M’Cheyne Bible Reading Plan
செலோப்பியாத்தின் மகள்கள்
27 செலோப்பியாத் ஏபேரின் மகன். ஏபேர் கிலெயாத்தின் மகன். கிலெயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன். மனாசே யோசேப்பின் மகன். செலோப்பியாத்திற்கு ஐந்து மகள்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என் பவையாகும். 2 இந்த ஐந்து பேரும் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்று அங்கே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், தலைவர்கள் மற்றும் ஜனங்கள் முன்னால் நின்றனர்.
அந்த ஐந்து பேரும், 3 “நாங்கள் பாலை வனத்தின் வழியாகப் பயணம் செய்தபோது எங்கள் தந்தை மரித்துப்போனார். அவரது மரணம் ஒரு இயற்கை மரணம். அவர் கோராவின் குழுவைச் சேர்ந்தவரல்ல. (கோரா கர்த்தருக்கு எதிராக மாறியவன்.) ஆனால் எங்கள் தந்தைக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. 4 எங்கள் தந்தையின் பெயர் சொல்ல ஆண் வாரிசுகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் தொடர்ந்து வழங்கப்படாதது சரியல்ல. அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால் அவரது பெயர் முடிந்து போகிறது. ஆகையால் எங்கள் தந்தையின் சகோதரர்கள் பெற்ற நிலங்களில் ஒரு பங்கை எங்களுக்கும் தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று முறையிட்டார்கள்.
5 இதனால் என்னச் செய்யலாம் என்று மோசே கர்த்தரிடம் கேட்டான். 6 கர்த்தர் மோசேயிடம், 7 “செலோப்பியாத்தின் மகள்கள் கூறுவது சரிதான். அவர்கள் தம் தந்தையின் சகோதரர்களோடு தங்கள் பங்கைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவர்களின் தந்தைக்குரிய நிலத்தை இவர்களுக்கே கொடுக்கவும்.
8 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தச் சட்டத்தையும் ஏற்படுத்து: ‘ஒருவேளை ஒருவனுக்கு ஆண்பிள்ளை இல்லாவிடில் அவன் மரித்தபின் அவனுக்குரிய அனைத்தும் அவனது பெண் பிள்ளைகளுக்கு உரியதாகும். 9 ஒருவனுக்கு பெண் குழந்தைகளும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது சகோதரர்களுக்கு உரியதாகும். 10 ஒருவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது தந்தையின் சகோதரர்களுக்கு உரியதாகும். 11 ஒருவனது தந்தைக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால் பிறகு அவன் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினருக்கு அவனுக்குரிய அனைத்தும் உரியதாகும். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு சட்டமாக வேண்டும்’” என்றார்.
புதிய தலைவராக யோசுவா
12 பிறகு கர்த்தர் மோசேயிடம், “யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மலைகள் ஒன்றின் மீது ஏறிச்செல். அங்கே நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளித்த பூமியை நீ பார்க்கலாம். 13 நீ அந்த நாட்டைப் பார்த்த பிறகு, நீயும் உனது சகோதரன் ஆரோனைப்போன்று மரித்துப் போவாய். 14 சீன் என்னும் பாலைவனத்தில் தண்ணீர் விஷயமாக இஸ்ரவேல் ஜனங்கள் கலகம் செய்ததை நினைத்துப்பார். நீயும் உனது சகோதரன் ஆரோனும் நான் கூறியபடி செய்யவில்லை. நான் பரிசுத்தமானவர் என்பதை ஜனங்களுக்குக் காட்டி என்னை கனப்படுத்தாமல் விட்டு விட்டீர்கள்.” (இது சீன் என்னும் பாலைவனத்தில், காதேஸ் என்ற இடத்தில் மேரிபா தண்ணீருக்காக நிகழ்ந்தது.)
