M’Cheyne Bible Reading Plan
பிலேயாமின் முதல் செய்தி
23 பிலேயாம் பாலாக்கிடம், “இங்கே ஏழு பலிபீடங்களை கட்டி. ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தயார் செய்யும்” என்றான். 2 பாலாக் பிலேயாம் சொன்னபடி செய்தான். பிறகு பாலாக்கும் பிலேயாமும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு காளையையும் ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியிட்டனர்.
3 பிறகு பிலேயாம் பாலாக்கிடம், “இப்பலிபீடத்தின் அருகில் இரும். நான் இன்னொரு இடத்திற்குப் போவேன். பிறகு கர்த்தர் என்னிடம் வருவார். நான் என்ன சொல்லவேண்டுமோ அதனை அவர் சொல்லுவார்” என்றான். பிறகு பிலேயாம் ஓர் உயரமான இடத்திற்குச் சென்றான்.
4 அந்த இடத்தில் பிலேயாமிடம் தேவன் வந்தார். பிலேயாம் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களைத் தயார் செய்துள்ளேன். அவற்றில் இரண்டில் ஒரு காளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலியிட்டேன்” என்றான்.
5 கர்த்தர் பிலேயாமிடம் அவன் என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சென்னார். பிறகு கர்த்தர், “பாலாக்கிடம் திரும்பிப்போ. நான் இவற்றைச் சொல்லச் சொன்னேன் என்று அவனிடம் சொல்” என்றார்.
6 எனவே பிலேயாம் பாலாக்கிடம் போனான். பாலாக்கும் அவனோடு மோவாபின் தலைவர்களும் பலிபீடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். 7 பிறகு பிலேயாம் பின்வருமாறு சொன்னான்:
மோவாபின் அரசனான பாலாக் என்னை இங்கே அழைத்து வந்தான்.
ஆராம் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தேன்.
பாலாக் என்னிடம்,
“வா, வந்து எனக்காக யாக்கோபிற்கு எதிராகப் பேச வேண்டும்,
இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்” என்று கேட்டான்.
8 ஆனால் தேவன் அந்த ஜனங்களுக்கு எதிராக இல்லை.
எனவே, என்னாலும் அவர்களுக்கு எதிராகப் பேச முடியாது!
கர்த்தர் அந்த ஜனங்களுக்கு தீமை ஏற்படும்படி பேசவில்லை.
எனவே என்னால் அவ்வாறுச் செய்ய முடியாது.
9 நான் மலையிலிருந்து அந்த ஜனங்களைப் பார்க்கிறேன்.
உயரமான மலையிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன்.
அவர்கள் தனியாக வாழ்கிறார்கள்.
அவர்கள் வேறொரு தேசத்தாரையும் சேர்ந்தவர்கள் அல்ல.
10 யாக்கோபின் ஜனங்களை எவரால் எண்ணிப் பார்க்க முடியும்?
அவர்கள் புழுதியைப் போல அதிக எண்ணிக்கையுள்ளவர்கள்.
இஸ்ரவேல் ஜனங்களின் நாலில் ஒரு பங்கைக்கூட எவராலும் எண்ண இயலாது.
என்னை ஒரு நல்ல மனிதனைப் போன்று மரிக்கவிடு.
அவர்களுடைய வாழ்வைப் போன்று மகிழ்ச்சியோடு என் வாழ்வையும் முடியவிடு!.
11 பாலாக் பிலேயாமிடம், “நீர் எனக்கு என்ன செய்தீர்? எனது பகைவர்களுக்கு எதிராகப் பேசும்படி உம்மை அழைத்து வந்தேன். ஆனால் நீர் அவர்களை ஆசீர்வாதம் செய்கிறீரே!” என்றான்.
12 ஆனால் பிலேயாம், “கர்த்தர் என்னிடம் சொல்லுமாறு சொன்னவற்றையே நான் சொல்வேன்” என்றான்.
13 பிறகு பாலாக் அவனிடம், “இன்னொரு இடத்திற்கு வா. அந்த இடத்திலிருந்து அவர்களில் மிகுதியான ஜனங்களை நீ பார்க்க முடியும். ஆனால் அவர்களில் முழு பகுதியினரை உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரை உன்னால் பார்க்க முடியும். எனக்காக அங்கிருந்து அவர்களுக்கு எதிராக நீ பேச முடியும்” என்றான். 14 எனவே பாலாக் பிலேயாமை காவற்காரன் மலைக்கு அழைத்து சென்றான். இது பிஸ்கா மலையின் உச்சியில் இருந்தது. அங்கே பாலாக் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். பின் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும் தனித்தனியாக ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியாக செலுத்தினான்.
