M’Cheyne Bible Reading Plan
மீதியானியர்களுடன் இஸ்ரவேலர்களின் யுத்தம்
31 மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், 2 “மீதியானியர்களையும் மேற்கொள்ளும்படியாக நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவுவேன். அதன் பிறகு நீ மரித்துப் போவாய்” என்றார்.
3 எனவே மோசே ஜனங்களோடு பேசினான். அவன் “உங்கள் ஆண்களில் வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். கர்த்தர் அவர்களை மீதியானியர்களையும் வெல்லும்படி செய்வார். 4 இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் 1,000 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள். 5 ஆகமொத்தம் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து 12,000 பேர் வீரர்களாவார்கள்” என்றான்.
6 மோசே அவர்களைப் போருக்கு அனுப்பினான். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகனான பினேகாசையும் அவர்களோடு அனுப்பினான். எலெயாசார் பரிசுத்தமான பொருட்களோடு, கொம்புகளையும், எக்காளத்தையும் எடுத்து சென்றான். 7 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டபடியே மீதியானியர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்றனர். 8 மீதியானிய அரசர்களில் ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் ஐந்து பேரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகனான பிலேயாமையும் வாளால் கொன்றார்கள்.
9 இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானிய பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்தனர். அவர்களது மந்தைகளையும் பசுக்களையும் மற்ற யாவற்றையும் எடுத்துக்கொண்டனர். 10 பிறகு அவர்களது நகரங்களையும், கிராமங்களையும் எரித்துவிட்டனர். 11 அவர்கள் அனைத்து ஜனங்களையும், மிருகங்களையும் கைப்பற்றினர். 12 தாங்கள் கைப்பற்றிய அனைத்தையும் மோசேயிடம், ஆசாரியனாகிய எலெயாசார் மற்றும் மற்ற ஜனங்களிடத்திலும் கொண்டு வந்தனர். அங்கே அவர்கள் கவர்ந்த அனைத்துப் பொருட்களையும் முகாமுக்குள் கொண்டு வந்தனர். மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் அவர்கள் கூடாரம் அமைத்திருந்தனர். அந்த இடம் யோர்தானைக் கடந்து கிழக்குப் பகுதியில் எரிகோவின் எதிரில் இருந்தது. 13 பிறகு மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும், ஜனங்கள் தலைவர்களும் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வீரர்களைச் சந்தித்தனர்.
14 படைத்தலைவர்களுக்கு எதிராக மோசே கோபங்கொண்டான். அவன் போரிலிருந்து திரும்பி வந்திருந்த 1,000 வீரர்களின் தலைவரோடும் 100 வீரர்களின் தலைவரோடும் கோபங்கொண்டான். 15 மோசே அவர்களிடம், “ஏன் பெண்களை உயிரோடு விட்டீர்கள். 16 இப்பெண்களே பிலேயாமின் நாட்களில் பேயோரில் நடந்ததுபோல் இஸ்ரவேல் ஆண்கள் கர்த்தரை விட்டு விலகுவதற்கு காரணமாயிருந்தவர்கள். கர்த்தருடைய ஜனங்களுக்கு மீண்டும் அந்த நோய் ஏற்படும். 17 இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள். 18 எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள். 19 பிறகு மற்றவர்களைக் கொன்ற அனைவரும் கூடாரத்திற்கு வெளியே ஏழு நாட்கள் தங்கி இருங்கள். உங்களில் எவரேனும் பிணத்தைத் தொட்டிருந்தாலும் அவன் கூடாரத்திற்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாவது நாள், நீங்களும் உங்கள் கைதிகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றை மீண்டும் நீங்கள் ஏழாவது நாள் செய்ய வேண்டும். 20 நீங்கள் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அதோடு தோல், கம்பளி, மரம் போன்றவற்றால் செய்யப்பட்டப் பொருட்களையும் கழுவவேண்டும். நீங்கள் சுத்தமாக வேண்டும்” என்றார்.
21 பிறகு ஆசாரியனாகிய எலெயாசார் வீரர்களோடு பேசினான். அவன், “இவ்விதிகள் எல்லாம் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டவை. இவ்விதிகள் போரிலிருந்து திரும்பிவரும் வீரர்களுக்கு உரியவை. 22-23 ஆனால் நெருப்பில் இடப்படும் பொருள்களுக்கு உரிய விதிகள் வேறு விதமானவை. நீங்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம் போன்றவற்றை நெருப்பில் இடலாம். பிறகு அவற்றை தண்ணீரில் கழுவும்போது அவை சுத்தமாகும். நெருப்பில் இட முடியாத பொருட்களை தண்ணீரால்தான் சுத்தப்படுத்த முடியும். 24 ஏழாவது நாளில் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். பிறகு நீங்கள் சுத்தம் அடைவீர்கள். அதன் பின்னரே நீங்கள் கூடாரத்திற்குள் வரமுடியும்” என்றான்.
