Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 2

பாலைவனத்தில் இஸ்ரவேலர் அலைகின்றனர்

“பின் கர்த்தர் என்னிடம் சொல்லியபடி நாம் செய்தோம். செங்கடலுக்குச் செல்லும் சாலை வாழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றோம். சேயீர் மலைகளைச் சுற்றி பல நாட்கள் அலைந்தோம். பின் கர்த்தர் என்னிடம், ‘இம்மலைகளைச் சுற்றி நீங்கள் அலைந்தது போதும். வடக்கே திரும்புங்கள், ஜனங்களிடம் இதைச் சொல்வாயாக: நீங்கள் சேயீர் நிலப்பகுதியைக் கடந்து செல்வீர்கள். இது ஏசாவின் சந்ததியினரான உங்கள் உறவினர்களுக்கு உரியது. உங்களைக் கண்டு அவர்கள் பயப்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடன் சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு உரிமையானதில் ஒரு அடி நிலம் கூட உங்களுக்குத் தரமாட்டேன். ஏனென்றால் சேயீர் மலை நாட்டை ஏசாவிற்குச் சொந்தமாக வழங்கினேன். நீங்கள் அங்கே உண்ணும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஏசாவின் ஜனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலையும் உங்கள் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இப்பெரும் பாலைவனத்தில் நீங்கள் நடந்து செல்வதை அவர் அறிவார். இந்த 40 ஆண்டு காலமும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருந்தார். உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன’ என்று கூறினார்.

“ஆகவே சேயீரில் வசித்த ஏசாவின் ஜனங்களாகிய நமது உறவினர்களைக் கடந்தோம். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து ஏலாத் மற்றும் எசியோன்கே பேர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வழியை விட்டு விலகி மோவாப் பாலைவனத்துக்குச் செல்லும் சாலை வழியாகத் திரும்பினோம்.

ஆர் நகரில் இஸ்ரவேலர்

“கர்த்தர் என்னிடம், ‘மோவாப் ஜனங்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்களுக்கு எதிராகப் போர் துவங்காதீர்கள். அவர்களது நிலம் எதையும் உங்களுக்குத் தரமாட்டேன். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு ஆர் நகரை வழங்கினேன்’ என்று கூறினார்.”

10 (கடந்த காலத்தில், ஏமிய ஜனங்கள் ஆர் நகரில் வாழ்ந்தனர்! பலசாலிகளான அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். ஏனாக்கியர்களைப் போலவே ஏமியர்களும் உயரமானவர்கள். 11 ஏனாக்கியர்கள் ரெப்பெய்தியர்களில் ஒரு பகுதியினர், ஏமியர்களும் ரெப்பெய்தியர்கள் என்றே கருதப்பட்டனர், ஆனால் மோவாப் ஜனங்கள் அவர்களை ஏமியர்கள் என்றே அழைத்தார்கள், 12 ஓரியர்களும் முன்னர் சேயீரில் வாழ்ந்தார்கள். ஆனால் ஏசாவின் ஜனங்கள் அவர்களிடமிருந்து நாட்டை எடுத்துக்கொண்டார்கள். ஓரியர்களை அழித்துவிட்டு ஏசாவின் ஜனங்கள் அவர்களது நிலத்தில் குடியேறினார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொந்தமாக கர்த்தர் வழங்கிய நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் செய்ததைப்போலவே ஏசாவின் ஜனங்களும் செய்தார்கள்.)

13 “கர்த்தர் என்னிடம், ‘இப்பொழுது சேரேத் பள்ளத்தாக்கின் மறுபுறம் செல்லுங்கள்’ என்று கூறினார். ஆகவே நாம் சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்தோம். 14 நாம் காதேஸ்பர்னேயாவை விட்டு விலகியதிலிருந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்க 38 ஆண்டுகள் கடந்தன. நமது முகாமிலிருந்த அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லா போர் வீரர்களும் மரித்துவிட்டனர். அப்படி நடக்குமென்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார். 15 அவர்கள் மரித்து நமது முகாமை விட்டுவிலகும் வரையிலும் கர்த்தர் அந்த ஆட்களுக்கு எதிராயிருந்தார்.

