Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 13-14

பொய்த் தீர்க்கதரிசிகள்

13 “ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவன் ஒருவன் உங்களிடம் வந்து, ஒரு அடையாளத்தையோ அல்லது ஒரு அற்புதத்தையோ காட்டுவதாகச் சொல்லுவான். அவன் சொன்னபடி அந்த அடையாளமோ, அற்புதமோ, உண்மையிலேயே நடந்திடலாம். நீங்கள் அறிந்திராத அந்நிய தெய்வங்களைச் சேவிப்போம் என்று அவன் உங்களிடம் சொல்வான். அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார். உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்! அதுமட்டுமின்றி, நீங்கள் அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவுகளை விளக்கிக் கூறுபவனைக் கொல்ல வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களைத் திசை திருப்பப் பேசினான். உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வந்தார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழும்படி கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து உங்களை வெளியே இழுக்க அந்த ஆள் முயற்சித்தான். எனவே நீங்கள் அவனைக் கொன்று அந்தத் தீமையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள்.

“யாராவது ஒருவன், அது உங்கள் உடன் பிறந்த சகோதரன், உங்கள் மகன், உங்கள் மகள், நீங்கள் நேசிக்கின்ற உங்கள் மனைவி அல்லது உங்கள் உயிர் நண்பன், இவர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுள் ஒருவர் உங்களிடம் வந்து, ‘நாம் போய் அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யலாம்’ என்று அந்நிய தெய்வங்களை நீங்கள் வழிபட இரகசியமாக கூறலாம். (இந்தத் தெய்வங்கள் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் தெரியவே தெரியாது. அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.) நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது. 9-10 அதற்குப் பதில் அவனை நீங்கள் கொன்றுவிட வேண்டும்! கற்களால் அவனை அடித்துக் கொல்லுங்கள், அவ்வாறு செய்வதில் நீங்கள் முதன்மையாக இருங்கள். பின் அவன் மரிக்கும்வரை மற்ற எல்லா ஜனங்களும் அவன்மீது கற்களை எறிய வேண்டும். ஏனென்றால் அவன் உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை விலக்கி இழுக்க முயன்றான். எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து உங்களை வெளியே இழுக்க முயற்சி செய்தவன் அவன் 11 பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், அதைக் கேட்டுப் பயந்து உங்களின் நடுவே இப்படிப்பட்ட தீய காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.

அழிக்க வேண்டிய நகரங்கள்

12 “உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வாழ்வதற்கான நகரங்களைத் தந்துள்ளார். சில நேரங்களில் நீங்கள் அந்த நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தைப் பற்றித் தீய செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் கேட்கும் அந்தச் செய்தியானது, 13 உங்கள் தேசத்தைச் சார்ந்த சில தீயவர்கள் அவர்களது நகர ஜனங்களை தீயச் செயல்களைச் செய்யுமாறு தூண்டினார்கள் என்பதாகும். அவர்கள் அவர்களது நகர ஜனங்களிடம் ‘அந்நிய தெய்வங்களை தொழுது கொண்டு சேவை செய்வோம் வாருங்கள்!’ என்று அழைத்த செயலே அதுவாகும். (அந்தத் தெய்வங்கள் நீங்கள் இதற்கு முன் அறிந்திராத அந்நிய தெய்வங்கள்.) 14 இப்படிப்பட்டச் செய்திகளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைவரும் அதை நன்றாகக் கேட்டு ஆராய வேண்டும். நீங்கள் விசாரித்தது உண்மை என்றால், அப்படிப்பட்ட எரிச்சலூட்டும் காரியம் உங்கள் நடுவே நடந்தது உண்மையென்று கண்டீர்கள் என்றால், 15 பின் அந்த நகர ஜனங்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். நீங்கள் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். அவர்களது விலங்குகளையும் கூட கொன்றுவிடவேண்டும். அந்த நகரத்தை முழுவதுமாக நாசமாக்கி அழித்து விட வேண்டும். 16 பின் நீங்கள் அங்கு கைப்பற்றிய அனைத்துப் பொருட்களையும், விலையுயர்ந்தப் பெருட்களையும், நகரத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்து நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யும் தகனபலியாகும், அந்த நகரமானது வெறும் வெற்றிடமாக மண்மேடாகவே என்றென்றும் இருக்கும். அந்த நகரம் மீண்டும் கட்டப்படவே கூடாது. 17 அந்த நகரில் உள்ள எல்லாப் பொருளும் அழிக்கப்படுவதற்காக தேவனிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆகையால் நீங்கள் அவற்றில் எந்த ஒரு பொருளையும் உங்களுக்காக வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படி நீங்கள் செய்வீர்கள் என்றால் கர்த்தர் உங்கள் மீதுள்ள கடுங்கோபத்தை நிறுத்திவிடுவார். கர்த்தர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார். உங்களுக்காக வருந்துவார். அவர் உங்கள் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி வளார்ச்சி அடையச் செய்வார். 18 இவைகள் நடக்க வேண்டுமென்றால் நான் இன்று உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறியதைக் கேட்டு அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லும் சரியானவற்றையெல்லாம் நீங்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.

