Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 33

எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களின் பயணம்

33 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைக் குழுக் குழுவாக எகிப்தை விட்டு அழைத்துச் சென்றனர். அவர்கள் கீழ்க்கண்ட இடங்களின் வழியாகப் பயணம் செய்தனர். மோசே தாம் பயணம் செய்த இடங்களைப்பற்றி எழுதினான். கர்த்தருடைய விருப்பப்படியே மோசே எழுதினான். அவர்கள் எகிப்தை விட்டு பயணம் செய்த இடங்கள் பின் வருவனவாகும்:

முதல் மாதத்தின் 15வது நாளில் அவர்கள் ராமசேசை விட்டனர். அன்று காலை பஸ்காவுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெற்றி முழக்கங்களோடு வெளியேறினார்கள். அவர்களை எகிப்து ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் ராமசேசை விட்டு சுக்கோத்திற்குப் பயணம் செய்தனர். சுக்கோத்திலிருந்து அவர்கள் ஏத்தாமிற்குச் சென்றனர். ஜனங்கள் பாலைவனத்தின் ஓரத்தில் தம் முகாம்களை ஏற்பாடு செய்துகொண்டனர். அவர்கள் ஏத்தாமை விட்டு ஈரோத்துக்குச் சென்றனர். அது பாகால் செபோனுக்கு அருகில் இருந்தது. அவர்கள் மிக்தோலுக்கு அருகில் தம் முகாமை அமைத்தனர்.

ஜனங்கள் ஈரோத்தைவிட்டு கடல் நடுவே நடந்து பாலைவனத்தை நோக்கிச் சென்றனர். பின் அவர்கள் மூன்று நாள் பயணம் செய்து மாராவிலே தம் முகாமை அமைத்தனர்.

ஜனங்கள் மாராவை விட்டு ஏலிமிற்குச் சென்று அங்கே கூடாரமிட்டனர். அங்கே 12 நீருற்றுகளும், 70 பேரீச்சம் மரங்களும் இருந்தன.

10 பின் ஏலிமிலிருந்து விலகி செங்கடலுக்கு அருகே முகாமிட்டனர்.

11 பின் செங்கடலைவிட்டு சீன் பாலைவனத்தில் முகாமிட்டனர்.

12 பின் சீன் பாலைவனத்தை விட்டு தொப்காவில் முகாமிட்டனர்.

13 பின் தொப்காவை விட்டு ஆலூசிலே முகாமிட்டனர்.

14 பின் ஆலூசைவிட்டு ரெவிதீமிலே முகாமிட்டனர். அந்த இடத்தில் ஜனங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதிருந்தது.

15 பின் ரெவிதீமை விட்டு சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டனர்.

16 பின் சீனாயை விட்டு கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டனர்.

17 பின் கிப்ரோத் அத்தாவை விட்டு ஆஸ்ரோத்திலே முகாமிட்டனர்.

18 பின் ஆஸ்ரோத்தை விட்டு ரித்மாவிலே முகாமிட்டனர்.

19 பின் ரித்மாவை விட்டு ரிம்மோன் பேரேசிலே முகாமிட்டனர்.

20 பின் ரிம்மோன்பேரேசை விட்டு லிப்னாவிலே முகாமிட்டனர்.

21 பின் லிப்னாவை விட்டு ரீசாவிலே முகாமிட்டனர்.

22 பின் ரீசாவை விட்டு கேலத்தாவிலே முகாமிட்டனர்.

23 பின் கேலத்தாவை விட்டு சாப்பேர் மலையில் முகாமிட்டனர்.

24 பின் சாப்பேர் மலையை விட்டு ஆரதாவிலே முகாமிட்டனர்.

25 பின் ஆரதாவை விட்டு மக்கெலோத்திலே முகாமிட்டனர்.

26 பின் மக்கெலோத்தாவை விட்டு தாகாத்திலே முகாமிட்டனர்.

27 பின் தாகாத்தை விட்டு தாராகிலே முகாமிட்டனர்.

28 பின் தாராகியை விட்டு மித்காவிலே முகாமிட்டனர்.

29 பின் மித்காவை விட்டு அஸ்மோனாவில் முகாமிட்டனர்.

30 பின் அஸ்மோனாவை விட்டு மோசெரோத்திலே முகாமிட்டனர்.

31 பின் மோசெரோத்தை விட்டு பெனேயாக்கானிலே முகாமிட்டனர்.

32 பின் பெனெயாக்கானை விட்டு கித்காத் மலையிலே முகாமிட்டனர்.

