M’Cheyne Bible Reading Plan
கானான் நாட்டின் எல்லைகள்
34 மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த கட்டளைகளைக் கூறு: நீங்கள் கானான் நாட்டிற்கு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கானான் நாடு முழுவதையும் பெற்றுக்கொள்வீர்கள். 3 தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும். 4 இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும். 5 அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும். 6 மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும். 7 உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும். 8 ஓர் என்னும் மலையிலிருந்து, இது லெபோ ஆமாத்திற்குப் போகும். பிறகு சேதாத்திற்குப் போகும். 9 பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும். 10 உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும், 11 சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவிற்குப் போகும். எல்லையானது தொடர்ந்து கலிலேயா ஏரிக்குத் தொடரும். 12 பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார்.
13 எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். 14 ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர். 15 அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான்.
16 பிறகு கர்த்தர் மோசேயோடு பேசினார். 17 அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும், 18 கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள். 19 பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்:
யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;
20 சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்;
21 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கிஸ்லோனின் மகனான எலிதாது;
22 தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி;
23 யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்:
24 எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து சிப்தானின் மகனாகிய கேமுவேல்;
25 செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்;
26 இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் மகனாகிய பல்த்தியேல்;
27 ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்;
28 நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.
29 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார்.
38 ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார்.
அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார்.
அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார்.
தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார்.
39 அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார்.
ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.
40 ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்!
அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள்.
41 மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள்.
இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள்.
42 தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள்.
பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள்.
43 எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும்,
சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள்.
44 தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார்.
எகிப்தியர்கள் அந்த தண்ணீரைப் பருக முடியவில்லை.
45 தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன.
தேவன் தவளைகளை அனுப்பினார். அவை எகிப்தியரின் வாழ்க்கையைக் கெடுத்தன.
46 தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார்.
அவர்களின் பிற தாவரங்களை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
47 தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார்.
அவர்களின் மரங்களை அழிக்கப் பெருங்கல்மழையைப் பயன்படுத்தினார்.
48 கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார்.
அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன.
49 தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார்.
அவர்களுக்கு எதிராக அழிக்கும் தேவதூதர்களை அனுப்பினார்.
50 தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் அந்த ஜனங்கள் வாழ அனுமதிக்கவில்லை.
கொடிய நோயால் அவர்கள் மடியச் செய்தார்.
51 எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார்.
காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார்.
52 அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார்.
அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
53 அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழிகாட்டி நடத்தினார்.
தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை.
தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
54 தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.
தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
55 பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார்.
தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார்.
தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.
56 ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள்.
அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
57 இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.
எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
58 இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள்.
அவர்கள் பொய் தெய்வங்களுக்குச் சிலைகளை எழுப்பி, தேவனை பொறாமை அடையச் செய்தார்கள்.
59 தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார்.
அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.
60 தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார்.
ஜனங்களோடு கூட தேவன் அக்கூடாரத்தில் வாழ்ந்திருந்தார்.
61 பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார்.
பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.
62 தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார்.
அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.
63 இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள்.
அவர்கள் மணக்க வேண்டிய இளம் பெண்கள் திருமணப்பாடல் எதையும் பாடவில்லை.
64 ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.
65 இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார்.
அவர் மிகுதியாகத் திராட்சைரசத்தைப் பருகிய வீரனைப்போல காணப்பட்டார்.
66 தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார்.
தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார்.
67 ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார்.
எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை.
68 இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார்.
தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார்.
69 அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
பூமியைப் போல என்றென்றும் இருக்கும்படியாக தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.
70 தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.
தாவீது ஆட்டுத் தொழுவங்களைக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அப்பணியிலிருந்து அகற்றினார்.
71 தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் தேவன் அவனை அவ்வேலையிலிருந்து அகற்றினார்.
தேவன் அவரது ஜனங்களைக் கவனிக்கும் வேலையை தாவீதுக்குக் கொடுத்தார்.
தேவனுடைய சொத்தாகிய யாக்கோபின் ஜனங்களையும் இஸ்ரவேலரின் ஜனங்களையும் கவனிக்கும் பொறுப்பை அவனுக்கு அளித்தார்.