இஸ்ரவேலர் தேவனின் விசேஷ ஜனங்கள்

14 “நீங்கள் எல்லோரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள். உங்களில் ஒருவன் மரித்ததற்காக நீங்கள் உங்களை கீறிக்கொள்ளாமலும், மொட்டையடித்து சவரம் செய்யாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் நீங்கள் மற்ற ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த உலகில் உள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே தமது சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

இஸ்ரவேல் ஜனங்கள் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவுகள்

“கர்த்தர் வெறுக்கின்ற எந்தப் பொருளையும் நீங்கள் உண்ணக்கூடாது. நீங்கள் உண்ணத்தகுந்த மிருகங்களாவன: மாடுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, மான், வெளிமான், கலைமான், வரையாடு, புள்ளிமான், சருகுமான், புல்வாய், ஆகியனவாகும். நீங்கள் கால்களில் விரிகுளம்புகளுடைய மிருகங்களையும், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கின்ற மிருகங்களையும், அசைபோடுகின்ற சகல மிருகங்களையும உண்ணலாம். ஆனால் ஒட்டகங்களையும், முயல்களையும் குழிமுயல்களையும் உண்ணக் கூடாது. இவைகள் அசைபோடும் மிருகங்களாக இருந்தாலும் அவைகளுக்கு விரிகுளம்புகள் இல்லை. ஆகவே அந்த மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமான உணவாகும். நீங்கள் பன்றிகளை உண்ணக்கூடாது. அவை விரிகுளம்பு உள்ளதாய் இருந்தாலும் அசை போடாது. ஆகவே இவை உங்களுக்கு சுத்தமான உணவு இல்லை. இவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. இவற்றின் மரித்த உடலைக்கூட தொடக்கூடாது.

“நீங்கள் துடுப்பும், செதில்களும் உள்ள எந்த வகையான மீனையும் உண்ணலாம். 10 ஆனால் துடுப்புகளும். செதில்களும் இல்லாத தண்ணீருக்குள் வசிக்கும் எதையும் உண்ணக்கூடாது. இவை உங்களுக்கான சுத்தமான உணவு அல்ல.

11 “சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் உண்ணலாம். 12 ஆனால் கழுகுகள், கருடன்கள், கடலுராஞ்சிகள் ஆகியவற்றையும், 13 பைரி, வல்லூற்று எவ்வகை பருந்தும், 14 எந்த வகையான காகங்களும், 15 தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவிதமான டேகையும், 16 ஆந்தை, கோட்டான், நாரைகள், 17 கூழக் கடா, குருகு, தண்ணீர்க் காகம், 18 கொக்கு, சகலவித ராஜாளியும், புழுக்கொத்தி, வௌவால், ஆகியவற்றை உண்ணக்கூடாது.

19 “பறப்பனவற்றில் எல்லா வகையான ஊர்வன யாவும் சுத்தமற்றவை. ஆகவே அவற்றை உண்ணக் கூடாது. 20 ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம்.