15 பிலேயாம் பாலாக்கிடம், “இந்தப் பலிபீடத்தின் அருகிலே இரு. நான் அந்த இடத்திற்குப் போய் தேவனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான்.
16 எனவே கர்த்தர் பிலேயாமிடம் வந்து பேசி, தான் சொன்னவற்றை பாலாக்கிடம் திரும்பிப்போய் சொல்லுமாறு கூறினார். 17 பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிப் போனான். அங்கே பலிபீடத்தின் அருகிலேயே பாலாக் நின்றுகொண்டிருந்தான். அவனோடு, மோவாபின் தலைவர்களும் நின்றுகொண்டிருந்தனர். பிலேயாம் வருவதைப் பார்த்து பாலாக், “கர்த்தர் என்ன சொன்னார்?” எனக் கேட்டான்.
பிலேயாமின் இரண்டாவது செய்தி
18 பிலேயாம் அவனிடம்,
“பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி.
சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக் கேள்:
19 தேவன் ஒரு மனிதனல்ல;
அவர் பொய்ச் சொல்லமாட்டார்.
அவர் மானிடன் அல்ல.
அவரது முடிவு மாறாதது.
கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால்
அவர் அதனை நிச்சயம் செய்வார்.
கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால்
அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்.
20 கர்த்தர் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்குமாறு சொன்னார்.
அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அதனை என்னால் மாற்ற முடியாது.
21 யாக்கோபின் ஜனங்களிடம் தேவன் எவ்வித தவறையும் காணவில்லை.
இஸ்ரவேல் ஜனங்களிடம் எவ்வித பாவத்தையும் தேவன் பார்க்கவில்லை.
கர்த்தரே அவர்களின் தேவன்.
அவர் அவர்களோடு இருக்கிறார்.
அந்த மாபெரும் அரசர் அவர்களோடு இருக்கிறார்!
22 அவர்களை அவர் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார்.
அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலம் பொருந்தியவர்கள்.
23 யாக்கோபின் ஜனங்களைத் தோற்கடிக்கிற வல்லமை எதுவும் இல்லை.
இஸ்ரவேல் ஜனங்களை தடுத்து நிறுத்துகிற மந்திரம் எங்குமில்லை.
‘தேவன் செய்த மாபெரும் செயல்களை பாருங்கள்’
என்று யாக்கோபையும் இஸ்ரவேல் ஜனங்களையும் பற்றி ஜனங்கள் பேசுவார்கள்.
24 அந்த ஜனங்கள் சிங்கம் போன்று பலமுள்ளவர்கள்.
அவர்கள் சிங்கத்தை போன்றே சண்டையிடுவார்கள்.
அந்தச் சிங்கம் பகைவரை அடித்துத் தின்னும்வரை ஓய்வு எடுக்காது.
தனக்கு எதிராக வந்த ஜனங்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை அது ஓய்வு எடுக்காது” என்றான்.
25 பிறகு பாலாக் பிலேயாமிடம், “நீ அவர்களுக்கு நன்மை நடக்குமாறு கேட்க வேண்டாம். நீ அவர்களுக்கு தீமை ஏற்படுமாறும் கேட்கவேண்டாம்” என்றான்.
26 பிலேயாம் அதற்கு, “கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான்.
27 பிறகு பாலாக் பிலேயாமிடம் “எனவே என்னோடு இன்னொரு இடத்திற்கு வா. அங்கேயிருந்து நீ அவர்களைச் சபிப்பது தேவனுக்குப் பிடிக்கலாம்” என்று அழைத்தான். 28 பிலேயாமைப் பாலாக் அழைத்துக் கொண்டு பேயோர் என்னும் மலையின் உச்சிக்குப் போனான். அது பாலைவனத்திற்கு மேலே தெரிந்தது.
29 பிலேயாம், “ஏழு பலிபீடங்களை இங்கே கட்டு. பிறகு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலிக்கென்று ஆயத்தப்படுத்து” என்றான். 30 பிலேயாம் கேட்டுக்கொண்டபடி பாலாக் செய்தான். பலிபீடத்தில் காளைகளையும் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டான்.
இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல்.
64 தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன்.
என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
2 என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
3 அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள்.
அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை.
அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
4 அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான,
சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள்.
