Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 9

கர்த்தர் இஸ்ரவேலருடன் இருப்பார்

“இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த ஆற்றினைக் கடந்து செல்பவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே உங்களால் ஏனாக்கியர்களை எதிர்க்க முடியும். தேவன் அக்கினியைப் போல் அவர்களை அழித்துவிடுவார்! கர்த்தர் அந்த ஜனங்களை அழித்துவிடுவார். அவர்களை உங்கள் முன்னால் வீழச்சியடையச் செய்வார். அவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடுவீர்கள். நீங்கள் அவர்களை விரைவில் அழித்துவிடுவீர்கள். தேவன் உங்களுக்குச் சொன்னபடியே இது விரைவில் நிகழும்.

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து அவர்களை உங்களுக்கு முன்பாகவே துரத்திடுவார். ஆனால், ‘நாம் நல்லவர்கள் என்பதால் கர்த்தர் நம்மை இந்த தேசத்திற்கு சுதந்திரமாக வாழும்படி அழைத்து வந்தார்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளாதீர்கள். அந்த ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியதற்கு நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள் என்பதால் அல்ல, அவர்கள் தீயவர்களாக இருந்தனர் என்பதே காரணமாகும், நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் சுதந்திரமாக வசிக்க உங்களுக்கு இந்த நல்ல தேசத்தை தருகின்றார். ஆனால் நீங்கள் நல்லவர்கள் அல்ல, மிகவும் பிடிவாதமுள்ள ஜனங்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

கர்த்தரின் கோபத்தை நினைத்துப்பார்

“பாலைவனத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் ஏற்படுத்திய கோபத்தினை நினைத்துப் பாருங்கள், மறந்துவிடாதீர்கள்! நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இவ்விடத்தில் வந்து சேரும்வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். ஒரேப் மலையிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீக்கள்! கர்த்தர் உங்களை அழித்துவிட நினைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்கினீர்கள். கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன். 10 அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற்பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன.

11 “இரவும் பகலுமாய் 40 நாட்கள் முடிந்த பின்பு, கர்த்தர் அந்த உடன்படிக்கையின்படி எழுதிய இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் கொடுத்தார். 12 பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ.. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார்.

13 “மேலும் கர்த்தர் என்னிடம், ‘நான் இந்த ஜனங்களைக் கவனித்தேன். இவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள்! 14 என்னைவிட்டு விடு! இவர்கள் எல்லோரையும் அழித்து விடுகிறேன். இவர்களில் ஒருவரது பெயரைக்கூட தங்கவிடமாட்டேன்! உன்னிடமிருந்து இவர்களைவிட மிகப் பெரிய பலம் வாய்ந்த ஜனங்கள் இனத்தை உருவாக்குவேன்’ என்று கூறினார்.

தங்கக் கன்றுக்குட்டி

15 “பின் மலையிலிருந்து திரும்பி கீழே இறங்கி வந்தேன். மலையானது அக்கினியால் எரிந்தது. உடன்படிக்கையை எழுதிய இரண்டு கற்பலகைகளும் என் கைகளில் இருந்தன. 16 நான் உங்களைக் கவனித்தபோது உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததைப் பார்த்தேன். தங்கத்தில் வார்க்கப்பட்ட கன்றுக்குட்டியை உருவாக்கியதை நான் பார்த்தேன்! கர்த்தர் உங்களுக்கு இட்ட வழியை விட்டு நீங்கள் வேகமாக விலகிச் சென்றதைக் கண்டேன்! 17 எனவே நான் எடுத்துவந்த இரண்டு கற்பலகைகளையும் ஓங்கி கீழே எறிந்தேன். உங்களின் கண்கள் முன்னாலேயே கற்பலகைகளை துண்டுத் துண்டுகளாகப் போட்டு உடைத்தேன். 18 பின் உங்களுடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக முன்போல் மீண்டும் 40 நாட்கள் இரவு பகலாக விழுந்து கிடந்தேன். எவ்வகை உணவும் உண்ணவில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. எதற்காக இதனைச் செய்தேன் என்றால் நீங்கள் செய்த பாவங்கள் மிகக் கொடுமையானவை. நீங்கள் செய்த இந்த செயல்கள் கர்த்தருக்குச் செய்த தீமைகள் ஆகும். கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள். 19 கர்த்தருக்கு இருந்த கடுமையான கோபத்தைக் கண்டு நான் பயந்தேன். உங்களை அழிக்கின்ற அளவுக்கு அவர் கோபம் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் நான் மன்றாடியதைக் கேட்டார். 20 ஆரோன் மீதும் கர்த்தர் கடுங்கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார்! ஆனால் ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன். 21 நீங்கள் உருவாக்கிய எரிச்சலூட்டும் அந்தக் கன்றுக்குட்டியை எடுத்து தீயிலிட்டுக் கொளுத்தி தூள் தூளாக்கும்படி செய்தேன். அவற்றைப் புழுதியாகும்படிச் செய்தேன். பின் அந்தச் சாம்பலை மலையிலிருந்து வரும் ஆற்றில் போட்டுவிட்டேன்.

இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனிடம் மன்றாடியது

22 “தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீர்கள். 23 காதேஸ்பர்னேயாவிலிருந்து விலகி வரச் செய்யும்போது கர்த்தர் உங்களிடம் சொன்னதைக் கேட்காமல் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள். கர்த்தர் உங்களிடம், ‘நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தை சுதந்திரமாக வாழ எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய நீங்கள் மறுத்தீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. கர்த்தருடைய கட்டளைகளையும் கவனிக்கவில்லை. 24 நான் உங்களைப்பற்றி அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்து வருகிறீர்கள்.

25 “ஆகவே கர்த்தருக்கு முன், இரவு பகலாக 40 நாட்கள் விழுந்து கிடந்தேன். ஏனென்றால், கர்த்தர் உங்களை அழித்துவிடுவதாகச் சொன்னார். 26 நான் கர்த்தரிடம் இவ்வாறு வேண்டினேன்: கர்த்தாவே! எங்கள் ஆண்டவரே! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். அவர்கள் உமக்கு உரியவர்கள். எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும், பலத்தினாலும் அவர்களை விடுவித்து அழைத்து வந்தீர். 27 உமது சேவகர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களிடம் நீர் சொன்ன வாக்கினை நினைத்துப் பாரும். உமக்கு இணங்காமல் போன இவர்களை மன்னியும். இவர்கள் சென்ற தீய வழிகளையும், செய்த பாவங்களையும் பாராது இருப்பீராக. 28 அப்படியும் உமது ஜனங்களாகிய இவர்களைத் தண்டிக்க விரும்பினால், அதைக் காணும் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி, இந்த ஜனங்களை அந்த தேசத்திற்கு அழைத்துச்சென்று சுதங்திரமாக்க முடியவில்லை. கர்த்தர் இவர்களை வெறுத்தார். எனவே, அவர் இவர்களை பாலைவனத்திற்குக் கொல்வதற்கென்று அழைத்துச் சென்றார்’ என்றும் கூறுவார்கள். 29 ஆனால், அவர்கள் உமது ஜனங்களே! கர்த்தாவே! இவர்கள் எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும் பலத்தினாலும் உம்மால் அழைத்து வரப்பட்ட உமது ஜனங்களாவார்கள்.

சங்கீதம் 92-93

ஓய்வு நாளின் துதிப்பாடல்

92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
    உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
காலையில் உமது அன்பைப்பற்றியும்
    இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
    இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
    அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.
    உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.
    நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.
    அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
    தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.
    பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன்.
விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்.
    உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.
    என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள்.
    அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.

12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
    லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
    தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
    அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
    அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.

93 கர்த்தர் அரசர்.
    அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
    அது அசைக்கப்படுவதில்லை.
தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
    தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
    மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
    ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
    உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.

ஏசாயா 37

எசேக்கியா தேவனுடைய உதவிக்காக வேண்டுதல்

37 எசேக்கியா, தளபதியிடமிருந்து வந்த செய்தியைக் கவனித்தான். அவன் அந்தச் செய்தியைக் கேட்டதும் தான் சோகமாயிருப்பதைக் காண்பிக்க தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு எசேக்கியா துக்கத்தைக் குறிக்கும் சிறப்பான ஆடைகளை அணிந்துகொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்குப்போனான். எசேக்கியா அரண்மனை மேலாளரையும் (எலீக்கியாம்) செயலாளனையும் (செப்னா) ஆசாரியர்களின் மூப்பர்களையும் (தலைவர்களையும்) ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பினான். அந்த மூன்று பேரும் துக்கத்தைக் குறிக்கும் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தனர்.

