Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 29

எக்காளங்களின் பண்டிகை

29 “ஏழாவது மாதத்தின் முதல் நாளில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்நாளில் எக்காளம் ஊதவேண்டும். அப்போது நீங்கள் தகனபலி தரவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதுள்ள எவ்வித குறையும் இல்லாத 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தரவேண்டும். அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். அதோடு பாவப்பிரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் உங்களை சுத்தப்படுத்த கொடுக்க வேண்டும். இப்பலிகள் வழக்கமான மாதப்பிறப்பின் நாளின் சர்வாங்க தகன பலியோடு சேரவேண்டும். அத்துடன் தானியக் காணிக்கையும் தர வேண்டும். இது தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்ந்திருக்க வேண்டும். இப்பலிகள் விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும். இப்பலிகள் நெருப்பில் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த நறுமணம் கர்த்தருக்குப் பிரியமானது.

பாவப்பரிகார நாள்

“ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்த நாளில் எந்த உணைவையும் உண்ணக் கூடாது. அன்று வேறு வேலைகள் எதையும் செய்யக் கூடாது. நீங்கள் அன்றைக்குத் தகனபலி தர வேண்டும். அவற்றின் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும் 1 ஆட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகளையும் தர வேண்டும். இவை பழுதற்றதாக இருக்கவேண்டும். இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 10 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 11 அத்துடன் உங்களைப் பரிசுத்தப்படுத்த பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி தரவேண்டும். இது வழக்கமான தினப் பலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

அடைக்கல கூடாரப் பண்டிகை

12 “ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். இது அடைக்கல கூடாரப் பண்டிகை எனப்படும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. கர்த்தருக்காக அந்நேரத்தில் ஏழு நாட்களை சிறப்பு விடுமுறை நாட்களாகக் கொண்டாடவேண்டும். 13 நீங்கள் தகன பலியையும் தரவேண்டும். அவை நெருப்பில் தகனிக்கப்படவேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 13 காளைகளையும் 2 ஆட்டுக்கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதுடையதாக இருப்பதுடன், எவ்வித குறைபாடும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 14 இதோடு உணவுப்பலியும் தரவேண்டும். ஒவ்வொரு காளைக்கும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கும் 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 15 ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 16 ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் நீங்கள் இவற்றோடு தனியே தரவேண்டும். இவை தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்த்துத் தரவேண்டும்.

17 “இந்த விடுமுறையின் இரண்டாவது நாளில் 12 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்வித குறையும் இல்லாததாகவும், இருக்கவேண்டும். 18 நீங்கள் இந்த மிருகங்களுக்கு ஏற்ற சரியான தானியக் காணிக்கையையும் தரவேண்டும். அதோடு பானங்களின் காணிக்கையும் காளையோடும், ஆட்டுக்கடாவோடும், ஆட்டுக்குட்டிகளோடும் தரவேண்டும். 19 பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்க்கையாக இருக்கவேண்டும்.

20 “இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 21 நீங்கள் இந்தக் காளை, கடா மற்றும் ஆட்டுக்குட்டிகளோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 22 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேரவேண்டும்.

23 “இந்த விடுமுறையின் நான்காவது நாளில் நீங்கள் 10 காளைகளையும், 2 வெள்ளாட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக் குட்டிகளையும் தர வேண்டும். குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக்குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 24 இந்தக் காளைகள், கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 25 பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையுடன் கூடுதலான ஒன்றாகச் செலுத்த வேண்டும்.

26 “இந்த விமுறையின் ஐந்தாவது நாளில் நீங்கள் 9 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுகுட்டிகளையும் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக் குறைகளும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 27 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 28 நீங்கள் இவற்றோடு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பாவப்பரிகாரப் பலியாகத் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

29 “இந்த விடுமுறையின் ஆறாவது நாளில் நீங்கள் 8 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்விதக் குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 30 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 31 நீங்கள் இவற்றில் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாக செலுத்த வேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

32 “இந்த விடுமுறையின் ஏழாவது நாளில் நீங்கள் 7 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், குறை இல்லாததாகவும் இருக்க வேண்டும். 33 நீங்கள் இதற்கு ஏற்ற சரியான அளவுடையதாக தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக் கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் தர வேண்டும். 34 நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்கவேண்டும். இது வழக்கமாக தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கையும் மற்றும் பானங்களின் காணிக்கைக்கும் சேர்க்கையாகும்.