5 அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி, “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
6 அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் பலியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
7 ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்!
தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
8 தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள்.
ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும்.
அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும்.
அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
9 தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள்.
அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள்.
அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள்.
தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
10 நல்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள்.
நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.
65 சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன்.
நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன்.
2 நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம்.
நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர்.
உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர்.
3 எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில்
அப்பாவங்களை நீர் மன்னித்தருளும்.
4 தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம்.
5 தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும்.
நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர்.
அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர்.
உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
6 தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார்.
அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம்.
7 சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார்.
“சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார்.
8 நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள்.
சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.
9 நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர்.
நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர்.
தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர்.
இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்:
10 உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர்.
வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர்.
நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர்.
இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர்.
11 நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர்.
பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.
12 பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.
13 புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின.
பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
13 ஆமோத்சின் மகனான ஏசாயாவுக்கு தேவன் பாபிலோன்பற்றிய சோகச் செய்தியைக் காட்டினார்.
2 தேவன், “எதுவும் வளராத அந்த இடத்தில், மலை மீது கொடியை ஏற்றுங்கள்.
அந்த மனிதர்களை அழையுங்கள்.
உங்கள் கைகளை அசையுங்கள்.
அவர்கள் முக்கியமானவர்களுடைய வாசல்களில் நுழையும்படி கூறுங்கள்!” என்றார்.
3 தேவன்: “நான் அவர்களை ஜனங்களிடமிருந்து பிரித்திருக்கிறேன்.
நானே அவர்களுக்கு ஆணையிடுவேன்.
நான் கோபமாக இருக்கிறேன்.
ஜனங்களைத் தண்டிக்க எனது மிகச் சிறந்தவர்களை கூட்டிச்சேர்த்தேன். மகிழ்ச்சியுள்ள இவர்களைப்பற்றி பெருமிதமடைகிறேன்!.
4 மலைகளில் உரத்த சத்தம் உள்ளது.
அச்சத்தத்தை கவனியுங்கள்! அது பல மனிதர்களின் சத்தம் போலுள்ளது.
பல அரசாங்கங்களிலிருந்து ஜனங்கள் அங்கு கூடியிருக்கின்றார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் படைகளைக் கூட்டியிருக்கிறார்.
5 கர்த்தரும் அவரது படைகளும் தூர நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
அவர்கள் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.
கர்த்தர் தன் கோபத்தைக் காட்ட இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
இந்தப் படை முழு நாட்டையும் அழிக்கும்” என்றார்.
6 கர்த்தருடைய விசேஷ நாள் நெருங்குகிறது. எனவே அழுங்கள். உங்களுக்காகச் சோகமாக இருங்கள். பகைவர்கள் உங்கள் செல்வங்களைப் பறிக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் இதனை நிறைவேற்றுவார். 7 ஜனங்கள் தம் தைரியத்தை இழப்பார்கள். ஜனங்களை அச்சம் பெலவீனப்படுத்தும்.
8 ஒவ்வொருவரும் அஞ்சுவார்கள். இந்த அச்சம் அவர்களின் வயிற்றில் பிரசவ வேதனைபோன்ற துன்பத்தைத் தரும். அவர்களின் முகங்கள் நெருப்பைப்போன்று சிவக்கும். ஒருவரையொருவர் பார்த்து பிரமித்துப்போவார்கள். காரணம் எல்லாருடைய முகங்களிலும் அச்சம் நிரம்பியிருக்கும்.
பாபிலோனுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பு
9 பார்! கர்த்தருடைய விசேஷ நாள் வருகிறது! இது பயங்கரமான நாள். தேவன் மிகவும் கோபம் அடைந்து, நாட்டினை அழிப்பார். பாவம் செய்த அனைவரையும் தேவன் அழித்துப்போடுவார். 10 வானம் இருட்டாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒளி வீசாது.