15 மோசே கர்த்தரிடம், 16 “ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது கர்த்தராகிய உமக்கு நன்கு தெரியும். கர்த்தாவே! இந்த ஜனங்களுக்கு ஒரு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்து விட வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்கிறேன். 17 இந்த ஜனங்களை இந்த நாட்டிலிருந்து அழைத்துப் போய் புதிய நாட்டில் சேர்க்கும் புதிய தலைவனை கர்த்தர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அதற்குப் பின்பு இந்த ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்று ஆகமாட்டார்கள்” என்றான்.
18 எனவே கர்த்தர் மோசேயிடம், “நூனின் மகனான யோசுவாவே புதிய தலைவன். அவன் மிகவும் ஞானம் உள்ளவன். அவனைப் புதிய தலைவனாக்கு. 19 முதலில் அவனை ஆசாரியனாகிய எலெயாசார் முன்பும் மற்ற ஜனங்கள் முன்பும் நிறுத்து. பிறகு அவனைத் தலைவனாக ஏற்படுத்து.
20 “நீ அவனைத் தலைவனாக்குவதை ஜனங்கள் காணும்படி செய். அப்போது ஜனங்கள் அவனுக்கு அடங்கி நடப்பார்கள். 21 யோசுவா எதைப்பற்றியாவது முடிவு எடுக்க வேண்டுமானால், அவன் ஆசாரியனாகிய எலெயாசார் முன் நிற்கவேண்டும். எலெயாசார் ஊரிமைப் பயன்படுத்தி கர்த்தருடைய பதிலை அறிந்துகொள்வான். பின் கர்த்தர் சொல்வதை யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் செய்ய வேண்டும். அவன், ‘போருக்குப் போங்கள்’ என்று சொன்னால் அவர்கள் போருக்குப் போவார்கள். அவன் ‘வீட்டிற்குப் போங்கள்’ என்று சொன்னால், அவர்கள் வீட்டிற்குப் போவார்கள்” என்றார்.
22 கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மோசே கீழ்ப்படிந்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் முன்பு நிறக்குமாறு யோசுவாவிடம் மோசே கூறினான். 23 பின் தனது கையை அவன்மேல் வைத்து அவனைப் புதிய தலைவனாக ஆக்கினான். அவன் இதனை கர்த்தர் சொன்னபடியே செய்து முடித்தான்.
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
70 தேவனே, என்னை மீட்டருளும்!
தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
மிகவும் தாமதியாதேயும்!
71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
7 நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
தேவன் அவனைக் கைவிட்டார்.
அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.
ஆராமுக்கு தேவனுடைய செய்தி
17 தமஸ்குவிற்கான துயரச் செய்தி இது.தமஸ்குவுக்கு இவையனைத்தும் நிகழும் என்று கர்த்தர் கூறுகிறார்:
“தமஸ்கு இப்பொழுது நகரமாக இருக்கிறது.
ஆனால் தமஸ்கு அழிக்கப்படும்.
அழிக்கப்பட்டக் கட்டிடங்கள் மட்டுமே தமஸ்குவில் இருக்கும்.
2 ஆரோவேரின் நகரங்களைவிட்டு ஜனங்கள் விலகுவார்கள்.
காலியான அந்தப் பட்டணங்களில் ஆட்டு மந்தைகள் சுதந்திரமாகத் திரியும்.
அவற்றைத் தொந்தரவு செய்ய அங்கே யாரும் இருக்கமாட்டார்கள்.
3 எப்பிராயீமின் (இஸ்ரவேல்) அரணான நகரங்கள் அழிக்கப்படும்.
தமஸ்குவில் உள்ள அரசு முடிந்துவிடும்.
இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட அனைத்தும் சீரியாவிற்கு ஏற்படும்.
முக்கியமான ஜனங்கள் அனைவரும் வெளியே எடுத்துச்செல்லப்படுவார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவை அனைத்தும் நிகழும்” என்று கூறினார்.
4 “அந்தக் காலத்தில், யாக்கோபின் (இஸ்ரவேல்) செல்வம் அனைத்தும் போய்விடும்.