35 “இந்த விடுமுறையின் எட்டாவது நாளில் ஒரு மிகச் சிறப்பான கூட்டம் நடைபெறும். அந்நாளில், நீங்கள் எவ்வித வேலையும் செய்ய வேண்டாம். 36 நீங்கள் ஒரு தகன பலி கொடுக்கவேண்டும். இதை நெருப்பில் தகனம் செய்யவேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும், 1 வெள்ளாட்டுக்கடாவையும், 7 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதும் எவ்விதக் குறையும் இல்லாததாயும் இருக்க வேண்டும் 37 இவற்றுக்கு ஏற்ற சரியான அளவில் தானியக் காணிக்கையையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும் ஆட்டுக் கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 38 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை வழக்கமாகத் தினந்தோறும் தரப்படும் தானியம் மற்றும் பானங்களின் காணிக்கைகளோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

39 “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றை கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.

40 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கர்த்தர் ஆணையிட்ட அனைத்தையும்பற்றி கூறினான்.

சங்கீதம் 73

புத்தகம் 3

(சங்கீதம் 73-89)

ஆசாபின் துதிப்பாடல்

73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
நான் தவறி வீழ்ந்து,
    பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
    பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
    வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
    பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
    அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
    தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
    அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
    அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
    பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
    அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
    உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.

12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
    ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
    ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
    ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.

15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
    அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
    ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
    அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
    விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
    கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
    எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.

21-22 நான் மூடனாக இருந்தேன்.
    நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
    மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
    நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
    தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
    பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
    நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
    ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
    என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
    உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
    என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
    தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.

ஏசாயா 21

பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி

21 கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி:

வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்துகொண்டிருக்கிறது.
    இது நெகேவிலிருந்து [a] வந்துகொண்டிருக்கும் காற்று போல் உள்ளது.
இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடக்கப்போவதை நான் பார்த்திருக்கிறேன்,
    துரோகிகள் உனக்கு எதிராகத் திரும்பியதை நான் பார்க்கிறேன்.
    ஜனங்கள் உன் செல்வத்தை எடுத்துக்கொள்வதை நான் பார்க்கிறேன்.

ஏலாமே! போய் ஜனங்களுக்கு எதிராகப்போரிடு!
    மேதியாவே! நகரத்தை சுற்றி உன் படைகளை நிறுத்தி அதனைத் தோற்கடி!
    இந்த நகரத்தில் உள்ள கெட்டவற்றையெல்லாம் முடித்து வைப்பேன்.

அந்தப் பயங்கரமானவற்றை நான் பார்த்தேன். இப்பொழுது நான் பயப்படுகிறேன்.
    பயத்தால் என் வயிறு பாதிக்கப்பட்டுள்ளது.
    அந்த வலியானது பிரசவ வலி போன்றுள்ளது.
நான் கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் என்னை அச்சம்கொள்ளச் செய்கிறது.
    நான் பார்த்தவை எல்லாம் என்னைப் பயத்தால் நடுங்கச் செய்கிறது.
நான் கவலைப்படுகிறேன். நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
    என் இன்பமான மாலைப்பொழுது பயமுள்ள இரவாயிற்று.

எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஜனங்கள் நினைத்தனர்.
    “மேசையைத் தயார் செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!” என்று ஜனங்கள் சொன்னார்கள்.
    அதே நேரத்தில் படை வீரர்கள், “காவல்காரரை நிறுத்துங்கள்!
அதிகாரிகளே எழுந்து
    உங்கள் கேடயங்களைப் பளபளப்பாக்குங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

எனது ஆண்டவர் என்னிடம், “போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். காவல்காரன் குதிரைவீரர்கள், கழுதைகள் அல்லது ஒட்டகங்கள் ஆகியவற்றின் வரிசையைப் பார்த்தால் அவன் கவனமாக மிகக்கவனமாக உற்றுக்கேட்க வேண்டும்” என்று சொன்னார்.

பிறகு, ஒரு நாள், காவல்காரன் “சிங்கம்” என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தான்.

“அவன், என் ஆண்டவனே! ஒவ்வொரு நாளும் நான் காவல் கோபுரத்தில் காத்துக்கொண்டிருந்தேன்.
    ஒவ்வொரு இரவிலும் நான் நின்றுகொண்டு காவல் செய்தேன்.
பாருங்கள்! அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்!
    நான் மனிதர்கள் மற்றும் குதிரை வீரர்களின் வரிசைகளைப் பார்க்கிறேன்” என்று காவல்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்.

பிறகு, ஒரு தூதுவன்,
    “பாபிலோன் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
    பாபிலோன் தரையில் விழுந்துவிட்டது.
அங்குள்ள பொய்த் தெய்வங்களின் சிலைகள் எல்லாம்
    தரையில் வீசப்பட்டு துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொன்னான்.

10 ஏசாயா, “எனது ஜனங்களே! இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து நான் கேட்ட, எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் மாவு எந்திரத்தில் போடப்பட்ட தானியம்போன்று அரைக்கப்படுவீர்கள்.”

தூமா பற்றி தேவனுடைய செய்தி

11 தூமா பற்றி துயரச் செய்தி.