11 தேவன் கூறுகிறார்: “உலகத்திற்கு கேடு ஏற்பட நான் காரணமாக இருப்பேன். கெட்டவர்களை அவர்களது பாவத்துக்காகத் தண்டிப்பேன். ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை விடும்படி செய்வேன். மற்றவர்களுக்கு அற்பமாகத் தெரியும்படி செயல்புரிகிறவர்களின் வாயாட்டத்தை நான் தடுப்பேன். 12 கொஞ்சம்பேர் மட்டுமே விடுபடுவார்கள். அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். தங்கத்தைப்போன்று அரிதாக இருப்பார்கள். இவர்கள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவர்கள். 13 எனது கோபத்தால் வானத்தை நடுங்கவைப்பேன். பூமி தன் இடத்திலிருந்து நகரும்”. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் கோபத்தைக் காட்டும் நாளில் இவை அனைத்தும் நிறைவேறும். 14 பிறகு, காயம்பட்ட மானைப்போல, பாபிலோனை விட்டு ஜனங்கள் ஓடுவார்கள். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல, அவர்கள் ஓடுவார்கள். ஒவ்வொருவரும் திரும்பி தங்கள் சொந்த நாட்டிற்கும் ஜனங்களிடமும் ஓடுவார்கள். 15 ஆனால் பாபிலோனிய ஜனங்களைப் பகைவர்கள் துரத்துவார்கள். பகைவன் ஒருவனைப் பிடிக்கும்போது, அவனை வாளால் கொல்வான். 16 அவர்களது வீடுகளிலுள்ள அனைத்தும் களவாடப்படும். அவர்களின் மனைவிகள் கற்பழிக்கப்படுவார்கள். அவர்களின் சிறிய குழந்தைகள், ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அடித்துக் கொல்லப்படுவார்கள். 17 தேவன் கூறுகிறார்: “கவனி, மீதியானியப் படைகள் பாபிலோனைத் தாக்க நான் காரணமாக இருப்பேன். மீதியானியப் படைகளுக்குப் பொன்னும், வெள்ளியும் கொடுத்தாலும்கூட தங்கள் தாக்குதலை நிறுத்தாது. 18 பாபிலோனிலுள்ள இளைஞர்களைப் படை வீரர்கள் தாக்கிக் கொல்வார்கள். படை வீரர்கள் குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். படை வீரர்கள் சிறு பிள்ளைகளிடமும் தயவோடு இருக்கமாட்டார்கள். பாபிலோன் அழிக்கப்படும். அது சோதோம் கொமோரா ஆகியவற்றின் அழிவைப்போல் இருக்கும். தேவன் இந்த அழிவுக்குக் காரணமாக இருப்பார். எதுவும் விடுபடாது. 19 “எல்லா இராஜ்யங்களையும்விட பாபிலோன் மிகவும் அழகானது. பாபிலோனிய ஜனங்கள் தமது நகரத்தைப்பற்றிப் பெருமையோடு இருக்கிறார்கள். 20 ஆனால் தொடர்ந்து பாபிலோன் அழகுடையதாக இருக்காது. வருங்காலத்தில் அங்கு ஜனங்கள் தொடர்ந்து வாழமாட்டார்கள். அரேபியர்கள் அங்கே தமது கூடாரங்களை அமைக்கமாட்டார்கள். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவரமாட்டார்கள். 21 அங்கே வனாந்திரத்திலுள்ள காட்டு மிருகங்கள் மட்டுமே வாழும். பாபிலோனின் வீடுகளில் ஜனங்கள் வசிக்கமாட்டார்கள். வீடு முழுவதும் ஆந்தைகளும், பெரிய பறவைகளும் வசிக்கும். காட்டு ஆடுகள் வீடுகளில் விளையாடும். 22 காட்டு நாய்களும், நரிகளும் பாபிலோனில் மிகப்பெரிய அழகான கட்டிடங்களில் ஊளையிடும். பாபிலோன் அழியும். பாபிலோனின் முடிவு அருகிலுள்ளது. பாபிலோனின் அழிவை நான் தாமதமாக்க விடமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுருவிடமிருந்து, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களெங்கும் அந்நியர்களாகச் சிதறி வாழ்ந்துகொண்டிருக்கிற தேவனுடைய மக்களுக்கு: 2 பிதாவாகிய தேவன் நெடுங்காலத்துக்கு முன்பே செய்த திட்டப்படி தேவனுடைய மக்களாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். ஆவியானவரின் சேவை வழியாக அவருக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்பட்டீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படியவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டு பரிசுத்தமடையவும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கிருபையையும், சமாதானத்தையும் தேவன் உங்களுக்கு மென்மேலும் வழங்குவாராக.
வாழும் நம்பிக்கை
3 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார். 4 இப்பொழுது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது.
