Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 3

பாசான் ஜனங்களுடன் போர்

“நாம் பாசானுக்குச் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றோம். பாசானின் அரசன் ஓக்கும், அவனது ஆட்கள் அனைவரும் எத்ரேயில் எங்களுடன் சண்டையிட வந்தார்கள். கர்த்தர் என்னிடம், ‘ஓக்கைக் கண்டுப் பயப்படாதீர்கள். அவனை உங்களிடம் ஒப்புக்கொடுப்பேன். அவனது ஆட்கள், அவனது நிலம் அனைத்தையும் உங்களிடம் தருவேன். எஸ்போனை ஆண்ட எமோரிய மன்னன் சீகோனைத் தோற்கடித்தது போலவே ஓக்கையும் நீங்கள் தோற்கடிப்பீர்கள்’ என்று கூறினார்.

“ஆகவே நமது தேவனாகிய கர்த்தர் பாசானின் அரசனான ஓக்கைத் தோற்கடிக்கச் செய்தார். அவனையும் அவனுடைய ஆட்கள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. அப்பொழுது ஓக்கிற்குச் சொந்தமாயிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவை அர்கோப் பிரதேசத்தில் ஓக்கின் பாசான் நாட்டைச் சேர்ந்த 60 நகரங்கள். அந்நகரங்கள் அனைத்தும் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அவை உயர்ந்த மதில்களையும், உறுதியான கதவுகளையும், வலிமையான தாழ்ப்பாள்களையும் கொண்டிருந்தன. சுவர்கள் இல்லாத பல நகரங்களும் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோனின் நகரங்களை அழித்ததுபோலவே அவற்றையும் அழித்தோம். எல்லா நகரங்களையும் அவற்றிலிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து ஜனங்களையும் அழித்தோம். ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம்.

“அவ்வாறு, இரண்டு எமோரிய அரசர்களின் நிலத்தைக் கைப்பற்றினோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் அந்நிலத்தைக் கைப்பற்றினோம். (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.) 10 உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக்கொண்டோம். சல்க்காயி துவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன.”

11 (பாசானின் அரசன் ஓக் அதுவரைக்கும் வாழ்ந்திருந்த மிகச்சில ரெபெய்தியர்களில் ஒருவன். ஓக்கின் படுக்கை இரும்பாலானது. அது 13 அடிக்கும் அதிக நீளமும் 6 அடி அகலமும் உடையது. அந்தப் படுக்கை அம்மோனிய ஜனங்கள் வசிக்கும் ரப்பா நகரில் இன்னமும் உள்ளது.)

யோர்தான் நதியின் கிழக்குப் பகுதி

12 “எனவே அந்நிலத்தை நமக்கு சொந்தமாக்கிக்கொண்டோம். ரூபன் மற்றும் காத் ஆகியோரின் கோத்திரத்திற்கு அந்நிலத்தின் பகுதியை நான் தந்தேன். நான் அவர்களுக்கு அர்னோன் பள்ளத்தாக்கின் ஆரோவேர் முதல் கீலேயாத் மலைநாடு வரைக்குமான நிலப்பகுதியை அதில் இருந்த நகரங்கள் உள்ளாகக் கொடுத்தேன். கீலேயாத் மலைநாட்டின் பாதி அவர்களுக்குக் கிடைத்தது. 13 கீலேயாத்தின் மற்றொரு பாதியையும் பாசான் முழுவதையும், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த பாதிப்பேர்களுக்கு கொடுத்தேன்.”

(பாசான் ஓக்கின் ஒரு இராஜ்யம். பாசானின் ஒரு பகுதி அர்கோப் எனப்பட்டது. அது ரெப்பாயிம் நாடு என்றும் அழைக்கப்பட்டது. 14 அர்கோப் நிலப் பகுதி முழுவதையும் (பாசான்) மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் எடுத்துக்கொண்டான். கேசூரிய ஜனங்களும் மாகாத்திய ஜனங்களும் வசித்த எல்லை வரைக்கும் அந்நிலப் பகுதி பரவியிருந்தது. அதற்கு யாவீரின் பெயரிடப்பட்டது. ஆகவே இன்றைக்கும், ஜனங்கள் பாசானை யாவீரின் நகரங்கள் என்றழைக்கின்றனர்.)