அவர்கள் ஏசாயாவிடம், “அரசன் எசேக்கியா, இன்று துக்கத்திற்கும் துயரத்திற்குமான விசேஷ நாள் என்று கட்டளையிட்டிருக்கிறார். இன்று மிக துக்கமான நாளாக இருக்கும். இது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நாளைப்போன்ற ஒரு நாளாக இருக்கும். ஆனால் குழந்தை பெறவோ போதிய பெலன் தாய்க்கில்லை. (உமது தேவனான கர்த்தர் தளபதி சொன்னவற்றைக் கேட்டிருக்கலாம்). அசீரியா அரசன் தளபதியை அனுப்பி, ஜீவனுள்ள தேவனைப்பற்றி மோசமாகப் பேசும்படி அனுப்பியிருக்கிறான். உமது தேவனாகிய கர்த்தர் அந்தக் கெட்ட வார்த்தைகளைக் கேட்பார். ஒருவேளை சத்துரு தப்பானவன் என்று கர்த்தர் நிரூபிக்கச் செய்வார்! தயவுசெய்து இஸ்ரவேலில் மீதியாக இருக்கிற சில ஜனங்களுக்காக ஜெபம் செய்யும்” என்றனர்.

5-6 ஏசாயா அவர்களிடம், “இந்தத் தகவலை உங்கள் எஜமானனான எசேக்கியாவிடம் சொல்லுங்கள். கர்த்தர் சொல்கிறார், ֥‘தளபதியிடமிருந்து நீங்கள் கேட்டவற்றைப்பற்றிப் பயப்பட வேண்டாம்! அசீரியா அரசனது சிறுவர்கள் என்னைப்பற்றி சொன்ன தீயவற்றை நம்பவேண்டாம். பாருங்கள், நான் அசீரியாவிற்கு எதிராக ஒரு ஆவியை அனுப்புவேன். அசீரியா அரசன் அவனது நாட்டிற்கு வரவிருக்கும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையைப் பெறுவான். எனவே அவன் தனது நாட்டிற்குத் திரும்பிப்போவான். அந்த நேரத்தில் அவனது சொந்த நாட்டில் ஒரு வாளால் அவனைக் கொல்லுவேன்’” என்றார்.

அசீரியா படை எருசலேமை விட்டு விலகியது

8-9 அசீரியா அரசன் ஒரு அறிக்கையைப் பெற்றான். அந்த அறிக்கை, “எத்தியோப்பியா அரசனான திராக்கா உம்மோடு போரிட வருகிறான்” என்று சொன்னது. எனவே, அசீரியா அரசன் லாகீசை விட்டு லிப்னாவுக்குத் திரும்பிப்போனான். தளபதி இதனைக் கேள்விப்பட்டான். அவன் லிப்னா நகரத்திற்குப்போனான். அங்கே அசீரியா அரசன் போரிட்டுக்கொண்டிருந்தான். பிறகு தளபதி எசேக்கியாவிற்குத் தூதுவர்களை அனுப்பினான். 10 “நீங்கள் இவற்றை யூத அரசனான எசேக்கியாவிடம் சொல்லவேண்டுவன:

‘நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். “அசீரியா அரசனால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார்” என்று சொல்லாதீர்கள். 11 கவனியுங்கள், அசீரியாவின் அரசர்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை. 12 அந்த ஜனங்களின் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றினார்களா? இல்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். எனது ஜனங்கள் கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்களையும் தோற்கடித்தனர். 13 ஆமாத் அர்பாத் அரசர் எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் அரசன் எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் அரசர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான்.

எசேக்கியா தேவனிடம் ஜெபம் செய்கிறான்

14 எசேக்கியா தூதுவர்களிடமிருந்து செய்தியைப் பெற்று வாசித்தான். பிறகு, எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்றான். எசேக்கியா கடிதத்தைத் திறந்து கர்த்தருக்கு முன்பு வைத்தான். 15 எசேக்கியா கர்த்தரிடம் ஜெபம் செய்யத் தொடங்கினான். எசேக்கியா சொன்னான்: 16 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் அரசராக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்! 17 கர்த்தாவே நான் சொல்வதைக் கேளும். சனகெரிப்பிடமிருந்து வந்த செய்தியை உமது கண்களைத் திறந்து பாரும். எனக்குச் சனகெரிப் இந்தச் செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனாகிய உம்மைப்பற்றி தீயச் செய்திகளை இது சொல்கிறது. 18 கர்த்தாவே, அசீரியாவின் அரசன் உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான். 19 கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் அரசர்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் அரசர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 20 ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா அரசனின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான்.