யாக்கோபு நோய்வாய்ப்பட்டதினால் பெலவீனமும் மெலிவும் கொண்ட மனிதனைப்போலாவான்.
5 “அந்தக் காலம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே தானிய அறுவடை நடைபெறுவதுபோல் இருக்கும். வேலைக்காரர்கள் வயலில் வளர்ந்த செடிகளை சேகரிக்கிறார்கள். பிறகு அவர்கள் செடிகளிலிருந்து தானியக் கதிர்களை வெட்டுகிறார்கள். பிறகு அவர்கள் தானியத்தைச் சேகரிக்கின்றனர்.
6 “ஜனங்கள் ஒலிவமரத்தில் அறுவடை செய்வதுபோன்று அந்தக் காலம் இருக்கும். ஜனங்கள் ஒலிவ மரத்திலிருந்து ஒலிவக் காய்களைப் பறிப்பார்கள். மரத்தின் உச்சியில் சில ஒலிவக் காய்களை அவர்கள் விட்டுவைப்பார்கள். நான்கு அல்லது ஐந்து ஒலிவக் காய்களை அவர்கள் உயரத்திலுள்ள கிளைகளில் விட்டுவிடுவார்கள். இதுபோலவே அந்த நகரங்களுக்கும் ஏற்படும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
7 அந்தக் காலத்தில், ஜனங்கள் தங்களைப் படைத்த தேவனை நோக்கிப் பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பார்க்கும். 8 அவர்களால் செய்யப்பட்ட பலிபீடங்களுக்குத் திரும்பமாட்டார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு தங்களால் அமைக்கப்பட்ட சிறப்பான தோட்டங்களுக்கும், பலிபீடங்களுக்கும் போகமாட்டார்கள்.
9 அந்தக் காலத்தில், கோட்டை நகரங்கள் எல்லாம் காலியாகும். இஸ்ரவேல் ஜனங்கள் வருவதற்கு முன்னால் அந்தத் தேசத்தில் மலைகளும் காடுகளும் இருந்தது போன்று அந்த நகரங்கள் இருக்கும். கடந்த காலத்தில், அனைத்து ஜனங்களும் ஓடிப்போனார்கள். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு வந்துகொண்டு இருந்தனர். வரும்காலத்தில் மீண்டும் இந்தத் தேசம் காலியாகும். 10 இது நிகழும், ஏனென்றால், உங்களைப் பாதுகாக்கிற தேவனை நீங்கள் மறந்துவிட்டீர்கள். உங்கள் பாதுகாப்புக்குரிய இடமாக இருக்கும் தேவனை நீங்கள் நினைக்கவில்லை.
வெகு தொலைவிலுள்ள இடங்களிலிருந்து நீ சில நல்ல திராட்சைக் கொடிகளைக் கொண்டுவந்தாய். நீ அவற்றை நட்டு வைக்கலாம். ஆனால் அவை வளராது. 11 ஒரு நாள் உன் திராட்சைக் கொடிகளை நடுவாய். அவற்றை வளர்க்க முயல்கிறாய். மறுநாள் அக்கொடிகள் வளரத் தொடங்கும். ஆனால் அறுவடைக் காலத்தில் அச்செடிகளிலிருந்து பழங்களைப் பறிக்க செல்வாய். ஆனால் அனைத்தும் மரித்துப்போனதை காண்பாய். அனைத்து செடிகளையும் ஒரு நோய் அழித்துவிடும்.
12 ஏராளமான ஜனங்களை விசாரித்துக் கேள்!
அவர்கள் உரத்து கடல் இரைச்சலைப்போன்று அலறிக்கொண்டிருக்கிறார்கள்.
சத்தத்தைக் கேள், இது கடலில் அலைகள் மோதிக்கொள்வதைப்போன்றிருக்கும்.
13 ஜனங்களும் அந்த அலைகளைப்போன்று இருப்பார்கள்.
தேவன் அந்த ஜனங்களிடம் கடுமையாகப் பேசுவார்.
அவர்கள் வெளியே ஓடிப்போவார்கள்.