72 தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும்,
மிகுந்த ஞானத்தோடும் வழிநடத்தினான்.
தேவனைப்போற்றும் பாடல்
26 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:
கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.
நமக்குப் பலமான நகரம் உள்ளது.
நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
2 கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
3 கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
4 எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
5 ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார்.
கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார்.
அது புழுதிக்குள் விழும்.
6 பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
7 நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள்.
தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி
எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
8 ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம்.
எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
9 இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது.
தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது,
ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
10 தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான்.
அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான்.
அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட,
கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான்.
11 ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும்.
உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள்,
உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள்.
12 கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர்.
ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
தேவன் அவரது ஜனங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுப்பார்
13 கர்த்தாவே, நீர் எங்களது தேவன்,
ஆனால் கடந்த காலத்தில், நாங்கள் மற்ற தெய்வங்களைப் பின்பற்றினோம்.
நாங்கள் மற்ற எஜமானர்களுக்கு உரியவர்களாய் இருந்தோம்,
ஆனால், இப்பொழுது நாங்கள் ஒரே ஒரு நாமத்தை, அதுவும் உமது நாமத்தை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறோம்.
14 அந்தப் பொய்த் தெய்வங்களெல்லாம் உயிரோடு இல்லை.
அந்த ஆவிகள் மரணத்திலிருந்து எழுவதில்லை.
அவற்றை அழித்துவிட நீர் முடிவு செய்தீர்.
அவற்றை நினைவூட்டுகிற அனைத்தையும் நீர் அழித்துவிட்டீர்.
15 நீர் நேசித்த நாட்டிற்கு உதவியிருக்கிறீர்
மற்ற ஜனங்கள் அந்நாட்டை தோற்கடிக்காதபடி நீர் தடுத்தீர்.
16 கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள்.
நீர் அவர்களைத் தண்டிக்கும்போது உம்மிடம் அமைதியான பிரார்த்தனைகளை ஜனங்கள் செய்வார்கள்.
17 கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது,
நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப்போல் இருக்கிறோம்.
அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள்.
18 அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது.
நாங்கள் குழந்தை பெற்றோம். ஆனால் அது காற்றாகியது.
நாங்கள் உலகத்துக்காக புதிய ஜனங்களை உருவாக்கவில்லை.
நாங்கள் தேசத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவில்லை.
19 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள்.
எங்கள் ஜனங்களின் உடல்களும்
மரணத்திலிருந்து எழும்.
மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள்.
உம்முடைய பனி
செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும்.
புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள்.
ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.”
தீர்ப்பு: பரிசு அல்லது தண்டனை
20 எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள்.
உங்கள் கதவுகளை மூடுங்கள்.
கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள்.
தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள்.
21 கர்த்தர் அவரது இடத்தை விட்டு
உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார்.
கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும்.
இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.
தவறான போதகர்களைக் குறித்து யோவானின் எச்சரிக்கை
4 எனது அன்பான நண்பர்களே, இவ்வுலகில் பல தவறான போதகர்கள் இப்போது வாழ்கிறார்கள். எனவே எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள். தேவனிடமிருந்து வந்தவையா எனப் பார்ப்பதற்கு அந்த ஆவிகளை சோதித்துப் பாருங்கள். 2 தேவனின் ஆவியை அறியும் வகை இதுவே ஆகும். ஓர் ஆவி, “இயேசு பூமிக்கு வந்து மனிதனான கிறிஸ்து என்பதை நான் நம்புகிறேன்” என்று கூறும். அந்த ஆவி தேவனிடமிருந்து வந்தது. 3 இன்னோர் ஆவி இயேசுவைக் குறித்து இவ்வாறு கூற மறுக்கிறது, இது தேவனிடமிருந்து வந்த ஆவி அல்ல. போலி கிறிஸ்து வந்துகொண்டிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்போது போலி கிறிஸ்து ஏற்கெனவே உலகில் வந்திருக்கிறான்.
