Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 12

தேவனை ஆராதிப்பதற்கான இடம்

12 “இவைகளே தேவனுடைய கட்டளைகளும், நியாயங்களும் ஆகும். அவற்றை நீங்கள் சுதந்திரமாக வாழப் போகின்ற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பூமியில் நீங்கள் வாழ்கின்ற நாள்வரைக்கும் இந்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து கவனமாக அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கர்த்தரே! உங்கள் முற்பிதாக்களுடைய தேவன் ஆவார்! அதனாலேயே அவர்களுக்கு அளித்த வாக்கின்படி இந்த சுதந்திர தேசத்தை உங்களுக்குத் தருகிறார். இப்போது வசிக்கின்ற உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து அந்த தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அந்த ஜனங்கள் எங்கெல்லாம் அவர்களது தெய்வங்களை தொழுது கொண்டார்களோ, அந்த இடங்களையெல்லாம், முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அந்த இடங்களெல்லாம் மலைகள் மீதும், மேடுகள் மீதும், பசுமையான மரங்களுக்குக் கீழும் உள்ளன. நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.

“அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்கிற அதே முறையை நீங்களும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் செய்யக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகல கோத்திரங்களின் நடுவில் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துத் தருவார். கர்த்தர் அவரது நாமத்தை அவ்விடத்திற்கு வைப்பார். அந்த விசேஷ இருப்பிடம் தேவனுடையதாகும். நீங்கள் எல்லோரும் அந்த இடத்திற்குச் சென்றே கர்த்தரை ஆராதிக்க வேண்டும். அங்கே நீங்கள் வரும்போது நெருப்பினால் வேகவைத்த தகனபலியையும், உங்கள் காணிக்கைகளையும். உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுளையும், உங்களின் காணிக்கைகளையும், கர்த்தருக்குக் காணிக்கைகளாக வாக்கு கொடுத்த பொருட்களையும், கர்த்தருக்குக் கொடுக்க விரும்பும் பொருட்களையும் உங்கள் மந்தைகளில் உள்ள ஆடு, மாடுகளில் தலைஈற்றுகளையும் கொண்டு வரவேண்டும். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், அந்த இடத்திற்கு வந்து உண்டு மகிழவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருந்து மகிழ்ச்சியைத் தருவார். அந்த இடத்தில் நீங்கள் எல்லோரும் உங்களது மகிழ்ச்சியையும், உங்கள் கைகளால் செய்த பொருட்களையும், ஒருவருக்கொருவர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், நீங்கள் பெற்றுள்ள எல்லாப் பொருட்களையும், அவர் உங்களுக்குத் தந்ததையும் நினைத்துப் பார்பீர்களாக.

“ஆனால் நாம் அனைவரும் தொழுது வந்தது போல் நீங்கள் தொழுதுகொள்வதைத் தொடரக் கூடாது. இதுவரையிலும் ஒவ்வொருவரும் தேவனை தாங்கள் விரும்பின வழியில் தொழுது கொண்டு வந்தீர்கள். ஏனென்றால் நாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தருகின்ற, அமைதியான, அந்த தேசத்திற்குள் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை. 10 ஆனால் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்துசென்று அந்த தேசத்தில் வாழலாம். அந்த சுதந்திர தேசத்தை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அங்கே உங்கள் எதிரிகள் அனைவரையும் விலக்கி கர்த்தர் உங்களை இளைப்பாறச் செய்வார். அங்கே நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். 11 பின் கர்த்தர் அவருக்கான சிறந்த வீட்டினை அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார். அவ்விடத்திற்கு கர்த்தர் அவரது பெயரை வைப்பார். அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துப் பொருட்களையும், கொண்டுவர வேண்டும். நெருப்பினால் வேகவைத்த தகனபலிகளையும், உங்கள் காணிக்கைகளையும், உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கையும், ஆடு, மாடுகளையும், உங்கள் காணிக்கைகளையும், கர்த்தருக்கு வாக்குப் பண்ணின பொருட்களையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளின் தலைஈற்றுகளையும், கொண்டுவர வேண்டும். 12 கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்களும், உங்கள் பிள்ளைகளும், வேலைக்காரர் அனைவரும் வந்து, உங்கள் நகரங்களில் வசிக்கும் எந்தவொரு சொத்தும் சுதந்திரமும் இல்லாத லேவியருடன்கூடி, வந்திருந்து ஒருவொருக்கொருவர் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு மகிழ்ச்சியாக இருங்கள். 13 நீங்கள் கண்ட இடங்களில் எல்லாம் உங்கள் விருப்பப்படி தகனபலிகளை செலுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். 14 உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும்.