16 “போர்வீரர்கள் அனைவரும் மரித்துப் போனார்கள். 17 பின் கர்த்தர் என்னிடம், 18 ‘இன்று நீங்கள் ஆர் நகர எல்லையைக் கடந்து மோவாபிற்குள் நுழையவேண்டும். 19 நீங்கள் அம்மோனிய ஜனங்களுக்கு அருகில் செல்வீர்கள், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். அவர்களுடன் போரிட வேண்டாம், ஏனென்றால் அவர்களது நிலத்தை உங்களுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு அந்த நிலத்தைக் கொடுத்து விட்டேன்’ என்றார்.”

20 (அந்நாடும் ரெப்பாயிம் எனப்பட்டது. கடந்த காலத்தில் ரெப்பெய்தியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அம்மோனிய ஜனங்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள். 21 பலசாலிகளான சம்சூமியர்களில் பலர் அங்கே இருந்தார்கள். ஏனாக்கிய ஜனங்களைப் போலவே அவர்களும் உயரமானவர்கள். சம்சூமியர்களை அழிக்க அம்மோனிய ஜனங்களுக்கு கர்த்தர் உதவினார். நிலங்களை வசப்படுத்திக்கொண்டு அம்மோனிய ஜனங்கள் அங்கு வசித்தார்கள். 22 ஏசாவின் ஜனங்களுக்கும் தேவன் இதையே செய்தார். கடந்த காலத்தில் சேயீரில் ஓரிய ஜனங்கள் வாழ்ந்தார்கள். ஏசாவின் ஜனங்கள் ஓரியர்களை அழித்தார்கள். ஏசாவின் சந்ததியார் இன்று வரை அங்கே வசிக்கின்றனர். 23 கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலருக்கும் இவ்வாறே தேவன் செய்தார். காசாவைச் சுற்றியுள்ள நகரங்களில் ஆவியர் வாழ்ந்தார்கள். ஆனால் கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலர் ஆவியர்களை அழித்தனர். அவர்கள் அந்த நிலங்களை வசப்படுத்திக்கொண்டு இதுவரையிலும் வசித்து வருகின்றனர்.)

எமோரியர்களுடன் போர்

24 “கர்த்தர் என்னிடம், ‘அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லத் தயாராகுங்கள். எஸ்போனின் அரசனாகிய சீகோன் என்னும் எமோரியர்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்து, அவனது நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்குவேன். ஆகவே அவனுடன் போரிட்டு அவனது நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 25 உங்களைக் கண்டு எங்குமுள்ள ஜனங்களனைவரையும் பயப்படச் செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிய செய்திகளை கேட்டு, பயந்து நடுங்குவார்கள்’ என்று கூறினார்.

26 “நாம் கெதெமோத் பாலைவெளியில் தங்கியிருந்தபொழுது, எஸ்போனின் அரசனாகிய சீகோனிடம் நான் தூதர்களை அனுப்பினேன், அந்தத் தூதுவர்கள் சமாதான வார்த்தைகளை கேட்டு சீகோனிடம், 27 ‘உங்கள் நாட்டின் வழியாக எங்களைப் போகவிடுங்கள். நாங்கள் சாலைகளிலேயே இருப்போம். சாலையின் வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம். 28 நாங்கள் உண்ணும் உணவுக்கோ, அல்லது குடிக்கும் தண்ணீருக்கோ வெள்ளிக் காசுகளைத் தருகிறோம். உங்கள் நாட்டின் வழியாகச் செல்வதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். 29 யோர்தான் நதியைக்கடந்து நமது தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு வழங்கும் நிலத்தை அடையும்வரை உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய விரும்புகிறோம். சேயீரில் வசிக்கும் ஏசாவின் ஜனங்களும் ஆர் நகரில் வசிக்கும் மோவாப் ஜனங்களும் எங்களை அவர்களது நாடுகளின் வழியாகப் பயணம் செய்ய அனுமதித்தார்கள்’ என்று கூறினார்கள்.