21 “தானாக மரித்துப்போன எந்த விலங்கையும் உண்ண வேண்டாம். நீங்கள் அவற்றை உங்கள் ஊரிலுள்ள வழிப்போக்கருக்குக் கொடுத்துவிடலாம், அவர்கள் அதனை உண்ணலாம். அல்லது அந்நியருக்கு விற்றுவிடலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் அவற்றை உண்ணக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள்.

“வெள்ளாட்டுக் குட்டியை, அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.

பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது

22 “உங்கள் வயல்களின் எல்லா விளைச்சலிலுமிருந்து பத்தில் ஒரு பங்கை வருடந்தோறும் தனியாக எடுத்து வையுங்கள். 23 அதை நீங்கள் கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்ட சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருக்க நீங்கள் அங்கே செல்ல வேண்டும். அந்த இடத்தில் உங்களது தானியத்திலும், உங்களது திராட்சைரசத்திலும், உங்கள் எண்ணெயிலும் எடுத்துவைத்த பத்தில் ஒரு பங்கையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலையீற்றையும் கொண்டுவந்து கர்த்தர் உங்களுக்கு நியமிக்கும் தேவாலயத்தில் உண்டு மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதையளிக்கும்படி எப்பொழுதும் நினைவாயிரு. 24 ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கின்றபோது தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட இடமானது நீங்கள் குடியிருக்கிற இடத்திலிருந்து, மிகத் தொலைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பத்தில் ஒரு பங்கு காணிக்கைப் பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல இயலாமல் போகலாம். அப்படி நடக்குமென்றால் 25 நீங்கள் ஒதுக்கிவைத்த பங்குப் பொருட்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவேண்டும். 26 தேவாலயத்திற்கு வந்த பின்பு, நீங்கள் உங்கள் தேவைக்கேற்ற மாடுகள், ஆடுகள், திராட்சைரசம் போன்ற உணவுப் பொருட்களை அந்த பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம், பின்பு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்டு மகிழலாம். 27 உங்கள் நகரில் வசிக்கின்ற லேவியரை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (அவர்களுக்கும் உங்கள் உணவை பகிர்ந்தளியுங்கள்) ஏனெனில், அவர்களுக்கு உங்களைப் போன்று எந்த சொத்தும் சுதந்திரமும் கிடையாது.

28 “மூன்று ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் அந்த ஆண்டு உங்களுக்குக் கிடைத்த பலன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை ஒதுக்கி வைக்கவேண்டும். மற்ற ஜனங்கள் பயன்படுத்தக் கூடிய உங்கள் பட்டணங்களில் அந்த உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருங்கள். 29 இந்த உணவுப் பொருட்கள் லேவியர்களுக்கு சொந்தம் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கென்று சொந்தமான எந்த நிலமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உங்கள் ஊரில் தேவை உள்ள ஜனங்களுக்கும் ஆகும். அது அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும், உரியது, அவர்கள் வந்து உண்டு திருப்தி அடையட்டும். இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 99-101

99 கர்த்தர் அரசர்.
    எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார்.
    எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
    ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
    தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
    தேவன் பரிசுத்தர்.
வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார்.
    தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
    யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
    அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
    அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
    அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
    தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
    ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
    மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
    அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
    நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.

நன்றி கூறும் பாடல்

100 பூமியே, கர்த்தரைப் பாடு.
கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
    மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
    அவரே நம்மை உண்டாக்கினார்.
    நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
    துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
    அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர்.
    அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
    என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.

தாவீதின் ஒரு சங்கீதம்

101 நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன்.
    கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
    என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
    கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன்.
    ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன்.
    நான் அதைச் செய்யமாட்டேன்!
நான் நேர்மையாக இருப்பேன்.
    நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன்.
    நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.

நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன்.
    அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன்.
    பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன்.
    என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன்.
    கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.