33 பின் கித்காத் மலையை விட்டு யோத்பாத்தாவிலே முகாமிட்டனர்.

34 பின் யோத்பாத்தாவை விட்டு எப்ரோனாவிலே முகாமிட்டனர்.

35 பின் எப்ரோனாவை விட்டு எசியோன் கேபேரிலே முகாமிட்டனர்.

36 பின் எசியோன் கேபேரிலை விட்டு காதேசாகிய சீன் என்னும் பாலைவனத்திலேயே முகாமிட்டனர்.

37 பின் காதேசாகிய சீன் பாலைவனத்தை விட்டு ஓர் என்னும் மலையில் முகாமிட்டனர். இது ஏதோம் தேசத்தின் எல்லையில் உள்ளது. 38 ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ஓர் என்னும் மலை மீது ஏறினான். பின் அங்கேயே மரணமடைந்தான். அவன் ஐந்தாவது மாதத்தில் முதல் நாளன்று மரித்துப்போனான். அது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வந்த 40வது ஆண்டு. 39 அப்போது ஆரோனுக்கு 123 வயது.

40 கானான் நாட்டில் நெகேவ் என்ற பாலைவனத்தில் ஆராத் என்ற நகரம் ஒன்று இருந்தது. கானானிய அரசன் இஸ்ரவேல் ஜனங்கள் வருவதைப் பற்றி அறிந்தான். 41 இஸ்ரவேல் ஜனங்கள் ஓர் மலையை விட்டு சல்மோனாவில் முகாமிட்டனர்.

42 பின் சல்மோனாவை விட்டு பூனோனில் முகாமிட்டனர்.

43 பின் பூனோனை விட்டு ஓபோத்தில் முகாமிட்டனர்.

44 பின் ஓபோத்தை விட்டு அபாரீமின் மேடுகளில் முகாமிட்டனர். இது மோவாபின் எல்லையில் இருந்தது.

45 பின் அபாரீமினை விட்டு தீபோன் காத்திலே முகாமிட்டனர்.

46 பின் தீபோன்காத்தை விட்டு அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டனர்.

47 பின் அல்மோன் திப்லாத்தாயிமை விட்டு நேபோவுக்கு அருகிலுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டனர்.

48 பின் அபாரீம் மலைகளை, விட்டு மோவாபிலே உள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். இது யோர்தான் நதியைக்கடந்து எரிகோவின் அருகிலே உள்ளது. 49 பின் யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டனர். அவர்களது பாளையம் பெத்யெசிமோத்தைத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை இருந்தது.

50 அந்த இடத்தில் மோசேயோடு கர்த்தர் பேசினார். அவர், 51 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இவற்றை கூறு: நீங்கள் யோர்தான் நதியை கடந்து கானான் நாட்டிற்குள் நுழைவீர்கள். 52 நீங்கள் அங்கே காணும் ஜனங்களிடமிருந்து அந்நாட்டை எடுத்துக்கொள்வீர்கள். அவர்களின் செதுக்கப்பட்ட சிலைகளையும், விக்ரகங்களையும் அழித்துவிடுவீர்கள். அவர்களின் மேடைகளையும் நீங்கள் அழிக்க வேண்டும். 53 நீங்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அங்கேயே குடியிருப்பீர்கள். ஏனென்றால் நான் இந்த நாட்டை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். இது உங்கள் குடும்பத்தாருக்கு உரியது. 54 உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இந்நாட்டின் பங்கைப் பெறுவார்கள். எந்தக் குடும்பத்தினர் எந்தப் பகுதியைப் பெறுவது என்பதைச் சீட்டுக் குலுக்கல் மூலம் அறிந்துகொள்வீர்கள். பெரிய குடும்பத்தினர் பெரும் பகுதியைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தினர் சிறியப் பகுதியைப் பெறுவார்கள். எந்தக் குடும்பம் நாட்டின் எந்தப் பகுதியைப் பெறும் என்பதை சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் இந்த தேசத்தின் பங்கைச் சுதந்தரிக்கும்.

55 “நீங்கள் அந்த அந்நிய ஜனங்களை இந்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும். அவர்களை இந்நாட்டிலே தங்கவிட்டால் பிறகு அவர்கள் உங்களுக்கு மிகுந்த தொந்தரவுகளை கொண்டுவருவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் முள்ளாகவும், விலாக்களில் கூராகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பல பிரச்சனைகளைக் கொண்டுவருவார்கள். 56 நான் அப்போது அவர்களுக்குச் செய்ய திட்டமிட்டதை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.