4 எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர். 5 அம்மக்களோ உலகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் கூறுபவை உலகத்திற்குரியவை. அவர்கள் கூறுவதை உலகம் கேட்கிறது. 6 ஆனால் நாம் தேவனுக்குரியவர்கள். எனவே தேவனை அறிந்த மக்கள் நம் பேச்சைக் கேட்கிறார்கள். ஆனால் தேவனிடமிருந்து வராத மக்கள் நம் பேச்சைக் கேட்பதில்லை. இப்படித் தான் உண்மையான ஆவியானவரையும், பொய்யான பிற ஆவிகளையும் தெரிந்துகொள்கிறோம்.
அன்பு தேவனிடமிருந்து வருகிறது
7 அன்பான நண்பர்களே, தேவனிடமிருந்து அன்பு வருவதால் நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். பிறரை நேசிக்கிறவன் தேவனின் பிள்ளையாயிருக்கிறான். எனவே பிறரை நேசிக்கிறவன் தேவனை அறிகிறான். 8 பிறரை நேசிக்காதவன் தேவனை அறியமாட்டான். ஏனெனில் தேவன் அன்பாயிருக்கிறார். 9 தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார். 10 தேவன் நம்மிடம் காட்டும் அன்பே உண்மையான அன்பாகும். நாம் தேவனிடம் காட்டும் அன்பல்ல. தேவன் நமது பாவங்களை நீக்கும் வழியாக அவரது குமாரனை அனுப்பினார்.
11 அன்பான நண்பர்களே, தேவன் நம்மை இவ்வளவு அதிகமாக நேசித்தார்! எனவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும். 12 எந்த மனிதனும் தேவனைக் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரையொருவர் நேசித்தால், அப்போது தேவன் நம்மில் வசிப்பார். நாம் ஒருவரையொருவர் நேசித்தால் அப்போது தேவனின் அன்பு அதன் குறிக்கோளை அடைகிறது. அது நம்மில் முழுமை பெறுகிறது.
13 நாம் தேவனிலும் தேவன் நம்மிலும் வாழ்வதை அறிந்திருக்கிறோம். தேவன் நமக்கு அவரது ஆவியானவரைக் கொடுத்ததால் நாம் இதனை அறிகிறோம். 14 தேவன் குமாரனை இவ்வுலகின் மீட்பராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மக்களுக்கு அதையே நாம் கூறுகிறோம். 15 ஒரு மனிதன், “இயேசு தேவனின் குமாரன் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னால் அப்போது தேவன் அம்மனிதனில் வாழ்கிறார். அம்மனிதனும் தேவனில் வாழ்கிறான். 16 தேவன் நமக்காகக் கொண்டுள்ள அன்பை அதனால் அறிகிறோம். அந்த அன்பை நாம் நம்புகிறோம்.
தேவன் அன்பாக இருக்கிறார். அன்பில் வாழ்கிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். 17 தேவனின் அன்பு நம்மில் முழுமையடைந்தால், தேவன் நம்மை நியாயந்தீர்க்கும் நாளில் நாம் அச்சமின்றி இருக்க முடியும். இவ்வுலகில் நாம் அவரைப்போல இருப்பதால், நாம் அச்சமில்லாமல் இருப்போம். 18 தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏன்? தேவனின் முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. தேவன் தரும் தண்டனையே ஒருவனை அச்சுறுத்துகிறது. எனவே அச்சமுள்ள மனிதனிடம் தேவனின் அன்பு முழுமை பெறவில்லை.
19 முதலில் தேவன் நம்மை நேசித்ததால், நாம் நேசிக்கிறோம். 20 ஒருவன், “நான் தேவனை நேசிக்கிறேன்” என்று கூறியும், அம்மனிதன் கிறிஸ்துவில் அவனது சகோதரனையோ, சகோதரியையோ வெறுத்தால் அப்போது அம்மனிதன் பொய்யன் ஆகிறான். அம்மனிதன் தான் காண்கிற சகோதரனை நேசிப்பதில்லை. எனவே அவன் ஒருபோதும் கண்டிராத தேவனை நேசிக்க இயலாது. 21 தேவனை நேசிக்கிற ஒருவன் அவனது சகோதரனையும் நேசிக்க வேண்டும் என்பதே அவர் நமக்கு வழங்கிய கட்டளை ஆகும்.
2008 by World Bible Translation Center