ஏசாயா 41

கர்த்தரே நித்திய சிருஷ்டிகர்

41 கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்!
    நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள்.
என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம்.
    யார் சரியென்று முடிவு செய்வோம்.
இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள்.
    கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்?
நன்மையானது அவரோடு நடக்கிறது.
அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார்.
    அவைகள் தூசிபோல ஆகின்றன.
    அவர் தமது வில்லைப் பயன்படுத்தி அரசர்களை வென்றார்.
    அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப்போன்று ஓடிப்போனார்கள்.
அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை.
    இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
இவை நிகழக் காரணமாக இருந்தது யார்?இதனைச் செய்தது யார்?
    தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்?
    கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
கர்த்தராகிய நானே முதல்வர்!
    தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன்.
    எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன்.
வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்!
    பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள்.
    இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.

“தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.”

கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும்

கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
    யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
    ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள்.
    நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள்.
ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன்,
    ‘நீ எனது ஊழியன்.’
    நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!
10 கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
    பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன்.
    நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
11 பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள்.
    உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
12 நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள்.
    ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது.
    உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
13 நான் உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன்.
‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே!
    நான் உனக்கு உதவுவேன்.’
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே.
    எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்!
    நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்”.

கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார்.

“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்)
    உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன்.
    அது கூர்மையான பற்களை உடையது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள்.
    அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள்.
    நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய்.
    நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய்.
    அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும்.
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
    இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்”.

17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள்.
    ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் தாகமாக இருக்கிறார்கள்.
    அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று.
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன்.
    நான் அவர்களை விடமாட்டேன்.
    அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன்.
    பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன்.
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன்.
    வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.
19 வனாந்திரங்களில் மரங்கள் வளரும்.
    அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன்.
20 ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
    கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள்.
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
    அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்”.

பொய்த் தெய்வங்களுக்கு கர்த்தர் சவால் விடுகிறார்

21 யாக்கோபின் அரசரான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம். 22 உங்கள் சிலைகள் (பொய்த் தெய்வங்கள்) வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் என்ன நடந்தது? எதிர்காலத்தில் என்ன நடக்கும்? எங்களிடம் கூறு. நாங்கள் கடினமாகக் கவனிப்போம். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவோம். 23 என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கும்படி எங்களுக்குக் கூறுங்கள். பிறகு நாங்கள் உங்களை உண்மையான தெய்வங்கள் என்று நம்புவோம். ஏதாவது செய்யுங்கள்! எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நல்லதோ அல்லது கெட்டதோ! பிறகு நீங்கள் உயிரோடு இருப்பதாக நாங்கள் பார்ப்போம். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்.

24 “பாருங்கள், பொய்த் தெய்வங்களான நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்கள்! உங்களால் எதுவும் செய்யமுடியாது! அருவருப்பானவன் மட்டுமே உங்களை வழிபட விரும்புவான்!”

கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார்

25 “வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான்.
    அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான்.
பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல
    அந்தச் சிறப்பானவன் அரசர்களை அழிப்பான் (மிதிப்பான்).

26 “இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது.
    நாம் அவனை தேவன் என்று அழைப்போம்.
எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை.
    அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
    அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது.
27 கர்த்தராகிய நானே சீயோனிடம் இதைப் பற்றிச் சொன்ன முதல் நபர்.
    இந்தச் செய்திகளோடு ஒரு தூதுவனை நான் எருசலேமிற்கு அனுப்பினேன்.
    ‘பாருங்கள், உங்கள் ஜனங்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்!’”

28 நான் அந்தப் பொய்த் தெய்வங்களைப் பார்த்தேன்.
    அவைகளில் ஒன்றும் எதுவும் சொல்லும் வகையில் ஞானமுள்ளவையல்ல.
    அவைகளிடம் நான் கேள்விகள் கேட்டேன், அவைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை!
29 அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்!
    அவைகளால் எதுவும் செய்யமுடியாது!
    அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!