ஜனங்கள் காற்றால் துரத்தப்படுகிற பதரைப்போன்று இருப்பார்கள்.
ஜனங்கள் புயலால் துரத்தப்படுகிற துரும்பைப்போன்று இருப்பார்கள்.
காற்று அடிக்கும்போது பதர்கள் வெளியேறும்.
14 அந்த இரவு, ஜனங்கள் அஞ்சுவார்கள்.
காலைக்கு முன்னால், எதுவும் விடுபடாது.
எனவே, நம் பகைவர்கள் எதனையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள்.
ஆனால் அங்கு எதுவும் இராது.
எத்தியோப்பியாவிற்கு தேவனுடைய செய்தி
18 எத்தியோப்பியாவை அதன் ஆறுகளோடு பார். அந்த நாடு பூச்சிகளால் நிறைந்திருக்கிறது. அவற்றின் சிறகுகளின் இரைச்சலை உங்களால் கேட்க முடியும். 2 அந்த நாடு ஜனங்களை நாணல் படகுகளில் கடலைக் கடந்து செல்லுமாறு அனுப்பியது.
விரைவாகச் செல்லும் தூதர்களே!
வளர்ச்சியும் பலமும் கொண்ட ஜனங்களிடம் போங்கள்.
(எல்லா இடங்களிலும் உயரமும் பலமும் கொண்ட ஜனங்களிடம் மற்ற ஜனங்கள் பயப்படுவார்கள்.
அவர்கள் வல்லமைமிக்க தேசத்தை உடையவர்கள்.
அவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கிறது.
ஆறுகளால் பிரிக்கப்படுகிற நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்).
3 அவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று அந்த ஜனங்களை எச்சரிக்கை செய்யுங்கள்.
இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இவர்களுக்கு ஏற்படப்போவதைக் காண்பார்கள்.
மலையில் ஏற்றப்பட்டக் கொடியைப்போன்று, ஜனங்கள் இவற்றைத் தெளிவாகப் பார்ப்பார்கள்.
இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இந்த உயர்ந்து வளர்ந்த ஜனங்களுக்கு நிகழப்போவதைப்பற்றிக் கேள்விப்படுவார்கள்.
போருக்கு முன் கேட்கும் எக்காளத்தைப்போன்று தெளிவாக அவர்கள் கேட்பார்கள்.
4 கர்த்தர் என்னிடம், “நான் எனக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில் இருப்பேன். நான் நிகழ்பவற்றை அமைதியாகக் கவனிப்பேன். அழகான ஒரு கோடை நாளில் நடுப்பகலில் ஜனங்கள் ஓய்வாக இருப்பார்கள். (இது வெப்பமுள்ள அறுவடைக்காலமாக இருக்கும். மழை இல்லாதபோது, காலைப்பனிமட்டும் இருக்கும்.) 5 பிறகு ஏதோ பயங்கரமான ஒன்று நிகழும். பூக்கள் மலர்ச்சியடைந்த பிறகுள்ள காலமாக இருக்கும். புதிய திராட்சைகள் மொட்டு விட்டு வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால் அறுவடைக்கு முன்பு, பகைவர்கள் வந்து செடிகளை வெட்டிப்போடுவார்கள். பகைவர்கள் கொடிகளை வெட்டித் தூர எறிவார்கள். 6 திராட்சைக் கொடிகள் மலைப் பறவைகளுக்கும், காட்டுமிருகங்களுக்கும் உணவாகக் கிடைக்கும். அக்கொடிகளில் பறவைகள் கோடை காலத்தில் தங்கும். மழைக் காலத்தில் காட்டு மிருகங்கள் அக்கொடிகளை உண்ணும்” என்றார்.