30 “ஆனால் எஸ்போனின் அரசன் சீகோன், நம்மை அவனது நாட்டின் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவனை மிகவும் பிடிவாதமாக இருக்கச் செய்தார். சீகோனை நீங்கள் தோற்கடிக்கவே கர்த்தர் இவ்வாறு செய்தார். அது மெய்யாகவே நடந்ததை இன்று நாம் அறிவோம்!

31 “கர்த்தர் என்னிடம், ‘அரசன் சீகோனையும் அவனது நாட்டையும் உங்களுக்குத் தருகிறேன். அவனது நாட்டைச் சென்று எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று கூறினார்.

32 “பின்னர் அரசன் சீகோனும் அவனது குடிமக்கள் அனைவரும் யாகாசில் நம்முடன் போரிட வந்தார்கள். 33 ஆனால் நமது தேவனாகிய கர்த்தர் அவனை நம்மிடம் ஒப்புக்கொடுத்தார். அரசன் சீகோன், அவனது குமாரர்கள், மற்றும் அவனது குடிமக்கள் அனைவரையும் நாம் தோற்கடித்தோம். 34 அப்பொழுது சீகோனுக்குச் சொந்தமாயிருந்த எல்லை நகரங்களையும் நாம் அழித்தோம். எல்லா நகரங்களிலுமிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவரையும் அழித்தோம். எவரையும் உயிருடன் விட்டு வைக்கவில்லை! 35 அந்நகரங்களிலிருந்த கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம், 36 அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்த ஆரோவேரையும் அப்பள்ளத்தாக்கின் மையத்திலிருந்த வேறொரு நகரையும் வென்றோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து கீலேயாத் வரைக்குமான எல்லா நகரங்களையும் வெல்லும் வல்லமையை கர்த்தர் நமக்குக் கொடுத்தார். எந்த நகரமும் நம்மைவிட வலிமையில் மிஞ்சியிருக்கவில்லை. 37 ஆனால் அம்மோனிய ஜனங்களின் நாட்டிற்கு அருகில் நீ செல்லவில்லை. யாபோக் ஆற்றங்கரைக்கு அருகிலோ அல்லது மலை நாட்டின் நகரங்களுக்கு அருகிலோ நீ செல்லவில்லை. நமது தேவனாகிய கர்த்தர் நமக்குத் தராத எந்த இடத்திற்கு அருகிலும் நீ செல்லவில்லை.

சங்கீதம் 83-84

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

83 தேவனே, அமைதியாய் இராதேயும்!
    உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்!
    தேவனே தயவாய் எதையாவது பேசும்.
தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
    உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
    நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
    பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும்
    நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள்.
6-7 அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள்.
    இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள்.
அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள்.
    லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.
தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும்
    கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர்.
    அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.
11 தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும்.
    ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும்.
    சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
12 தேவனே, அந்த ஜனங்கள்
    உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்!
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும்.
    காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும்
    பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும்.
    அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும்.
    அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
    அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.
    உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மிக உன்னதமான தேனாகிய நீர்
    உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
    ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
என் அரசரே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
    உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
    ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
    தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
    இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
    ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.

தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
    நீர் தேர்ந்தெடுத்த அரசன் மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
    எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர். [a]
    தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
    தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
    உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

ஏசாயா 30

இஸ்ரவேல் எகிப்தையல்ல, தேவனை நம்பவேண்டும்

30 கர்த்தர், “இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் திட்டங்களைப்போடுவார்கள். ஆனால் என்னிடம் உதவியைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால், எனது ஆவி அந்த ஒப்பந்தங்களை விரும்புவதில்லை. இந்த ஜனங்கள் தங்களுக்குள் மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். இந்தக் குழந்தைகள் உதவிக்காக எகிப்துக்குப்போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது சரிதானா என்பதை என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் பார்வோனால் காப்பாற்றப்படுவதாக நம்பினார்கள். எகிப்து அவர்களைக் காப்பாற்றும் என்று நினைக்கிறார்கள்.