யாரோ ஒருவன் என்னை ஏதோமிலிருந்து அழைத்தான்.
    அவன், “காவல்காரனே! இரவு எவ்வளவு போயிற்று?
    இரவு முடிய இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது?” என்று கேட்டான்.

12 அந்தக் காவல்காரன்,
    “விடிற்காலம் வந்துகொண்டிருக்கிறது.
    ஆனால் மீண்டும் இரவு வரும்.
கேட்பதற்கு ஏதாவது இருந்தால்,
    பிறகு மீண்டும் வந்து கேளுங்கள்” என்றான்.

அரேபியாவிற்கு தேவனுடைய செய்தி

13 அரேபியா பற்றிய துயரமான செய்தி.

அரேபியாவின் வனாந்திரத்தில் திதானிய பயணிகள்
    சில மரங்களின் அருகில் இரவில் தங்கினார்கள்.
14 சில தாகமுள்ள பயணிகளுக்கு அவர்கள் தண்ணீரைக் கொடுத்தார்கள்.
    தேமாவின் ஜனங்கள் பயணிகளுக்கு உணவு கொடுத்தார்கள்.
15 ஜனங்கள் வாள்களுக்கும், வில்லுகளுக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
    அந்த வாள்கள் அழிக்கத் தயாராயிருந்தன.
அந்த வில்லுகள் எய்யப்பட தயாராயிருந்தன.
    கடினமான போரிலிருந்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

16 எனது கர்த்தராகிய ஆண்டவர், நடக்கப்போகிறவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். “ஒரு ஆண்டில் (கூலிக்காரனுடைய கால எண்ணிக்கையைப்போன்று) கேதாருடைய மகிமை எல்லாம் போய்விடும். 17 அந்த நேரத்தில், மிகச் சில வில் வீரர்களும் கேதாரின் சிறந்த படை வீரர்கள் மட்டுமே உயிரோடு விடப்படுவார்கள்” என்று கர்த்தர் சொன்னார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார்.

2 பேதுரு 2

போலிப் போதகர்கள்

கடந்த காலத்தில் தேவனுடைய மக்கள் மத்தியில் போலியான தீர்க்கதரிசிகளும் இருந்தனர். அதே வழியில், உங்கள் குழுவிலும் போலிப் போதகர்கள் கூட இருப்பார்கள். யாரும் பார்க்காத வகையில் இப்போலிப் போதகர்கள் மோசமான போதனைகளை அறிமுகப்படுத்துவார்கள். தங்களை மீட்டுக்கொண்டவரும், தங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவருமான எஜமானரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். எனவே அவர்கள் விரைவில் தங்களை அழித்துக்கொள்வார்கள். அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். அவர்களின் பேராசையால் அந்தப் போலிப் போதகர்கள் உண்மையற்ற போலியான போதனைகள் மூலம் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். வெகு காலத்திற்கு முன்பே தேவன் அவர்களுக்குத் தண்டனையை அறிவித்தார். இது வெறும் அச்சமூட்டத்தக்க பேச்சு அல்ல, அவர்களின் அழிவு தயாராகக் காத்திருக்கிறது.

தேவ தூதர்கள் பாவம் செய்தபோது, தேவன் அவர்களைத் தண்டனையின்றி விடுதலைபெற அனுமதிக்கவில்லை. தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிற நாள்வரைக்கும் அடைந்திருக்கும் பொருட்டு நரகத்தின் இருட்டு மூலைகளில் எறிந்தார்.

ஆதிகாலத்தில் வாழ்ந்த தீய மக்களையும் தேவன் தண்டித்தார். தேவனுக்கு எதிரான மக்கள் நிறைந்த உலகின் மேல் தேவன் வெள்ளம் பெருகியோடச் செய்தார். ஆனால் நோவாவையும், நோவாவோடு வேறு ஏழு பேரையும் தேவன் காப்பாற்றினார். சரியான வழியில் வாழ்வதுபற்றி மக்களுக்குப் போதித்த மனிதன் நோவா ஆவான்.

சோதோம், கொமோரா என்னும் தீய நகரங்களையும் தேவன் தண்டித்தார். சாம்பலைத் தவிர வேறெதுவும் இல்லாத வகையில் தேவன் அந்த நகரங்களை நெருப்பால் முற்றிலும் அழித்தார். தேவனுக்கு எதிரான மக்களுக்கு நடக்கவிருப்பதைத் தெரிவிக்கும் எடுத்துக்காட்டாக தேவன் அந்நகரங்களுக்குச் செய்தார். ஆனால் தேவன் அந்நகரங்களினின்று லோத்துவைக் காப்பாற்றினார். லோத்து மிக நல்ல மனிதன். எந்தச் சட்டமுமற்ற மனிதர்களின் அநீதியான நடத்தையால் அவன் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தான். (லோத்து நல்ல மனிதன். ஆனால் நாள் தோறும் அவன் அத்தீய மனிதரோடு, வாழ்ந்து வந்தான். அவன் பார்த்ததும் கேட்டதுமாகிய தீய காரியங்களினால் லோத்தின் நல்ல மனம் வேதனையடைந்திருந்தது)