7 அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு ஒரு விசேஷ காணிக்கை கொண்டுவரப்படும். இக்காணிக்கை உயரமும், பலமும் கொண்ட ஜனங்களிடமிருந்து வரும். (எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் இந்த உயரமும் பலமும் கொண்ட ஜனங்களுக்கு அஞ்சுவார்கள். அந்த வல்லமை மிக்க தேசத்தைக் கொண்டவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கும். ஆறுகளால் பிரிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் இருப்பார்கள்). இந்தக் காணிக்கை சீயோன் மலையான, கர்த்தருடைய இடத்திற்குக் கொண்டுவரப்படும்.
தேவனுடைய மந்தை
5 உங்கள் குழுவிலுள்ள முதியோருக்கு இப்பொழுது நான் சிலவற்றைக் கூறவேண்டும். நானும் ஒரு முதியவன். நான் கிறிஸ்துவின் துன்பங்களை நேரில் கண்டிருக்கிறேன். நமக்குக் காட்டப்படும் மகிமையிலும் நான் பங்கு கொள்வேன். 2 ஒரு ஆட்டு மந்தையைக் கவனித்துக்கொள்கிற மேய்ப்பர்கள்போல உங்கள் பொறுப்பில் இருக்கிற மக்களின் கூட்டத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தேவனுடைய கூட்டத்தினர். விருப்பத்தோடு அவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்விதமான நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அப்படிச் செய்ய வேண்டாம். நீங்கள் அதை விருப்பத்தோடு செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார். பணத்துக்காகப் பேராசை பிடித்திருப்பதால் கண்காணிப்பாளர்களைப்போல சேவை செய்யாதீர்கள். சேவை செய்யும் வாஞ்சை இருப்பதால் சேவை செய்யுங்கள். 3 நீங்கள் பொறுப்பேற்றுள்ள மக்களிடம் கொடுமையான அதிகாரியாக நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் அம்மக்களுக்கு முன்மாதிரியாக இருங்கள். 4 அப்போது, தலைமை மேய்ப்பர் வரும்போது நீங்கள் கிரீடம் பெறுவீர்கள். அக்கிரீடம் மகிமை நிரம்பியதாகவும், ஒருபோதும் அழகு குன்றாததாகவும் இருக்கும்.
5 இளைஞர்களே, நான் உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லவேண்டும். முதியோரின் அதிகாரத்திற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் தாழ்மையோடு சேவை புரிந்துகொள்ள வேண்டும்.
“அகம்பாவம்மிக்க மனிதருக்கு தேவன் எதிரானவர்.
ஆனால் தாழ்மையுள்ள மனிதருக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.” (A)
6 எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார். 7 அவர் உங்களைக் கவனிப்பதால் உங்கள் கவலைகளை அவரிடம் விட்டு விடுங்கள்.
8 உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள். 9 உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே துன்பங்களை உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள உங்கள் சகோதரரும் சகோதரிகளும் அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
10 ஆம், குறுகிய காலம் நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு, தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் உங்களை பலப்படுத்துவார். அவர் உங்களைத் தாங்கிக்கொண்டு, நீங்கள் விழாதபடி பாதுகாப்பார். எல்லா கிருபையையும் அருளுகின்ற தேவன் அவரே. கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்படி அவர் உங்களை அழைத்தார். அம்மகிமை என்றென்றும் தொடரும். 11 எல்லா வல்லமையும் என்றென்றும் அவருக்குரியது. ஆமென்.
இறுதி வாழ்த்துக்கள்
12 சில்வானுவின் உதவியோடு இந்தச் சிறிய நிருபத்தை உங்களுக்கு எழுதினேன். அவன் நம்பிக்கைக்குத் தகுதியான கிறிஸ்தவ சகோதரன் என்பதை நான் அறிவேன். உங்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு உறுதிப்படுத்தவும், இதுவே தேவனுடைய உண்மையான கிருபை என்பதை எழுதி இருக்கிறேன். அந்தக் கிருபையில் உறுதியாக நில்லுங்கள்.
13 பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது மகனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான். 14 நீங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் அன்பினால் முத்தமிடுங்கள்.
கிறிஸ்துவிலுள்ள உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாகட்டும்.
2008 by World Bible Translation Center