“ஆனால், எகிப்தில் ஒளிந்துக்கொள்வது உங்களுக்கு உதவாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். எகிப்தால் உங்களைக் காப்பாற்ற இயலாது. உங்கள் தலைவர்கள் சோவானுக்குப்போயிருக்கிறார்கள். உங்கள் வெளியுறவு அதிகாரிகள் ஆனேஸ் நாட்டுக்குப்போயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத ஜனத்தை அவர்கள் சார்ந்துள்ளனர். எகிப்து பயனற்றது. அதினால் உதவிசெய்ய முடியாது. வெட்கத்திற்கும் துக்கத்திற்குமே எகிப்து காரணமாக அமையும்” என்றார்.

யூதாவிற்கு தேவனுடைய செய்தி

வனாந்திரத்தில் உள்ள மிருகங்களைப் பற்றிய துக்க செய்தி:

வனாந்திரம் ஒரு ஆபத்தான இடம். இப்பூமியில் சிங்கங்களும் விஷப் பாம்புகளும் வேகமாகச் செல்லும் பாம்புகளும் நிறைந்துள்ளன. ஆனால் சில ஜனங்கள் எகிப்துக்குப்போகிறவர்கள் இதின் வழியாகப் பயணம் செய்வார்கள். அவர்கள் தங்கள் செல்வங்களைக் கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டுசெல்வார்கள். ஒட்டகங்களின் முதுகில் தங்கள் பொக்கிஷங்களை வைத்திருப்பார்கள். இதற்குப் பொருள், ஜனங்கள் தமக்கு உதவ முடியாத ஜனத்தையே சார்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் பயனற்ற நாடு தான் எகிப்து. எகிப்தின் உதவி எதற்கும் பயனற்றது. எனவே, நான் எகிப்தை, “எதுவும் செய்யாத அரக்கன்” என்று அழைப்பேன்.

இப்பொழுது, இதை அடையாளத்தின் மேல் எழுது. எல்லா ஜனங்களும் இதனைப் பார்க்க முடியும். இதனை ஒரு புத்தகத்தில் எழுது. இறுதி நாட்களுக்காக இவற்றை எழுது. இது நீண்ட காலத்துக்குப்பின் எதிர்காலத்தில் இருக்கும்.

இந்த ஜனங்கள் தம் பெற்றோருக்கு அடிபணிய மறுக்கும் பிள்ளைகளைப்போன்றுள்ளனர். கர்த்தருடைய போதனைகளைக் கேட்க அவர்கள் மறுத்துப் பொய் சொல்கிறார்கள். 10 “நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றி கனவுகளைக் காணாதீர்கள். எங்களிடம் உண்மைகளைச் சொல்லாதீர்கள். எங்களுக்கு நலமானவற்றை மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கு நல்லுணர்வை உண்டாக்குங்கள். எங்களுக்காக நல்லவற்றை மட்டும் பாருங்கள். 11 உண்மையில் நிகழப்போவதைக் காணுவதை நிறுத்துங்கள். எங்கள் வழியில் இருந்து வெளியேறுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரைப்பற்றி எங்களுக்குக் கூறுவதை நிறுத்துங்கள்” என்று அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் கூறுகிறார்கள்.

தேவனிடமிருந்து மட்டுமே யூதாவிற்கு உதவி வருகிறது

12 இஸ்ரவேலின் பரிசுத்தர் கூறுகிறார், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள். சண்டையும், பொய்யும் உங்களுக்கு உதவும் என்று அதனைச் சார்ந்து இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள். 13 நீங்கள் இவற்றைப்பற்றிய குற்றம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் விரிசல்களையுடைய உயரமான சுவர்களைப்போல இருக்கிறீர்கள். அந்தச் சுவர் விழுந்து சிறு துண்டுகளாக உடையும். 14 நீங்கள் பெரிய களிமண் ஜாடி உடைந்து பற்பல சிறு துண்டுகளாக உடைந்ததைப்போல இருக்கிறீர்கள். அந்தத் துண்டுகள் பயனற்றவை. நீங்கள் அதைக்கொண்டு நெருப்பிலிருந்து எரியும் கரித்துண்டை வெளியே எடுக்கவோ, குளத்திலே தண்ணீர் எடுக்கவோ முடியாது”.

