M’Cheyne Bible Reading Plan
லேவியரின் நகரங்கள்
35 யோர்தான் நதிக்கருகில் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் கர்த்தர், மோசேயிடம் பேசினார். கர்த்தர், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பங்குகளில் உள்ள நகரங்களின் சில இடங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும் என்று கூறு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள வெளி நிலங்களையும் லேவியருக்குத் தந்துவிட வேண்டும். 3 லேவியர்கள் இந்த நகரங்களில் குடியேறுவார்கள். அவர்களின் பசுக்களும், மற்ற மிருகங்களும் வெளி நிலங்களில் மேய்ந்துகொள்ளும். 4 உங்கள் நிலங்களில் லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பாகமாவது: நகரச் சுவர்களில் 1,500 அடி தூரமும் அதற்கிடையில் உள்ள நிலங்களும் 5 நகரத்தின் மேற்கேயுள்ள 3,000 அடி தூரமும், கிழக்கேயுள்ள 3,000 அடி துரமும், வடக்கேயுள்ள 3,000 அடி தூரமும், தெற்கேயுள்ள 3,000 அடி தூரமும், லேவியர்களுக்கு உரியதாகும். (அனைத்து நிலங்களுக்கும் நடுவில் நகரம் இருக்கும்.) 6 இத்தகைய ஆறு நகரங்களும் பாதுகாப்பின் நகரங்களாகும். விபத்தாக எவராவது ஒருவரைக் கொன்றுவிட்டால், உடனே அவன் இந்த நகரத்திற்குள் ஓடிப்போனால் இது அவர்களுக்குப் பாதுகாப்பைத் தரும். இந்த ஆறு நகரங்களோடும் மேலும் 42 நகரங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும். 7 எனவே மொத்தமாக நீங்கள் லேவியர்களுக்கு 48 நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் தரவேண்டும். 8 பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய பங்கைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் சிறிய பங்கைப் பெறுவார்கள். எனவே பெரிய கோத்திரத்தினர் தங்கள் பங்கில் அதிக நகரங்களை லேவியர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். சிறிய கோத்திரத்தினர் சில நகரங்களை லேவியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்” என்றார்.
9 மேலும் கர்த்தர் மோசேயிடம்: 10 “ஜனங்களிடம் இவற்றையும் கூறு: நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து கானான் நாட்டிற்குள் போனபின்பு 11 நீங்கள் அடைக்கல பட்டணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எவனாவது ஒருவன் தற்செயலாய் யாரையாவது கொன்றுவிட்டால், அடைக்கலப் பட்டணங்களுக்குள் ஓடிப்போக வேண்டும். 12 சாகடிக்கப்பட்டவனின் உறவினர் யாராலும் இடையூறு வராமல், வழக்கு மன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும்வரை அங்கு பாதுகாப்பாக இருப்பான். 13 ஆறு நகரங்கள் பாதுகாப்பின் நகரங்களாக விளங்கும். 14 இவற்றில் மூன்று நகரங்கள் யோர்தான் நதிக்கு கிழக்கே இருக்கும். மேலும் மூன்று நகரங்கள் கானான் நாட்டிற்குள் யோர்தான் நதிக்கு மேற்கே இருக்கும். 15 இந்த நகரங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களிடையே வாழும் அயல்நாட்டு ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பிற்காக இருக்கும். விபத்தில் எவனையாவது கொன்றுவிட்டால், பாதுகாப்புக்காக இந்நகரங்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளலாம்.
16 “எவனாவது இரும்பு ஆயுதத்தை பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவன் கொலை செய்யப்பட வேண்டும். 17 எவனாவது கல்லைப் பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவனும் கொலை செய்யப்படவேண்டும். (ஆனால் பொதுவாக கொலைசெய்யப்படத்தக்க அளவுள்ள கல்லே கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.) 18 ஒருவன் இன்னொருவனை மரத்தடியைப் பயன்படுத்திக் கொன்றால், அவனும் கொலை செய்யப்பட வேண்டியவன். (பொதுவாக மரத்தடியே பிறரைக் கொல்ல ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 19 கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.