15 “நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன். 16 மேலும் கீலேயாத்திலிருந்து துவங்கும் நிலப்பகுதியை ரூபன் கோத்திரத்திற்கும், காத் கோத்திரத்திற்கும் கொடுத்தேன். இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து யாப்போக் நதிவரைக்கும் உள்ளது. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி ஒரு எல்லை. யாப்போக் நதி அம்மோனிய ஜனங்களின் எல்லை. 17 பாலைவனத்தின் அருகில் உள்ள யோர்தான் நதி அவர்களின் மேற்கு எல்லை. இப்பகுதிக்கு வடக்கே கலிலேயாவும் தெற்கே சவக்கடலும் (உப்புக்கடல்) உள்ளன. இப்பகுதி கிழக்கிலுள்ள பிஸ்கா சிகரங்களின் கீழுள்ளது.

18 “அச்சமயம், நான் அந்தக் கோத்திரங்களுக்கு இக்கட்டளையைக் கொடுத்தேன். அதாவது, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிப்பதற்காக யோர்தான் நதியின் இப்பகுதியில் உள்ள நிலத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்களில் உள்ள போர் வீரர்கள் தம் ஆயுதங்களை ஏந்தி மற்றுமுள்ள பிற இஸ்ரவேல் கோத்திரங்கள் யோர்தான் நதியைக் கடக்க உதவி செய்ய வேண்டும். 19 நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நகரங்களில் உங்கள் மனைவிகளும், சிறு குழந்தைகளும், ஆடுமாடுகளும், (உங்களிடம் ஏராளமான கால்நடைகள் இருப்பதை நான் அறிவேன்.) தங்கியிருக்க வேண்டும். 20 ஆனால் உங்கள் உறவினரான மற்ற இஸ்ரவேலருக்கு கர்த்தர் யோர்தான் நதியின் மறுபுறம் வசிப்பதற்காக நிலங்களை வழங்கும் வரையிலும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்குத் தந்ததைப் போலவே, கர்த்தர் அவர்களுக்கும் அங்கு அமைதியைத் தருகிறவரையிலும் அவர்களுக்கு உதவுங்கள். பின் நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நிலப் பகுதிக்கு நீங்கள் திரும்பி வரலாம்.’

21 “பிறகு நான் யோசுவாவிடம், ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் இவ்விரு அரசர்களுக்கும் செய்த அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய். நீ நுழையும் எல்லா நாடுகளிலும் கர்த்தர் அவ்வாறே செய்வார். 22 அந்நாட்டு அரசர்களைக் கண்டு நீ பயப்படாதே, ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்று கூறினேன்.

மோசே கானானுக்குள் நுழைவதற்கு தடை

23 “பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன். 24 நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை! 25 தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன்.

26 “ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே. 27 பிஸ்கா மலையின் மீது ஏறிச் செல். மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் பார், நீ இவற்றை உன் கண்களால் பார்க்கலாம். ஆனால் நீ ஒருபோதும் யோர்தான் நதியைக்கடக்க முடியாது. 28 நீ யோசுவாவிற்கு கட்டளைக் கொடுத்து, அவனை ஊக்கப்படுத்து, திடப்படுத்து! நீ அந்நாட்டைப் பார்க்கலாம், ஆனால் யோசுவாவே இஸ்ரவேலரை அங்கு வழிநடத்திச் செல்வான். அவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றவும், அங்கு வாழவும் யோசுவா உதவுவான்’ என்று கூறினார்.

29 “பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

சங்கீதம் 85

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்

85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
    அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!

கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
    கடுங்கோபமாக இராதேயும்.
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
    எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
    உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
    நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

ஏசாயா 31

தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்

31 எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப்போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை.

ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராக கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப்போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார்.

எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள்.

கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார்.

அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளை கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார்.

இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும். பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள்.

அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள். அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள்.

கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.

வெளி 1

இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். [a] விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார். கிறிஸ்து தன் தேவதூதனை அனுப்பி தன் ஊழியனாகிய யோவான் இதனைத் தெரிந்துகொள்ளுமாறு செய்தார். தான் பார்த்த எல்லாவற்றையும் யோவான் சொல்லி இருக்கிறான். தேவனிடமிருந்து வருகிற செய்தியாகிய இவ்வுண்மையையே இயேசு அவனிடம் சொன்னார். தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது.

இயேசுவின் செய்திகளை சபைகளுக்கு யோவான் எழுதுகிறார்

ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது:

எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார்.

பூமியில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு. இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.

பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.

கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் [b] இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”

நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு [c] என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன். 10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது. 11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.

12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். 13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. 14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. 15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. 16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.

17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். 18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. 19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. 20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center