.
ஏனென்றால், கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார்.
    கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்.
24 நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கர்த்தர் படைத்தார்.
    நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கர்த்தர் இதனைச் செய்தார்.
கர்த்தர் கூறுகிறார், “கர்த்தராகிய நான், எல்லாவற்றையும் செய்தேன்.
    நானாகவே வானங்களை வைத்தேன்.
    எனக்கு முன்னால் பூமியைப் பரப்பி வைத்தேன்”.

25 பொய்த் தீர்க்கதரிசிகள் பொய் சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் அவர்களின் தீர்க்கதரிசனங்கள் போலியானவை என்று காட்டுகிறார். கர்த்தர் மந்திரவேலை செய்பவர்களை முட்டாளாக்குகிறார். கர்த்தர் ஞானிகளைக் குழப்புகிறார். அவர்கள் தமக்கு மிகுதியாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கர்த்தர் அவர்களை முட்டாளாக்குகின்றார். 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார்.

தேவன் கோரேசை யூதாவைத் திரும்பக் கட்டத் தேர்ந்தெடுத்தார்

கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், “ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!” யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:

“நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!”
    அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:
    “நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்”.
27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப்போங்கள்!
    நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன்.
    நான் விரும்புவதை நீ செய்வாய்.
நீ எருசலேமிடம் சொல்வாய், ‘நீ மீண்டும் கட்டப்படுவாய்’
    நீ தேவாலயத்திடம் கூறுவாய், ‘உனது அஸ்திபாரம் மீண்டும் கட்டப்படும்!’”

வெளி 14

மீட்கப்பட்டவர்களின் பாடல்

14 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.

பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.

அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

மூன்று தேவதூதர்கள்

பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.

பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான்.

மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். 10 அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான். 11 அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான். 12 இதன் பொருள் யாதெனில் தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், இயேசுவில் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

13 பிறகு, பரலோகத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானதைக் கேட்டேன். அது “இதை எழுது: கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் இப்பொழுதிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றது.

“ஆமாம் அவர்கள் தங்கள் கடினமான வேலைகளை விட்டுவிட்டு ஓய்வுபெறுவார்கள். அவர்களது செயல்கள் அவர்களோடு தங்கும், இது முற்றிலும் உண்மை” என்று ஆவியானவரும் கூறுகிறார்.

பூமி அறுவடையாகுதல்

14 நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது. 15 பிறகு இன்னொரு தேவதூதன் ஆலயத்திலிருந்து வெளியே வந்தான். அவன் மேகத்தின்மேல் இருப்பவரைப் பார்த்து, “அறுவடைக்கு உரிய காலம் வந்துவிட்டது. பூமியின் பயிரும் முதிர்ந்து விட்டது. எனவே உங்கள் அறிவாளை எடுத்து அறுவடை செய்யுங்கள்” என்றான். 16 அப்போது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார். பூமியின் விளைச்சல் அறுவடை ஆயிற்று.

17 பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான். 18 பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான். 19 அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான். 20 நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center