20-21 “ஒருவன் இன்னொருவனைத் தன் கையால் அடித்துக் கொலைசெய்து விடலாம் அல்லது ஒருவன் இன்னொருவனைத் தள்ளி விட்டுக் கொன்றுவிடலாம். அல்லது ஒருவன் இன்னொருவன் மீது எதையாவது வீசியும் கொன்றுவிடலாம். ஒருவன் இவற்றை வெறுப்பின் காரணமாகச் செய்தால் அவன் கொலைகாரனாகிறான். அவன் கொலை செய்யப்பட வேண்டியவன் ஆவான். கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.
22 “ஆனால் ஒருவன் எதிர்பாராத விதத்தில் ஒருவனைக் கொன்றுவிடலாம். கொன்றுவிட்ட மனிதனின் மேல் அவனுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. எதிர்பாராத விதத்தில் நடந்தது இது அல்லது ஒருவன் எதையோ வீச அது எதிர்பாராதவிதமாக இன்னொருவன் மீது பட்டு அவன் மரிக்கலாம். அவன் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. 23 அல்லது ஒருவன் ஒரு கல்லை வீச அது இன்னொருவன் மீது பட்டு அவன் மரித்துப் போகலாம். அவன் யாரையும் கொல்லத் திட்டமிடவில்லை. அவன் யாரையும் வெறுக்கவில்லை. எதிர்பாராத விதத்தில் கொலை செய்துவிட்டான். 24 இவ்வாறு நிகழ்ந்தால், பிறகு சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்குரிய வழக்குமன்றமே நிறைவேற்ற வேண்டியதைத் தீர்மானிக்கும். சமூக நீதிமன்றமே கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ள ஒருவன், கொலைகாரனை கொலை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும். 25 சமுதாய நீதிமன்றமானது கொலைகாரனைத் தண்டிக்க வேண்டாம் என்று எண்ணினால் அவனை அடைக்கலப் பட்டணத்துக்கு அனுப்பிவிடலாம். அவன், அப்போதைய தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்த பட்டணத்தில் இருக்க வேண்டும்.
26-27 “அவன் பாதுகாப்பான நகரத்தின் எல்லைகளை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு போனால், அப்போது கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அவனைப் பிடித்துக் கொன்றால், அது கொலை குற்றம் ஆகாது. 28 எதிர்பாராத விதமாக இன்னொருவனைக் கொன்ற ஒருவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை பாதுகாப்பான நகரத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். தலைமை ஆசாரியனின் மறைவிற்குப் பின்னர் அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போகலாம். 29 உங்கள் ஜனங்கள் வாழும் நகரங்களில் எல்லாம் இந்த விதிகள் என்றென்றைக்கும் இருக்கும்.
30 “சாட்சிகள் இருந்தால்தான், ஒருவனைக் கொலைகாரன் என்று முடிவு செய்து கொன்றுவிட தீர்ப்பளிக்க முடியும். ஒரு சாட்சி மட்டும் இருந்தால் ஒருவனைக் கொலைக் குற்றவாளியாக்க முடியாது.
31 “ஒருவன் கொலைகாரன் என்று முடிவானால், அவன் மரண தண்டனைக்குத் தகுதியாவான். அவனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தண்டனையை மாற்ற வேண்டாம். கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்.
32 “ஒருவன் மற்றொருவனைக் கொன்றுவிட்டு பாதுகாப்பான நகரத்திற்கு ஓடிவிட்டால் அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை வீட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள். அவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்நகரத்திலேயே இருக்க வேண்டும்.