ஆம், தேவன் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார். ஆகவே தமக்கு சேவை செய்கிற மக்களை எப்படி இரட்சிப்பது என கர்த்தர் அறிவார். மேலும் நியாயம்தீர்க்கிற நாள்வரை தீயவர்களைத் தண்டிப்பது எப்படி என்றும் அறிவார். 10 குறிப்பாக பாவங்களால் நிறைந்து ஊழல்கள் மலிந்த வழியைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கர்த்தரின் அதிகாரத்தை மீறுகிறவர்களுக்கும் இத்தண்டனை கிடைக்கும்.

போலிப்போதகர்கள் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார்கள். மட்டுமன்றி, தங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வார்கள். மகிமை மிக்க தேவதூதர்களைக் குறித்துத் தீயவற்றைப் பேசுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். 11 இந்தப் போலிப் போதகர்களைக் காட்டிலும் தேவதூதர்கள் வலிமையும் ஆற்றலும் மிக்கவர்கள். ஆனால் தேவதூதர்களும்கூட கர்த்தரின் முன்னிலையில் இந்தப் போலிப் போதகர்களைப் பற்றிக் குற்றம் சாட்டும்போது அவமானப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை.

12 தாம் அறியாத விஷயங்களைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இம்மக்கள் காரண காரியமின்றி வெறும் உந்துதலால் செயல்படும் மிருகங்களைப்போன்றவர்கள். பிடித்துக் கொல்லப்படுவதற்காகப் பிறக்கின்ற காட்டு மிருகங்களைப்போல இம்மக்களும் அழிக்கப்படுவார்கள். 13 இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள்.

அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவேயாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச்சிகளிலேயே ஈடுபடுவார்கள். 14 ஒரு பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவளை அடைய விரும்புகிறார்கள். இந்தத் தீய போதகர்கள் இந்த வகையில் எப்போதும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வலிமையற்ற மக்களைப் பாவ வலையில் சிக்கும்படியாகச் செய்கிறார்கள். அவர்கள் தம் இதயங்களுக்கு பேராசை கொள்ளும் பயிற்சியை அளித்திருக்கிறார்கள். அவர்கள் சாபம் பெற்றவர்கள்.

15 இந்தப் போலிப் போதகர்கள் சரியான வழியிலிருந்து விலகி, தவறான வழிக்குச் சென்றார்கள். அவர்கள் பிலேயாம் சென்ற வழியைப் பின்பற்றினார்கள். பிலேயாம் பேயோரின் மகன். தவறு செய்ய மக்கள் கொடுக்கும் கூலியை அவன் நேசித்தான். 16 ஆனால் அவன் தவறு செய்வதிலிருந்து ஒரு கழுதை அவனைத் தடுத்தது. கழுதையோ பேச இயலாத ஒரு மிருகம். ஆனால் அந்தக் கழுதை மனித குரலில் பேசி அத்தீர்க்கதரிசியின் பைத்தியக்காரத்தனமான சிந்தனையைத் தடுத்தது.

17 அந்தப் போலிப் போதகர்களோ நீரில்லாத ஊற்றுக்களைப் போன்றவர்கள். அவர்கள் புயலினால் அடித்துச் செல்லப்படுகின்ற மேகங்களைப் போன்றவர்கள். அவர்களுக்காகக் காரிருள் நிரம்பிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18 அவர்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அது தகுதியற்றது. அவர்கள் மக்களைப் பாவ வலைக்குள் செலுத்துகிறார்கள். பாவங்களின் செல்வாக்கில் இருந்து தப்பிக்க ஆரம்பித்திருக்கிறவர்களை அவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள். தங்கள் பாவ சரீரங்களில் மக்கள் செய்ய விரும்பும் பொல்லாப்புகளைப் பயன்படுத்தி அப்போலிப் போதகர்கள் இதனைச் செய்கிறார்கள். 19 போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான்.

20 உலகத்தின் தீமைகளிலிருந்து அம்மக்கள் தப்பித்து விட்டார்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்ததால் அவர்கள் தப்பித்தார்கள். மீண்டும் அத்தீமைகளிடையே அவர்கள் அகப்பட்டு பலியானால், அவர்களது இறுதி நிலமை, அவர்களுடைய முந்தைய நிலமையைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். 21 ஆம், தமக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைப்பற்றி அறிந்து, அதன் பிறகு அதிலிருந்து பிறழ்வதைக் காட்டிலும் இத்தகைய மக்கள் சரியான வழியைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலேயே இருப்பது நல்லதாகும். 22 “நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும்” மற்றும், “ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும்” ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center