சங்கீதம் 78:1-37

ஆசாபின் ஒரு மஸ்கீல்

78 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.
    நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.
நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.
    நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன்.
நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.
    எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள்.
நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.
    இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம்.
    அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம்.
கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.
    தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார்.
நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார்.
    தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.
    அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
    இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள்.
எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.
    தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
    அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்.
தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.
    அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
    அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.

எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள்,
    ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள்.
10 அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை.
    அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள்.
11 தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள்.
    அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள்.
12 எகிப்தின் சோவானில் தேவன்
    அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார்.
13 தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார்.
    இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது.
14 ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர்.
    ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர்.
15 பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார்.
    நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து
    ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்!
17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.
    பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள்.
18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.
    தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள்.
19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,
    “பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா?
20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.
    நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள்.
21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.
    யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார்.
    தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார்.
22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.
    தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை.
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
    உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
    தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
    அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
    காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
    பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
    கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
    ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
30 அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை.
    எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள்.
31 தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார்.
    அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார்.
    பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார்.
32 ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்!
    தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை.
33 எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச்
    சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார்.
34 தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள்.
35 தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள்.
    மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள்.
36 அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள்.
    அவர்கள் உறுதியாக இருக்கவில்லை.
37 அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை.
    ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை.

ஏசாயா 25

தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்

25 கர்த்தாவே, நீர் எனது தேவன்.
    நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன்.
நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர்.
    நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது.
    இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று.
நீர் நகரத்தை அழித்திருக்கிறீர். அந்த நகரமானது பலமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
    ஆனால் இப்போது அது மண்மேடாயிற்று.
அயல்நாட்டு அரண்மனை அழிக்கப்பட்டிருக்கிறது.
    அது மீண்டும் கட்டப்படமாட்டாது.
வல்லமை மிக்க தேசங்களிலுள்ள ஜனங்கள் உம்மை மதிப்பார்கள்.
    பலமான நகரங்களில் உள்ள வல்லமையுள்ள ஜனங்கள் உமக்குப் பயப்படுவார்கள்.
கர்த்தாவே, நீர் பாதுகாப்புத் தேவைபடுகிற ஏழை ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடம்.
    இந்த ஜனங்களைத் தோற்கடிக்க பல பிரச்சனைகள் தொடங்கும்.
ஆனால் நீர் அவர்களைப் பாதுகாப்பீர்.
    கர்த்தாவே, நீர் வெள்ளத்திலிருந்தும், வெப்பத்திலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றும் வீடுபோல இருக்கிறீர்.
தொல்லைகள் எல்லாம், பயங்கரமான காற்று மற்றும் மழைபோன்று இருக்கும். மழை சுவரைத் தாக்கி கீழே விழச்செய்யும்.
    ஆனால் வீட்டிற்குள் உள்ள ஜனங்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான்.
    பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான்.
ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர்.
    கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும்.
அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும்.
    அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர்.

தேவன் அவரது ஊழியர்களுக்கு அமைத்த விருந்து

அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இந்த மலையில் உள்ள ஜனங்களுக்கு ஒரு விருந்து தருவார். அந்த விருந்தில் சிறந்த உணவும், திராட்சை ரசமும் தரப்படும். மாமிசமானது புதிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.

ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார்.

அந்த நேரத்தில், ஜனங்கள்,
    “இங்கே எங்கள் தேவன் இருக்கிறார்.
அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர்,
    நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார்.
நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம்.
    கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்”.
10 இந்த மலைமீது கர்த்தருடைய வல்லமை உள்ளது,
    மோவாப் தோற்கடிக்கப்படும்.
கர்த்தர் பகைவரை மிதித்து நடந்துசெல்வார்.
    இது குப்பைகளில் உள்ள சருகுகள் மீது நடப்பது போலிருக்கும்.
11 கர்த்தர் தமது கரங்களை நீச்சலடிக்கும் ஒருவரைப்போல் விரிப்பார்.
    பிறகு கர்த்தர் அவர்களது பெருமைக்குரிய அனைத்தையும் சேகரிப்பார்.
கர்த்தர் அவர்களால் செய்யப்பட்ட அழகான அனைத்தையும் சேகரிப்பார்.
    அவர் அவற்றைத் தூர எறிந்துப்போடுவார்.
12 கர்த்தர் ஜனங்களின் உயர்ந்த சுவர்களையும், பாதுகாப்பான இடங்களையும் அழிப்பார்.
    கர்த்தர் அவற்றைத் தரையின் புழுதியில் எறிந்துவிடுவார்.