33 “குற்றமில்லாத இரத்தம் சிந்தி உங்கள் நாட்டை அசுத்தப்படுத்திவிடாதீர்கள். இரத்தம் சிந்திய பூமியை கொலைகாரனின் இரத்தத்தைக் கொண்டு தவிர வேறு எதினாலேயும் பரிகாரம் செய்ய முடியாது. 34 நானே கர்த்தர், நான் உங்கள் நாட்டில் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன். நான் அங்கே வாழ்வதால் அந்த இடத்தை அறியாதவர்களின் இரத்தத்தால் தீட்டு உள்ளதாகச் செய்யவேண்டாம்” என்றார்.
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று
79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
2 காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
3 தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
4 எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
5 தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
6 தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
7 அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
8 தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
9 எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
27 அந்தக் காலத்திலேயே, கர்த்தர் லிவியாதான் என்னும் கோணலான பாம்பை நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை,
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார்.
கடலில் உள்ள பெரிய பிராணியை கர்த்தர் கொல்வார்.
2 அந்தக் காலத்திலே,
ஜனங்கள் நல்ல திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுவார்கள்.
3 “கர்த்தராகிய நான், அத்தோட்டத்தைக் கவனித்துக்கொள்வேன்.
சரியான காலத்தில் நான் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவேன்.
இரவும் பகலும் நான் தோட்டத்தைக் காவல் செய்வேன்.
எவரும் தோட்டத்தை அழிக்க முடியாது.
4 நான் கோபமாக இல்லை.
ஆனால் போர் இருந்தால், ஒருவர் முள்புதரால் சுவர் எழுப்பினால்,
பிறகு, நான் அதனை நோக்கிப்போய் அதனை எரிப்பேன்.
5 ஆனால், எவராவது பாதுகாப்புக்காக என்னிடம் வந்தால்,
என்னோடு சமாதானமாயிருக்க விரும்பினால் அவர்களை வரவிடுங்கள்.
அவர்கள் என்னோடு சமாதானம் கொள்ளட்டும்.
6 ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அந்த ஜனங்கள் யாக்கோபுக்கு உதவிசெய்து அவனை நல்ல வேர்கள் கொண்ட செடியைப்போல் பலமுள்ளதாக்குவார்கள்.
அந்த ஜனங்கள், இஸ்ரவேலை பூக்க ஆரம்பிக்கும் செடிபோல் வளரச் செய்வார்கள். பிறகு, செடிகளின் பழங்களைப்போல நாடு குழந்தைகளால் நிறைந்திருக்கும்.”
தேவன் இஸ்ரவேலை அனுப்பிவிடுவார்
7 எப்படி கர்த்தர் அவரது ஜனங்களைத் தண்டிப்பார்? கடந்த காலத்தில், பகைவர்கள் ஜனங்களைத் தாக்கினார்கள். அதே வழியில் கர்த்தர் அவர்களைத் தாக்குவாரா? கடந்த காலத்தில் நிறைய ஜனங்கள் கொல்லப்பட்டனர். கர்த்தரும் அதே வழியில் பலரைக் கொல்வாரா?
8 கர்த்தர், இஸ்ரவேலரை வெகுதொலைவிற்கு அனுப்பிவிடுவதன் மூலம் தனது விவாதத்தை முடிக்க விரும்புகிறார். இஸ்ரவேலரிடம் கர்த்தர் கடுமையாகப் பேசுவார். அவரது வார்த்தைகள் சூடான வனாந்திர காற்றைப்போல எரிக்கும்.
9 யாக்கோபின் குற்றம் எப்படி மன்னிக்கப்படும்? அவனது பாவங்கள் விலக்கப்பட என்ன நிகழும்? (இவை நிகழும்) பலிபீடத்திலுள்ள கற்கள் நொறுக்கப்பட்டு புழுதியில் கிடக்கும். சிலைகளும் பலிபீடங்களும் பொய்த் தெய்வங்களின் தொழுதுகொள்ளுதலுக்கு உரியதாய் இருந்தவைகளும் அழிக்கப்படும்.