15 இஸ்ரவேலில் பரிசுத்தராயிருக்கிற, கர்த்தராகிய எனது ஆண்டவர் சொல்கிறார், “என்னிடம் நீங்கள் திரும்பி வந்தால் பாதுகாக்கப்படுவீர்கள். என்னை நம்பினால் அது உங்களுக்கு வரப்போகிற உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால் நீங்கள் அவற்றைச் செய்ய விரும்பவில்லை. 16 “இல்லை எங்களுக்கு ஓடிப்போகக் குதிரைகள் வேண்டும்!” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மை. நீங்கள் குதிரைகள் மேலேறி ஓடுவீர்கள். ஆனால் பகைவர்கள் உங்களைத் துரத்துவார்கள். அவர்கள் உங்கள் குதிரைகளை விட வேகமாக இருப்பார்கள்.

17 ஒரு பகைவன் பயங்காட்டுவான். உங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சி ஓடுவார்கள். ஐந்து பகைவர்கள் பயங்காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் அவர்களை விட்டு ஓடிவிடுவீர்கள். மலையின் மேல் உள்ள கொடிக் கம்பம் மட்டுமே உங்கள் சேனையில் விடப்பட்டிருக்கும்.

தேவன் அவரது ஜனங்களுக்கு உதவுவார்

18 கர்த்தர் அவரது இரக்கத்தை உங்கள்மீது காட்ட விரும்புகிறார். கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் எழுந்து உங்களுக்கு ஆறுதல் செய்ய விரும்புகிறார். தேவனாகிய கர்த்தர் நீதி செய்கிறார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

19 சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார்.

20 கடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம். 21 பிறகு, நீ தவறு செய்தால், தவறான வழியில் போனால் (வாழ்ந்தால்), (இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ) நீ உனக்கு பின்னால், “இதுதான் சரியான வழி. இந்த வழியில் நீ போக வேண்டும்” என்ற ஒரு ஓசையைக் கேட்பாய்.

22 உங்களிடம் பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்ட சிலைகள் உள்ளன. அந்த பொய்த் தெய்வங்கள் உங்களை கறைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களுக்குச் சேவை செய்வதை நிறுத்துவீர்கள். நீ அந்த தெய்வங்களைத் தீட்டுப்பட்ட ஆடைபோல தூர எறிவாய்.

23 அந்தக் காலத்தில், உனக்காக கர்த்தர் மழையை அனுப்புவார். பூமியில் நீ விதைகளை விதைக்கலாம். பூமி உனக்காக உணவை விளைய வைக்கும். நீ ஒரு பெரிய அறுவடையைச் செய்வாய். உங்கள் மிருகங்களுக்கு வயலில் ஏராளமான உணவு இருக்கும். உன் ஆடுகளுக்கு அகலமான மேய்ச்சல் இடம் இருக்கும். 24 உனது எருதுகளுக்கும் கழுதைகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். அங்கு ஏராளமான உணவு இருக்கும். உன் மிருகங்கள் உண்பதற்கு முறத்தாலும், தூற்றுக் கூடையாலும் தூற்றப்பட்ட கப்பிகள் உன்னிடம் இருக்கும். 25 ஒவ்வொரு மலையிலும் மேடுகளிலும் தண்ணீர் நிறைந்த ஓடைகள் இருக்கும். இவை ஏராளமான ஜனங்கள் கொல்லப்பட்ட பிறகு, கோபுரங்கள் தரையிலே விழுந்த பிறகு நிகழும்.