15 “நீங்கள் எங்கெல்லாம் வசிக்கின்றீர்களோ, அங்கெல்லாம் நீங்கள் விரும்பிய வெளிமான், கலைமான் போன்ற விலங்குகளை அடித்து சாப்பிடலாம். நீங்கள் உங்கள் விருப்பப்படி எவ்வளவு இறைச்சி வேண்டுமானாலும் உண்ணலாம். அந்த அளவிற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார். யார் வேண்டுமானாலும் அவர்கள் சுத்தமானவர்களாக தேவனை தொழுதுகொள்ள தகுதி உடையவர்களானாலும் சரி, சுத்தமின்றி தேவனை தொழுதுகொள்ள தகுதி இல்லாதவராயினும் சரி, இறைச்சி உணவை சாப்பிடலாம். 16 ஆனால் நீங்கள் இரத்தத்தை மாத்திரம் உண்ணவே கூடாது. அதைத் தண்ணீரைப் போல் தரையிலேயே ஊற்றிவிடவேண்டும்.

17 “நீங்கள் வசித்து வரும் வீடுகளில் இவற்றை நீங்கள் உண்ணவேண்டாம். அந்தப் பொருட்கள் பின்வருமாறு: தேவனுக்காக கொடுக்க இருக்கும் உங்களது தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலைஈற்றுகளையும், தேவனுக்குத் தருவதாக வேண்டிக் கொண்டவற்றையும், தேவனுக்காக நீங்கள் கொடுக்க விரும்பும் வேறு எந்தப் பொருட்களையும், அல்லது உங்களின் அன்பளிப்புகளையும், உங்கள் வீடுகளில் உண்ணக்கூடாது. 18 நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக. 19 எப்போதும் உங்களது இந்த உணவுகளில் லேவியர்களுக்கு பங்கு அளிப்பதில் தவறாதீர்கள். உங்கள் தேசத்தில் நீங்கள் வாழும்வரை இதை நீங்கள் செய்யவேண்டும்.

20-21 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்ததுபோல் உங்கள் நாட்டின் எல்லைகளை விரிவாக்குவார். அவர் அவ்வாறு செய்யும்போது கர்த்தர் அவருக்காகத் தேர்ந்தெடுத்த ஆலயங்கள் நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருக்கலாம். அவ்வாறு தொலை தூரம் இருந்தால் நீங்கள் வரும் வழியில் பசி ஏற்பட்டு இறைச்சி உண்ண ஆசைப்பட்டால் அங்கு உங்களுக்கு கிடைக்கும் எந்த இறைச்சியையும் நீங்கள் உண்ணலாம். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளில் எதை வேண்டுமானாலும் நான் உங்களுக்கு இட்ட கட்டளையின்படி அதனை அடித்து உண்ணலாம். இவ்வாறு நீங்கள் விரும்பிய இடங்களில் உண்ணலாம். 22 வெளிமானையும், கலைமானையும், உண்பது போன்றே நீங்கள் அதையும் உண்ணலாம். யாவரும் அதாவது தேவனை தொழுதுகொள்ள தகுதியான சுத்தமானவர்களும், தொழுதுகொள்ளத்தகாத அசுத்தமானவர்களும் அதை உண்ணலாம். 23 ஆனால் அவற்றின் இரத்தத்தை உண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள், ஏனென்றால் உயிரானது இரத்தத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அந்த உயிர் இருக்கும்வரை இறைச்சியை உண்ணக்கூடாது. 24 எனவே நீங்கள் இரத்தத்தை உண்ணாமல், தண்ணீரை போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும். 25 ஆகவே இரத்தத்தை உண்ணக் கூடாது. கர்த்தர் உங்களுக்குச் சொன்ன சரியானவற்றையே நீங்கள் செய்யவேண்டும். பின் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் நல்லவைகளே நடக்கும்.

26 “தேவனுக்காக ஏதேனும் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அந்த ஆலயத்திற்கே செல்லவேண்டும். அதுமட்டுமின்றி, தேவனுக்காக நீங்கள் செய்த சிறப்பு வாக்குறுதியை தேவனுடைய ஆலயத்திற்கே சென்று செலுத்த வேண்டும். 27 அங்கேயே நீங்கள் உங்களின் தகன பலிகளையும் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்திலேயே இறைச்சியோடும், இரத்தத்தோடும் பலியிட வேண்டும். நீங்கள் செய்ய விரும்புகின்ற மற்ற பலிகளின் இரத்தமும், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின் மேலே ஊற்றப்பட வேண்டும். பின், நீங்கள் அந்த மாமிசத்தை உண்ணலாம். 28 நான் கூறும் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து பின்பற்றுவதில் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பாக நல்லவற்றையும், நேர்மையானவற்றையும் நீங்கள் செய்வதனால் நீங்களும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியினரும் என்றென்றைக்கும் எல்லாவற்றிலும் நல்லதையே பெறுவீர்கள்.