எசேக்கியாவிற்கு தேவனுடைய பதில்

21 பிறகு ஆமோத்சின் மகனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா அரசனாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப்பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’

22 “சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்:

“அசீரியா அரசனே, சீயோனின் (எருசலேம்) கன்னிமகள், ‘நீ முக்கியமானவன்’ என்று எண்ணுவதில்லை.
    உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
எருசலேமின் மகள் உன்னை பரிகாசம் செய்கிறாள்.
    உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
23 ஆனால், நீ யாரை பரிகாசம் செய்தாய்?
    நீ யாருக்கு எதிராகப் பேசினாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு எதிராகப் பேசினாய்.
    அவரைவிட நீ உத்தமன்போல நடித்தாய்.
24 எனது கர்த்தராகிய ஆண்டவரைப்பற்றி எதிராகப் பேச உனது வேலைக்காரர்களைப் பயன்படுத்தினாய்.
    நீ, ‘நான் வல்லமையுள்ளவன்! என்னிடம் பற்பல இரதங்கள் உள்ளன.
எனது வல்லமையால் நான் லீபனோனைத் தோற்கடித்தேன்.
    லீபனோனின் மலை உச்சிகளில் நான் ஏறினேன்.
நான் லீபனோனில் உள்ள உயரமான மரங்களை (படைகள்) வெட்டித் தள்ளினேன்.
    நான் மலையின் உச்சிக்கும் காட்டின் மிக ஆழமான பகுதிக்கும் சென்றிருக்கிறேன் என்று கூறினாய்.
25 நான் கிணற்றைத் தோண்டி புதிய இடங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருக்கிறேன்.
    எகிப்தின் ஆறுகளை வற்றச்செய்து அந்நாட்டில் நான் நடந்து சென்றிருக்கிறேன்.’

26 “‘இதைத்தான் நீ கூறினாய். ஆனால் நான் சொன்னவற்றை நீ கேட்டாயா?
    நீண்ட காலத்துக்கு முன்னால் தேவனாகிய நானே இவற்றைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்து நானே அதைத் திட்டமிட்டேன்.
    இப்போதும் நானே அதை நடப்பித்தேன்.
பலமான நகரங்களையெல்லாம் அழிக்கும்படி நான் உன்னை அனுமதித்தேன்.
    நான் அந்த நகரங்களைப் பாழான மண்மேடாகும்படி மாற்றினேன்.
27 அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள்.
    அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் வயல்வெளியில் உள்ள புல்லைப்போல வெட்டப்படுகிறவர்களாக இருந்தார்கள்.
    வீடுகளுக்கு மேலே வளர்ந்துள்ள புல்லைப்போல அவர்கள் இருந்தனர். அது உயரமாக வளருவதற்கு முன் வனாந்தரத்து வெப்பக்காற்றால் எரிக்கப்படுகிறது.
28 உனது படையைப்பற்றியும், போர்களைப்பற்றியும் எனக்குத் தெரியும்.
    நீ எப்பொழுது ஓய்வெடுத்தாய், எப்பொழுது போருக்குப்போனாய் என்று எனக்குத் தெரியும்.
போரிலிருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
    என்னிடத்தில் எப்போது கலக்கமடைந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
29 என் மீது நீ கோபத்தோடு இருக்கிறாய்.
    உனது பெருமையான சொற்களை நான் கேட்டேன்.
எனவே, நான் உனது மூக்கில் கொக்கியை மாட்டுவேன்.
    நான் உனது வாயில் கடிவாளத்தைப்போடுவேன்.
நீ வந்த அதே சாலையில்
    என் நாட்டை விட்டு நீ போகும்படி பலவந்தப்படுத்துவேன்.’”

எசேக்கியாவிற்கு கர்த்தருடையச் செய்தி

30 பிறகு கர்த்தர் எசேக்கியாவிடம், “நான் சொன்னவையெல்லாம் உண்மை என்பதைக் காட்ட உனக்கு ஒரு அடையாளம் தருவேன். இந்த ஆண்டு எந்த தானியத்தையும் விதைக்க மாட்டாய். எனவே இந்த ஆண்டு நீ சென்ற ஆண்டின் விளைச்சலில் காடு போல வளர்ந்த தானியம் மட்டுமே உண்பாய். ஆனால் மூன்று ஆண்டுகளில் நீ பயிர் செய்த தானியத்தையே உண்பாய். நீ அவற்றை அறுவடை செய்வாய். உண்பதற்கு உன்னிடம் ஏராளமாக இருக்கும். நீ திராட்சையைப் பயிர் செய்து அதன் பழங்களை உண்பாய்.