25 பிறகு கர்த்தர் மோசேயிடம், 26 “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும். 27 பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும். 28 போருக்குச் சென்று வந்த வீரர்களிடமிருந்து ஒரு பகுதியை எடு. அது கர்த்தருக்கு உரியது. 500-ல் ஒன்று கர்த்தருடைய பங்காகும். இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் என அனைத்திற்கும் பொருந்தும். 29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்கு உரிய பங்காகும். 30 பிறகு பிற ஜனங்களுடைய பங்கில் 50-ல் ஒன்றை எடு. இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இப்பங்கை வேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தக் கூடாரத்திற்குப் பொறுப்பாளிகள்” என்றார்.
31 மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர். 32 வீரர்கள் 6,75,000 ஆடுகளையும், 33 72,000 பசுக்களையும் 34 61,000 கழுதைகளையும், 35 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.) 36 இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள். 37 அவர்கள் 675 ஆடுகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். 38 வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களை கர்த்தருக்குக் கொடுத்தனர். 39 வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். 40 வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தனர். 41 கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளையெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.
42 பிறகு மோசே வீரர்கள் கைப்பற்றியவைகளில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய பங்காகிய பாதிப்பகுதியை எண்ணினான். போருக்குச் சென்ற வீரர்களிடமிருந்து மோசே ஜனங்களுக்காகப் பெற்றுக்கொண்டதாவது. 43 3,37,500 ஆடுகள், 44 36,000 பசுக்கள். 45 30,500 கழுதைகள், 46 16,000 பெண்களையும் பெற்றனர். 47 இவற்றில் 50-ல் ஒன்றை கர்த்தருக்காக மோசே எடுத்துக்கொண்டான். இவற்றில் ஜனங்களும் மிருகங்களும் அடங்கும். பிறகு அவன் அவற்றை லேவியர்களுக்குக் கொடுத்தான், ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தமான கூடாரத்தைக் கவனிப்பவர்கள். மோசே இதனை கர்த்தருடைய கட்டளைப்படி செய்து முடித்தான்.
48 பிறகு படைத்தலைவர்கள் (இவர்கள் 1,000 பேருக்கு தலைவராகவும் 100 பேருக்கு தலைவராகவும் இருந்தனர்.) மோசேயிடம் வந்தனர். 49 அவர்கள் மோசேயிடம், “நாங்கள் உங்களது வேலைக்காரர்கள். எங்கள் வீரர்களை எண்ணி கணக்கிட்டிருக்கிறோம். அவர்களில் யாரையும் தவறவிடவில்லை. 50 நாங்கள் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் கர்த்தருக்குரிய அன்பளிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கொண்டுவந்தவற்றுள், தங்கத்தாலான வளையங்கள், கை வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், கழுத்தணிகள் ஆகியவை அடங்கும். கர்த்தருக்கான இந்த அன்பளிப்புகள் எங்களைச் சுத்தப்படுத்தும்” என்றார்கள்.
51 எனவே மோசே பொன்னாலான அத்தனை அணிகலன்களையும் எடுத்து ஆசாரியனான எலெயாசாரிடம் கொடுத்தான். 52 1,000 பேருக்கும், 100 பேருக்கும் தலைவரானவர்கள் கொடுத்த பொன்னணிகள் 420 பவுண்டு இருந்தது. 53 வீரர்கள் தங்கள் பங்காகக் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டனர். 54 மோசேயும், ஆசாரியனான எலெயாசாரும் 1,000 ஆண்களுக்கும் 100 ஆண்களுக்கும் உரிய தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர். பிறகு அவர்கள் அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தில் வைத்தனர். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைவு அடையாளமாக வைக்கப்பட்டது.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று
75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2 தேவன் கூறுகிறார்:
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”.
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
எதுவும் இப்பூமியில் இல்லை.
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில் [a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
தீருவைப் பற்றிய தேவனுடைய செய்தி
23 தீருவைப் பற்றிய துயரச் செய்தி:
தர்ஷீஸ் கப்பல்களே, துக்கமாக இருங்கள்.
உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டிருக்கிறது.
(இந்தச் செய்தி கப்பலில் வந்த ஜனங்களுக்கு, அவர்கள் கித்தீம் தேசத்திலிருந்து வரும்போதே சொல்லப்பட்டது).
2 கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாய் இருங்கள்.
தீரு “சீதோனின் வியாபாரம்” ஆக இருந்தது.
அக்கடற்கரை நகரம் கடலைத் தாண்டி வணிகர்களை அனுப்பியது.
அவர்கள் உன்னைச் செல்வத்தால் நிரப்பினார்கள்.
3 அந்த மனிதர்கள் கடல்களில் பயணம் செய்து தானியங்களைத் தேடினார்கள்.
தீருவிலிருந்து வந்த ஜனங்கள் நைல் ஆற்றின் கரையில் விளைந்த தானியங்களை வாங்கி, மற்ற நாடுகளில் அவற்றை விற்றனர்.
4 சீதோனே, நீ மிகவும் துக்கமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், இப்போது கடலும் கடற்கோட்டையும் கூறுகிறது:
எனக்குப் பிள்ளைகள் இல்லை.