29 “உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து, நீங்கள் சுதந்திரமாக வசிக்கப் போகிற தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக அந்த எதிரின ஜனங்களை அழித்துவிடுவார். நீங்கள் அவர்களை வெளியே துரத்திவிட்டு அங்கே வாழப் போகிறீர்கள். 30 அவ்வாறு நடந்ததற்கு பின்பு நீங்களும் எச்சரிக்கையாய் இருங்கள். அந்த ஜனங்களை அழித்துவிடுவீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளும் வலையில் சிக்கி விடாதீர்கள்! அந்த பொய்த்தெய்வங்களிடம் உதவிக்காக செல்லாமல் எச்சரிக்கையாய் இருங்கள். ‘அவர்கள் அந்த பொய்த் தெய்வங்களை தொழுதுகொண்டார்கள். ஆகவே நானும், அதைப் பின்பற்றி தொழுதுகொள்ளுவேன்!’ என்று சொல்லிவிடாதீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அதைப்போன்று செய்துவிடாதீர்கள். அந்த விதத்தில் நமது தேவனை தொழுதுகொள்ள வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் அருவருக்கின்ற எல்லா தீய செயல்களையும், அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களது பிள்ளைகளைக்கூட அந்த பொய்த் தெய்வங்களுக்காக தீயிலிட்டு பலியிட்டனர்!

32 “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றில் எதையும் கூட்டவோ, அல்லது குறைக்கவோ கூடாது.

சங்கீதம் 97-98

97 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
    தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன.
அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
    நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும்.
கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
    அது பகைவரை அழிக்கிறது.
வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
    ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
    பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும்.
வானங்களே, அவரது நன்மையைக் கூறுங்கள்!
    ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்!

ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.
    அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
    யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்!
    ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார்.
மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர்.
    பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
    எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!

ஒரு துதிப்பாடல்

98 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்
    கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
அவரது பரிசுத்த வலது கை
    மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.
    கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.
    தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.
    துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
    சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.
    எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
கடலும், பூமியும்
    அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.
    எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.
    அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார்.
    அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.

ஏசாயா 40

இஸ்ரவேலின் தண்டனை முடியும்

40 உனது தேவன் கூறுகிறார்,
    “ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்!
எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
    உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது.
    ‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு.
கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும்
    இருமுறை தண்டித்தார்.”

கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்!
“கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்!
    நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்!
ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
    ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள்.
    கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள்.
பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
    கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள்.
ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”
ஒரு குரல் சொன்னது, “பேசு!”
    எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?”
அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள்.
    அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
    அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
    அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும்.
    உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
    ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”

மீட்பு: தேவனுடைய நற்செய்தி

சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
    உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே!
உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம்.
    சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
    எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார்.
    அவரோடு அவர்களது பலன் இருக்கும்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
    கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார்.
    கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.

தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார்

12 யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்?
    யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்?
யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்?
    யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
13 கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
    கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை.
14 கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா?
    கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா?
கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது?
    இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறார்.
15 பார், நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறு துளி போன்றது.
    வெகு தொலைவிலுள்ள நாடுகளை கர்த்தர் எடுத்துக்கொண்டால்
    அவரது தராசில் அவற்றை வைத்தால் அவை மணலின் சிறு பொடிகள் போன்று இருக்கும்.
16 லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது.
    லீபனோனில் உள்ள அனைத்து மிருகங்களும் பலிக்காக கொல்வதற்குப்போதாது.
17 தேவனோடு ஒப்பிடும்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுமில்லை.
    தேவனோடு ஒப்பிடும்போது அனைத்து நாடுகளும் ஈடு ஒன்றுமே இல்லாமல் போகும்.

தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது

18 எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது!
    தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது!
19 ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து
    அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான்.
    பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான்.
    வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான்.
20 அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
    அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது.
பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான்.
    அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான்.
21 நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா?
    நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்!
உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்!
    இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்!
22 கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
    அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள்.
அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார்.
    அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார்.
23 ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார்.
    அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார்.
24 ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள்.
    ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன்,
தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார்.
    அவை செத்து காய்ந்து போகின்றன.
    பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும்.
25 பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது.
    எனக்கு இணையாக ஒருவரும் இல்லை.

26 மேலே வானங்களைப் பாருங்கள்.
    இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்?
வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்?
    ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்?
உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர்.
    எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.

27 யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்!
    எனவே, நீ எதற்காக இதைக் கூறுகிறாய்?
“கர்த்தர் நான் வாழும் வழியை அறியமாட்டார்.
    தேவன் என்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கமாட்டார்.”
28 தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
    ஜனங்கள் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கற்றுக்கொள்ள இயலாது.
கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.
    கர்த்தர் தொலைதூர இடங்களைப் பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவிக்கிறார்.
29 கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார்.
    ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.
30 இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர்
    சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.
31 ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள்
    புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப்போல மீண்டும் பலம் பெறுகின்றனர்.
இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள்.
    இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.

வெளி 10

தேவதூதனும் ஒரு சிறு தோல்சுருளும்

10 பிறகு நான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு பலமுள்ள தேவதூதனைக் கண்டேன். அவனை மேகங்கள் ஆடையைப்போல சுற்றியிருந்தன. அவனது தலையைச் சுற்றி வானவில் இருந்தது. அவனது முகம் சூரினைப் போன்று இருந்தது. அவனது கால்களோ நெருப்புத் தூண்களைப் போன்று விளங்கின. அந்தத் தூதன் தன் கையில் சிறு தோல் சுருள் ஒன்றை வைத்திருந்தான். அத்தோல்சுருள் திறந்திருந்தது. அத்தூதன் தன் வலதுகாலைக் கடலிலும் இடது காலை பூமியிலும் வைத்தான். சிங்கம் கெர்ச்சிப்பதைப்போன்று அத்தூதன் சத்தமிட்டான். பின் ஏழு இடிகளும் சத்தமாக முழங்கின.

அந்த ஏழு இடிகளும் சொல்லச் சொல்ல நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் அப்போது பரலோகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது “ஏழு இடிகளும் சொல்வதை நீ எழுதாதே. அவற்றை இரகசியமாய் மூடிவை” என்று சொன்னது.

கடலின் மேலும் பூமியின் மேலும் நின்றுகொண்டிருந்த தேவ தூதன் தன் கையைப் பரலோகத்துக்கு நேராக உயர்த்தியதைப் பார்த்தேன். எல்லாக் காலங்களிலும் ஜீவிக்கிற தேவனின் வல்லமையால் அத்தூதன் ஆணையிட்டான். தேவனே வானத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அவரே பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தவர். அவரே கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அந்தத் தூதன், “இனி தாமதம் இருக்காது! ஏழாம் தூதன் எக்காளத்தை ஊதத் தயாராக இருக்கும் நாட்களில் தேவனுடைய இரகசியத் திட்டம் நிறைவேறும். தேவன் தன் ஊழியக்காரரிடமும், தீர்க்கதரிசிகளிடமும் கூறிய நற்செய்தி தான் அத்திட்டம்” என்றான்.

மீண்டும் அதே குரலை நான் பரலோகத்திலிருந்து கேட்டேன். அக்குரல் என்னிடம், “போ, அத்தூதன் கையில் உள்ள திறந்திருக்கும் தோல் சுருளை வாங்கிக்கொள். கடலிலும், பூமியிலும் நிற்கிற தூதனே இவன்” என்றது.

எனவே, நான் அத்தூதனிடம் சென்று அச்சிறு தோல்சுருளைத் தருமாறு கேட்டேன். அத்தூதன் என்னிடம் “இத்தோல் சுருளை எடுத்துத் தின்று விடு. இது உன் வயிற்றில் கசப்பாக இருக்கும் ஆனால் உன் வாயில் இது தேனைப் போன்று இனிக்கும்”, என்றான். 10 அதனால் தூதனின் கையில் இருந்து அச்சிறு தோல் சுருளை நான் வாங்கினேன். அதனை நான் தின்றேன். அது என் வாயில் தேனைப் போன்று இனித்தது. ஆனால் அது என் வயிற்றுக்குப் போனதும் கசந்தது. 11 அப்போது அவன் என்னிடம் “நீ மறுபடியும் பல்வேறு இனங்கள், நாடுகள், மொழிகள், அரசர்கள் ஆகியோரைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center