31 “யூதாவின் குடும்பத்தில் தப்பி மீதியாய் இருக்கிற ஜனங்கள் மறுபடியும் வளர ஆரம்பிப்பார்கள். அந்த ஜனங்கள், தரையில் தன் வேர்களை ஆழமாகச் செலுத்தி உறுதியாக வளர்ந்த செடிகளைப்போன்றவர்கள். அந்த ஜனங்களுக்கு மிகுதியான பழங்கள் (பிள்ளைகள்) பூமியின்மேல் இருக்கும். 32 ஏனெனில் எருசலேமை விட்டு வெளியே வந்த சில ஜனங்கள் மட்டும் உயிரோடு இருப்பார்கள். சீயோன் மலையில் இருந்து உயிரோடு வந்தவர்களும் இருப்பார்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய பலமான அன்பு இதனைச் செய்யும்.

33 எனவே, அசீரியா அரசனைப்பற்றி ஒரு செய்தி கர்த்தர் இதைக் கூறுகிறார்,

“அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
    இந்த நகரத்தில் அவன் ஒரு அம்பைக்கூட எய்யமாட்டான்.
அவனது கேடயங்களோடு இந்த நகரத்திற்கு எதிராக சண்டையிட நகரமாட்டான்.
    நகரச் சுவர்களில் அவன் கொத்தளம் அமைக்கமாட்டான்.
34 அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான்.
    அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
    கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
35 இந்த நகரத்தை நான் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
    இதனை நான் எனக்காகவும், எனது தாசனாகிய தாவீதுக்காகவும் செய்வேன்” என்று கர்த்தர் சொல்கிறார்.

The Assyrian Army Is Destroyed

36 எனவே, அசீரியாவின் பாளையத்தில் உள்ள 1,85,000 ஆட்களை கர்த்தருடைய தூதன் போய் கொன்றான். மறுநாள் காலையில் ஜனங்கள் எழுந்தனர். அவர்கள் தங்களைச் சுற்றிலும் மரித்துப்போன ஆட்களின் உடல்களைக் கண்டனர். 37 எனவே, அசீரியாவின் அரசனான சனகெரிப் நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.

38 ஒரு நாள், சனகெரிப் அவனது தேவனான நிஸ்ரோகின் ஆலயத்தில் தொழுகை செய்வதற்காக இருந்தான். அந்த நேரத்தில் அவனது இரண்டு மகன்களான அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றனர். பிறகு, அந்த மகன்கள் அரராத்துக்கு ஓடிப்போனார்கள். எனவே, அசீரியாவின் புதிய அரசனாகச் சனகெரிப்பின் மகனான எசரத்தோன் வந்தான்.

வெளி 7

1,44,000 இஸ்ரவேல் மக்கள்

அதற்குப் பிறகு நான்கு தேவதூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்பதைக் கண்டேன். நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருந்தனர். பூமியின் மீதும் கடலின் மீதும் மரத்தின் மீதும் காற்று அடியாதபடிக்குக் கட்டுப்படுத்தினர். பிறகு கிழக்குத் திசையில் இருந்து ஒரு தேவதூதன் வருவதைக் கண்டேன். அவனிடம் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல் இருந்தது. அந்தத் தூதன் உரத்த குரலில் ஏனைய நான்கு தூதர்களையும் அழைத்தான். அந்த நான்கு தூதர்களுக்கும் தேவன் பூமியையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தைக் கொடுத்திருந்தார். அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான்.

பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.

யூதா குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

ரூபன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

காத் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

ஆசேர் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

நப்தலி குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

மனாசே குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

சிமியோன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

லேவி குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

இசக்கார் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

செபுலோன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

யோசேப்பு குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

பென்யமீன் குடும்பத்திலிருந்து

முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

பெருங்கூட்டம்

பிறகு நான் பார்த்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். ஒரு மனிதனால் எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சகல நாடுகளிலும், பழங்குடிகளிலும், இனங்களிலும், மொழிகளிலும், இருந்து வந்தவர்கள். அவர்கள் சிம்மாசனத்தின் முன்னும், ஆட்டுக்குட்டியானவர் முன்னும் நின்றனர். அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர். 10 அவர்கள் உரத்த குரலில் “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் நம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் வெற்றி உரியது!” என்று குரல் எழுப்பினர்.

11 அங்கே நான்கு உயிருள்ள ஜீவன்களும் மூப்பர்களும் இருந்தனர். அவர்களையும் சிம்மாசனத்தையும் சுற்றி தேவ தூதர்கள் நின்றனர். அவர்கள் தலைகுனிந்து பணிவுடன் வழிபட்டார்கள். 12 அவர்கள், “ஆமென்! எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக! ஆமென்” என்றனர்.

13 பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.

14 அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன்.

அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து [a] உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். 15 எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். 16 இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. 17 சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center