5 இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியவை. இறுதி நேரத்தில் தம் வல்லமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். 6 இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம். 7 ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன? உங்கள் விசுவாசம் பரிசுத்தமானது என்று நிரூபிப்பதற்கேயாகும். இந்த விசுவாசத்தின் பரிசுத்தம் பொன்னைக் காட்டிலும் சிறந்தது. பொன்னின் சுத்தத் தன்மை நெருப்பால் சோதித்தறியப்படுகிறது. ஆனால் பொன் அழிவுறும். இயேசு கிறிஸ்து வரும்போது, உங்கள் விசுவாசத்தின் பரிசுத்தமானது உங்களுக்கு கனத்தையும், மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
8 நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது. 9 உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.
10 உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய கிருபையைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் கவனமாக ஆராய்ந்து இந்த இரட்சிப்பைப் பற்றி அறிய முயன்றிருக்கிறார்கள். 11 இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் அத்தீர்க்கதரிசிகளிடம் இருந்தார். கிறிஸ்துவுக்கு நேர இருக்கிற துன்பங்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் மகிமையைப் பற்றியும் அந்த ஆவியானவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த ஆவியானவர் எதைக் குறித்து பேசுகிறார் என்று அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அச்சம்பவங்கள் நடக்கும் நேரம் மற்றும் சூழ்நிலை பற்றி அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள்.
12 அவர்கள் செய்த பணி அவர்களுக்குரியதல்லவென்று அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தப்பட்டது. தீர்க்கதரிசிகள் உங்களுக்காகப் பணியாற்றினார்கள். இவ்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசியபொழுது அவர்கள் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தனர். நற்செய்தியை உங்களுக்குப் போதித்த மனிதர்களே அச்செய்திகளையும் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அவர்கள் அதை உங்களுக்குக் கூறினார்கள். தேவ தூதர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்ற காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
பரிசுத்த வாழ்க்கைக்கான அழைப்பு
13 எனவே உங்கள் மனங்களை சேவைக்கு ஆயத்தப்படுத்தி, தன்னடக்கத்தோடிருங்கள். இயேசு கிறிஸ்து தோன்றும்போது உங்களுக்கு வாய்க்கப் போகிற கிருபையின் பரிசின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். 14 கடந்த காலத்தில் இந்தக் காரியங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே நீங்கள் விரும்பிய தீயசெயல்களைச் செய்து வந்தீர்கள். ஆனால் இப்போது கீழ்ப்படிகிற தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள். எனவே ஏற்கெனவே நீங்கள் கொண்டிருந்த தீய ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்துங்கள். 15 உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். 16 வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
17 தேவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவரை பிதா என்று அழையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வேலையையும் சமமாக நோக்கி தேவன் பாரபட்சம் இன்றி நியாயம் வழங்குகிறார். எனவே நீங்கள் இவ்வுலகில் வாழும்போது தேவனிடம் பயத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டும். 18 நீங்கள் கடந்த காலத்தில் தகுதியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தீர்கள். உங்கள் முன்னோர்கள் மூலமாக அவ்வாழ்க்கை முறையை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். அப்படிப்பட்ட வாழ்விலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என அறிவீர்கள். இந்த இரட்சிப்பு அழியும் பொருட்களாகிய பொன், வெள்ளி போன்றவற்றால் அல்ல, 19 குற்றம் குறையில்லாத ஆட்டுக் குட்டியான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நிகழ்ந்ததாகும். 20 உலகம் உருவாக்கப்படும் முன்னே கிறிஸ்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் உங்கள் பயனுக்காக இந்தக் கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்பட்டார். 21 நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக தேவனை விசுவாசிக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவை மரணத்தினின்று எழும்பி அவருக்கு மகிமையை அளித்தார். எனவே உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவனில் உள்ளன.
22 உண்மைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்களை நீங்களே பரிசுத்தமுடையோராக ஆக்கிக்கொண்டீர்கள். இதன் மூலம் உங்கள் உண்மையான சகோதர அன்பைக் காட்டமுடியும். எனவே இப்பொழுது பரிசுத்தமான இதயத்தோடு ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். 23 நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பது அழியத்தக்க விதையில் இருந்து அல்ல, அழிவேயற்ற விதையின் மூலம் ஆகும். எப்போதும் தொடரும் தேவனுடைய அழிவில்லாத விதையாகிய வசனங்களினால் மீண்டும் பிறந்துள்ளீர்கள். 24 வேதவாக்கியங்கள்,
“எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள்.
புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும்.
புல் உலர்ந்து போகிறது.
பூக்கள் உதிர்கின்றன.
25 ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது” (A)
என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது.
2008 by World Bible Translation Center