10 அந்தக் காலத்திலே, பெரு நகரம் காலியாகும். அது வனாந்தரம்போல் ஆகும். எல்லா ஜனங்களும் செல்வார்கள். அவர்கள் வெளியே ஓடுவார்கள். அந்த நகரமானது திறந்த மேய்ச்சல் நிலம்போல் ஆகும். இளம் கன்றுக்குட்டிகள் அங்கே புல் மேயும். திராட்சைக் கொடிகளிலுள்ள இலைகளைக் கன்றுக்குட்டிகள் உண்ணும்.
11 திராட்சைக் கொடிகள் உலர்ந்துபோகும். அவற்றின் இலைகள் ஒடிந்துபோகும். பெண்கள் அக்கிளைகளை விறகாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள். எனவே, அவர்களை உருவாக்கிய தேவன் ஆறுதல் செய்யமாட்டார். அவர்களை உண்டாக்கியவர் அவர்களிடம் கருணையோடு இருக்கமாட்டார்.
12 அந்தக் காலத்தில், கர்த்தர் தமது ஜனங்களை மற்ற ஜனங்களிடமிருந்து பிரித்து வைப்பார். அவர் ஐபிராத்து ஆற்றிலிருந்து தொடங்குவார். கர்த்தர் தமது ஜனங்களை ஐபிராத்து நதி முதல் எகிப்து நதிவரை திரட்டுவார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள். 13 எனது ஜனங்களில் சிலர் இப்பொழுது அசீரியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். எனது ஜனங்களில் சிலர் எகிப்துக்கு ஓடிப்போயிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலே, ஒரு பெரும் எக்காளம் ஊதப்படும். அப்பொழுது அந்த ஜனங்கள் எல்லோரும் எருசலேமிற்குத் திரும்பி வருவார்கள். அந்த ஜனங்கள் அந்தப் பரிசுத்த மலையின்மேல் கர்த்தருக்கு முன்பு பணிவார்கள்.
தேவனின் மக்கள் உலகை எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள்
5 இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். 2 நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். 3 தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. 4 ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். 5 நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான்.
தேவன் நமக்கு அவரது குமாரனைக் குறித்துக் கூறினார்
6 இயேசு கிறிஸ்துவே நம்மிடம் வந்தவர். இயேசு நீரோடும் இரத்தத்தோடும் வந்தவர். இயேசு நீரினால் மட்டுமே வரவில்லை. இல்லை, இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். இது உண்மையென்று நமக்கு ஆவியானவர் கூறுகிறார். ஆவியானவர் உண்மையாவார். 7 எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. 8 ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன.
9 சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். 10 தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. 11 இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. 12 குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.
நமக்கு இப்போது நித்திய ஜீவன் உண்டு
13 தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன். 14 எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார். 15 நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.
16 கிறிஸ்துவில் சகோதரனோ சகோதரியோ நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவம் செய்வதை ஒருவன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பாவம் செய்கிற அந்த சகோதரன் அல்லது சகோதரிக்காக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்போது தேவன் அச்சகோதரன் அல்லது சகோதரிக்கு ஜீவனைக் கொடுப்பார். நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவத்தைச் செய்கிற மக்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மரணத்திற்குள் வழி நடத்தும் பாவமுண்டு. அத்தகைய பாவத்திற்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 17 தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.
18 தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 19 நாம் தேவனுக்கு உரியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தீயவனோ உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறான். 20 தேவகுமாரன் வந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன் நமக்குத் தெளிவை கொடுத்திருக்கிறார். உண்மையான தேவனை இப்போது நாம் அறியமுடியும். தேவனே உண்மையான ஒருவர். அந்த உண்மையான தேவனிடமும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது ஜீவன் உள்ளது. அவரே உண்மையான தேவனும், அவரே நித்திய ஜீவனுமானவர். 21 ஆகையால், அன்பான மக்களே, விக்கிரகங்களாகிய போலிக் கடவுள்களை விட்டு நீங்கள் தூர விலகுங்கள்.
2008 by World Bible Translation Center