வெளி 11

இரண்டு சாட்சிகள்

11 பிறகு கைக்கோல் போன்ற ஒரு அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்போது தேவதூதன் நின்று என்னிடம், “போ, போய் தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அளந்து பார், அதற்குள் வழிபட்டுக்கொண்டிருப்பவர்களையும் அளந்து பார். ஆலயத்திற்கு வெளியே இருக்கிற பிரகாரம் யூதர் அல்லாதவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அளக்காதே. அந்த மக்கள் பரிசுத்த நகரத்தில் 42 மாதங்கள் நடமாடுவார்கள். நான் எனது இரண்டு சாட்சிகளுக்கும் 1,260 நாட்களின் அளவிற்குத் தீர்க்கதரிசனம் சொல்ல அதிகாரம் கொடுப்பேன். அவர்கள் முரட்டுத் துணியாலான ஆடையை அணிந்திருப்பார்கள்” என்றான்.

இரண்டு ஒலிவ மரங்களும் பூமியின் கர்த்தருக்கு முன்னிலையில் இருக்கிற இரு விளக்குத்தண்டுகளும் இந்த இரு சாட்சிகளாகும். எவராவது சாட்சிகளைச் சேதப்படுத்த முயற்சித்தால், சாட்சிகளின் வாயில் இருந்து நெருப்பு வந்து எதிரிகளை அழித்துவிடும். எவரொருவர் சாட்சிகளைச் சேதப்படுத்த முயன்றாலும் அவர்கள் இது போலவே அழிக்கப்படுவர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாள்களில் மழை பெய்துவிடாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு வல்லமை உண்டு. அவர்களுக்குத் தண்ணீரை இரத்தம் ஆக்குகிற வல்லமையும் உண்டு. விரும்பும்போதெல்லாம் அடிக்கடி பூமியைச் சகலவிதமான வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உண்டு.

அந்த இரு சாட்சிகளும் தங்களது செய்திகளைச் சொல்லி முடித்தபின், பாதாளத்தில் இருந்து வெளிவருகிற மிருகம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடும். அம்மிருகம் அவர்களைத் தோற்கடித்து அவர்களைக் கொல்லும். பிறகு ஞானார்த்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படுகிற அந்த மகா நகரத்தின் தெருக்களில் அச்சாட்சிகளின் சடலங்கள் கிடக்கும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த நகரமும் இது தான். ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். 10 அந்த இருவரும் இறந்துபோனதற்காக, பூமியில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் விருந்து நடத்தி தமக்குள் பரிசுகளை அளிப்பர். அச்சாட்சிகள் உலகில் உள்ள மக்களுக்கு மிகுதியாகத் துன்பம் அளித்ததால்தான் அம்மக்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள்.

11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர். 12 பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர்.

13 அதே நேரத்தில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நகரின் பத்தில் ஒரு பகுதி அழிந்துபோனது. அந்நில நடுக்கத்தால் ஏழாயிரம் மக்கள் இறந்து போயினர். இறந்து போகாத மற்றவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மகிமைப்படுத்தினர்.

14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.

ஏழாவது எக்காளம்

15 ஏழாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தங்கள் கேட்டன. அவை:

“உலகத்தின் இராஜ்யம் இப்போது கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமாயிற்று.
    அவர் எல்லாக் காலங்களிலும் ஆள்வார்”

என்றன.

16 பிறகு தம் சிம்மாசனங்களில் தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும் தரையில்படும்படி தலைகுனிந்து தேவனை வழிபட்டனர். 17 அந்த மூப்பர்கள்,

“சகல வல்லமையும் வாய்ந்த கர்த்தராகிய தேவனே, நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
    நீரே இருக்கிறவரும் இருந்தவரும் ஆவீர்.
உம் மிகப் பெரிய வல்லமையைப் பயன்படுத்தி
    ஆளத் தொடங்கியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
18 உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர்.
    ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம்.
இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம்.
    உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம்.
சிறியோராயினும் பெரியோராயினும் சரி,
    உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம்.
உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.

19 பிறகு தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. பின்னர் மின்னலும், இடி முழக்கங்களும், நிலநடுக்கங்களும், பெருங்கல்மழையும் உண்டாயிற்று.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center