26 அந்தக் காலத்திலே, சந்திரனிலிருந்து வருகிற ஒளியானது சூரியனின் ஒளிபோல இருக்கும். சூரியனின் ஒளியானது இப்பொழுது இருப்பதைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். சூரியனிலுள்ள ஒரு நாள் வெளிச்சம் ஒரு வாரம் (ஏழு நாள்) வெளிச்சம்போல் இருக்கும். இவை கர்த்தர் தமது உடைந்துபோன ஜனங்களின் அடிகளினிமித்தம் கட்டுகள் கட்டி அவற்றின் அடிக்காயத்தைக் குணமாக்கும்போது நிகழும்.

27 பார்! தொலைவிலிருந்து கர்த்தருடைய நாமம் வந்துகொண்டிருக்கிறது. அவரது கோபம் அடர்ந்த மேகப் புகையோடு நெருப்பு போன்றுள்ளது. கர்த்தருடைய வாய் கோபத்தால் நிறைந்துள்ளது. அவரது நாக்கானது எரிகின்ற நெருப்புபோல் உள்ளது. 28 கர்த்தருடைய சுவாசமானது (ஆவி) கழுத்து மட்டும் எட்டுகிற ஆற்று வெள்ளத்தைப்போன்றுள்ளது. தேசங்களை கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இது “நாசம் என்னும் சல்லடையில்” தேசங்களை அசைப்பது போல இருக்கும். கர்த்தர் அவர்களைக் கட்டுப்படுத்துவார். அது ஜனங்களின் வாயிலே போட்டு கட்டுப்படுத்துகிற கடிவாளத்தைப்போன்றிருக்கும்.

29 அந்தக் காலத்தில், நீங்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவீர்கள். அந்த நேரமானது, ஓய்வு நாளைத் தொடங்கும் இரவுகளைப்போன்றிருக்கும். கர்த்தருடைய மலைக்கு நடந்துபோகையில், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வழியில் புல்லாங்குழலைக் கவனித்தவண்ணம் இஸ்ரவேலின் கன்மலை அருகில் தொழுதுகொள்ளப்போகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.

30 கர்த்தர் அவரது சிறந்த குரலை ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு செய்வார். கர்த்தர், தம் கரத்தின் வல்லமையை ஜனங்கள் அனைவரும் காணும்படி கோபத்துடன் இறங்கி வருவார். அந்தக் கையானது பெரும் நெருப்பை போல எல்லாவற்றையும் எரிக்கத்தக்கதாக இருக்கும். கர்த்தருடைய வல்லமையானது மழையோடும், கல்மழையோடும் வருகிற புயல்போல இருக்கும். 31 கர்த்தருடைய குரலைக் கேட்டதும் அசீரியா அஞ்சும். கர்த்தர் அசீரியாவை கோலால் அடிப்பார். 32 கர்த்தர் அசீரியாவை அடிப்பார். அது முரசின்மீது தாளம் போடுவது போலவும், வீணைகளை மீட்டுவது போலவும் இருக்கும். கர்த்தர் தமது சிறந்த கையால் (வல்லமை) அசீரியாவைத் தாக்குவார்.

33 தோப்பேத் [a] ஏற்கெனவே நீண்ட காலத்திற்கு முன்பே தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இது அரசனுக்குத் தயாராக உள்ளது. இது மிக ஆழமாகவும் அகலமாகவும் அமைக்கப்பட்டது. அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் உள்ளது. கர்த்தருடைய ஆவியானவர் எரியும் கந்தக ஓடைபோல வந்து அதனை எரிப்பார்.

யூதா

யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து,

தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: பிதாவாகிய தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்.

எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக.

தவறு செய்கிற மக்களை தேவன் தண்டிப்பார்

அன்பான நண்பர்களே, நாம் எல்லோரும் ஒருமித்துப் பங்குகொள்கிற மீட்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் மிகவும் விரும்பினேன். ஆனால் வேறு சிலவற்றைக் குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதன் தேவையை நான் உணர்ந்தேன். தேவன் தம் பரிசுத்தமான மக்களுக்கு எல்லா காலத்திற்குமாகக் கொடுத்த விசுவாசத்திற்காகப் போராடுமாறு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன். சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள்.

நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார். தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார். சோதோம், கொமோரா, நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களையும்கூட நினைவுகூருங்கள். அந்த தேவதூதர்களைப் போன்றே அவையும் பாலியல் நீதிகளை இழந்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் மூழ்கின. நித்திய அக்கினியாகிய தண்டனையில் இப்பொழுது அவை துன்புறுகின்றன. நாம் பார்த்தறிவதற்கு தேவனுடைய தண்டனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அவை இருக்கின்றன.

உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். ஆனால் பிரதான தேவதூதனாகிய மிகாவேல் மோசேயின் உடலுக்காகப் பிசாசோடு விவாதித்தபொழுது, பழியுரைத்ததற்காக பிசாசைத் தண்டிக்க வேண்டுமென மிகாவேல் முடிவு கட்டவில்லை. (கர்த்தரின் தீர்ப்புக்காக மிகாவேல் கோரிக்கை விடுத்தான்.) “கர்த்தர் உன்னைத் தண்டிக்கட்டும்” என்று மட்டும் அவன் சொன்னான்.

10 ஆனால் புரிந்துகொள்ளாத காரியங்களை இம்மக்கள் விமர்சிக்கிறார்கள். பகுத்தறிவற்ற சில மிருகங்களைப்போல, தாமாகவே சிலவற்றைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ஆனால் இவற்றாலேயே அவர்கள் அழிக்கப்படுகிறார்கள். 11 அது அவர்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். காயீன் சென்ற பாதையை இந்த மக்களும் பின்பற்றுகிறார்கள். பணம் பெறுவதற்காக பிலேயாமின் தவறான வழியைப் பின்பற்ற இவர்கள் தம்மைத்தாமே ஒப்படைத்திருக்கிறார்கள். கோரா செய்ததைப்போல இந்த மக்களும் தேவனுக்கு எதிராக மோதுகிறார்கள். அவர்களும் கோராவைப்போல அழிக்கபடுவார்கள்.

12 உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள். 13 அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

14 ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார். 15 எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.

16 இம்மக்கள் எப்போதும் குறை கூறிக் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் செய்யவிரும்பும் தீய காரியங்களை அவர்கள் எப்போதும் செய்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாய் பேசுகிறார்கள். தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் பிறரைக் குறித்து நல்லவை கூறுவர்.

ஓர் எச்சரிக்கையும் செய்யவேண்டிய காரியங்களும்

17 அன்பான நண்பர்களே, முன்னர் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் கூறியவற்றை நினைவுகூருங்கள். 18 சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர். 19 அவர்களே உங்களைப் பிரிக்கிறவர்கள். பாவம் மிகுந்த, சுயம் விரும்புகின்ற காரியங்களை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் ஆவியானவர் இல்லை.

20 ஆனால் அன்பான நண்பர்களே, மிகவும் பரிசுத்தமான விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்களே பலமுள்ளவர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு கூட பிரார்த்தனை செய்யுங்கள். 21 தேவனுடைய அன்பில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணைக்காகக் காத்திருங்கள்.

22 பெலவீனமுள்ள மக்களிடம் இரக்கம் கொள்ளுங்கள். 23 நெருப்பிலிருந்து விடுவிப்பதன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள். சிறு எச்சரிக்கையுணர்வோடு இரக்கம் காட்டவேண்டிய சிலர் இருக்கிறார்கள். பாவத்தினால் அழுக்கேறிய அவர்களது ஆடைகளையும் கூட வெறுத்துவிடுங்கள்.

தேவனை வாழ்த்துங்கள்

24 நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும். 25 அவர் ஒருவரே தேவன். அவரே நம் மீட்பர். அவருக்கே மகிமை, வல்லமை, அதிகாரம் அனைத்தும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கடந்தகாலம் முழுக்கவும், நிகழ்காலத்துக்கும், என்றென்றைக்குமாக உண்டாவதாக ஆமென்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center