நான் பிள்ளைப் பேற்றின் வலியை உணர்ந்திருக்கவில்லை.
நான் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டதில்லை.
இளம் ஆண்களையும், பெண்களையும் நான் வளர்த்திருக்கவில்லை.
5 தீருவைப் பற்றிய செய்திகளை எகிப்து கேட்கும்.
இச்செய்திகள் எகிப்தை துக்கத்தினால் துன்புறச் செய்யும்.
6 கப்பல்களே நீங்கள் தர்ஷீசுக்குத் திரும்புங்கள்.
கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாக இருங்கள்.
7 கடந்த காலத்தில், தீரு நகரில் சந்தோஷமாக இருந்தீர்கள்.
அந்நகரம் துவக்க காலம் முதல் வளர்ந்து வந்தது.
அந்நகர ஜனங்கள் தொலை தூரங்களுக்குப் பயணம்செய்து வாழ்ந்திருக்கின்றனர்.
8 தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.
அந்நகர வணிகர்கள் இளவரசர்களைப்போன்றிருக்கின்றனர்.
அதன் வியாபாரிகள் எங்கும் மதிப்பு பெறுகிறார்கள்.
எனவே யார் தீருவுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினார்கள்?
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இருந்தார்.
அவர்களை அவர் முக்கியத்துவம் இல்லாதவர்களாகச் செய்ய முடிவு செய்தார்.
10 தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே!
உங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போங்கள்.
கடலை ஒரு சிறு ஆறு போன்று கடந்து செல்லுங்கள்.
இப்பொழுது உங்களை எவரும் தடுக்கமாட்டார்கள்.
11 கர்த்தர் அவரது கையைக் கடலுக்கு மேல் நீட்டியிருக்கிறார்.
தீருவுக்கு எதிராகப்போரிட கர்த்தர் அரசுகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
தீருவின் அரண்களை அழிக்க
கர்த்தர் கானானுக்குக் கட்டளையிட்டார்.
12 கர்த்தர் கூறுகிறார், “கன்னியாகிய சீதோனின் மகளே, நீ அழிக்கப்படுவாய்.
நீ இனிமேல் மகிழ்ச்சி அடையமாட்டாய்.
ஆனால் தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், நமக்கு சைப்ரஸ் உதவும்!
ஆனால் நீ கடலைக் கடந்து சைப்ரசுக்குச் சென்றால் நீ ஓய்வெடுக்க ஒரு இடத்தைக் கண்டு கொள்ளமாட்டாய்.”
13 எனவே தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், “நமக்கு பாபிலோன் ஜனங்கள் உதவுவார்கள்!
ஆனால் கல்தேயருடைய நாட்டைப் பார்.
இப்பொழுது பாபிலோன் ஒரு நாடாகவே இல்லை.
அசீரியா பாபிலோனைத் தாக்கியது. அதைச்சுற்றிலும் போர்க் கோபுரங்களைக் கட்டியது.
வீரர்கள், அழகான வீடுகளில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர்.
பாபிலோனைக் காட்டு மிருகங்களுக்குரிய இடமாக அசீரியா செய்தது.
பாபிலோனை அழிவுக்கேற்ற இடமாக மாற்றியது.
14 எனவே, துக்கமாயிருங்கள், தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே,
உங்கள் பாதுகாப்புக்குரிய இடம் (தீரு) அழிக்கப்படும்.”
15 70 ஆண்டுகளுக்கு ஜனங்கள் தீருவை மறப்பார்கள். (இது ஒரு அரசனின் ஆட்சிக்கால அளவு). 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீரு இந்தப் பாடலில் வரும் வேசிக்குச் சமானமாய் இருக்கும்.
16 “ஆண்களால் மறக்கப்பட்ட பெண்ணே,
உன் வீணையை எடுத்துக்கொண்டு நகரைச் சுற்றி நட,
உன் பாடலை நன்றாக வாசி. உன் பாடலை அடிக்கடி பாடு.
பிறகு, ஜனங்கள் உன்னை நினைவில் வைத்திருப்பார்கள்.”
17 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீருவின் வழக்கை கர்த்தர் மீண்டும் மதிப்பீடு செய்வார். அவர் அவளுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பார். மீண்டும் தீரு வணிகத்தைப் பெறும் பூமியின் அனைத்து நாடுகளுக்கும் தீரு வேசியாக விளங்கும்.
18 ஆனால் தீரு தான் சம்பாதிக்கும் பணத்தைத் தனக்கென்று வைக்காது. தனது வணிகத்தால் வரும் லாபத்தை தீரு கர்த்தருக்காகப் பாதுகாக்கும். தீரு அச்செல்வத்தை கர்த்தருக்குச் சேவை செய்யும் ஜனங்களுக்குக் கொடுக்கும். எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் முழுமையாக சாப்பிடுவார்கள், அவர்கள் மென்மையான ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.
1 உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். 2 அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். 3 எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். 4 நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.
தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்
5 தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. 6 ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். 7 தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.
8 நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. 9 ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 10 நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
2008 by World Bible Translation Center