1 யோவான் 3

நாம் தேவனின் பிள்ளைகள்

பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.

ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். மனிதரின் பாவங்களை நீக்குவதற்காக கிறிஸ்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்துவில் பாவம் இல்லை. எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.

அன்பான பிள்ளைகளே, தவறான வழிக்குள் ஒருவன் உங்களை நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து நீதியுள்ளவர். கிறிஸ்துவைப்போல சரியானவராக இருப்பதற்கு ஒரு மனிதன் சரியானதை மட்டுமே செய்யவேண்டும். துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.

தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான். 10 எனவே தேவனின் பிள்ளைகள் யாரென்பதையும் பிசாசின் பிள்ளைகள் யாரென்பதையும் நாம் பார்க்க முடியும். மேலும் தனது சகோதரனை நேசிக்காத ஒருவனும் தேவனின் பிள்ளை இல்லை.

நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும்

11 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்கிற போதனை இது. நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். 12 காயீனைப்போல இராதீர்கள். காயீன் தீயவனுக்கு உரியவனாக இருந்தான். காயீன் அவனது சகோதரனைக் கொன்றான். ஆனால் காயீன் அவனது சகோதரனை ஏன் கொன்றான்? காயீன் செய்தவை தீயனவாக இருந்ததாலும், அவன் சகோதரன் செய்தவை நல்லனவாக இருந்ததாலுமே.

13 சகோதர சகோதரிகளே, இவ்வுலகத்தின் மக்கள் உங்களை வெறுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். 14 நாம் மரணத்தை விட்டு, ஜீவனுக்குள் வந்திருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்துவில் நமது சகோதரரையும் சகோதரிகளையும் நாம் நேசிப்பதால் இதனை அறிவோம். சகோதரனை நேசிக்காத மனிதன் இன்னும் மரணத்தில் இருக்கிறான். 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒருவன் கொலையாளி ஆவான். எந்த கொலையாளிக்கும் தேவன் தரும் நித்திய வாழ்வு இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

16 உண்மையான அன்பு எதுவென்பதை இவ்வாறே நாம் அறிவோம். இயேசு அவரது ஜீவனை நமக்காகக் கொடுத்தார். எனவே நாம் நமது ஜீவனைக் கிறிஸ்துவில் நமது சகோதரருக்காகவும் சகோதரிகளுக்காகவும் கொடுக்க வேண்டும். 17 தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் பெறுகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக ஒரு விசுவாசி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஏழையானவனும் தேவையான பொருள்கள் கிடைக்காதவனுமாகிய கிறிஸ்துவில் சகோதரனை அவன் பார்க்கிறான். தேவையானவற்றைப் பெற்ற சகோதரன் ஏழை சகோதரனுக்கு உதவாமலிருந்தால் பயன் என்ன? அவன் இதயத்தில் தேவனின் அன்பு இல்லை. 18 எனது பிள்ளைகளே, நம் அன்பு வார்த்தைகளிலும் பேச்சிலும் மட்டும் இருக்கலாகாது. நம் அன்பு உண்மையான அன்பாக இருக்க வேண்டும். நாம் செய்கிற காரியங்களால் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

19-20 நாம் உண்மையின் வழியைச் சார்ந்தவர்கள் என்பதை இந்த வழியால் அறியலாம். நம்மைக் குற்றவாளிகளாக நமது இருதயங்களே உணர்த்தும்போது, நமது இருதயங்களைக் காட்டிலும் தேவன் உயர்ந்தவராக இருப்பதால் அவர் எல்லாவற்றையும் அறிவார்.

21 எனது அன்பான நண்பர்களே, நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணராவிட்டால் நாம் தேவனிடம் அச்சமற்றவர்களாக இருக்கமுடியும். 22 நாம் கேட்கிற பொருட்களை தேவன் கொடுப்பார். நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாலும், தேவனை மகிழ்வூட்டுகிற காரியங்களைச் செய்வதாலும் இவற்றைப் பெறுகிறோம். 23 தேவன் கட்டளையிடுவது இதுவே. நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது தேவனின் கட்டளை ஆகும். 24 தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். தேவன் நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் எப்படி அறிகிறோம்? தேவன் நமக்களித்த ஆவியானவரால் நாம் அறிகிறோம்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center